Compiled by London Swaminathan.
Post No. 845 Date: February 2014
(This article is available in English in two parts: Hindu Encyclopaedia of the Mind)
‘மனப் பெண்’ என்ற தலைப்பில் பாரதியார் ஒரு அருமையான கவிதை யாத்துள்ளார். மனம் எனும் குரங்கு பற்றி “பாயிண்ட் பாயிண்டாக” அடுக்குகிறார். இதை படிக்கும்போது நமக்கு திருப்தி ஏற்படுகிறது. அட! நம்மைப் போன்ற சாதாப் பேர்வழிகளுக்கு………………. சோதாப் பேர்வழிகளுக்கு …………………மட்டுமே இப்படி எண்ணங்கள் வருகிறதோ என்று பயப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பாரதி பாட்டு தைரியம் கொடுக்கும். நம் எல்லோருக்கும் மனம் என்பது ஒரு புரியாப் புதிர். அதைக் கட்டுபடுத்துவது எளிதல்ல.
சீனாவிலும் ஜப்பானிலும் மனதைக் குரங்காக வருணிக்கும் வசன மொழிகள் வழக்கத்தில் உள்ளன. பாரதியோ மனதைப் பெண்ணாக உருவகித்து அதன் சலன புத்தியைப் பாடுகிறார், சாடுகிறார். பின்னர் மது உண்ணும் வண்டு என்றும் பேசுகிறார், ஏசுகிறார்.
பாட்டு இப்படித் துவங்குகிறது:
“மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!
ஒன்றையே பற்றி ஊசல் ஆடுவாய்
அடுத்ததை நோக்கி அடுதடுத்து உலாவுவாய்
.நன்றையே கொள் எனில் சோர்ந்து கை நழுவுவாய்
விட்டுவிடு என்றதை விடாது போய் விழுவாய்
தொட்டதை மீள மீளவும் தொடுவாய்
புதியது காணில் புலன் அழிந்திடுவாய்
புதியது விரும்புவாய், புதியதை அஞ்சுவாய்
அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டு போல
பழமையாம் பொருளினில் பரிந்துபோய் வீழ்வாய்
பழமையேயன்றிப் பார்மிசை ஏதும்
புதுமை காணோம் எனப் பொருமுவாய், சீச்சீ!
.பிணத்தினை விரும்பும் காக்கையே போல
அழுகுதல், சாதல், அஞ்சுதல் முதலிய
இழி பொருள் காணில் விரைந்து அதில் இசைவாய்
அங்ஙனே

என்னிடத்து என்றும் மாறுதலில்லா
அன்பு கொண்டிருப்பாய், ஆவி காத்திடுவாய்
கண்ணிணோர் கண்ணாய், காதின் காதாய்ப்
புலன் புலப்படுத்தும் புலனாய் என்னை
உலக உருளையில் ஒட்டுற வகுப்பாய்’
இன்பம் எல்லாம் தருவாய், இன்பத்து மயங்குவாய்,
இன்பமே நாடி எண்ணிலாப் பிழை செய்வாய்
இன்பம் காத்துத் துன்பமே அழிப்பாய்
இன்பம் என்று எண்ணித் துன்பத்து வீழ்வாய்
தன்னை அறியாய் சகத்தெலாந் தொளைப்பாய்,
தன் பின்னிற்கும் தனிப் பரம்பொருளைக்
காணவே வருந்துவாய், காண் எனில் காணாய்,
சகத்தின் விதிகளைத் தனித் தனி அறிவாய்,
பொது நிலை அறியாய், பொருளையுங் காணாய்,
மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!
நின்னொடு வாழும் நெறியும் நன்கு அறிந்திடேன்;
இத்தனை நாட்போல இனியும் நின்னின்பமே
விரும்புவன்; நின்னை மேம்படுத்திடவே
முயற்சிகள் புரிவேன்; முத்தியும் தேடுவேன்;
உன் விழிப்படாமல் என் விழிப்பட்ட
சிவம் எனும் பொருளைத் தினமும் போற்றி
உன்றனக்கு இன்பம் ஓங்கிடச் செய்வேன்.
மனம் பற்றி பகவத் கீதை
“அஸம்சயம் மஹாபாஹோ மனோ துர்நிர்க்ரஹம் சலம்
அப்யாஸேன து கௌந்தேய வைராக்யேன் ச க்ருஹ்யதே” (6—35)
“தோள்வலி படைத்த அர்ஜுனா! மனம் அடக்குதற்கரியது; இதில் சந்தேகம் இல்லை. பயிற்சியாலும் வைராக்யத்தாலு (திட உறுதி) அடக்கமுடியும்”.
தம்மபதத்தில் புத்தர் சொல்கிறார்:
மனம் ஊசலாடிகொண்டுமோய்வற்றும் இருக்கும் அதைக் காப்பதும் கட்டுப்படுத்துவதும் கடினம். அம்பு செய்பவர்கள் அதை எப்படிக் கூராகச் செய்வார்களோ அதே போல அறிவாளிகளும் அதை நேராகவும் கூராகவும் வைப்பர் (33)
தண்ணீரில் இருந்து வெளியே தூக்கிப்போட்ட மீன் எப்படி மரணத்தில் இருந்து தப்பிக்கப் போராடுமோ அதே போல மனமு மரணத்தில் இருந்து விடுதலைப் பெற் போராடும். (34)
மனம் அலை பாயக்கூடியது; நிலையற்றது. அது இஷ்டப் பட்ட இடத்திற்குச் சிறகடித்துப் பறக்கும். மனதைக் கட்டுப்படுத்துவது கடினம். ஆனால் அப்படிக் கட்டுப்படுத்துவது மிகவும் நல்லது. கட்டுப்படுத்தப்பட்ட மனதானது, இன்பத்தில் உறைவிடம் ஆகும்.(35)
நம்முடைய உடலானது, உடையக்கூடிய மண்பானை போன்றது.அதை கோட்டை போலப் பலப்படுத்தி மாரனை (தீய சக்திகளை) எதிர்த்துப் போராடவேண்டும். வெற்றி பெற்றவுடன், விழிப்புடன் இருந்து , கிடைத்த வெற்றியைப் பாதுகாக்க வேண்டும்(40)
ஒரு எதிரி மற்றொரு எதிரியைத் தாக்கி காயப்படுத்தலாம்.ஒரு வெறி பிடித்தவ மற்றொரு வெறியனைத் தாக்கி காயப்படுத்தலாம்.ஆனால் ஒருவனுடைய மனமானது தவறான வழியில் செல்லுமானால் அது இதை விடப் பெரிய தீங்கு செய்யமுடியும்.(42)
மனம் ஒரு புலி
ஆதிசங்கரர் மனதையும் எண்ணத்தையும் புலிக்கு ஒப்பிடுகிறார். ஐம்புலன்கள் செயல்படும் அடர்ந்த காட்டில் மனது என்னும் கொடும் புலி வசிப்பதால், முக்தியை நாடுவோர் அந்தக் கட்டுக்குள் அகப்படாமல் இருக்க வேண்டும் (விவேக சூடாமணி 176)
ஆதிசங்கரரின் வினா – விடை துதியிலும் (பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா) மனதைப் பற்றி பல குறிப்புகள் வருகின்றன.
மனிதர்களுக்கு மிகவும் கஷ்டமான செயல் எது என்ற கேள்விக்கு அவர் தரும் பதில் “ எப்போதும் மனதைக் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதே” என்பார்.
விஷம் எங்கே இருக்கிறது? என்பதற்கு தீயோர் மனம் என்றும் மதுவைப் போல மனதை மயக்குவது? எது என்பதற்கு விரும்பத்தகாதோரின் ஸ்நேஹம் (தொடர்பு) என்றும் பதில் தருகிறார்.
மனது பற்றி தாயுமானவர் பாடல்
கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்
கரடி வெம் புலி வாயையும்
கட்டலாம் ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம்
கண் செவி எடுத்தாட்டலாம்
வெந்தழலின் இரதம் வைத்து ஐந்து உலோகத்தையும்
வேதித்து விற்று உண்ணலாம்
வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலா வரலாம்
விண்ணவரை ஏவல் கொள்ளலாம்
சந்ததமும் இளமையொடு இருக்கலாம் மற்றும் ஒரு
சரீரத்தினும் புகுதலாம்
சலமேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம்
தன் நிகரில் சித்தி பெறாலாம்
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற
திறம் அரிது சத்தாகி என்
சித்தமிசை குடி கொண்ட
தேசோ மயானந்தமே. — தாயுமானவர்.
வள்ளுவர் வாய்மொழி
வள்ளுவர் ‘ஊக்கமுடைமை’ என்ற அதிகாரத்தில் வரும் 2 குறள்களில் மன உற்சாகத்தினால் அடையக்கூடிய சாதனைகளை விளக்குகிறார். ‘உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்’ என்றும் ‘வெள்ளத்தனையது மலர் நீட்டம், மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு’ என்றும் தேனாகப் பொழிகிறார்.
‘சிற்றினம் சேராமை’ என்னும் அதிகாரத்தில் பத்து குறள்களிலும் மன நலம் பற்றிப் பேசுகிறார். பெரும்பாலான குறள்களில் மனம் என்ற தூய சம்ஸ்கிருதச் சொல்லை அப்படியே பயன்படுத்துகிறார். ஆனால் மன நலம் என்பது ‘சேருவார் சேர்க்கையைப் பொறுத்ததே’ என்பது அவரது துணிபு. சத்சங்கத் தொடர்பு — நல்லோர் சேர்க்கை – இருந்தால் மனம் தூய்மையாக இருக்கும் என்கிறார். அதிகாரத்தின் தலைப்புக்கு ஏற்ப பொருத்தமாக அமைந்துள்ளன இந்தப் பாக்கள்.
வீட்டுக்கு வீடு வள்ளுவர் குறள் இருப்பதால் 12 குறட்பாக்களின் பொழிப்புரையைத் தரவில்லை.
Contact swami_48@yahoo.com























You must be logged in to post a comment.