(((தமிழ் அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! தமிழையும் தமிழினத்தையும் வாழ்விக்க ஒரு வழி இருக்கிறது. ரொம்ப எளிது! யாராவது ஏதாவது நல்ல கட்டுரை எழுதினால், அதில் எழுதியவன் பெயரை வெட்டிவிடாமல் fபேஸ்புக்கில் அல்லது உங்கள் பிளாக்கில் ‘’அனுமதி பெற்று’’ போடுங்கள். வருடம் முழுதும் ஆராய்ச்சி செய்தவன் பெயர் நிலைத்தால் தமிழர் வாழ்வர்!!! தமிழும் வாழும்))).
ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுபவர்—லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1141 தேதி:– ஜூலை 1, 2014.
English version of this article was published yesterday: ‘Strange Bird in Mahabharata’.
நான் இதற்கு முன் 1) வேதத்தில் காணப்படும் ஹோமா பறவை 2) தமிழ் இலக்கியத்திலும் சுமேரியாவிலும் காணப்படும் இருதலைப் பறவை (அண்டரண்ட பக்ஷி), 3) சங்கத் தமிழ் இலக்கியத்தில் பறவை மனிதன் 4) கபிஞ்சலா எனப்படும் சாதகப் பட்சி 5) பாரி- கபிலருக்கு நெல் மணிகள் கொண்டுவந்த கிளிகள் 6) வேதம் சொல்லும் கிளிகள் 7) முரசு சப்தம் கேட்டால் இறக்கும் அசுணமா முதலிய பல பறவை / மிருக அதிசயங்களை எழுதினேன். இப்பொழுது மேலும் ஒரு அதிசயப் பறவை பற்றி மஹாபாரதத்தில் இருந்து செய்தி கிடைத்துள்ளது. இந்தப் பறவையின் பெயர் பூலிங்கப் பறவை. பூமிக்குள் ஆழமாகக் குழி தோண்டி முட்டை இடுவதால் இந்தப் பெயர்.
இதோ சபாபர்வ ஸ்லோகங்கள்:–
பூலிங்கசகுனிர் நாம பார்ஸ்வே ஹிமவதப் பரே
பீஷ்ம! தஸ்யா: யதா வாச: ஸ்ரூயந்தே அர்தவகார்ஹிதா:
மா சாஹசமிதீதம் சா சததம் வாசதே கில
சாஹசம் ச ஆத்மனா அதீவ சரந்தி நா அவபுத்யதே
சா ஹி மாம்சர்களம் பீஷ்ம! முஹாத் சிம்ஹஸ்ய காதத:
தந்தாந்தரவிலக்னம் யத்ததாதத்தே அல்ப சேதனா
–மஹாபாரதம், சபா பர்வம் 2-41-19/21
இந்தப் பறவை பற்றி வியாசர் சொன்னது பலருக்கும் புரியவில்லை போலத் தோன்றுகிறது. ஆகையால் சுருக்கமான மஹாபாரதப் பதிப்புகளில் இது காணப்படுவதில்லை.

சபாபர்வத்தில் தர்மன் (யுதிஷ்ட்ர மஹாராஜா), ராஜசூய யக்ஞம் செய்யும் காட்சி வருகிறது. அங்கே கிருஷ்ணனுக்கு முதல் மரியாதை என்றவுடன் சிசுபாலன் பொங்கி எழுகிறான். எப்போதுமே கிருஷ்ணனைக் கண்டால் அவனுக்கு பாகற்காய் போல கசக்கும். ஆகையால் ஏசுவதே அவனது தொழில். ஆனால் கிருஷ்ணனோ, சிசுபாலனின் தாயாரிடம் ஒரு சத்தியம் செய்துள்ளான். உன் மகன் செய்யும் நூறு தவறுகளை பொறுத்துக் கொள்வேன், அவ்வளவுதான். அதற்கு மேல் எனக்கு எதிராக ஏதேனும் பேசினால் அவன் பெயர்—ரிப்பேர்—ஆகிவிடும்; அவனது மானம் – விமானத்தில் ஏறிவிடும்; அவனது கதி—சகதி ஆகிவிடும் என்கிறான்.
எவ்வளவு சொன்னல் என்ன? நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும், வாலைக் குழைத்துக் கொண்டு ——- தின்னதானே போகும். கிருஷ்ணரை கண்ட சுடு சொற்கள் பேசி ஏசுகிறான் —முறைதவறிப் பிறந்த பயலே- இடைப் பயலே- மடப்பயலே – என்று திட்டுகிறான். 101 ஆவது முறையில் கிருஷ்ணன் சுதர்சன சக்கரத்தை ஏவி — வாழைக்காய்-கத்தரிக்காய் பஜ்ஜிக்கு காய் வெட்டுவதுபோல அவனது தலையைச் சீவிவிடுகிறார். இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்த கதையே.
பீஷ்ம பிதாமஹர் – குருகுலத்தின் அன்புக்கும் பண்புக்கும் உரிய பெரியோய்—அவர் கிருஷ்ணனுக்குப் பரிந்து பேசவே அவரையும் ஏசுகிறான் சிசுபாலன். அப்போழுதுதான் பூலிங்கப் பறவை குறிப்பு வருகிறது.
ஓய், பீஷ்மரே, ஜால்ரா போடுவது, ஒத்து ஊதுவதுதான் உமக்கு வேலையா? அந்தத் திருட்டு இடையன் புகழைப் பாடுவதே உமக்குத் தொழில் ஆகிவிட்டது போலும், நீரே ஒழுக்கம் கெட்டவர்தானே. உமக்கு என்ன அருகதை இருக்கிறது. அமபையைத் தூக்கிவந்து விச்த்திரவீர்யனுக்கு கொடுத்தீர். நீர் ஆண்மை இல்லாத அலி. ஆகையால்தான் பிரம்மச்சாரி வேஷம் போடுகிறீர் என்றெல்லாம் ஏசினான்.
பீஷ்மருக்கு நன்றாகத் தெரிந்த உண்மை—அன்றோடு அவன் கதை முடியப்போகிறது என்பது. ஆகவே பேசாமல் இருக்கிறார். அப்படி ஏசுகையில் நீர் பூலிங்கப் பறவை மாதிரி முட்டாளாக இருக்கிறீரே! அதுதான் சிங்கத்தின் வாயில் உடகார்ந்து மாமிசத் துண்டுகளைப் பொறுக்கும். மற்றவர்களுக்குப் புத்திசொல்லிவிட்டு அந்தப் பறவையே மாமிசத்துக்கு ஆசைப்பட்டு சிங்கத்தின் வாயில் நுழையும் . அந்தப் பறவை இமயமலைக்கு அப்பால் உள்ளது என்கிறான் சிசுபாலன். இதெல்லாம் அவன் தலை சீவப்படுவதற்கு முன் உதிர்த்த பொன்மொழிகள்!!

அவன் இப்படித் திட்டியதிலும் சில அறிவியல் விஷயங்கள் இருக்கின்றன. இந்துக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தியதால் எப்போதும் பறவை, மிருகங்கள், பூக்கள் செடி,கொடி, மரங்கள் பற்றிய உவமைகளையே கையாளுவர். இதற்கு முந்தைய எனது கட்டுரைகளில் ஆதிசங்கரர் ஒரே ஸ்லோகத்தில் நாலு பறவைகள் பற்றிப் பாடியதையும், மரம் ஏறும் விதைகள் கொண்ட விநோத அங்கோல மரம் பற்றி அவர் பாடியதையும், தத்தாத்ரேயர் 13 பறவைகள், மிருகங்களீடம் பாடம் கற்றதையும் படித்தீர்கள்.

இந்தப் பூலிங்க பறவை பற்றி கே. என். தவே (K N Dave) என்பவர் எழுதிய ‘’சம்ஸ்கிருத இலக்கியத்தில் பறவைகள்’’ (Birds in Sanskrit Literature) என்ற புத்தகத்தில் ஒரு குறிப்பு வருகிறது. அவர் சொல்கிறார்:–
ஆப்பிரிக்காவில் நைல் நதியில் ப்லோவர் (Plover) இனப் பறவைகள் உண்டு. மாமிசத்தை உண்ணும் முதலைகளின் பற்களில் மாமிசத் துண்டுகள் சிக்கி அழுகிவிடும். ஆகையால் அவைகள் நதிக்கரையில் வந்து வாயைத் திறந்து கொண்டு உட்காரும். அப்பொழுது ப்லோவர் (Crocodile Bird) பறவைகள் தைரியமாக உள்ளே சென்று அந்த மாமிசத் துண்டுகளைத் தின்னும். இது முதலை—பறவை இனத்தில் மட்டுமின்றி நிறைய உயிரினங்களில் காணலாம். இதை ‘’சிம்பியாசிஸ்’’ (Symbiosis) என்று அழைப்பர். அதாவது இரண்டு உயிரினக்கள் இடையே உள்ள – இருவருக்கும் பயன் தரும் – ஒற்றுமை அல்லது ஒத்துழைப்பு.. சிங்கத்தின் உடலில் உள்ள பூச்சி புழுக்களை குரங்குகள் அகற்றும். காண்டமிருகத்தின் மேலுள்ள கிருமிகளை பறவைகள் அகற்றும்.
ஏன் சிசுபாலன் சிங்கத்தின் பெயரைச் சொன்னான்? இதற்கும் தவே விளக்கம் அளிக்கிறார். மனிதனில் வீரம் உடையவனை புலி, சிங்கம் என்று அழைப்பது போல நீரில் பலம் உடைய முதலைக்கும் சிங்கம் என்ற பெயர் உண்டு என்று சொல்கிறார். ராமனை, வால்மீகி முனிவர் ‘புலி’ என்றே அழைக்கிறார்.
வெங்கடேஸ்வர சுப்ரபாதத்தில் வரும் ‘’கௌசல்யா சுப்ரஜா’’ என்ற முதல் ஸ்லோகம் வால்மீகி ராமாயணத்தில் இருந்து எடுக்கப்பட ஸ்லோகம். அதில் வரும் ‘’நர்சார்தூல’’ என்ற சொல் மனிதருள் புலியே என்று இராம பிரானை புகழ்கின்றது.

தவே சொல்லக்கூடிய விளக்கம் நமக்கு இன்று ஓரளவு தகவல் தருகிறது. மஹாபாரத காலத்தில் ஒருவேளை, சிங்கத்தின் வாயில் இருக்கும் மாமிசத் துண்டுகளை எடுக்கும் பறவை இனம் இருந்திருக்கலாம். யார் அறிவார்?
-சுபம்–


You must be logged in to post a comment.