அகநானூறு அதிசயங்கள்– பகுதி 1

akanan1

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1466; தேதி 8 டிசம்பர், 2014.

ஏற்கனவே இவ்வரிசையில்,
புறநானூறு அதிசயங்கள்
நற்றிணை அதிசயங்கள்
பதிற்றுப்பத்து அதிசயங்கள்
குறுந்தொகை அதிசயங்கள்
என்று நான் எழுதிய கட்டுரைகளையும் படிக்க வேண்டுகிறேன்.
எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான அகநானூற்றில் காதல், குடும்ப வாழ்வு தொடர்பான 400 அகத்துறைப் பாடல்கள் உள.

அதிசயம் 1
அகநானூற்றில் மிகப்பெரிய அதிசயம் பாடலின் தொகுப்பு முறையாகும். தமிழர்கள் கணிதத்தில் எவ்வளவு ஆர்வமும் கவனமும் செலுத்தினர் என்பதற்கு இந்த ஒரு சான்றே போதும். 400 பாடல்களையும் 1,2,3,4,5,6……. என்று எழுதுங்கள். அதில் ஒற்றைப்படை எண்கள் உடைய பாடல்கள் எல்லாம் பாலைத் திணையாகவும் பத்து தொடர்ந்தனவெல்லாம் நெய்தலாகவும், நாலு தொடர்ந்தனவெல்லாம் முல்லையாகவும் இரண்டும் எட்டும் தொடர்ந்தனவெலாம் குறிஞ்சியாகவும், ஆறு தொடர்ந்தன வெல்லாம் மருதமாகவும் நூல் முழுதும் தொகுக்கப்பட்டுள்ளது.

இதைத் ‘’தமிழ் இலக்கியத்தில் எண்கள்’’ என்ற எனது 1995 தஞ்சாவூர் உலகத் தமிழ் மாநாட்டு ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டேன். இப்பொழுது சிறிது விளக்கமாகவே கூறுகிறேன்:–

பாலை
1,3,5,7,9,11…………………………….. இப்படி 397,399 வரை எல்லா ஒற்றைப்படை எண்ணுள்ள பாடல்களும் பாலைத் திணையைச் சேர்ந்த பாடல்களாக இருக்கும்.
நெய்தல்
10, 20, 30, 40, இப்படி ……………….390, 400 வரை பத்தில் முடியும் எண் பாடல்கள் அனைத்தும் நெய்தல் திணையைச் சேர்ந்த பாடல்களாக இருக்கும்.
முல்லை
4,14,24,34,44,54……………………. 394 வரை இவ்வாறு நாலு என்ற எண்ணுள்ள பாடல்கள் அனைத்தும் முல்லைத் திணையைச் சேர்ந்த பாடல்களாக இருக்கும்.
குறிஞ்சி
2,12,22,32,42…………………….. 8, 18, 28, 38……………………. 392, 398 வரை இவ்வாறு இரண்டு எட்டு என்ற எண்ணுள்ள பாடல்கள் அனைத்தும் குறிஞ்சித் திணையைச் சேர்ந்த பாடல்களாக இருக்கும்.
மருதம்
6,16,26,36……………………………..396 என்ற வரை இவ்வாறு ஆறு என்ற எண்ணுள்ள பாடல்கள் அனைத்தும் மருதத் திணையைச் சேர்ந்த பாடல்களாக இருக்கும்.

akanan2

இப்படிச் செய்வதால் புத்தகத்தைப் படி (பிரதி) எடுப்போர் தவறு செய்யும் வாய்ப்புகள் குறைவாகும். யாரேனும் ஒருவர் தவறு செய்தாலும் அதை எளிதில் கண்டுபிடித்துத் திருத்தி விடலாம். இப்படிப் பிரித்ததிலும் கூட 200+40+40+80+40 என்ற அழகைக் காணலாம்.

பிராமணர்கள் வாய்மொழியாகவே வேதத்தைப் பரப்பவேண்டும் என்ற கொள்கையினை உடையோராதாலால் அதில் இடைச் செருகல் வரக்கூடாது என்பதற்காக, பல்லாயிரம் வருடங்களாக, அதை

1.வாக்கிய பாடம்,
2.கிரம பாடம்,
3.கண பாடம்,
4.ஜடா பாடம்
என்று சொற்களைக் கணித அடிப்படையில் கூட்டிக் கூட்டிச் சொல்லுவர்.

மனப்பாட சக்தியுள்ள ஒருவரைப் புகழும்போது, ‘’அவரா? அவர் அதைத் தலைகீழாகச் சொல்லச் சொன்னாலும் சொல்வாரே, அந்த அளவுக்குப் புலமை’’ என்போம். இது போல பிராமணர்கள் பெரிய புலமை பெறும் போது அவர்களுக்கு ‘கனபாடி’கள் என்ற பட்டமும் கிடைக்கும். இதே போல தமிழர்களும் எண் அடிப்படையில் பாடல்களை வகுத்தது அவர்களின் திறமைக்கு ஒரு சான்றெனில் அது மிகையாகாது.

Akananuru graph
அதிசயம் 2
அகநானூற்றில் 108 ஊர்களின் பெயர்கள் உள்ளன. 2000 ஆண்டுப் பழமையான ஊர்களை அறிய இது பெரிதும் உதவுகிறது. தமிழர்கள் மிகவும் தெய்வ நம்பிக்கை உடையவர்கள். ஆகையால் அலைவாய் (திருச்செந்தூர்), அரங்கம் (ஸ்ரீரங்கம்), கோடி (தனுஷ்கோடி), மதுரை, வேங்கடம் (திருப்பதி) முதலிய பல புண்ய க்ஷேத்திரங்களைக் குறிக்கத் தவறவில்லை.

அதிசயம் 3
அகநானூற்றில் குறைந்தது 14 நாட்டுப் பிரிவுகள் வருகின்றன. இப்போது நாம் நாடு என்றால் பெரிய நிலப்பரப்புடைய அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் என்போம். 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் இதைச் சிறு நிலப்பரப் பிற்கே பயன்படுத்தினர். எல்லா மொழிகளிலும் காலப்போக்கில் சொற்களின் பொருள் மாறும். ஆங்கிலத்திலும் கூட 400 ஆண்டுகளுக்கு முன் ஷேக்ஸ்பியர் பயன்படுத்திய சொற்கள் இன்று பொருள் மாற்றிப் பயன்படுத்தப்படுகின்றன.
இடையநாடு, குடநாடு, கொங்குநாடு, கோசர் நாடு, துளுநாடு, தொண்டைநாடு, பாணன் நாடு, புகார் நாடு, பூழி நாடு, மழவர் நாடு, மாறோக்கநாடு, வடுகர்நாடு, வேம்பிநாடு, வேளிர்நாடு முதலியன.

‘’நாடு’’ என்னும் சொல் பொருள் மாறியது பற்றி எழுதியவுடன் வேறு ஒரு விஷயமும் நினைவுக்கு வருகிறது.

பல வெளிநாட்டுக்காரர்கள் ரிக் வேதத்தை மொழி பெயர்க்கிறேன் என்ற பெயரில் தத்துப்பித்து என்று உளறி வைத்துள்ளனர். இதை உளறல் என்று கண்டுபிடிக்க நீங்கள் பெரிய சம்ஸ்கிருத அறிஞராக இருக்க வேண்டாம். 20 வெளிநாட்டுக்காரர்கள் ரிக் வேதப் பாடல்களை மொழிபெயர்த்ததைக் கையில் வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள். ஒன்றுக்கு ஒன்று சம்பந்தா சம்பந்தமே இராது.

திருக்குறளிலும் பதின்மர் உரை என்று பத்துப் பேர் எழுதிய உரைகள் உண்டு. அதில் பெரிய வேற்றுமைகளையோ கலாசார எதிர்மறை விளக்கங்களையோ காணமுடியாது. ஆனால் வேதத்துக்குப் பொருள் எழுத வந்தோருக்கு நம் கலாசாரம் தெரியாது என்பதைவிட அவர்களின் உள்நோக்கம் என்ன என்பதைப் பார்க்கையில் அவர்களின் குட்டு வெளிப்பட்டுவிடும். சாயம் வெளுத்துப்போகும்!

akanan3

அதிசயம் 4
அகநானூறு குறிப்பிடும் தமிழர்களின் தெய்வங்கள்:
அருந்ததி, இராமன், இல்லுறை கடவுள், உமை, கண்ணபிரான், கவிர மலைத் தெய்வம், குபேரன், கொல்லித் தெய்வம், சந்திரன், சிவபெருமான், சூரியன், செல்லூர்த் தெய்வம், நடுகற் கடவுள், நள்ளியடுக்கத்துச் சூர்,
புகார்த் தெய்வம், பாழி அணங்கு, பொதியில் தெய்வம், மழுவாள் நெடியோன், முருகன், வேம்பினடிக் கடவுள், வேளூர்வாய்த் தெய்வம்.
இது தவிர ஏரி, குளம், காடு, மலை, குன்று, மரங்களில் உறையும் அணங்குகள் பற்றிய குறிப்புகளும் நிறைய உண்டு.

தமிழர்களைப் பற்றி சில அரசியல் கட்சிகள் தவறான பிரச்சாரத்தைச் செய்ததால் தற்கால இளைஞர்களுக்கு தமிழர்கள் என்போர் ஏதோ தனிப்பட்ட ஒரு இனம், அவர்கள் ஆகாசத்தில் இருந்து குதித்த உலக மஹாப் பழங்குடி மக்கள், அவர்களுக்கு வேறு ஒரு கலாசாரம் உண்டு என்ற எண்ணம் உண்டாகும் இவை எல்லாம் மஹா அபத்தம் என்பதை அறிய நீங்கள் மிகப்பெரிய தமிழ் அறிஞராக இருக்க வேண்டும் என்பது இல்லை.

வர்த்தமானன் பதிப்பகம் போன்ற பதிப்பகங்கள் வெளியிட்ட சங்க இலக்கிய மேல் கணக்கு நூல்கள் 18 ஐயும் எடுத்துக் கொண்டு பத்துப்பாட்டையும் (10 நூல்கள்) எட்டுத்தொகையையும் ( எட்டு நூல்கள்) படியுங்கள். இமயம் முதல் குமரி வரை எல்லாம் ஒரே பண்பாடே என்று நீங்களே கட்டுரை எழுதத் துவங்கி விடுவீர்கள். திருநெல்வேலி பெட்டி வெல்லம், நெல்லை லாலகடை அல்வா, மணப்பாறை முறுக்கு, மானாமதுரை சாம்பார் சாதம், மதுரை நாகப்பட்டிணம் கடை காராச்சேவை, ஐயங்கார் மெஸ் புளியோதரை என்பது போல சில ‘’ஸ்பெஷல்கள்’’ ஆங்காங்கே இருக்கத்தான் செய்யும். இது உலகம் முழுதும் உண்டு.
ஐயர் வீட்டுக் கல்யாணங்களில் கூட திருநெல்வேலி வழக்கம், மதுரை சம்பிரதாயம், தஞ்சாவூர் பார்ப்பனர் வழக்கம், ஆற்காட்டு ஐயர் சம்பிரதாயம் என வேறுபடும் ஆனால் அவர்கள் எலோரும் பிராமணர்களே. செட்டியார் வீட்டுக் கல்யாணங்களிலும் பிரதேசத்துக்குப் பிரதேசம் பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள் மாறுபடும். அவர்கள் அனைவரும் வடநாட்டு ஷ்ரேஷ்டிகளே=செட்டி=ஷெட்டி.

கோவில் வாஹன அலங்கராத்தில் கூட சூர்யப்பிரபை, சந்திரப்பிரபை என்ற வாஹனங்களைத் தென் தமிழ்நாட்டுக் கோவில்களில் காணமுடியாது. அதற்கேன வட அற்காடு விஷ்ணுவை ஆரியர் என்றும் தென் தமிழ்நாட்டுப் பெருமாளைத் திராவிடன் என்றும் சொல்லும் மடைமை ஈங்கு இல்லை. ஆயினும் வெள்ளைகாரன் போல பி.எச்டி. பட்டம் வாங்க விரும்பினால், உலகத் தமிழ் நாட்டில் பொன்னாடை கிடைக்க வேண்டுமானால் நீங்களும் பிரித்தாளும் சூட்சியில் இறங்கலாம்.

அகநானூற்று அதிசயங்கள் தொடரும்…………………………

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: