
Written by London Swaminathan
Date: 21 MARCH 2018
Time uploaded in London – 21-16
Post No. 4838
Pictures shown here are taken by london swaminathan
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகிலுள்ள திருவக்கரை– வக்ரகாளியம்மன் கோவிலாலும், பாடல் பெற்ற சிவன் கோவிலாலும் பக்தர்கள் இடையே பிரபலமான இடம். ஆனால் கோவிலுக்கு சில மைல் தொலைவில் ஒரு பெரிய இயற்கை அதிசயம் இருப்பது பலருக்கும் தெரியாது.
புவியியல் துறையினர் ஒரு போர்டா (board)வது வைத்து மக்களை ஈர்க்க வேண்டும்
என்ன அதிசயம்?
திருவக்கரையில் ஒரு கல் மரப் பூங்கா இருக்கிறது. அங்கே இரண்டு கோடி ஆண்டுப் பழமையான கல் மரங்கள் இருக்கின்றன. 247 ஏக்கர் பரப்புக்கு இந்தக் கல் மரங்கள் இருந்தாலும், சிறிய இடத்தை மட்டும் பொது மக்களின் பார்வைக்காக ஒதுக்கியுள்ளனர். அனுமதி இலவசம். ஒர் காவற்காரர் மட்டும் அங்கேயிருந்து வருவோர் போவோரிடம் ஒரு நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்து வாங்குகிறார்; பாராட்ட வேண்டிய பணி.

கல் மரம் என்றால் என்ன?
கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் காடுகளில் இருந்த சில மரங்கள் மட்டும் காலப்போக்கில் கல் போல ஆகி விடுகின்றன. அதாவது மரத்தில் இருந்த செல் cell போன்ற உயிருள்ள பகுதிகளில் சிலிகா silica எனப்படும் மணல் புகுந்து கற்கள் ஆகி விடுகின்றன. ஆனால் தோற்றத்தில் மரங்கள் எப்படி இருக்குமோ அப்படியே இருக்கும். இவ்வாறு 30 மீட்டர் நீளம் வரை மரங்கள் இருக்கின்றன. குறுக்களவு சுமார் ஒன்றரை மீட்டர்.
இந்த மரங்கள் பக்கத்திலுள்ள காடுகளில் இருந்து வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதாக ஆராய்ச்சியாளர் எண்ணுகின்றனர்.
அது எப்படித் தெரிந்தது?
இந்த மரங்களின் கிளைகள், இலைகள் இல்லாததால் இப்படி அடித்து வரப்பட்டிருக்கும் என்பது அவர்களின் துணிபு.
இந்த மரங்கள் பூக்கும் தாவரங்கள் (angiosperms), பூவாத் தாவரங்கள்(gymnosperms) ஆகிய இரண்டு வகையைச் சேர்ந்ததாகும்.
இவற்றைப் பாதுகாப்பதால் என்ன நன்மை?

உலகில் இப்படிப்பட்ட பல பூங்காக்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் அரியலூர் அருகில்கூட ஒரு கல் மரப் பூங்கா உளது. கல்லாகிப் போன மரங்களில் கூட ஆண்டுதோறும் ஏற்படும் வளையங்கள் (annular rings) இருப்பதால் இவை எவ்வளவு பழமையான மரங்கள் என்பதும் அக்கால காலநிலை எப்படி இருந்தது என்பதும் தெரியும்.
இதை முதலில் 1781ஆம் ஆண்டில் ஒரு ஐரோப்பியர் பார்த்து எழுதி வைத்துச் சென்றார். இப்பொழுது இது புவியியல் துறையின் (Geological Survey of India) கட்டுப்பட்டில் இருக்கிறது
மரங்கள் பற்றிய விவரங்கள், அவை எப்படித் தோன்றின என்ற விவரங்கள் அனைத்தும் பெரிய போர்டுகளில் இரு மொழிகளில் எழுதியும் வைத்துள்ளனர்.
சில பகுதிகளில், கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த எரிமலை வெடிப்பு, வறட்சி முதலியனவற்றை அறியக்கூட கல் மரங்கள் உதவுகின்றன.

(யாரைக் கடவுள் காப்பாற்றுவார்? பிளாக்குகளிலும், ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல், சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும், குறை கூறவும், கண்டிக்கவும் உரிமை உள்ளது? மற்றவர் படங்களையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)

—சுபம்—






You must be logged in to post a comment.