உடலில் உள்ள சக்ரங்கள் (விக்கிபீடியா படம்)
கட்டுரையை எழுதியவர் :– London swaminathan
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1533; தேதி 31 டிசம்பர், 2014.
அதர்வண வேத காலம் முதல் அவ்வையார் காலம் வரை நமது உடலை இந்துக்கள் வருணித்த விதம் ஒரே மாதிரியாக உள்ளது!! இந்த விதமான வருணனைகளை வேறு எந்தப் பண்பாட்டிலும் காண முடியாது. ஆக பாரத நாட்டுப் பழங்குடி மக்கள் “பதி எழு அறியாப் பழங்குடி மக்கள்” – என்பதும் அவர்கள் இதே மண்ணில் தோன்றி இதே மண்ணில் வாழ்ந்தவர்கள் என்பதும் தெரிகிறது.
அவர்கள் வெளி நாட்டு “அறிஞர்கள்” எழுதியது போல வந்தேறு குடிகள் அல்ல, அல்லவே அல்ல என்பது உள்ளங்கை நெல்லிக் கனி என தெள்ளத் தெளிவாகப் பளிச்சிடுகின்றது!
உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே (திருமூலர்) – என்று ஆன்றோர்கள் உடலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய போதும், அடைய வேண்டியதை அடைந்தவுடன் அந்தப் பழைய உடலை, பழைய சட்டைக்குச் (வாசாம்ஸி ஜீரணானி—பகவத் கீதை) சமமாக எண்ணி கழற்றி எறியவும் தயங்கவில்லை!
காயமே இது பொய்யடா! வெறும் காற்றடைத்த பையடா!! என்று பாடி மகிழ்ந்தனர்.
இதோ அதர்வண வேத மந்திரம்:
ஒன்பது வாசல் உடைய இந்த உடலை நன்கு அறிந்தால் உனது சக்தியைப் பெருக்கு; அல்லது உனக்குப் பலன் இல்லை (5-16/9)
பகவத் கீதையில் கண்ண பிரானும் இதையே சொல்லுவார்:
இந்திரியங்களை வசப்படுத்திய புருஷன் மனத்தால் எல்லாக் கருமங்களையும் துறந்து, சுகமாக — ஒன்பது வாயிலுடைய நகரில் (நவத்வரே புரி) – ஒன்றும் செய்யாமலும், செய்விக்காமலும் இருக்கின்றான். (பகவத் கீதை – 5-13)
திருமூலர் படம்
கடோபநிஷத்திலும், ஸ்வேதஸ்வதார உபநிஷத்திலும் இதே கருத்துகள் உள்ளன. அதர்வண வேத மந்திரம் தொடர்ச்சியாக உபநிஷத் வழியாக கீதை (மஹாபாரதத்தில் உள்ளது) மூலம் பாரதம் மூலம் பரவியது. இதையே மாணிக்க வாசகர் அவரது திருவாசகத்திலும், திருமூலர் அவரது திருமந்திரத்திலும், பட்டினத்தார் அவரது பாடல்களிலும் அவ்வையார் அவரது விநாயகர் அகவலிலும் பாடினர். ஆழ்வார்கள், நாயன்மார்களின் திவ்யப் பிரபந்த தேவாரத்திலும் சித்தர் பாடல்களிலும் இக்கருத்துகள் உள.
ஆதிசங்கரர் மட்டும் விவேக சூடமணியில் இவ்வுடலை அஷ்ட புரி (எட்டு நகரம்) என்பார்.
காளிதாசனும் குமார சம்பவ காவியத்தில் (3-50) பகவத் கீதை என்ன சொன்னதோ அதே கருத்தை எதிரொலிக்கிறார்.
அதிசயம்: காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள்
15-10-1932-ல் சென்னையில் ஆற்றிய உபந்யாசத்தில் காஞ்சி சங்கராசார்யார் (1894-1994) கூறிய அதிசயப் பாடல்:
“ ஒரு பெரியவர் ஒரு பெரிய ஆச்சரியத்தைச் சொல்லுகிறார் நாமெல்லாம் மரணமடைவது ஆச்சரியமன்று; இந்த உடம்பில் இருக்கிற ஒன்பது ஓட்டைகளுக்குள்ளே உயிரானது போகாமல் நிற்கிறதே, அதுதான் பெரிய ஆச்சரியம் என்று அவர் சொல்லியிருக்கிறார்.
நவத்வாரே சரீரே அஸ்மின் ஆயு: வசதி சந்ததம்
ஜீவததீ த்யத்புதம் தத்ர கச்சதீதி கிமத்புதம்
அதைப் போலவே பலவிதமான ஸந்தேஹங்களுக்கும் வித்யாஸங்களுக்கும் இடமான இந்த மதமானது எவ்வளவோ வருஷங்களாக இருக்கிறதே என்பதை நினைத்து ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது”.
—பக்கம் 109, ஸ்ரீ ஜகத்குருவின் உபதேசங்கள், முதற் பாகம், ஸ்ரீ காமகோடி கோசஸ்தானம், சென்னை-1, முதல் பதிப்பு ஆண்டு 1933, இரண்டாம் பதிப்பு 1957
பட்டினத்தார் பாடல்:
ஒன்பது வாய்த் தோற்பைக்கு ஒருநாளைப் போலவே
அன்புவைத்து நெஞ்சே அலைந்தாயே! – வன் கழுக்கள்
தத்தித் தத்திச் செட்டை தட்டிக்கட்டிப்பிட்டுக்
கத்திக்குத்தித் தின்னக் கண்டு …………
Having witnessed the cruel vultures hop and hop,
Adjust the feathers with their beaks
Tug and tear at the flesh, and eat it
In vociferous gaiety,
You have roamed about to foster always with love
The nine holed leathern bag, alas!
(Tamil: onpathu vaay thorpai…………… Translated by Dr T N Ramamachandran)
திருமூலர் சொல்வது……………….
ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்
ஒன்பது நாடி உடையதோர் ஓர் இடம்
ஒன்பது நாடி ஒடுங்க வலார்கட்கு
ஒன்பது காட்சி யிலை பலவாமே (திருமந்திரம் 638)
ஒன்பது துளைகளையுடைய இப்பிண்டமாகிய உடம்பகத்து வீங்காற்று ஒழிந்த ஏனைய ஒன்பது காற்றும் புகும் ஒன்பது நாடிகளையும் ஒடுக்கவல்ல யோகப் பயிற்சி உடையார் வல்லாராவர். அவர்கள் இந்த நாடிகள் சேரும் நாற்சந்தி இடத்தை அருளால் காண்பர். இவர்கள் அகத்தே கேட்கப்படுவது பல்வேறு ஓசைகளாகும்.
ஒன்பது வாசல்கள் யாவை?
இரண்டு காதுகள், இரண்டு கண்கள், மூக்கின் இரண்டு துளைகள், வாய், மல ஜலம் கழிக்கும் இரு உறுப்புகள் ஆக ஒன்பது துளைகள்.
திருவாசகம் எனும் தேனில் மாணிக்கவாசகர் சொல்வது,
அறம் பாவம் எனும் அருங்கயிற்றால் கட்டி
புறந்தோல் போர்த்தெங்கும் புழுவழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய … (சிவபுராணம்)
சங்க காலம் முதல் ஆறு பேர், — அவ்வையார் —- என்னும் பெயரில் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அறிவுரைகள் பகன்றனர். அவர்களில் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு அவ்வையார் பாடிய விநாயகர் அகவலில்,
தலம் ஒரு நன்கும் தந்து எனக்கருளி
மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறாதாரத்து அங்கிசை நிலையும் ……..
இவ்வாறு நூற்றுக் கணக்கான இடங்களில் ஒன்பது வாயில் குடில் பற்றி இமயம் முதல் குமரி வரை நம்மவர் பாடியது, இந்த நாடு ஏக பாரதம் என்பதையும், சொல் செயல் சிந்தனையால் இணைந்த ஒரே இனம் இது என்பதையும், இவர்களே இந்த நாட்டின் பூர்வ குடிகள் என்பதையும் ஐயமற விளக்கும்.
சுபம்- அனைவர்க்கும் 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக –
contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.