புகழ் மிகு பிராக்ருத காதல் நூல் தோன்றிய கதை !

gatha_sapt

கட்டுரை எழுதியவர்: லண்டன் சுவாமிநாதன்

ஆராய்ச்சிக் கட்டுரை எண் —  1551; தேதி:6 ஜனவரி 2015

பிராக்ருத மொழியில் காதா சப்த சதி என்ற ஒரு காதல் நூல் இருக்கிறது. இதில்   சங்க இலக்கிய அகத்துறை பாடல்களைப் போலவே காதல் பாடல்கள் உள்ளன. 700 பாடல்கள் இருப்பதால் `சப்த சதி`  என்று பெயர் இட்டனர். இதைச் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஹாலன் என்ற சாதவாஹன மன்னன் தொகுத்தார் என்பர். இந்த நூல் தோன்றிய வரலாறு ஒரு சுவையான வரலாறு ஆகும். இந்தப் புத்தகத்தில் ஹாலனின் சுமார் 40 கவிதைகளும் இடம்பெறுகின்றன. ஆனால் முதலில் அவனுக்குக் கவிபாடும் திறமை கிடையாது.

சாதவாஹனனின் மனைவியின் பெயர் மலயவதி. சம்ஸ்கிருதப் புலமை பெற்ற அறிவாளி. இவ்விருவரும் நீர்விளையாட்டிற்காக ஆற்றங்க்கரைக்குச் சென்று ஒருவர் மீது ஒருவர் நீரை இறைத்து விளையாடினர். அப்பொழுது அவனிடம் அவள் சொன்னாள்: மோதகஸ் தாடய என்று — இதன் பொருள்- மா உதகஸ் தாடய — அதாவது “தண்ணீரால் அடிக்காதீர்கள்”. ஆனால் மன்னனுக்கு வடமொழி தெரியாததால், அவள் மோதகம் (கொழுக்கட்டை) கேட்கிறாள் என்று நினைத்துக்கொண்டு , உடனே கொழுக்கட்டை கொண்டுவாருங்களென்று கட்டளை இட்டான. அவள் குபீர் என்று சிரித்து விட்டாள். வடமொழி சந்தி இலக்கணப்படி மோதக என்பதை மா+உதக என்று பிரிக்க வேண்டும்.

gss 2

உடனே ஹாலனுக்கு அவமானம் தாங்காமல்கல்வி வெறி பிடித்தது! எப்படியாவது சம்ஸ்கிருதம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான். ஆறே மாதங்க்களில் தனக்கு யார் சம்ஸ்கிருதம் கற்றுத் தரமுடியும் என்று சவால் விட்டான். சர்வ வர்மா என்ற பண்டிதன் தான் கற்பிக்க முடியும் என்றார். அவரது சபையில் இருந்த பிரபல எழுத்தாளர் குணாட்டியரோ முடியவே முடியாது என்றார். அவர்தான் பிருஹத் கதை ( பெருங்கதை) எழுதிய பேரறிஞர். வடமொழி இலக்கணம் கடினமானது என்றும் ஆறு மாத காலத்தில் சர்வ வர்மன் கற்றுத்தந்தால் இனிமேல் தான் சம்ஸ்கிருதத்தில் எழுதுவதையே நிறுத்தி விடுவதாகவும் சூளுரைத்தார்.

 

சர்வ வர்மன் தான் சொன்னபடி ஆறே மாதங்களில் ஹாலனுக்கு சம்ஸ்கிருத இலக்கணத்தைக் கற்றூக் கொடுத்தார். குணாட்டியர் சொன்ன சொல் தவறாமல் அந்த நாட்டைவிட்டே வெளியேறி வேறிடத்திற்குச் சென்றார். பைசாச மொழியில் பெருங்கதை என்னும் நூலைச் செய்தார். குணாட்டியர்,  தான் ஏற்கனவே எழுதிய பெருங்கதையை எரிக்க எத்தனித்தபோது அதை ஹாலனே தடுத்து நிறுத்தி புத்தகத்தைக் காப்பாற்றினார்.

காலப் போக்கில் ஹாலனே பெரும் கவிஞன் ஆனான்

ஏராளமான புலவர்களை ஆதரித்து கவி வத்சலன் என்ற பெயரும் எடுத்தான். விக்ரமாதித்தன் போலவே இவனும் பெரிய அறிவாளி. அவனைப் போலவே இவனது சபையிலும் அறிஞர்கள் இருந்தனர். விக்ரம சஹாப்தம் போலவே சாலிவாஹன சஹாப்தம் என்றும் துவக்கப்பட்டது. ஹாலன் தொகுத்த முக்கிய 700 பாடல்கள் காதா சப்த சதியில் இருக்கின்றன.


gss4

விக்ரமாதித்தன்  சபையை அலங்கரித்த காளிதாசனே இவர்களுக்கு ஊற்றுணர்ச்சி தந்திருக்க வேண்டும். விக்ரமாதித்தன் ஆயிரகணக்கில் பொற்காசுகளைக் கவிஞர்களுக்குக்  கொடுத்த ஒரு பாடலும் இந்த சப்த சதியில் இருப்பது இதை மெய்ப்பிக்கிறது. மேலும் காளிதாசனின் உவமைகளை பல ஊர் பேர் தெரியாத புலவர்கள் இதில் (திருடி) பயன்படுத்தியுள்ளனர்.contact swami_48@yahoo.com

gss3