கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1279; தேதி: 10 செப்டம்பர் 2014
தமிழுக்கு உயிர் கொடுத்த, தமிழால் உயிர்பெற்ற பாரதியின் நினைவு தினம் செப்டம்பர் 11. அந்தக் கவிஞன் பெயரைச் சொன்னாலேயே போதும். நம் நாவில் தமிழ் பொங்கித் ததும்பும். உடல் முழுதும் சக்தி பாயும்.
சீரிய சிந்தனை!
நேரிய பார்வை!
வீரிய உணர்வு!
பாரிய நோக்கு!
கூரிய மதி படைத்த பாரதியின்
ஆரியப் பாடல்களைக் காண்போமா?
ஆரிய என்றால் ‘பண்பாடுமிக்கவர்’ என்று பொருள். இது பிராக்ருதத்தில் ‘அஜ்ஜ’ என்று மருவி தமிழில் ‘ஐயர்’ என்று புழங்கியது. ஐயர் என்றால் குணத்தால், ஒழுக்கத்தால் உயர்ந்தவர் என்பது ‘பழம் பொருள்’.
தேசிய கவி சுப்பிரமணிய பாரதி 1921 ஆம் ஆண்டிலேயே இறந்து விட்டார். அப்பொழுதுதான் சிந்து சமவெளி நாகரீக அகழ்வாராய்ச்சி துவங்கியது. உலகிற்கு ஹரப்பா நாகரீகம் என்று ஒன்று இருப்பதே அப்போது தெரியாது. ஆனால் ஆரிய- திராவிட இனவெறிக் கொள்கையை அதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே வெள்ளைக்காரர்கள் புகுத்திவிட்டனர். சுவாமி விவேகாநந்தர் போன்றோர் இந்தக் கொள்கையை எள்ளி நகை ஆடியதே இதற்குச் சான்று.
பாரதிக்கு இதில் நம்பிக்கை இல்லை என்பதை அவர் பாடல்கள் மூலம் காட்டிவிட்டார். இக்கொள்கையைப் பற்றிப் பாடாமல், பரிகசிக்காமல் நாசசூக்காக — வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல — ஆரிய என்ற சொல்லை ஏராளமான பாடல்களில் பயன்படுத்தி அதன் உண்மைப் பொருளைக் காட்டிவிட்டார். அவர் பாடல்களில் எங்கு எங்கெல்லாம் ஆரிய என்ற சொல் வருகிறதோ அதுதான் வேதத்திலும், இதிஹாசத்திலும் கையாளப்பட்ட பொருள். வடமொழி நூல்களில் கணவனை, மனைவி “ஏ ஆர்ய!” என்று அழைப்பார். “ஐயா, மதிப்புக்குரியவரே, உயர் குணச் செம்மலே” என்பது அதன் பொருள். இன வெறிப் பொருளைப் புகுத்தியது வெள்ளைத்தோல் “அறிஞர்”களே.
இதோ சில பாரதி பாடல்கள்:
1.தமிழ்த் தாய் பாடலில்……………..
ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தெ – நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்
2.ஆன்ற மொழிகளினுள்ளே – உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்
ஆரிய நாடு எது?
3.பாரத தேவியின் திருத் தசாங்கம் பாடலில்…….
பேரிமய வெற்பு முதல் பெண் குமரி ஈறாகும்
ஆரிய நாடென்றே அறி
ஆரியர் யார்?
4.சங்கு என்ற பாடலில்………………
பொய்யுறு மாயையை பொய்யெனக் கொண்டு
புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
ஐயுறவின்றிக் களித்திருப்பவராவர்
ஆரியராம் என்று இங்கூதேடா சங்கம்!
5.பாஞ்சாலி சபதப் பாடலில்…………………
ஆரிய வேல் மறவர் – புவி
யாளுமோர் கடுந்தொழில் இனிதுணர்ந்தோர்
சீரியல் மதிமுகத்தார் – மணித்
தேனிதழ் அமுதென நுகர்ந்திடுவார்
6.வாழிய செந்தமிழ் பாடலில்…………………..
அறம் வளர்ந்திடுக ! மறம் மடிவுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக!
பாரத மாதா= ஆரிய மாதா
7.பாரத மாதா என்ற பாடலில்…………………….
முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருட வில்? – எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவி நல்
ஆரிய ராணியின் வில்
சித்தமயம் இவ்வுலகம் உறுதி நம்
சித்தத்தில் ஓங்கிவிட்டால் – துன்பம்
அத்தனையும் வெல்லலாம் என்று சொன்ன சொல்
ஆரிய ராணியின் சொல்
8.தாயின் மணிக்கொடி என்ற பாடலில்………………….
அணி அணியாயவர் நிற்கும் – இந்த
ஆரியக் காட்சி ஓர் ஆனந்தம் அன்றோ?
9.சத்ரபதி சிவாஜி என்ற பாடலில்…………… (மொகலாயர் பற்றி)
பாரதப் பெரும்பெயர் பழிப்பெயராக்கினர்
சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்
வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
ஆரியர் புலையருக்கு அடிமைகளாயினர்
ஆரிய! நீதி நீ அறிகிலை போலும்!
பூரியர் போல் மனம் புழுங்குறலாயினை
அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும்
பெரும்பதத் தடையுமாம் பெண்மை எங்கெய்தினை?
பேடிமை அகற்று! நின் பெருமையை மறந்திடேல்!
ஈடிலாப் புகழினோய் எழுகவோ எழுக
(பகவத் கீதையில் கண்ணன் சொன்ன பகுதி)
10.லாஜபதிராயின் பிரலாபம் என்ற பாடலில்………………..
சீக்கரெனும் எங்கள் விறற் சிங்கங்கள் வாழ்தருநல்
ஆக்கமுயர் குன்றம் அடர்ந்திருக்கும் பொன்னாடு
ஆரியர் பாழாகா தருமறையின் உண்மை தந்த
சீரியர் மெய்ஞான தயானந்தர் திருநாடு
(சீக்கியரை சிங்கங்கள் என்றும், பஞ்சாபில் ஆரிய சமாஜத்தை நிறுவிய தயானந்த சரஸ்வதி வேதத்தின் உண்மைப் பொருளை தந்தார் என்பதையும் பாராட்டும் பாடல் இது)
இவ்வாறு பாரதி பாடல் முழுதும் ‘ஆரிய’ என்ற சொல்லை அதன் உண்மையான ,மேன்மைப் பொருளில் பயன் படுத்தியுள்ளார். ஆரிய- திராவிட இனவெறிக் கொள்கைக்கு பாரதி கொடுத்த சரியான அடி இது என்றால் எதிர்ப்பொரும் உளரோ?
மேன்மை கொள் ஆரிய நீதி விளங்குக உலகமெலாம்!!
என்னுடைய முந்தைய பாரதி பற்றிய கட்டுரைகள்:
1.மனம் ஒரு பெண், மனம் ஒரு புலி (Posted on 17-2-2014)
2.Quotes from the Greatest Tamil Poet Bharati (11-12-2013)
3.வாழ்க்கையில் வெற்றி பெற பாரதி அட்வைஸ் 10-12-2013
4.பாரதியுடன் 60 வினாடி பேட்டி (16-1-2012 & 10-9-2014)
5.பாரதியின் பேராசை (Posted on 27-12-2012)
6.பாரதி பாட்டில் பகவத் கீதை (Posted on 10-12-2012)
7.பேய்கள் பற்றி பாரதி & விவேகாநந்தர் (Posted on 29-11- 2012)
8.சொல்லில் உயர்வு தமிச் சொல்லே (Posted on 10-9-2012)
9.பாரதி பாட்டில் பழமொழிகள் (Posted on 25-6-2012)
10.உங்களுக்கு வள்ளுவனையும் பாரதியையும் தெரியுமா? (27-3-2014)
11.காலா என் காலருகே வாடா! ஞானிகளின் ஞானத் திமிர் (23-3-2014)
எனது சகோதரர் ச.நாகராஜன் எழுதியவை
1.பாரதி தரிசனம் (Posted on 10-12-2013)
2.பாரதி தரிசனம்– பகுதி 2 ( Posted on 12-12-2013)
You must be logged in to post a comment.