மாதத்துக்கு மூன்று மழை ஏன்?

முன்னாளில் ஐயரெல்லாம் வேதம்—ஓதுவார்

மூன்று மழை பெய்யுமடா மாதம்:

இந்நாளிலே பொய்மைப் பார்ப்பார்—இவர்

ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பார் (பாரதி பாடல்- மறவன் பாட்டு)

பாரத நாடு முழுதும் மழை பற்றி ஒரே கருத்து நிலவுகிறது. ஒரு மாதத்தில் மூன்று தடவை மழை பொழிய வேண்டும். இக்கருத்து வேத, புராண, இதிஹாசங்களில் ஏராளமான இடங்களில் வருகிறது. தமிழ் இலக்கியத்தில் வரும் சில குறிப்புகளை மட்டும் காண்போம்.

1400 ஆண்டுகளுக்கு முன் ஒரு தமிழ்ப் பெண் (கல்லூரி மாணவி வயது—டீன் ஏஜ் கேர்ல்) இருந்தாள். அவள் பெயர் ஆண்டாள். அற்புதமாகக் கவி பாடிய அழகிய நங்கை, சூடிக் கொடுத்த சுடர்க்கொடி. வாரணம் ஆயிரம் உள்ளடக்கிய நாச்சியார் திருமொழியையும் திருப்பாவை முப்பதையும் செப்பிய பருவமங்கை. திருப்பாவையில் தெய்வீக கருத்துக்களை விட்டுவிட்டு ஆராய்ந்தால் வரலாறு, பூகோளம், தமிழ்ச் சங்கம், மழை, பாவை நோன்பு, தை நீராடல் என்று தமிழ் கலாசாரம் பற்றி நிறைய விஷயங்களை ஆண்டாள் அள்ளித்தெளித்திருப்பதைக் காணலாம்.

ஓங்கி உலகலந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

………..

என்று திருப்பாவை பாடினார்

ஆண்டாளுக்குத் தெரிந்தது இன்று நமக்குத் தெரியாமல் போய்விட்டது. மாதத்துக்கு முன்று மழை ஏன்? அதிகம் பெய்தாலும் அவலம், குறைத்துப் பெய்தாலோ வறட்சி. இதைத் திருவள்ளுவர் வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் பத்துக் குறட் பாக்களில் பெய்துவிட்டார். கெடுப்பதும் மழை, கொடுப்பதும் மழை என்று பிட்டுப் பிட்டுவைத்து விட்டார்.

மூன்று மழை பெய்யக் காரணம் என்ன?

விவேக சிந்தாமணி இதை அழகாக விளக்குகிறது:

வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை

நீதி மன்னர் நெறியினுக்கோர் மழை

மாதர் கற்புடைய மங்கையர்க்கோர் மழை

மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே!

இப்போதெல்லாம் இப்படிப் பெய்வதில்லையே, ஏன்? என்று அந்தக் கவிஞரைக் கேட்ட போது,

அரிசி விற்றுடும் அந்தணர்க்கோர் மழை

வரிசை தப்பிய மன்னருக்கோர் மழை

புருஷனைக் கொன்ற பூவையர்க்கோர் மழை

வருஷம் மூன்று மழையெனப் பெய்யுமே! என்றார்

நல்லாட்சி, நல்ல மதம், நல்ல பெண்கள் இருந்த போது மாதத்துக்கு மூன்று மழை. கெட்ட ஆட்சி, கெட்ட பெண்கள் ( நிமிடத்துக்கு நூறு டைவர்ஸ் செய்யும் பெண்கள்) அறத்தை மறந்த அந்தணர் இருந்தால் வருடத்துக்கு மூன்று மழை என்று எளிய தமிழில் சொல்லிவிட்டார்.

வள்ளுவர் இவருக்கெல்லாம் ஒரு படி மேலே சென்று, “தெய்வம் தொழாள், கொழுநன் தொழுது எழுவாள், பெய் எனப் பெய்யும் மழை= பத்தினிப் பெண்கள் பெய் என்றால் மழை பெய்யும் என்று சொல்லிவிட்டார்.(இதைப் படித்துப் படித்துப் பெண்கள் சிரிப்பது அவர் காதில் விழுகிறது. ஆகையால் காவிரி நீர் மேட்டுர் அணைக்குள் வராதபடி தடுத்துவிட்டார்!!)

தமிழ் இலக்கணப் படி “கொழுநன் தொழுது எழுவாள்” என்பதை இப்படியும் அர்த்தம் செய்ய முடியும்= கணவர் ‘பெட் காப்பி’யுடன் வந்து மனைவியை தாயே எழுந்திரு, குழந்தைகள் பள்ளிக்குப் போக வேண்டும், நான் ஆபீசுக்குப் போகவேண்டும் என்று சொல்லும் காட்சி! (குறள் 55, அதிகாரம் வாழ்க்கைத் துணைநலம்)

வறட்சி பற்றிய கருத்தும் ஒன்றே

வறட்சி பற்றியும் பாரத நாடு முழுதும் ஒரே கருத்து நிலவுகிறது. 12 ஆண்டுகளுக்கு நீடிக்கும் வறட்சி பற்றி ரிக் வேதம் முதல் பரஞ்சோதி முனிவர் எழுதிய திரு விளையாடல் புராணம் வரை எண்ணற்ற குறிப்புகள் உள்ளன. சூரியனில் தோன்றும் கருப்புப் புள்ளிகளுக்கும் இந்த வறட்சிக்கும் தொடர்பு உண்டு. சரஸ்வதி நதி வற்றிப் போனதால் வறட்சியால் சிந்துவெளி நகரங்கள் மொஹஞ்சதாரோவும் ஹரப்பாவும் சுடுகாடாக மாறியது இப்போதைய ஆராய்ச்சியில் தெரிய வருகிறது.

அந்தக் காலத்தில் அரசர்களைச் சந்த்தித்த ரிஷி முனிவர்கள் கேட்ட முதல் கேள்வி, “மன்னவனே உனது நாட்டில் மாதம் மும்மாரி ( மூன்று மழை) பொழிகிறதா?” என்ற கேள்விதான். மழை பொழியாவிடில் ரிஷி முனிவர்களை நாட்டிற்குள் அழைத்தாலேயே போதும், அவர்கள் வரும் போதே மழை பொழியும். இந்தக் கருத்தையும் ரிஷ்ய ஸ்ருங்கர் கதை முதல் முத்துசாமி தீட்சிதரின் அமிர்த வர்ஷிணி ராகப் பாடல் வரையும் காணலாம். யாக, யக்ஞங்களால் மழை பொழியும் ( காளிதாசனின் ரகு வம்சம் 1-62) போன்ற கருத்துகளும் விரவிக் கிடக்கின்றன.

சுருக்கமாகச் சொன்னால், இயற்கையைக் கட்டுப் படுத்துவது தனி மனிதனின் ஒழுக்கமே என்று இந்துக்கள் நம்பினார்கள். ஒழுக்கம் தவறத் தவற இயற்கை உத்பாதங்கள் அதிகரிக்கும் என்பது கவிஞர்களின் ஏகோபித்த கருத்து.

“வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக”

காலே வர்ஷது பர்ஜன்ய:, ப்ருத்வீ சஸ்ய சாலினீ

தேசோயம் க்ஷோப ரஹிதோ ப்ராஹ்மணா சந்து நிர்பயா:

அபுத்ரா; புத்ரிண சந்து புத்ரிண சந்து பௌத்ரிண;

அதநா; சதநா; சந்து ஜீவந்து சரதாம் சதம்!

(பொருள்: காலத்தில் உரிய மழை பொழியட்டும் நெல் வளம் சிறக்கட்டும், நாடு மகிழ்ச்சியால் செழிக்கட்டும், பிராமணர்கள் ( ஒழுக்கமுடைய அறிஞர்கள் ) பயமின்றி வாழட்டும், பிள்ளைகள் இல்லாதோருக்கு குழந்தைகள் பிறக்கட்டும், பிள்ளைகள் உடையோர் பேரன் பேத்திகளை ஈன்றெடுத்து மகிழட்டும்,வறியோர்கள் செல்வச் செழிப்படையட்டும். நூறாண்டுக் காலம் நோய் நொடியில்லாமல் வாழட்டும்)