Research paper written by London Swaminathan
Research Article No. 1566; Dated 12th January 2015
கன்னிப் பெண்கள் எல்லோரும் ஏற்கனவே திருமணமானவர்கள் என்று இந்து மதம் சொல்கிறது. இதை அப்படியே எழுத்துக்கு எழுத்து அர்த்தம் செய்து கொண்டு, அதன் பின்னால் அமைந்துள்ள பொருளை உணராமல், ஒரு சர்ச்சை நடந்தது! காரணம். உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் என்று தமிழ் கூறு நல்லுலகம் போற்றும் பிராமண உரைகாரர் தொல்காப்பிய சூத்திரத்துக்கு எழுதிய உரையில் இந்தக் கருத்தை எடுத்தாண்டதாகும்.
முதலில் ஒரு சுவையான கதை:
ஆளவந்தார் என்பவர் ஒரு வைஷ்ணவ ஆச்சார்யார். மணக்கால் நம்பிக்குப் பின்னால் வந்தவர். நாதமுனிகளின் பௌத்திரர், ஈசுரமுனிகளின் குமாரர், அவரது தாயார் பெயர் அரங்க நாயகி அம்மையார். மகாபாஷ்ய பட்டருடன் சாஸ்திரம் கற்றவர். வீர நாராயணபுரத்தில் பிறந்தவர்.
சமஸ்தான வித்வான் ஆகிய ஆக்கியாழ்வான் என்பவனுக்கு கப்பம் கட்ட வேண்டும் என்று மகா பாஷ்ய பட்டருக்கு ஒரு திருமுகம் (கடிதம்) வந்தது. அதை வாங்கி கிழித்தெறிந்தார் ஆளவந்தார். அரசன் அனுப்பிய தண்டிகையில் (பல்லக்கில்) ஏறிச்சென்று அரண்மனையில் ஆக்கியாழ்வானை வாதத்தில் தோற்கடித்தார்.
ஆளவந்தாருக்கு தாய் தந்தை இட்ட பெயர் யமுனா. அவருக்கு 16 வயது ஆனபோது இந்த வாக்குவாதம் நடந்தது.
ஆக்கியாழ்வாநுடன் அரண்மனையில் மோதிய 16 வயது யமுனாவைக் கண்டவுடன் அரசிக்கு நம்பிக்கை பிறந்தது. அரசனிடம் சென்று அன்புள்ள கணவரே இந்தப் பையன் கட்டாயம் வாதத்தில் வெல்வான் அப்படி வென்றால் அவனுக்கு பாதி ராஜ்யத்தைக் கொடுக்க வேண்டும். தோற்றால் அவர் உங்களுக்கு பணி செய்யும் வேலைக்காரனாகட்டும் என்றாள். அரசனும் சம்மதித்தான். வாதம் துவங்கியது.
சின்னப்பையனை எளிதில் மடக்கி விடலாம் என்று எண்ணிய ஆக்கியாழ்வான் நீயே வாதத்தைத் துவக்கு என்றார். உடனே ஆளவந்தார் மிகவுமெளிதான நிபந்தனைதான் போட்டார்.
நான் எதை உண்டு என்று சொல்கிறேனோ அதை “இல்லை“என்று மறுக்க வேண்டும். ஆக்கியாழ்வான் சரி என்றான்.
1.உன் தாய் ஒரு மலடி இல்லை.
2.இந்த அரசன் நேர்மையானவன் .
3.இதோ இந்த அரசி கற்புக்கரசி.
ஆக்கியாழ்வானால் பதில் சொல்ல இயலவில்லை —- தன் தாய் மலடி என்றால் உடனே ஆளவந்தார், ஆக்கியாழ்வானே நீ எப்படிப் பிறந்தாய்? என்று கேட்டிருப்பார். அரசன் அரசி பற்றிய இரண்டு வாக்கியங்களுக்கும் இல்லை என்று சொன்னாலோ தலையே போய்விடும்
ஆக்கியாழ்வான் நல்ல சிக்கலில் மாட்டிக் கொண்டான். இதில் எதற்கும் இல்லை என்று சொல்ல முடியாது. நான் தோற்றேன். ஒரு வாதத்தில் யாரும் பொய் சொல்லக்கூடாது. இப்பொழுது நீ சொன்னவற்றை சரி என்று நிரூபி என்றார்.
உடனே ஆளவந்தார் நான் சொன்னது எல்லாம் சாஸ்திரப்படி சத்தியமானவை. கேளுங்கள்:–
1.ஒரு பெண்ணுக்கு ஒரே ஒரு மகன் இருந்தால அவளுக்கு அவன் பிள்ளையே இல்லை என்று சாஸ்திரம் சொல்கிறது நீ ஒரே பிள்ளை என்பதால் உன் தாயின் பிள்ளை இல்லை. ஆகையால் அவள் மலடி
2.இந்த அரசு நேர்மையானவனாக இருந்தால் உன்னைப் போன்ற ஒரு அஹங்காரியை பதவியில் வைத்திருக்க மாட்டான். அவ்வகையில் நேர்மைக் குறைவு இருக்கிறது.
3.வேத மந்திரங்களின் படி எல்லாப் பெண்களும் ஏற்கனவே திருமணம் ஆனவர்கள். கல்யாண மந்திரங்களில் ஒரு பெண் முதலில் சோமனுக்கும் (சந்திரன்), பின்னர் கந்தர்வர்க்கும் அக்னிக்கும் சொந்தமாகி நான்காவது நாள் அக்னியே மணமகனிடத்தில் அப்பெண்ணை ஒப்படைப்பதாகவும் கூறி இருக்கிறது. அந்த சாஸ்திரப் பிரகாரம் பார்த்தாள் மகாராணியும் கூட கற்பிநுக்கு அணிகலன் என்று சொல்லுதற்கில்லை என்று பதில் தந்தார் ஆளவந்தார்.
தோற்றுப்பபோன ஆக்கியாழவான் நாட்டை விட்டு வெளியேறினார். யமுனாவுக்கு பாதிராஜ்யம் கிடைக்கிறது. இதன்னால் அவருக்கு ஆளவந்தார் என்ற பெயர் கிடைத்தது.
தமிழில் ஒரு சர்ச்சை!!!
இந்தக் கதையில் வரும் கல்யாண வேத மந்திரங்களை நச்சினார்க்கினியர்
தொல்காப்பிய சூத்திர உரையில் குறிப்பிட்டுள்ளார். உடனே இதைப் பெரிதுபடுத்தி தமிழர்களின் கற்பு நெறிக்கு ஊறு விளைவிக்கும் பகையான கருத்துக்களை நச்சி. நுழைத்துவிட்டார் என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் எழுதிய — தொல்காப்பியக் கடல் —- என்ற நூலில் கூறுகிறார்.
கரணத்தின் அமைந்து முடிந்த காலை எனத் தொடங்கும் தலைவன் கூற்று நூற்பாவில் வரும் நச்சினார்க்கினியரின் உரைப்பகுதி:
(அ) ஆதிக் கரணமும் ஐயர் யாத்த கரணமும் என்னும் இருவகைச் சடங்கானும் ஊர் குறைபாடின்றாய் மூன்று இரவின் முயக்கம் இன்றி (மதியும் கந்தருவரும் அங்கியும் என்ற) ஆன்றோர்க்கு அமைந்த வகையாற் பள்ளி செய்து ஒழுகி, நான்காம் பகல் எல்லை முடிந்த காலத்துக் அளவிற் புணர்ச்சி போலும் கற்பினும் மூன்று நாளும் கூட்டமின்மையானும் நிகழ்ந்த மனக்குறை தீர (நாலாம் நாளை இரவின்கண்) கூடிய கூட்டத்தின் கண்ணும்
(ஆ)`வரைந்த காலத்து மூன்று நாட் கூட்டமின்மைக்குக் காரணம் என் என்று தலைவி மனத்து நிகழானின்ற வருத்தந்தீரும்படி மிக்க வேட்கையொடு கூடியிருந்து வேதஞ் சொல்லுதலுற்ற பொருளின் கண்ணும் தலைவன் விரித்து விளங்கக்கூறும்`.
மேற்கண்ட நச்சி. உரை மீது மாணிக்கனார் சொல்வது:
`இப்பகுதிகளில் தமிழினத்தின் உயிரான கற்புக் கொள்கைக்கு அடி முரணான செய்திகள் எவ்வளவு மிகையாக உள்ளன. தெய்வந்தொழாள் கொழுனனைத் தொழுதெழுவாள் என்ற கற்பறத்திற்கு இவ்விளக்கங்கள் எவ்வளவு பகையாக உள்ளன. தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இத்தகைய நாகரீகக் கொல்லுரைகளைப் படிக்கும்போது நெஞ்சு பொறுக்குமா?`
–என்று கொதிக்கிறார்.
கண்ணகி முதல் பல தமிழ்ப் பெண்கள் தீ வலம் செய்து வேத மந்திர முழக்கத்துடன் திருமணம் செய்ததை நாம் இலக்கியம் வாயிலாக அறிவோம். தொல்காப்பியத்துக்கே நான் மறை முற்றிய வேதப் பிராமணன் அதங்கோட்டு ஆச்சார்யார்தான் முத்திரை குத்தி இது நல்ல நூலே என்று “சர்டிபிகேட்“ கொடுத்தார் என்று பனம்பாரனார் பகர்வார். அப்படி இருக்க வேத மந்திரக் கருத்தை அதன் நுன்கருத்துணராது மாணிக்கனார் கொதித்தது ஏன் என்று விளங்கவில்லை.
அப்படியானால் வேத மந்திர முழக்கத்துடன் நடைபெறும் பிராமண, செட்டியார், முதலியார் கல்யாணங்களில் உள்ள கன்னிப் பெண்கள் எல்லாம் கன்னியர் அல்ல, வேத மந்திரம் சொல்லாமல் மணம் முடிக்கும் பெண்களே கன்னியர் என்று அவர் நம்புகிறாரா? அல்லது தெய்வத்தைத் தொழாமல் உங்கள் கணவரைத் தொழுங்கள் என்று இவர் இன்று எந்த மகளிர் கல்லூரியிலாவது பேசினால் அப்பெண்கள் நகைக்காமல் இருப்பார்களா?
உரை எழுதிய காலத்தில் உள்ள நம்பிக்கையின் அடிப்படையில் அவரவர் பொருள் காணுவர். அதை ஏற்பதும் ஏற்காததும் அந்தந்தக் காலத்து சமுதாய சூழ்னிலையையும் சட்ட திட்டங்களையும் பொறுத்தது. அதற்காக பழைய உரைகாரர் மீது பாய்வது நன்றொ சொல்லீர்!!
-சுபம்-
You must be logged in to post a comment.