பாதிரிகளின் சூழ்ச்சியும் விவேகானந்தரின் வெற்றியும்! (Post No.5417)

WRITTEN BY S NAGARAJAN

Date: 11 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-24 AM (British Summer Time)

 

Post No. 5417

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

சிறப்புக் கட்டுரை

செப்டம்பர் 11. விவேகானந்தர் தனது உரையால் அமெரிக்காவை வெற்றி கொண்ட நன்னாள்!

 

பாதிரிகளின் சூழ்ச்சியும் விவேகானந்தரின் வெற்றியும்!

 

ச.நாகராஜன்

 

1

செப்டம்பர் 11. இன்று (11-9-2018) ஸ்வாமி விவேகானந்தர் சிகாகோவில் சர்வமத மகாசபையில் வெற்றிகரமான உரையாற்றிய 125 ஆண்டு விழா நாளாகும்.

அந்த மகத்தான வெற்றி ஹிந்து மதத்தின் வெற்றி. கூடியிருந்த அவையினர் அனைவரும் ஸ்வாமிஜி உரை முடித்தவுடன் இரு நிமிடங்கள் தொடர்ந்து கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அன்றிலிருந்து தொடங்கி அவரது பெயர் அமெரிக்கா முழுவதும் பிரபலமானது.

ஸ்வாமிஜியை இறுதிப் பேச்சாளராக அறிவிக்கும் பழக்கமும் ஏற்பட்டது. ஏனெனில் அவரது பேச்சைக் கேட்க விரும்பி வரும் மக்கள் அதுவரை காத்திருப்பர் என்பதால் தான்.

 

2

மன்மத நாத் கங்குலி என்பவர் ஸ்வாமிஜியின் பால் அத்யந்த பக்தி கொண்டவர். அவர் தனது நினைவலைகளைப் பின்னால் பகிர்ந்து கொண்டார்.அவரது அனுபவங்கள் வேதாந்த கேசரி இதழில் 1960ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாத இதழ்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அதில் ஒரு சுவாரசியமான சம்பவம் இது.

கங்குலி 1897ஆம் ஆண்டு ஸ்வாமிஜியை கல்கத்தாவில் தரிசித்தார்.பின்னர் அடுத்த முறை டிசம்பர் கடைசி வாரத்தில் சந்தித்தார்.

ஸ்வாமிஜியைக் கண்டவுடன் கங்குலி விரைந்து சென்று அவர் பாதங்களைக் கையால் தொட்டு வணங்கினார். அருகில் இருந்த ஒரு சிறு கூடாரத்தின் பக்கத்தில் ஒரு  டீ மேஜை இருந்தது. உட்காருவதற்கு சில ஸ்டூல்களும் இருந்தன. ஸ்வாமிஜி பிரம்மானந்தரிடம் கங்குலி அருந்துவதற்கு டீ கொண்டு வருமாறு கூறினார். டீயும் பிரசாதமும் வந்து சேர ஸ்வாமிஜி தனது சம்பாஷணையைத் துவக்கினார்.

அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி ஸ்வாமிஜி தன் நினைவுகளைச் சொல்லலானார்.

அவரது வார்த்தைகளிலேயே அதைப் பார்ப்போம்:

 

“சிகாகோவில் ஹிந்து மதம் தான் உலகிலேயே மிகப் பெரிய மதம் என்பது நிரூபிக்கப்பட்டது. இதைப் பாதிரிகளால் பொறுக்க முடியவில்லை. அவர்கள் கோபத்தால் கொதித்தனர். பிரான்ஸில் இன்னொரு சர்வமத மகாசபையைக் கூட்ட அவர்கள் விரும்பினர். பாரிஸில் அதை நடத்த எண்ணிய அவர்கள் அதில் பேசும் அனைவரும் பிரெஞ்சு மொழியிலேயே பேசுவதைக் கட்டாயமாக்கலாம் என முடிவு செய்தனர். அப்போது எனக்கு பிரெஞ்சு மொழி தெரியாது. அதனால் என்னை அந்த சர்வமத மாநாட்டில் கலந்து கொள்ளாமல் செய்து விட முடியும் என்று அவர்கள் எண்ணினர். ஆனால் நான் பிரான்ஸுக்கு சென்று பிரெஞ்சு மொழியை ஆறு மாதங்களில் நன்றாகக் கற்றுக் கொண்டு விட்டேன். பிரெஞ்சு மொழியிலேயே பல சொற்பொழிவுகளையும் நிகழ்த்தினேன். இதைப் பார்த்த மிஷனரிகள் தங்கள் உற்சாகத்தை இழந்தனர். இன்னொரு மாநாட்டை நடத்துவது என்ற அவர்களது எண்ணமே கிடப்பில் போடப்பட்டது.”

ஸ்வாமிஜியை புறந்தள்ளி ஓரங்கட்ட நினைத்த பாதிரிகளின் சூழ்ச்சியை மிக சுலபமாக அவர் முறியடித்து விட்டார். பிரெஞ்சு மொழியில் புலமை பெற்றதால் அதிலேயே பேசி பிரான்ஸ் மக்களை அவரால் கவர்ந்து ஈர்க்க முடிந்தது.

ஸ்வாமிஜி தங்கியிருந்த அறைக்கு வெளியே ஒரு பிரைவேட் லெட்டர் பாக்ஸ் இருந்தது. அதில் அவருக்கு வரும் தபால்கள் போடப்படும்.

அதில் அவருக்கு மிரட்டல் கடிதங்கள் ஏராளம் வந்தன. ஹிந்து மதம் பற்றிப் பேசுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற மிரட்டல் அந்தக் கடிதங்களில் இருக்கும்.

அஞ்சா நெஞ்சரான ஸ்வாமிஜி அதைச் சற்றும் பொருட்படுத்தவே இல்லை.

ஸ்வாமிஜி ராபர்ட் க்ரீன் இங்கர்சாலைச் சந்தித்த சமயத்தில் இங்கர்சால் அவரிடம், “நல்ல வேளை, நீங்கள் இப்போது வந்தீர்கள். சிறிது காலம் முன்னர் வந்திருந்தால் உங்களைக் கொன்றே இருப்பார்கள்” என்றார்.

ஹிந்து மதம் பற்றிய ஸ்வாமிஜியில் அரிய உரைகளால் பாதிரிகள் திடுக்கிட்டனர். பதில் சொல்ல முடியாமல் திணறினர்.

இதற்காக அவர்கள் செய்த சூழ்ச்சிகள் பல.

அவற்றில் ஒன்று தான் பிரான்ஸில் நடத்த திட்டமிட்ட அடுத்த மாநாடு.

அதை சுலபமாக உடைத்து எறிந்தார் அவர். ஒருவேளை பிரான்ஸில் மாநாடு நடந்திருந்தால் அமெரிக்காவை வெற்றி கொண்டது போல பிரான்ஸையும் அவர் வெற்றி கொண்டிருப்பார்.

 

3

இந்த 125வது ஆண்டு தினத்தில் ஹிந்து மதத்தின் பெருமையை உலகளாவிய விதத்தில் நிலை நாட்டிய ஸ்வாமி விவேகானந்தருக்கு நமது பக்தியுடனான பணிவான அஞ்சலியைச் செலுத்துவோம். அவர் போதித்த நமது மதத்தின் பெருமைகளை நினைத்துப் போற்றி அதைப் பாதுகாப்போம். நமது மதத்தின் அருமை பெருமைகளை உலகெங்கும் பரப்பி அனைவரும் உணரச் செய்வோம்!

***

ஆதாரம் : அத்வைத ஆஸ்ரமம்., கல்கத்தா வெளியிட்ட  Reminiscences of Swami Vivekananda என்ற நூல். (முதல் பதிப்பு  மே 1961; மேலும் பல பதிப்புகள் கண்ட நூல்) 430 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் கிழக்கு மற்றும் மேற்கைச் சேர்ந்த ஸ்வாமிஜியின் பக்தர்கள் மற்றும் அபிமானிகள் தெரிவிக்கும் சுவையான தகவல்கள் ஏராளம் உள்ளன.வாங்கிப் படித்துப் பாதுகாக்க வேண்டிய நூல். ராமகிருஷ்ண மடம் கிளைகளில் கிடைக்கும்.

–subham–