கரிகாலன் வரலாறு கூறும் சுவைமிகு பாடல்கள்!

chola-flag-2

Compiled by london swaminathan

Post No: 1597: Dated 23 January 2015

 

தமிழ் இலக்கியத்தில் அதிகம் பாடல் பெற்ற மன்னன் கரிகாலன் என்றே தோன்றுகிறது. பழமொழி நானுறு மட்டிலுமே மூன்று பாடல்கள் இருக்கின்றன. பத்துப் பாட்டில் பொருநர் ஆற்றுப் படை, பட்டினப் பாலை

ஆகிய நூல்களிலும், புறநானூறு முதலிய பாடல்களில் நிறைய இடங்களிலும் கரிகாலன் பெயர் வருகிறது. வேத நெறி தவறாமல் ஆட்சி செய்த மாமன்னன் அவன் —-.மஹாவம்சத்தில் வரும் எல்லாரன், ஏழாரன் என்ற பெயர்களும் இவரையே குறிக்கும் என்பாரும் உளர்.

1.கரிகாலன், யஜூர் வேதத்தில் சொன்னபடி பருந்து வடிவ யாக குண்டம் எழுப்பி பெரிய யாகம் செய்ததைத் தனிக் கட்டுரையில் விரிவாகத் தந்து விட்டேன்.

 

காண்க: கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம், ஜனவரி 18, 2012

 

2.கரிகாலன், ரிக் வேத மந்திரத்தில் சொன்னபடி, ஏழு அடி நடந்து (சப்த பதி) சென்றுதான் நண்பர்கள், விருந்தாளிகளுக்கு பிரிவுபசாரம் (குட் பை) சொல்லுவான் என்பதையும் தனிக்கட்டுரையில் கொடுத்து விட்டேன்.

 

பிராமண புரோகிதர்களைக் கொண்டு நடத்தும் திருமணங்களில்– தீயை வலம் வரும் மணமக்கள் — ஏழு அடி = சப்த பதி — நடப்பர். அப்படியானால் அந்த உறவு நீடித்து நிற்கும் என்பது கருத்து. தமிழ் மன்னர்களின் அமைச்சர்கள், புரோகிதர்கள்  பிராமணர்கள் என்பதால் தொண்டைமான் இளந்திரையன், கரிகாலன் ஆகியோர் இப்படிச் செய்ததை சங்க இலக்கிய ஆற்றுப்படை நூல்கள் அழகாகச் சொற்களில் வடித்துள்ளன

3.கரிகாலன் தான்,  இந்தியத் திரு நாட்டில் நீண்ட காலம் ஆண்ட மன்னன் என்பதையும் சில நாட்களுக்கு (ஜனவரி21, 2015) முன் தனி ஒரு கட்டுரையில் தந்தேன்.

4.உலகம் முழுதும் உள்ள நீதிபதிகள் தலையில் நரை முடி தரித்து (விக்) நீதி வழங்கும் — தீர்ப்புக் கூறும் — வழக்கத்தைக் கரிகாலனே துவக்கி வைத்தான் என்றும் ஒரு ஆய்வுக் கட்டுரையில்  எழுதிவிட்டேன்.

 

எனது முந்தைய கட்டுரைகளைப் படித்தறிக.

karikal elephant

இப்பொழுது பழமொழிப் பாடல்களில் வரும் அவன் கதைகளைக் கண்போம்:

 

1.சுடப்பட்டு உயிர் உய்ந்த சோழன் மகனும்

பிடர்த்தலைப் பேரானைப் பெற்று – கடைக்கால்

செயிரறு செங்கோல் செலீ இயினான்; இல்லை

உயிர் உடையார் எய்தா வினை — (பழமொழி நானூறு)

 

பொருள்:பகைவர் மூட்டிய தீயில் அகப்பட்ட சோழனின் சிறுவயது மகன், இரும்பிடர்த் தலையார் என்ற மாமன் உதவியுடன் பிற்காலத்தில் ஆட்சியைக் கைப்பற்றி செங்கோல் ஆட்சி செய்தான். ஒருவன் அடைய முடியாத வினை எதுவும் இல்லை.

இதைக் கர்மவினைக் கொள்கையை உறுதிப்படுத்தும் பாட்டு என்பதே பொருத்தம். பழமொழி நூலை யாத்தவர்கள் சமண முனிவர்கள் என்பர் சான்றோர். அவர்கள் கர்ம வினைக் கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கை உடையோர். கரிகாலனுக்கு பூர்வ ஜன்ம கர்ம வினையின் படி அப்பதவி கிடைக்க வேண்டும் என்று இருந்தால் அதை யாராலும் தடுக்க இயலாது என்பதே புலவர் தம் கருத்து.


இவன் சிறு வயது பாலகனாக இருந்ததால் இவனுக்கு எதிராக அரண்மனைச் சூழ்ச்சிகள் பெருகி, பஞ்ச பாண்டவர் தங்கிய அரக்கு மாளிகைக்கு துரியோதணன் தீ வைத்தது போல  — கரிகாலன் இருப்பிடத்துக்கும் தீ வைக்கவே அவன் தப்பி ஓடுகையில் கால் கருகி கரிகாலன் எனப் பெயர் பெற்றதை பொருநர் ஆற்றுப்படையின் பிற்சேர்க்கையான கீழ் கண்ட பாடலும் உறுதி செய்யும்:

 

முச் சக்கரமும் அளப்பதற்கு நீட்டிய கால்

இச் சக்கரமே அளந்ததால் – செய்ச்சேய்

அரிகால்மேல் தேன்   தொடுக்கும் ஆய் புனல் நீர் நாடன்

கரிகாலன் கால் நெருப்புற்று

அக் காலத்தில் மன்னர் இல்லாத — அராஜக நாட்களில் — யானை கையில் மாலையைக் கொடுத்து, அது யார் கழுத்தில் மாலை இடுகிறதோ அவரை மன்னர் ஆக்கல் வழக்கம். மூர்த்தி நாயனார், கரிகாலன் முதலியோர் இப்படித் தேர்ந்தெடுக்கப் பட்ட தமிழ் மன்னர்கள் ஆவர்.

கரிகாலன் பற்றிய பாட்டு இதோ:

processiononelephants2

2.கழுமலத்து யாத்து களிறும் கருவூர்

விழுமியோன் மேற் சென்றதனால்  விழுமிய

வேண்டினும் வேண்டா  விடினும் உறற்பால

தீண்டாவிடல் அரிது –(பழமொழி நானூறு)

 

பொருள்:– கழுமலம் என்னும் ஊரில் இருந்து விடப்பட்ட யானை, கருவூருக்குச் சென்று கரிகாலனை ஏற்றி  வந்தது. ஒரு பொருளை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் , அடைவதற்கு உரியன ஒருவரை அடைந்தே தீரும் (கர்ம வினைக் கொள்கை)

Muller Collection - Dr. W.E. Bok of Pretoria in robes and wig

3.உரை முடிவு காணான் இளமையோன் என்ற

நரை முது மக்கள் உவப்ப — நரை முடித்து

சொல்லாலே முறை செய்தான் சோழன் – குலவிச்சை

கல்லாமற் பாகம் படும் –  -(பழமொழி நானூறு)

 

பொருள்:- நாம் சொல்லும் வழக்கைப் புரிந்து கொள்ளும் வயது இவனுக்கு இல்லை- இவன் சின்னப் பையன்- என்று வயதான மனுதாரர்கள் சொன்னார்கள். உடனே (மாறு வேடத்தில்) தலையில் நரை முடித்து வந்து மனம் மகிழும் தீர்ப்புரைத்தான்.ஆதலால் அவரவர் குலத்துக்குரிய அறிவு கல்லாமலேயே எல்லோருக்கும் இருக்கும் (ஜாதிக் கொள்கை: அவரவர் ஜாதி மூலம் கிடைக்கும் அனுபவ அறிவு அவனை அப்பணியில் சிறக்கச் செய்யும். இப்போதும் நடிகர் மகன் நடிகனாவதும், முதலமைச்சர் மகன், அமைச்சர் பதவி பெறுவதும் உண்டு)

இது பற்றி 1990-களில் லண்டனில் இருந்து வெளியான ‘மேகம்’ மாத இதழில் நான் எழுதிய ஆய்வுக்கட்டுரைகள் — “தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்”—  என்று நூல் வடிவில் 2006-ல் வெளியானது. பின்னர் இந்த பிளாக்- கில் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியானது.

எனது பழைய கட்டுரை ( இதுவரை படிக்காதோருக்காக)

 

தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகு காட்சிகள்

கரிகால் சோழனுக்கு பிரிட்டிஷ் நீதிபதிகளுடன் தொடர்பு உண்டா?

ச. சுவாமிநாதன், எம்.ஏ., (பிரித்தானியா)

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டை ஆண்ட கரிகால் சோழனுக்கும் இன்று பிரிட்டனில் நீதி வழங்கும் அதிகாரிகளுக்கும் இடையே தொடர்பு உண்டு என்று யாரேனும் சொன்னால் இது என்ன மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறார்களே? என்று கூறுவார்கள்.  கோகுலாஷ்டமிக்கும் குலாம்பாய்க்கும் என்ன தொடர்போ, அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன தொடர்போ அந்த அளவுதான் தொடர்பு என நினைப்பார்கள்.  ஆனால் பின்வரும் அதிசயமான விஷயத்தைப் படியுங்கள்.  தொடர்பு புரியும்.

இதோ ஒரு குட்டிக்கதை

பெரும்பாலும் தமிழர்களுக்குத் தெரிந்த கதை, சோழநாட்டில், உறையூரில் இருந்த நீதிமன்றம் மிகவும் புகழ் பெற்றது.  ஒருநாள் இரண்டு முதியவர்கள் ஒரு வழக்குடன் அங்கு வந்தார்கள்.  அப்போது நீதிமன்றத்தில் நடுவர் இருக்கையில் அமர்ந்திருந்தவனோ சோழமாமன்னன் கரிகாலன்.  வயதில் இளையவன்.  இரண்டு முதியவர்களுக்கும் பெருத்த ஏமாற்றம்.

நாம் கொண்டு வந்த வழக்கோ மிகச் சிக்கலானது.  இந்தச் சிறுவனா இதை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கப் போகிறான்.  இது இயலாத செயல் என்று கருதினர்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியுமல்லவா?

அவர்கள் முகத்தில் ஏற்பட்ட ஏமாற்றத்தைக் கவனித்த கரிகாலன், “பெரியோர்களே! வயதான நீதிபதியைக் காணவில்லை என்று தானே கவலைப்படுகிறீர்கள்.  நாளை வாருங்கள் அவர் இருப்பார்.”  எனக் கூறி அவர்களை அனுப்பி வைத்தான்.

அவன் கூறியது போலவே, மறுநாள் அறங்கூறு அவையில், தலை நரைத்த முதிய நீதிபதி ஆசனத்தில் அமர்ந்து இருந்தார்.  முதியவர்கள் இருவரும் தம் வழக்கை எடுத்துரைத்தனர்.  அதனை விசாரித்த முதிய நீதிபதி, அனைவரும் வியக்கும் வண்ணம் தீர்ப்புக் கூறினார்.  முதியவர்கள் இருவருக்கும் மிக்க மகிழ்ச்சி.

wig1karikal elephant

அதிலும், அவ்வாறு தீர்ப்புக் கூறியது முதிய நீதிபதியைப் போல் நரைமுடி தரித்து அமர்ந்திருந்த இளைஞனான கரிகாலன்தான் எனத் தெரிந்ததும் அவர்களின் வியப்பு எல்லையற்றதானது.  கரிகால் சோழன் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் நரைமுடி தரித்து வந்து தீர்ப்பு வழங்கிய செய்தி முழு உலகுக்கும் தெரிய வந்துவிட்டது போலும்.

அதன் விளைவாகத் தான் உலகெங்கிலும் நீதிபதிகள் நரைமுடி போன்று ‘விக்’ தரித்து தீர்ப்பு வழங்குவதை பழக்கப்படுத்திக் கொள்ளத் துவங்கியிருக்க வேண்டும்.  இன்றும் கூட பிரிட்டனில் நீதிபதிகள் தலையில் வெள்ளை (நரை) முடி ‘விக்’ தரித்து வந்துதான் தீர்ப்பு வழங்குகின்றனர்.  வேறு சில நாடுகளிலும் இவ்வழக்கம் இருந்து பின்னர் மறைந்திருக்க வேண்டும்.  நரைமுடி தரித்து தீர்ப்பு வழங்கிய கரிகால் சோழனைத் தமிழ் இலக்கியம் மிகவும் வியந்து போற்றுகிறது.

இச்செய்தியைப் பொருநராற்றுப்படை, மணிமேகலை, பழமொழி ஆகிய நூல்கள் எடுத்துரைக்கின்றன.

முதியோர் அவை புகு பொழுதிற்றம்

பகை முரண் செலவும்—–

பொருநராற்றுப்படை (வரி 187–188)

என்றும்

இளமை நாணி முதுமை எய்தி

உரை முடிவு காட்டிய உரவோன்

என்றும் இலக்கியங்கள் புகழ்கின்றன.  பழமொழி என்னும் பதினெண்ணின் கீழ்க் கணக்கு நூல் பின்வரும் பாடலில் விளக்கமாகக் கூறுகிறது.

“உரை முடிவு காணா இளமையோன் என்ற

நரை முதுமக்கள் உவப்ப====

“நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான்

சோழன், குல விச்சை கல்லாமற் பாகம்படும்

தத்தம் குலத்தொழில் கற்காமலேயே ஒருவருக்கு வந்துவிடும் என்னும் பழமொழியை விளக்கக் கரிகாலன் கதையைப் பயன்படுத்துகிறான் ஒரு கவிஞன்.  இமயம் வரை சென்று புலிக்கொடி நாட்டிய கரிகால் பெருவளத்தானை பிரிட்டன் வரை சென்று புகழ்க்கொடி நாட்டினான் என்று சொன்னால் மிகையல்ல.

contact swami_48@yahoo.com