பரத்வாஜர் வேதம் கற்ற கதை & தவற்றைத் திருத்துவது எப்படி? கதை (Post No.4043)

Compiled by London Swaminathan
Date: 1 July 2017
Time uploaded in London-20-44
Post No. 4043

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வேதகால இலக்கியத்தில் நான்கு பகுதிகள் உண்டு: 1.சம்ஹிதை/துதிகள் 2.பிராமணங்கள் 3.ஆரண்யகங்கள் 4.உபநிஷத்துகள்

 

இதில் பிராமணங்களில் நிறைய விநோதக் கதைகளும் விளக்கங்களும் இருக்கின்றன; பல விஷயங்கள் புரியவே புரியாது; ஏனெனில் அடையாளபூர்வ, சங்கேத மொழிகளில் விஷயத்தைச் சொல்லுவர். சில கதைகளை இங்கே காண்போம்.

தைத்ரீய பிராமணத்தில் உள்ள கதை

பரத்வாஜர் வேதம் கற்கும் பிரம்மசாரியாக மூன்று முறை

பிறவி எடுத்து பயின்றார். மிகவும் வயதாகி தளர்ந்துபோய் படுக்கையில் கிடந்தார். இந்திரன் அவர் முன்னே தோன்றினான்.

பரத்வாஜரே, உமக்கு நான்காவது முறை வாழ வரம் கொடுத்தால் என்ன செய்வீர்கள்?

நான் மீண்டும் பிரம்மசாரியாக குருகுலத்தில் சேருவேன் என்றார் பரத்வாஜர்.

உடனே இந்திரன் மூன்று மலைகளைக் காட்டினான். அவை ஒவ்வொன்றிலும் ஒரு கை மண் அளவு எடுத்தான்.

பரத்வாஜரே, இவைதான் (நீர் படித்த) வேதங்கள்; அவை அளவற்றவை. நீர் மூன்று ஜன்மங்களில் படித்தது மூன்று கை மண் அளவே. ஆகையால் நீர் படிக்காதவை இன்னும் இருக்கின்றன. வாருங்கள்; பயிலுங்கள் என்றான். இதுதான் பிரபஞ்சம் முழுவதும் வியாபிக்கும் அறிவு. இதை அறிந்தவன் மூன்று வேதங்களையும் அறிந்தவன் வெல்லக்கூடிய அளவுள்ள பெரிய உலகை வெல்லுவான் என்றான்.

 

என் கருத்து

கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு என்று சரஸ்வதி தேவியே சொன்னதாக அவ்வையார் பாடி இருக்கிறார். அதுவும் கூட கௌஷிதகி பிராமணத்தில் இருந்து வந்திருக்கலாம்.

பிரதர்தன என்ற மன்னன் துருக்கி பகுதியை ஆண்டதை கிமு 1400 ஆண்டு துருக்கி நாட்டுக் கல்வெட்டுகளால் அறிகிறோம்; விஷ்ணு சஹஸ்ரநாமத்திலும் பிரதர்தன என்ற பெயர் உள்ளது. ஆகவே ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தனர் என்ற கொள்கை எல்லாம் தவிடு பொடியாகின்றன. எகிப்திலுள்ள தசரத கடிதங்கள் முதலியனவும் கி.மு 1500 ஆண்டு வாக்கில் இந்துக்களின் பெயர்கள் இருந்ததைக் காட்டுகின்றன. ஈரானில் இந்துக்களின் பெயர்கள் இருப்பதை எல்லோரும் அறிவர். இந்த மறுக்க முடியாத தொல் பொருத் துறைச் சான்றுகளால் ஆரிய திராவிட வாதம் தவிடு பொடியகிறது. கௌஷிதகி பிராமணத்திலும் பிரதர்தன என்ற அரசன் பெயர் வருவதும், காசி போன்ற தேசங்களில் இந்த மன்னர் பெயர்கள் வழங்கியதும் கிமு 1500க்கு முன்னரே இந்தப் பெயர்கள் கங்கைச் சமவெளி முதல் துருக்கி-சிரியா எல்லை வரை பரவி இருந்ததை (மிடன்னி நாகரீகம்-Mitanni Civilization)  காட்டுகிறது

 

xxx

கௌசிதகி பிராமணத்தில் உள்ள ஒரு சுவையான கதை

 

நைமிசாரண்ய ரிஷிகள் முன்னால் பிரதர்தன ராஜன் அமர்ந்தான். ஒரு

வேத சதஸில் (சபை) ஒரு தவறு நிகழ்ந்துவிட்டால் அதனால் ஏற்படும் பாவத்திலிருந்து தப்பிப்பது எப்படி?என்று அரசன் பிரதர்தனன் கேட்டான். எல்லா புரோகிதர்களும் மௌனமாகிவிட்டனர். அவர்களுடைய தலைவர், நாம் நம்முடைய தந்தையர்க்கெல்லாம்  ஆசிரியரான ஜாதுகர்ன்யாவிடம் கேட்போம் என்றர்.

அரசனும் கேட்டான்:- ஒரு தவறு நடந்து விட்டது என்றால் அந்த வேதப் பகுதியைத் திருப்பிச் சொல்வதால் பரிகாரம் கிடைத்துவிடுமா? அல்லது ஏதேனும் யாகம் செய்ய வேண்டுமா?

 

ஜாதுகர்ன்யா சொன்னார்:- அந்தப் பகுதியைத் திருப்பிச் சொல்ல வேண்டும்

 

புரோகிதர் தலைவர் கேட்டார்:-ஆரம்பம் முதல் இறுதிவரை எதையும் சொல்ல வேண்டுமா?

 

ஜாதுகர்ன்யா சொன்னார்:- தவறு நடந்த பகுதி வரை திருப்பிச் சொல்ல வேண்டும் அது ஒரு முழு பாடலாக இருக்கலாம்; அரைப் பாடலாக இருக்கலாம்; ஒரு வரியோ, ஒரு சொல்லோ, ஒரு எழுத்தோ– பிழை நடந்த இடம் வரை சொல்ல வேண்டும்.

உடனே கௌஷிதகி சொன்னார்:

அந்தப் பகுதியைத் திருப்பிச் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை; பரிகார யாக யக்ஞங்கள் செய்ய வேண்டியதும் இல்லை; யாகம் செய்பவர் ஒரு தவற்றைத் தெரியாமல் செய்தால் அது தவறே இல்லை. தெய்வீக புருஷனான அக்னிதேவன் அதைத் திருத்தி நிறைவு செய்துவிடுவான் இதை ரிக் வேத துதியும் உறுதி செய்கிறது

–கௌஷிதகி பிராமணம் 6-11

 

எனது கருத்து:

வேதத்தில் இலக்கணப் பிழைகள் இருந்தால் அதைத் திருத்த எவருக்கும் உரிமை இல்லை என்பது வேத அறிஞர்களின் கருத்து. அங்கு தவறே, “சரி” என்று ஆகிவிடும். இதே போலத்தான் பக்தன் தவறு செய்தாலும் கடவுள் அதைப் பொருட்படுத்தார். ஆனால் பக்தனுக்கு யாரேனும் தவறிழைத்தால் கடவுளாலும் ஒன்றும் செய்ய இயலாது. அவரே பக்தனிடம் போய் மன்னிப்பு கேள் என்று அனுப்பிவிடுவார். கடவுளே கூட கொடுத்த வரத்தையோ சாபத்தையோ மாற்ற முடியாது. அதற்கு பரிகாரம் வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் சொன்ன சொல்லை மாற்ற யாராலும் முடியாது.

 

இந்து மதம் சத்தியத்தின் அடிப்படையில் அமைந்தது. வேதங்கள் ‘ருதம்’, ‘சத்யம்’ என்று இதைச் சொல்லும். இதூதான் இந்து தர்மத்தின் அடிப்படை; கடவுளும் அந்த சத்தியத்துக்கும் வேதம் சொல்லும் ‘ருத’த்துக்கும் கட்டுப்பட்டவர். இந்த சொற்களும் ஆங்கிலத்தில் Tறூத், ரிதம் (Truth and Rhythm) என்று இன்றும் வழங்குகின்றன.

 

–Subham–