திருவள்ளுவர் யார்?

valluva-nayanar

இந்திரன் குறித்து பரிமேலழகர் செய்த தவறு!
By London Swaminathan; Post No. 748 dated 17th December 2013.

–லண்டன் சுவாமிநாதன்
தமிழ் வேதமான திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மரில் பரிமேலழகர் எழுதிய உரையே மேலானது என்பது அறிஞர் உலகம் ஒருமனதாக ஏற்றுக்கொண்ட முடிவு. ஆயினும் யானைக்கும் கூட அடி சறுக்கும் என்பது போல அவரும் சில தவறுகளைச் செய்திருக்கிறார். இன்று ஒரு குறளை மட்டும் காண்போம்:

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்
இந்திரனே சாலுங் கரி (குறள் 25)

‘ஐம்புல ஆசைகளை அறவே ஒழித்த ஒருவனுடைய ஆற்றலுக்கு தேவர் கோமான் இந்திரனே சான்று பகர்வான்’ என்பது இதன் பொருள்.

இந்தப் பொருளை எழுதி அதற்குப் பின் ஒரு ஆச்சர்யக் குறியையோ கேள்விக்குறியையோ போட்டுவிட்டால் அர்த்தம் அனர்த்தம் ஆகிவிடும். பரிமேலழகர் இது இந்திரனைக் கிண்டல் செய்து எழுதிய இகழ்ச்சிக் குறிப்பு என்று கொண்டுவிட்டார். அவன் அகல்யை இடத்தில் நடந்துகொண்ட ஒரு சம்பவத்தை வைத்துப் பலரும் இந்திரனை தவறாக எடைபோட்டுவிட்டனர்.

இந்துமத நூல்களிலும் புத்தமத வேதப் புத்தகமான தம்மபததிலும் இந்திரனை உயர்வாகவே கூறியுள்ளனர். பதின்மர் உரையில் மணக்குடவர் எழுதிய உரையில் இதை இகழ்ச்சிக் குறிப்பாகக் கொள்ளாமல், பாராட்டும்படியாகவே எழுதியுள்ளார். இதை டாக்டர் எஸ்.எம்.டயஸ் அவர்கள் எழுதியுள்ள ஆங்கில மொழிபெயர்ப்பில் குறிப்பிட்டு மணக்குடவர் உரையே திருவள்ளுவரின் மொத்த அணுகுமுறைக்கு இசைவாக இருக்கிறது என்றும் எழுதியிருக்கிறார்.

எனது கருத்து:
“இந்திரன் அவனுடைய பிரம்மசர்யத்தால் தேவர்களுக்கு தேஜஸை (ஒளியை) உண்டாக்கினான்”- என்று அதர்வ வேதம் கூறுகிறது ( அதர்வணம் 11-5-19).

“இந்திரன் மிகவும் கவனமாக/விழிப்பாக இருந்ததால் தேவர்களுக்கு எல்லாம் இறைவன் ஆனான்” – என்று புத்தர் தம்மபதத்தில் (2—10) கூறுகிறார்.

பூமியில் யாராவது தவம் செய்தாலோ, நூறு அஸ்வமேத யாகம் செய்தாலோ, தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று இந்திரன் நடுங்கத் துவங்கி மண், பெண், பொன் ஆசைகளால் துறவிகளைக் கவிழ்த்துவிடுவான். ஆகையால் மணக்குடவரும் மற்றவர்களின் தவ வலிமை இந்திரனை நடுங்கச் செய்வதே “ இந்திரனே சான்று பகர்வான்” என்பதன் பொருள் என்கிறார். பரிமேலழகர் சொல்லுவது போல இந்திரனை வள்ளுவர் பகடி செய்யவில்லை.

மணக்குடவர் உரை: ஐந்து= நுகர்ச்சியாகிய ஐந்து. இந்திரன் சான்று என்றது இவ்வுலகின் கண் மிகத் தவம் செய்வார் உளரானால், அவன் தன் பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான், இது தேவரினும் வலியன் என்றவாறு.

பரிமேலழகர் உரை: ஐந்தும் என்னும் முற்றும்மையும் ஆற்றர்க்கு என்னும் நான்கனுருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று அவித்தானது ஆற்றல் உணர்த்தினானாகலின் ‘இந்திரனே சாலுங் கரி’ என்றார்.

திருவள்ளுவர் யார்?

மேற்கோள் விளக்கக் கதை அகர வரிசை,இரண்டாம் பகுதி, கருப்பக்கிளர் சு.அ. இராமசாமிப் புலவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், திருநெல்வேலி-6, 1963 பக்கம் 714 கதை 805

805.பகவன் கதை

இவர் பெருஞ்சாகரன் என்னும் அந்தணனுடைய புதல்வர். தம்முடைய ஊரிலிருந்து காசிக்குப் பயணம் சென்றார்; திரும்பிவந்தார். தொண்டை மண்டலத்தில் அகரம் என்னும் ஊரில் தங்கியிருந்தார். அப்பொழுது ஆதி என்னும் பெயருடைய அந்தண மாது ஒருத்தி அங்கு வந்தாள். இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஔவை, அதிகமான், உப்பை, உறுவை, வள்ளி, கபிலர், திருவள்ளுவர் என்னும் பெயரினுடைய மக்கள் எழுவர் தோன்றினர். இவர்களில் திருவள்ளுவர் என்பவர்தாம் தமிழ் மறையாகிய திருக்குறளை உலகிற்கு வழங்கியவர். ஔவை, கபிலர் ஆகியவர்களும் சிறந்த புலவர்களாகவே திகழ்ந்தனர். தம்முடைய மக்கள் அறிவாளிகளாய் உலகிற்குப் பயன்பட்டதைக் கண்டு பகவனும் ஆதியும் மிகவும் களிப்படைந்தார்கள். தம்மைப் பார்க்கிலும் தம் மக்கள் அறிவுடைவர்களாக இருத்தல் உலகத்திற்கு மிகுந்த நன்மையை உண்டாக்கும் என்பதை இவர்கள் தம்முடைய மக்கள்பாற் கண்டு தெளிந்தனர்.

Also read my earlier post: Who was Tiruvalluvar? In this blog.
Contact swami_48@yahoo.com

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: