Written by London Swaminathan swami_48@yahoo.com Date: 17 December 2018 GMT Time uploaded in London – 8-33 am Post No. 5793
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
பர்த்ருஹரி நீதி சதகம் 40, 41, 42, 43
பர்த்ருஹரியின் நீதி சதகத்தைத் தொடர்ந்து காண்போம்
ஏழையாய் இருப்போனுக்கு ஒரு சில தானிய மணிகள் கிடைத்தால் மகிழ்ச்சி; ஆனால் அவனுக்கே நிறைய செல்வம் கிடைத்து கோடீஸ்வரன் ஆகிவிட்டாலோ உலகத்தையே ஒரு சிறு புல் என மதிப்பான். ஆக செல்வத்தின் தன்மை நிலையற்றது. ஒருவனுடைய சூழ்நிலையைப் பொறுத்தே அதன் முக்கியத்துவம் உள்ளது
பர்த்ருஹரி நீதி சதகம் , ஸ்லோகம் 40
அதாவது செல்வம் ஒருவனை மாற்றி விடும். முதலில் சோற்றுக்கே லாட்டரி அடித்தவனுக்கு, லாட்டரி விழுந்து விட்டாலோ உலகத்தையே மதிக்கமாட்டான்
பரிக்ஷீணஹ கஸ்சித் ப்ருஹயதி யவானாம் ப்ரஸ்ருதயே
ஸ பஸ்சாத் ஸம்பூர்ணஹ கலயதி தரித்ரீம் த்ருண சமம்
அதஸ்சானே காந்தா குருலகுதயார்தேஷு தனினா
மவஸ்தா வஸ்தூனி ப்ரதயதி ச ஸங்கோசயதி ச- 40
இது செல்வம் வந்துவிட்டால் ஒருவன் தலைகால் புரியாமல் திரிவான் என்பதைக் காட்டும்.
தமிழிலும் பழமொழி உண்டு:
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்ரியில் குடை பிடிப்பான் – என்று.
பஞ்சதந்திரக் கதைகளில் விஷ்ணு ஸர்மன் இதை இன்னும் அழகாக வருணிப்பான். முதலில் சோர்ந்து கிடந்த எலிகள், வயிறு கொழுக்கச் சாப்பிட்டவுடன் எகிரிக் குதிக்க ஆரம்பிக்கும் இதுவே செல்வம் வந்தவர்களின் நிலையும் என்பது விளங்கும்.
ராமகிருஷ்ண பரமஹம்ஸரும் செல்வம் வந்தவுடன் ஒருவன் எப்படி மாறினான் என்று சொல்லுகிறார்.
பரமஹம்ஸர் சொல்கிறார்:-
பணம் என்பது வலிமைமிக்க, தீமைமிக்க கவர்ச்சிப்பொருள்.
ஒருவன் செல்வத்தைப் பெற்றதும் மிகவும் மாறிவிடுகிறான். வணக்கமும் அமரிக்கையும் உள்ள பிராம்மணன் ஒருவன் அடிக்கடி தக்ஷிணேஸ்வரத்து க்கு வருவதுண்டு. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அவன் வரவேயில்லை. அவனுக்கு என்ன நேர்ந்தது என்பதும் எக்களுக்குத் தெரியவில்லை. ஒரு நாள் நாங்கள் படகு மார்க்கமாக கொன்னாகருக்குப் போனோம்.
படகிலிருந்து கீழே இறங்கும் போது, அந்தப் பிராம்மணன் பிரபுக்களைப் போல கங்கைக் கரையில் உடகார்ந்துகொண்டு, காற்று வாங்குவதைக் கண்டோம். அவன் என்னைக் கண்டதும்,
‘என்ன, ஸ்வாமி, சௌக்கியமா? ‘என்று கம்பீரத் தொனியுடன் கேட்டான். அவனது குரலில் இருந்த மாறுபாட்டைக் கவனித்ததும் நான் ஹிருதயனிடம், இவனுக்கு ஏதோ பணம் கொஞ்சம் கிடைத்திருக்கும் போலிருக்கிறது. என்ன மாறுதல் உண்டாகி இருக்கிறது, பார்த்தாயா? என்றேன். ஹிருதயன் விலா வலிக்கச் சிரித்தான்.
ஓ அரசனே! இந்தப் பூமி என்னும் பசுவிடம் இருந்து பால் கறக்க விரும்பினால், முதலில் கன்றுகள் என்னும் மக்களுக்கு உணவளித்துப் பாதுகாக்க வேண்டும். உனது மக்களை அன்புடனும் பரிவுடனும் போற்றிப் பாதுகாத்தால், பூமியானது கற்பக மரம் போல வேண்டியதை எல்லாம் உனக்கு அளிக்கும்.–41
இது எல்லா அரசுக்கும் இன்றும் பொருந்தும். முதலில் மக்களின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யாவிட்டால் அரசனின் வரி விதிப்புகள் எதிர்ப்பையே சந்திக்கும்.
காளிதாசனும் கூட இதை வேறு விதமாகச் சொல்லுவான். ஆயிரம் கிரனணங்களால் கடல் நீரை சூரியன் உறிஞ்சுவது எதற்காகத் தெரியுமா? அதை மழை போல பூமியில் கொட்டதான் என்பான். ஆக அரசனுடைய வரிவிதிப்பு மக்களுக்காகவே!
வரி விதிப்பது பற்றி சாணக்கியன் எழுதிய அர்த்த சாத்திரத்தில் நிறைய விஷயங்கள் உள்ளது. அது உலகின் முதலாவது பொருளாதார நூல். ஆகையால் அதில் வியப்பேதும் இல்லை ஆனால் வள்ளுவன், காளிதாசன், மனு முதலானோர் பொருளாதார விடயங்களை எழுத வரவில்லை. ஆயினும் அவர்களும் இவ்விஷயத்தைத் தொட்டுக்காட்டியுள்ளனர்.
அட்டை போல உறிஞ்சு!
மனுவின் வரிவிதிப்பு அணுகுமுறையும் சிறிது வேறுபட்டது.
ஒரு அரசனானவன், அட்டை போல, கன்றுக்குட்டி போல, தேனீ போல கொஞ்சம் கொஞ்சமாக ஒரு ஆண்டுக்கான வட்டியைப் பெறவேண்டும்.(7-129)
அட்டை போல (இரத்தத்தை) உறிஞ்சு என்று சொல்லுவது அவ்வளவு நன்றாக இல்லையே என்று எண்ணலாம். ஆனால் இது பணக்காரர் விஷயத்தில் பொருந்தும். நான் வாழும் லண்டனில் கூட அதிக பணம் சம்பாதிப்போரின் பணத்தில் 60 சதவிகிதத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ளும். இது என்னடா பகற்கொள்ளை? என்று எண்ணுவோம். ஆயினும் கம்பெனிகள் வாரி வழங்குவதால் இந்தக் கட்டுப்பாடு.
அட்டை என்னும் பூச்சி இரத்தத்தை உறிஞ்சியதாலோ, கன்றுக்குட்டி பால் குடித்ததாலோ, தேனீக்கள் தேன் எடுத்ததாலோ எந்தப் பிராணியும் எந்தப் பூவும் அழிவதில்லை.
பணக்கார்களுக்கு அட்டை போலவும், மத்திய தர வர்கத்துக்கு கன்று போலவும் ஏழைகளுக்கு தேனீ போலவும் வரி விதிப்புக் கொள்கை இருக்கட்டும் என்று மனு சொல்லாமல் சொல்லுவான்.
வள்ளுவன் சொல்லுவான்:
அதிக வரி விதிப்பது பாலைவனத்தில் கள்ளர்கள் வழிமறித்து எடுக்கும் பகற்கொள்ளைக்கு நேர் நிகர் என்று.
வேலொடு நின்றான் இடு என்றது போலும்
கோலொடு நின்றான் இரவு(குறள் 552)
பொருள்:- ஒரு அரசன் குடிமக்களை வருத்தி கட்டாயப்படுத்தி வரி வாங்குவது, வேல் ஏந்திய வழிப்பறிக் கொள்ளைக்காரன் வழி மறித்து பொருளைப் பறிப்பதற்குச் சமம்.
காளிதாசன், அவனது ரகுவம்ச காவியத்தில் சொல்லுவான்:-
ப்ரஜானாமேவ பூத்யர்த்தம்
சதாப்யோ பலிமக்ரஹீத்
சஹஸ்ர குணமுத்ஸ்ரஷ்டும்
ஆதத்தே ஹி ரசம் ரவி: (ரகு1-18)
சூரியன் தன் ஆயிரம் கிரணங்களால் பல வகையான இடங்களிலிருந்து நீரை எடுக்கிறான். நீரை எடுக்கும் போது நீர் நிலைக்குத் தீங்கு செய்வதில்லை. எடுத்த நீரை மழையாக திருப்பித் தரும்போது பயிர்களும் உயிர்களும் செழிக்கின்றன. மழை எந்த வேறுபாடுமின்றி எல்லோருக்கும் உதவுவது போல அரசனும் உதவுவான்.
இந்துமத நுல்களில் நாடும் பூமியும் பசுவுடன் ஒப்பிடப்படுகிறது. பசு பால் தருவது போல பூமியும் வற்றாது வளம் கொழிக்கும்.
ராஜன் துதுக்ஷஸி யதி க்ஷிததேனுமேனாம்
தேனாத்ய வத்ஸமிவ லோகமமும் புஷாண
தஸ்மிஞ்ச ஸம்யகனிசம் புரிபுஷ்யமாணே
நானாபலம் பலதி கல்பலதேவ பூமிஹி-41
ஒரு அரசன் நியாயமாக ஆட்சி செய்தால் வளம் கொழிக்கும். அநியாய ஆட்சி செய்தால் வறட்சி நிலவும் என்னும் பர்த்ருஹரியின் கொள்கையில் வள்ளுவனுக்கும் உடன்பாடு உண்டு
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல் – குறள் 559
நீதி முறை தவறி மன்னன் ஆட்சி செய்தால் அவன் நாட்டில் மழை பெய்யாமல் போகும்.
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையும் தொக்கு – குறள் 559
தர்ம நூல்கள் செப்பும் படி ஆட்சி நடத்தும் மன்னவன் நாட்டில் மழையும் பெய்யும்; விளைச்சலும் பெருகும்.-559
ஒரு அரசன் விலை மாதர் போன்றவன் என்று பர்த்ருஹரி சொல்லுவான். இக்கருத்து சங்க இலக்கிய நூலான புற நானூற்றிலும் (365) உள்ளது.
ஸத்யான்ருதா ச பருஷா ப்ரியவாதினீ ச
ஹிம்ஸ்ரா தயாலுஅபி சார்த்தபரா வதான்யா
நித்யவ்யயா ப்ரசுரனித்யதனாகமா ச
வாராங்கனேவ ந்ருபனீதிரனேகரூபா -42
ஒரு அரசனுடைய வாழ்வு ஒரு விபசாரியைப் போல பல உருவங்களை எடுக்கும். அவன் பொய்யும் பேசுவான்; மெய்யும் உரைப்பான். அவன் சுடு சொற்களும் பெய்வான்; இனிய சொல்லும் அருள்வான். கருணையுடன் இருப்பான்;சில நேரங்களில் கொடுங்கோலனாகக் காட்சி தருவான். அவன் கொடயாளியாகவும் இருப்பான்; கருமியாகச் செல்வத்தையும் சேர்ப்பான். சில நேரங்களில் பணத்தை விரயமும் செய்வான்- ஸ்லோகம் 42
இதை அடுத்த ஸ்லோகத்தில் என்ன சொல்கிறான் என்று பார்த்து ஒப்பிட வேண்டும். ஒருவனுடைய போக்கு எப்படியும் இருக்கலாம். அவனுடைய அப்போதைய மனநிலையே இதற்குக் காரணம் என்றும் கொள்ளலாம் அல்லது அரசனானவன் இப்படி எல்லாம் இருக்கும் நிர்பந்தம் உண்டு என்றும் கருதலாம். ஆனால் அடுத்த ஸ்லோகத்தில் ஆறு நல்ல குணங்களைப் பட்டியலிட்டு விடுகிறான். ஆகையால் பர்த்ருஹரியின் கொள்கை நமக்குத் தெளிவாகி விடுகிறது.
ஆக்ஞா கீர்த்திஹி பாலனம் ப்ராஹ்மணானாம்
தானம் போகோ மித்ரஸம்ரக்ஷனாம் ச
யேஷாமேதே ஷட்குணா நப்ரவ்ருத்தாஹா
கோஅர்த்தச்தேஷாம் பார்த்திவோபாஸ்ரயேண- 43
பொருள்
ஒரு அரசனுக்கு கீழ்க் கண்ட ஆறு குணங்கள் இல்லாவிடில் அந்த அரசனின் கீழ் வாழ்வதில் அர்த்தமே இல்லை; அரசனுக்குத் தேவையான ஆறு குணங்கள்–
ஆணை இடும் அதிகார தோரணை, புகழ், பிராமணர்களுக்கு பாதுகாப்பு வழங்கல், நண்பர்களைக் காப்பாற்றுதல், தானம், அதே நேரத்தில் இன்பமான வாழ்வு
வள்ளுவனும் இவைகளைச் சொல்லுகிறான்.
அரசனுடைய நீதி வழுவினால், பசுக்கள் பால் தராது; பிராமணர்களுக்கு வேதம் மறந்துவிடும் என்பான். இதன் பொருள்
கோ ப்ராஹ்மணேப்ய ரக்ஷதி (பசுவையும் பார்ப்பனர்களையும் போற்றுவதே நல்லாட்சியின் சின்னங்கள்)- குறள் 560
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின் -560
ஆக பாரதீய சிந்தனை இமயம் முதல் குமரி வரைஒன்றே!
परिक्षीणः कश्चित्स्पृहयति यवानां प्रसृतये स पश्चात्सम्पूर्णः कलयति धरित्रीं तृणसमाम् । अतश्चानैकान्त्याद्गुरुलघुतयाஉर्थेषु धनिनाम् अवस्था वस्तूनि प्रथयति च सङ्कोचयति च ॥ 1.40 ॥