


Post No. 9910
Date uploaded in London –30 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உலகிலேயே பெரிய வெள்ளிப் பாத்திரம் ஜெய்ப்பூரில் இருப்பது பற்றியும், கிணறு, குளங்களில் யாத்ரீகர்கள் வெள்ளிக் காசுகளை எறிவது ஏன் என்பது பற்றியும், யுத்த கால ரசாயன ஆயுதங்களை அழிக்க வெள்ளி உப்பு எப்படிப் பயன்படுகிறது என்பது பற்றியும் நேற்று கண்டோம். இதோ மேலும் சுவையான செய்திகள் :-
லத்தீன் மொழியில் அர்ஜெண்டம்(Argentum) என்றால் வெள்ளி. இது ‘ரஜத’ என்ற சம்ஸ்க்ருத மொழிச் சொல்லில் இருந்து பிறந்தது. மதுரை என்பதை மருதை என்பது போலவும், குதிரை என்பதை குருதை என்பது போலவும், ‘ரஜத’ என்பது ‘அர்ஜத’ ஆகும். இந்த வெள்ளியின் ரசாயனக் குறியீடு ஏஜி Ag என்பது இதனால் வந்ததே . சரகர் என்பவர் 2500 ஆண்டுகளுக்கு முன் எழுதிய நூலில் வெள்ளியின் மருத்துவ உபயோகங்கள் இருக்கின்றன. வெள்ளி பஸ்மம் பற்றியும் உளது . வேதத்தில் தங்கம் போலவே வெள்ளியும் குறிப்பிடப்படுகிறது .
இங்கு இன்னும் ஒரு சுவையான விஷயத்தையும் காண்போம். அமெரிஷியம் என்ற மூலகம் அமெரிக்காவின் பெயரில் உள்ளது; போலோனியம் என்ற மூலகம் போலந்து நாட்டவர் கண்டுபிடித்ததால் சூட்டப்பட்டது. ரேனியம் என்பது நதியின் பெயரால் ஏற்பட்டது. இது போல வெள்ளியின் லத்தீன் மொழிப்பெயர் தென் அமெரிக்காவில் உள்ள, கால் பந்து புகழ் வீசும் அர்ஜென்டினாவுக்கு ஏற்பட்டது.
அர்ஜென்டினாவில் உள்ள நதிக்கும் வெள்ளியின் வேறு பெயர் பிளாட (Plata) . ஸ்பானிய மொழியில் ரியோ த ல பிளாட்டா Rio de la Plata .ஸ்பானியர்கள் மண்ணின் மைந்தர்களிடமிருந்து வெள்ளியைக் கொள்ளை அடித்தனர். ஸ்பானிய ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்தபோதும் அர்ஜெண்டினா என்ற பெயர் மட்டும் – வெள்ளி நாடு – ஒட்டிக்கொண்டது. தென் அமெரிக்காவில் பிரேசில் தவிர மற்ற எல்லா இடங்களையும் ஸ்பெயின் ஆண்டது.
இனி வெள்ளியின் பங்கு பணியைப் பார்க்கலாம். உடலுக்கு வெள்ளி தேவை இல்லை. வெள்ளி கலந்த ரசாயன உப்புகள் கெடுதியே செய்கின்றன. 50 வயதான ஒருவன் வாழ்நாளில் ஒன்பது மில்லிகிராம் வெள்ளியை உடலில் சேர்க்கிறான் என்றும் அது கல்லீரல் அல்லது தோலில் தங்கிவிடுகிறது என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.
நாம் சாப்பிடும் சாதாரண உணவுப் பண்டங்களில் மிகச் சிறிதளவு வெள்ளி உலோகம் இருக்கிறது. பால், மாவு, தவிடு போன்றவற்றில் இது இருக்கிறது
xxx
மருத்துவ உபயோகங்கள்
சில்வர் நைட்ரேட் (Silver Nitrate) என்னும் வெள்ளி உப்பை உடம்பில் ஏற்படும் வடுக்களை, மருக்களை அகற்ற பயன்படுத்தினர். இதே போல குழந்தைப் பருவத்தில் கண் பார்வை இழக்கும் நோய்களைத் தடுக்கவும் சில்வர் நைட்ரேட் கரைசல் பயன்பட்டது. முகப்பருக்களை அகற்றும் மருந்திலும் இது உபயோகிக்கப்பட்டது. இவை எல்லாவற்றிலும் உள்ள ராகசியம் என்னவென்றால், அந்த உப்பு பாக்டீரியா போன்ற கிருமிகளை அழிக்கும் என்பதே. சிகரெட் குடிப்பதை நிறுத்த சில்வர் அசிடேட் (Silver Acetate) உப்பை பயன்படுத்துகின்றனர். இது கலந்த மாத்திரை புகை பிடிப்போ ரின் வாயில் கசப்பை உண்டாக்குவதால் புகைபிடிப்பது குறையும்.
நீண்ட கால உபயோகம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும், வெள்ளியை உடலுக்குள் செலுத்திவிடும் என்பதை அறிவோம். ஆகையால் வெள்ளியை மெதுவாக விடுவிக்கும் புதிய பொருள்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. முகப்பருக்கு வெள்ளி மருந்துகள் (Colloidal Silver) இன்றும் பயன்படுகிறது.
பாக்டீரியாக்காளை அழிக்கும் குணத்தால் சில்வர் உப்புக்களை தீக்காயங்களைக் குணப்படுத்தவும்,உபயோகிக்கின்றனர். உடலுக்கு மேலே போடப்படும் பாண்டேஜ் (Bandage) , எலும்பு முறிவு மாவு ஆகியவற்றிலும் உடலுக்குள் செலுத்தப்படும் கதீட்டர் (Catheter) என்னும் குழாய்கள் ஆகியவற்றிலும் கலக்கப்படும் வெள்ளிப் பொருட்கள் கிருமிகளை அழிக்கின்றது.
வெள்ளி உப்புக்களை பயன்படுத்துவதால் முடி முதலியன விரைவில் நரை (Greying) தட்டும் (வெள்ளி மயிர்) அபாயமும் உளது. ஆனால் இது நீண்ட காலம் நீடிக்காது. இவைகளை எல்லாம் கருத்திற்கொண்டுதான் வெள்ளியை மெதுவாக வெளியிடும் பாலிமர்களை பிரிட்டிஷ் கம்பெனி ஒன்று தயாரித்துள்ளது.
நீரை சுத்தப்படுத்தவும் வெள்ளி பயன்படுகிறது
xxx
வெள்ளியின் வரலாறு
மனிதனுக்கு வெள்ளியின் பயன்பாடு 5000 ஆண்டுகளுக்கு முன்னரே தெரிந்திருக்கிறது. துருக்கி, கிரீஸ் முதலிய நாடுகளின் அகழ்வாராய்ச்சியில் வெள்ளி உருக்கிய தடயங்கள் உள்ளன. ஆயினும் தங்கம் போல அதிகம் பயன்படவில்லை. காரணம் இது எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. வட, தென் அமெரிக்காவில் பெரு, பொலிவியா, அர்ஜென்டினா , மெக்சிகோ முதலிய நாடுகளில் அதிகம் கிடைக்கின்றது வேதம், பைபிள் போன்ற மத நூல்களில் வெள்ளி காணப்படுகிறது.
பல நாடுகள் வெள்ளிக் காசுகளை நாணயங்களாக வெளியிட்டன. பின்னர் நிக்கல், செம்பு கலப்புடன் வந்தன. இப்போது விஷேச விழாக்களைக் கொண்டாட மட்டுமே வெள்ளி நாணயங்கள் (Commemorative Coins) அச்சாகின்றன.
வெள்ளி கிடைக்கும் நாடுகள் தென் அமெரிக்காவில் பொலிவியா, மெக்சிகோ, பெரு, வெளியே சீனா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா , ரஷ்யா. கனடா ஐரோப்பாவில் நார்வே , ஜெர்மனியில் சிறிதளவு கிடைக்கிறது
xxxx
தொழில்களில் வெள்ளி
வெள்ளியின் ரசாயன குணங்கள்
குறியீடு – ஏ ஜி Ag
அணு எண் – 47
உருகு நிலை 962 டிகிரி C சி
கொதி நிலை – 2212 டிகிரி C சி
ஐசடோப்புகள் – சில்வர் 107, 109.
புகைப்படத் தொழிலில்தான் வெள்ளி அதிகம் பயன்பட்டது. இது தவிர பாத்திரங்கள், ஸ்பூன், கத்தி (Cutlery) ஆகியன தயாரிப்பிலும் கண்ணாடி, நகைகள், அலங்கார சாதனங்கள் ஆகியன தயாரிப்பிலும் இப்போது வெள்ளி உபயோகப்படுத்தப்படுகிறது.
வெள்ளி அயோடைட், வெள்ளி ப்ரோமைட் (Silver Iodide and Bromide) ஆகிய உப்புகள் ஒளி பட்டால் மாறிவிடும் (Light sensitive) . இதனால் புகைப்படத் தொழில் இதை நாடியது. மின்சாரத்தை எளிதில் கடத்தும் குணத்தால் மின்சார மற்றும் மின் அணு சாதனங்களிலும் வெள்ளி இடம்பெறுகிறது .
—SUBHAM–





tags– வெள்ளி-2, Silver- 2