சில கதைகள்-மூடர்களுக்கு கடவுள் கொடுத்த பரிசு மௌனம் (Post No.5487)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 29 September 2018

 

Time uploaded in London – 7-30 am (British Summer Time)

 

Post No. 5487

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

சில கதைகள்மூடர்களுக்கு கடவுள் கொடுத்த பரிசு மௌனம் பர்த்ருஹரி நீதி சதகம் 7,8,9,10

 

பர்த்ருஹரி எழுதிய நீதி சதகத்தில் முட்டாள்கள் வாய் திறக்காமல் இருப்பது நலம் பயக்கும் என்று மொழிகிறார்.

 

வான் புகழ் வள்ளுவமுனும்  தமிழ் வேதம் என்று புகழப்படும் திருக்குறளிலும் அதையே செப்புவார்:-

 

கல்லாதவரும் நனிநல்லர் கற்றார் முன்

சொல்லாதிருக்கப் பெறின் (குறள் 403)

 

கற்றறிந்த மக்கள் முன்னிலையில், கல்லாத முட்டாள்கள் வாய் திறவாமல் மவுனம் காத்தால் அந்த இடத்தில் அவர்களும் நல்லவர்களாகத் தோன்றுவார்கள்.

 

स्वायत्तम् एकान्तगुणं विधात्रा
विनिर्मितं छादनम् अज्ञतायाः ।
विशेषा‌अतः सर्वविदां समाजे
विभूषणं मौनम् अपण्डितानाम् ॥ 1.7 ॥

 

ஸ்வாயத்தம் ஏகாந்த்ஹிதம் (குணம்) விதாத்ரா

விநிர்மிதம் சாதனமக்ஞதாயாஹா

விஷேஷதஹ ஸர்வவிதாம் ஸமாஜே

விபூஷணம் மௌனம் அபண்டிதானாம்

—பர்த்ருஹரி நீதி சதகம்1-7

 

 

ஒருவனுடைய அறியாமையை மறைப்பதற்காக மூடர்களுக்கு மௌனம் என்னும் வரத்தை பிரம்மா அருளியிருக்கிறார். விஷயம் தெரிந்த அறிஞர்களிடையே முட்டாள்களின் அணிகலன் (ஆபரணம்) இந்த மௌனம்தான் (1-7).

 

முட்டாள் கள் பேசினால் அவர்கள் குட்டு வெளிப்படும் ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்று சொன்ன கதை ஆகிவிடும்.

xxx

यदा किञ्चिज्ज्ञो‌உहं द्विप इव मदान्धः समभवं
तदा सर्वज्ञो‌உस्मीत्यभवदवलिप्तं मम मनः
यदा किञ्चित्किञ्चिद्बुधजनसकाशादवगतं
तदा मूर्खो‌உस्मीति ज्वर इव मदो मे व्यपगतः ॥ 1.8 ॥

 

யதா கிஞ்சிஜ்ஜோஹம் கஜ (த்விப) இவ மதாந்தஹ ஸமபவம்

ததா ஸர்வஞோஸ்மீத்யபவதவலிப்தம் ம்ம மனஹ

யதா கிஞ்சித்கிஞ்சித்புதஜன ஸகாசாதவகதம்

ததா மூர்க்கோஸ்மீதி ஜ்வர இவ மதோ மே வ்யபகதஹ

–பர்த்ருஹரி நீதி சதகம் 1-8

எனக்கு கொஞ்சம் அறிவு இருந்த போது நான் யானை போல மதம் பிடித்து அலைந்தேன்;

அந்த நேரத்தில் நான் அனைத்தும் அறிந்தவன் என்று நினைத்தேன்;

ஆனால் அறிஞர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விஷயத்தைக் கிரஹித்தபோது, நான் அறிவிலி என்பது விளங்கியது;

காய்ச்சல் விலகுவது போல எனது கர்வமும் விலகி ஓடியது (1-8).

 

 

இதோ வள்ளுவரின் கூற்று

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு — குறள் 1110

 

நல்ல அணிகளை அணிந்த இந்தப் பெண்ணை பொருந்தும் தோறும்,

அந்த இன்பத்தின் மஹிமை தெரிவது எப்படி இருக்கிறதென்றால், நூல்களை படிக்கப் படிக்க இவ்வளவு காலம் நம் அறியாமையைக் காண்பது போல இருக்கிறது

xxx

 

कृमिकुलचित्तं लालाक्लिन्नं विगन्धिजुगुप्सितं
निरुपमरसं प्रीत्या खादन्नरास्थि निरामिषम् ।
सुरपतिम् अपि श्वा पार्श्वस्थं विलोक्य न शङ्कते
न हि गणयति क्षुद्रो जन्तुः परिग्रहफल्गुताम् ॥ 1.9 ॥

 

க்ருமிகுலசிதம் லாலாக்லின்னம் விக்ன்ந்திஜுகுப்ஸிதம்

நிருபமரஸ்ம்ப்ரீத்யா காதன்னராஸ்திநிராமிஷம்

ஸுரபதிம் அபி ஸ்வா பார்ஸ்வத்வம்  விலோக்ய ந சங்க்தே

ந ஹி கணயதி க்ஷுதோ ஜந்துஹு பரிக்ரஹFபலகுதாம் 1-9

 

கிருமிகள் உடைய , சதைப் பற்றில்லாத, காய்ந்த நாற்றமுள்ள அழுக்கான எலும்புத் துண்டை நக்கும் நாய் தனது எச்சிலை அதில் ருசித்துவிட்டு, எலும்புதான் சுவை தருகிறது என்று நினைப்பது போல(1-9).

xxx

 

शिरः शार्वं स्वर्गात्पशुपतिशिरस्तः क्षितिधरं
म्हीध्रादुत्तुङ्गादवनिम् अवनेश्चापि जलधिम् ।
अधो‌உधो गङ्गेयं पदम् उपगता स्तोकम्
अथवाविवेकभ्रष्टानां भवति विनिपातः शतमुखः ॥ 1.10 ॥

 

சிரஹ சார்வம் ஸ்வர்காத் பசுபதி சிரஸ்தஹ க்ஷிதிதரம்

மஹீத்ராத்துங்காத் அவனேஸ்சாபி ஜலதிம்

அதோ அதோ கங்கா ஸேயம் பதம் உபகதா ஸ்தோயம்

விவேக ப்ரஷ்டானாம் பவதி விநிபாதஹ சதமுகஹ 1-10

 

கங்கை நதி ஆகாயத்திலிருந்து சிவன் தலையில் விழுந்து, பின்னர் மலையில் விழுந்து, பூமியில் விழுகிறத்து. கடலில் கலப்பதற்காக கங்கை நதி மேலும் மேலும் இறங்கி வருகிறது; அத்தோடு அதன் பெயர் மறைந்து ‘கடல்’ என்று ஆகிவிடும். இது போலவே ஒருவர் விவேகத்தை இழக்க, இழக்க நூறு வழிகளில்  கீழே விழுவார்.(1-10)

 

அதாவது புத்தி தடுமாறினால் 100 வழிகளில் வீழ்ச்சி நிச்சயம் என்பது பர்த்ருஹரியின் கூற்று.

 

வள்ளுவன் மனம் போன போக்கில் போகாதவனே அறிவாளி என்பார்:-

சென்ற இடத்தில் செலவிடா தீதொரீ இ

நன்றின் பால் உய்ப்பதறிவு – 422

 

பொருள்

மனம் போன போக்கில் போகாமல் தீயதிலிருந்து விலகி நின்று, நல்ல விஷயங்களில்  ஈடுபடுவதே அறிவு/ விவேகம்

 

 

XXX

 

எங்கப்பன் குதிருக்குள் இல்லை

 

கடன் கொடுத்த ஒருவன் கடனைத் திரும்பி வாங்குவதற்காக ஒரு கடன்காரனை தினமும் விரட்டிக் கொண்டிருந்தான். அவனும் கண்ணில் படாமல் முடிந்தவரை ஒளிந்து வந்தான். ஒருநாள் கடன்கொடுத்தவன், எதிர்பாராத நேரத்தில் கடன் வாங்கியவன் வீட்டை நோக்கி விரைந்து வந்தான். ஜன்னல் வழியாக இதைப் பார்த்துவிட்ட கடனாளி மகனை அழைத்து நான் குதிருக்குள் ஒளிந்து கொள்வேன். யாராவது வந்து உன் அப்பன் எங்கே என்று கேட்டால் சொல்லி விடாதே என்று அவசரம் அவசரமாக ஒளிந்து கொண்டான்.

 

கடன் கொடுத்தவன் கோபாவேசமாக உரத்த குரலில், எங்கே உன் அப்பா? என்று விரட்டியவுடன், எங்கப்பன் வீட்டில் இல்லை; கட்டாயமாக குதிருக்குள் ஒளிந்து கொள்ளவே இல்லை என்று உளறிக் கொட்டினான். இதனால்தான் முட்டாள்களுக்கு மவுனமே கடவுள் கொடுத்த பாதுகாப்புக் கேடயம் என்று ஆன்றோர் நவில்வர்.

xxx

‘உன் மனைவி ஊருக்கே மனைவி’ கதை

முட்டாள்களை எப்படிக் கண்டு பிடிப்பது? (31 அக்டோபர் 2015) என்று முன்னர் நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி:–

 

நுனி மரத்தில் உட்கார்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுபவன் மூடன், முட்டாள் என்று இந்திய இலக்கியங்கள் சித்தரிக்கின்றன. உலக மஹா கவி காளிதாசனும் இப்படி இருந்தவர் என்றும் பின்னர் காளிதேவியின் அருள் பெற்று சிறந்தவர் என்றும் செவி வழிக் கதைகள் செப்பும்.

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை

முட்டாள்கள் அர்த்தம் தெரியாமல் சொற் பிரயோகம் செய்வர். தமிழில் உள்ள கதை அனைவரும் அறிந்ததே. ஒரு ஊரில் ஒரு பெரியவரின் தாயார் இறந்தவுடன் பலரும் துக்கம் விசாரிக்கச் சென்றனர். ஒரு முட்டாள் ஏது சொல்வதென்று திகைத்திருந்த தருணத்தில் எல்லோரும் செல்வதைக் கவனித்தான். “உனது தாயின் இழப்பு உனக்கு மட்டும் இழப்பன்று; அவர் ஊருக்கே தாயாக விளங்கினார். ஆகையால் இன்று நாங்கள் எல்லோரும் தாயை இழந்த பிள்ளையாகி விட்டோம் என்று பலரும் கூறினர். இவனும் அப்படியே கூறிவிட்டு,  வீட்டுக்கு வந்தான். மற்றொரு நாள் ஊர்ப் பெரியவரின் மனைவி இறந்து போனாள். இவன் எல்லோருக்கும் முன் முந்திக் கொண்டு, முந்திரிக் கொட்டை போலச் சென்றான். ஊரே கூடியிருந்தது. இந்த முட்டாள் முன்னே சென்று, “உனது மனைவியை இழந்தது உனக்கு மட்டும் துக்கமன்று. அவள் உனக்கு மட்டும் மனைவியில்லை; ஊருக்கே மனைவியாகத் திகழ்ந்தாள் இன்று நாங்கள் அனைவரும் மனைவியை இழந்த கணவர் ஆகிவிட்டோம்” என்றான். பக்கத்தில் இருந்த பத்துப் பேர் அவனுக்கு அடி உதை கொடுத்து அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்!!

 

மஹாபாரதம் இதை இன்னும் அழகாகச் சொல்லுகிறது. ஒரு கிளியானது சொன்னதைச் சொல்லும்; அழகாகச் சொல்லும். ஆனால் அதையே ஒரு பூனை பிடிக்க வரும் போது அம்மா, என்னை பூனை பிடிக்கிறது என்று சொல்லத் தெரியாது. இதே கதைதான் முட்டாள்களின் கதையும்.

 

பல மொழிகளிலும் அறியாமை பற்றிய கருத்துகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன:

 

1.Ignorance is the night of the mind (Chinese proverb)

 

மனதின் இருண்ட நேரம் அறியாமை (சீனப் பழமொழி)

 

2.There is no blindness like ignorance.

அறியாமை என்பது அந்தகத்தன்மை (குருடு)

 

3.Thedevil never assails a man except he find him either void of  knowledge or  of the fear  of god.

அறிவு இல்லாதவனையும், கடவுளை நம்பாதவனையும்தான் பேய்கள் பிடிக்கின்றன

 

4.Scinece has no enemy but the ignorant.

விஞ்ஞனத்துக்கு ஒரே எதிரி அறிவற்றவனே

 

5.Art has no enemy but ignorance

கலையின் எதிரி அறியாமை

 

6.If the blind lead the blind, both shall fall into the ditch

குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் இருவரும் பள்ளத்தில் விழுவர் (உபநிஷத்திலும், பைபிளிலும் உள்ள உவமை)

 

இறுதியாக மத்திய கிழக்கில் அராபிய மொழியில் உள்ள பழமொழி

He who knows not, and knows not that he knows not, is a fool. Shun him.
He who knows not, and knows that he knows not, is simple. Teach him.
He who knows, and knows not he knows, is asleep. Wake him.
He who knows, and knows that he knows is wise. Follow him.

அறியான் அறியான் தான் அறியாதவன் என்று – அவன் ஒரு முட்டாள் – ஒதுக்குக

அறியான் அறிவான் தான் அறியாதவன் என்று – அவன் எளியவன் – கற்பிக்க

அறிவான் அறியான் தான் அறிந்தவன் என்று – அவன் உறங்குகிறான் – எழுப்புக

அறிவான் அறிவான் தான் அறிந்தவன் என்று – அவன் மேதாவி – பின்பற்றுக

–சுபம்–