மயிலை கபாலீஸ்வரர் ஆலயம்! (Post No.10,252)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 10,252

Date uploaded in London – –   25 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 24-10-2021 அன்று ஒளிபரப்பான உரை!

திருமயிலை கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர் ஆலயம்!

மட்டு இட்ட புன்னை அம் கானல் மட மயிலைக்

கட்டு இட்டம் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்

ஒட்டு இட்ட பண்பின் உருத்திர பல் கணத்தார்க்கு

அட்டு இட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்!

திருஞானசம்பந்தர் திருவடி போற்றி!

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன். ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது சென்னை மாநகரின் மையத்தில் அமைந்துள்ள திருமயிலைத் திருத்தலம் ஆகும். மூலவர் திரு நாமம் : ஸ்ரீ கபாலீஸ்வரர்

அம்பிகையின் திரு நாமம் : கற்பகாம்பாள் அல்லது கற்பகவல்லி

ஸ்தல விருக்ஷம் : புன்னை மரம் 

தலத்தின் பெயர்கள் : திருமயிலை, கபாலீச்சரம்

தீர்த்தம் : பிரசித்தி பெற்ற கபாலி தீர்த்தம்

‘கயிலையே மயிலை’, ‘மயிலையே கயிலை’ என்று கயிலாயத்திற்கு நிகரான இந்தத் தலத்தைப் பற்றிய சிறப்பு மிக்க வரலாறுகள் பல உண்டு.

முன்னொரு காலத்தில் பார்வதி தேவி சிவபிரானிடம் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை உபதேசிக்கும் படி வேண்ட அவரும் அப்படி உபதேசிக்க ஆரம்பித்தார். இடையில் அங்கு மயில் ஒன்று அழகாக நடனம் ஆடவே அதன் அழகில் மயங்கினாள் அம்பிகை. உமாதேவி இப்படி வேடிக்கை பார்ப்பதைக் கண்ட சிவபிரான், உபதேச நேரத்தில் கவனத்தைச் சிதற விட்ட காரணத்தினால் அவளை ‘மயிலாகப் பிற’ என தண்டிக்கவே அம்பிகையும் அப்படியே மாறினாள். தனக்கு விமோசனம் தந்து அருள் பாலிக்குமாறு அம்பிகை வேண்ட, சிவபிரான் மயிலையில் அம்பிகையை மயில் வடிவில் மானுடர்கள் வழிபட்டு வர விமோசனம் ஏற்படும் என்று அருளினார். அம்பிகையும் இந்தத் தலத்தில் எழுந்தருள விமோசனமும் பெற்றாள். மயில் வடிவில் அம்பிகை இறைவனை பூஜித்ததால் இந்தத் தலம் திருமயிலை என்ற பெயரைப் பெற்றது. அம்பிகைக்கு இங்கு புன்னை மரத்தடியில் சிவபிரான் தரிசனம் தந்தார். மயிலை பற்றிய இன்னொரு வரலாறும் உண்டு.

ஆதி காலத்தில் பிரம்மாவிற்கு ஐந்து தலைகள் உண்டு. ஒரு சமயம் பிரம்மா தானும் சிவனுக்கு நிகரானவன் என்று கர்வம் கொண்டார். இந்த ஆணவத்தை அழிக்கத் திருவுள்ளம் கொண்ட சிவபிரான் அவரது ஒரு தலையைக் கிள்ளி கையில் ஏந்திக் கொண்டார். அவரது கபாலம் கையில் இருக்கவே, இவர் கபாலீஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்டார். தலத்தின் பெயரும் கபாலீஸ்வரம் என்ற திருப்பெயரைப் பெற்றது.

இத்தலத்தில் வாழ்ந்து வந்த சிவனடியாரான சிவநேசருக்குப் பெண்ணாகப் பிறந்த பூம்பாவை என்பவள் திருஞானசம்பந்தரின் மீது அளவற்ற பக்தி கொண்டவள். ஒரு நாள் பூம்பாவை தோட்டத்தில் மலர்களைப் பறித்துக் கொண்டிருந்த போது விஷப்பாம்பு ஒன்று அவளைத் தீண்ட அவள் இறந்தாள். சிவநேசர் அவளது அஸ்தியை ஒரு குடத்திலிட்டுப் பாதுகாத்து வந்தார். அந்தத் தலத்திற்கு எழுந்தருளிய திருஞானசம்பந்தர், ‘பூம்பாவை எங்கே’ என்று சிவநேசரைக் கேட்க, பூம்பாவையின் அஸ்தி இருந்த குடத்தை அவரிடம் காண்பித்து வருந்திப் புலம்பியவாறே நடந்ததை விவரித்தார் சிவநேசர். உடனே திருஞானசம்பந்தர் மயிலையில் நடக்கும் ஒவ்வொரு திருவிழாவையும் விவரித்து ஒரு பதிகம் பாடி, இப்படிப்பட்ட திருவிழாக்களைக் காணாமல் ‘போதியோ பூம்பாவாய்’ என்று பாடினார். என்ன ஆச்சரியம், பூம்பாவை உயிருடன் எழுந்தாள். அனைவரும் வியந்தனர், மகிழ்ந்தனர். பூம்பாவையை ஏற்றுக் கொள்ளும்படி சிவநேசர் வேண்ட அவள் தனக்கு மகள் முறை ஆகிறாள் என்று கூறி அருள் பாலித்தார் சம்பந்தர். இக்கோவிலில் மேற்கு கோபுரம் அருகில் பூம்பாவைக்கு ஒரு சிறு கோயில் இருக்கிறது. கோவிலில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் பூம்பாவையின் வரலாறு சுண்ணத்தினால் ஆன சிலைகள் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

பூம்பாவை உயிர் பெற்ற நிகழ்ச்சி ஆண்டு தோறும் பங்குனி பிரம்மோத்ஸவத்தின் எட்டாம் நாள் காலையில் நடக்கிறது. சம்பந்தர், பூம்பாவை, சிவநேசர் மற்றும் உற்சவ மூர்த்திகள் கபாலி தீர்த்தத்திற்கு எழுந்தருள அங்கு சம்பந்தரின் பதிகம் பாடப் பட பூம்பாவை உயிர் பெற்று எழுகிறாள். இதைப் பார்ப்போருக்கு ஆயுள் தீர்க்கம் என்பது ஐதீகம். இதே நாளில் 63 நாயன்மார்களும் வீதியுலா செல்வது காணக் கண்கொள்ளாக் காட்சியாகும்.

பெரிய  கோவிலான இது முதலில் கடற்கரைக்கு அருகே அமைந்திருந்தது. போர்த்துக்கீசியர் படையெடுப்பால் தகர்க்கப்பட்ட இது பின்னர் பல்லவர் காலத்தில் சிறப்புற இப்போது இருக்கும் இடத்தில் அமைக்கப்பட்டது, அம்பிகைக்கும் சிவபிரானுக்கும் தனி சந்நிதிகள் உள்ளன. மேற்கு கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். கபாலீஸ்வரர் சுயம்புவாக மேற்கு நோக்கி இருந்து தரிசனம் தருகிறார். சுவாமி சந்நிதி நுழைவு வாயிலின் முன் உள்ள மண்டபத்தில்  இடது புறம் தெற்கு நோக்கி இருந்து அம்பிகை அருள் பாலிக்கிறாள். கர்பக்ருஹத்தைச் சுற்றி வரும் போது பைரவர், வீரபத்திரர், தேவார மூவர் உள்ளிட்ட 63 நாயன்மார்களைக் காணலாம்.இங்குள்ள கணபதி நர்த்தன கணபதியாகக் காட்சி தருவது ஒரு சிறப்பாகும்.

இத்தலத்தில் திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடி அருளியுள்ளார். வாயிலார் நாயனார் அவதரித்த தலம் இது.

இங்கு தெற்கு பிரகாரத்தில் முருகப்பிரான்  ஆறு தலைகள், பன்னிரு கரங்கள் கொண்டு மயில் மீது வீற்றிருக்கிறார். இத்தலத்தில் அருணகிரிநாதர் 10 திருப்புகழ் பாடல்களைப் பாடி அருளியுள்ளார்.அவருக்கு ஒரு சிலையும் இங்கு உள்ளது. உலா, கலம்பகம், அந்தாதி உட்பட்ட முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கியங்கள் இத்தலத்தின் சிறப்பைப் பற்றி அழகுற விளக்குகின்றன.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் கற்பகாம்பாளும் ஸ்ரீ கபாலீஸ்வரரும்  அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.                         திருஞானசம்பந்தரின் அருள் வாக்கு இது:                                                           

கான் அமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்                          

 தேன் அமர் பூம்பாவை பாட்டு ஆகச் செந்தமிழான்                

ஞானசம்பந்தன் நலம் புகழ்ந்த பத்தும் வல்லார்                         

வான சம்பந்தத்தவரோடும் வாழ்வாரே!                                    

நன்றி, வணக்கம்!                                     

***

tags– மயிலை ,கபாலீஸ்வரர் ஆலயம்,  63 நாயன்மார், வீதியுலா,