Research article written by London swaminathan
Article No. 1559; posted on 9th January 2015
கட்டுரை 1:– முதலில் ஹாலன்- மலயவதி பரிஹாசம் எப்படி ஒரு பெரிய கவிஞன் உருவாக வழிவகுத்தது என்று ஒரு கட்டுரையில் கண்டோம்.
கட்டுரை 2:-கோதாவரி நதிக்கரையில் ஒருவீட்டில் இருந்த ஒரு ராம லெட்சுமண சீதை ஓவியம் எப்படி ஒரு பெண்ணின் மானத்தைக் காப்பாற்றியது என்று இன்னொரு கட்டுரையில் கண்டோம்.
கட்டுரை 3:-சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் குண்டுகட் பாலியாதன், பிரம்மசாரி, கயமனார் ஆகிய புலவர்கள் ஆந்திர தேசத்தைச் சேர்ந்த பிராக்ருத புலவர்கள் என்று இன்னும் ஒரு கட்டுரையில் கண்டோம்.
கட்டுரை 4:- இதில் 700 காதல் கவிதைகளைக் கொண்ட பிராக்ருத —-காதா சப்த சதி— கவிதை நூலில் உள்ள மேலும் சில சுவையான செய்திகளைக் காண்போம்.
ஏழு வெவ்வேறு விதமான காதா சப்தசதி –க்கள் இருக்கின்றன. 700 பாடல்களுக்குப் பதிலாக 1066 பாடல்கள் வரை கிடைக்கின்றன. ஆக எது அசல், எது போலி என்று தெரியவில்லை. பொதுவான பாடல்கள் 430 மட்டுமே! அவ்வளவு பாட பேதங்கள்.
ஹாலன் என்ற மன்னன் சிங்கள மன்னன் சீலமேகாவின் மகள் லீலாவதியை மணந்தான் என்பர். ஆனால் அவனது காலமோ கி.பி 200க்கும் 600க்கும் இடைபட்டது. ஆக இங்கே காலப் பொருத்தமினமை வருகிறது இன்னூல் மீது 14 உரைகள் எழுதப்பட்டன.
சங்க இலக்கியத்துடன் பல ஒற்றுமைகளும் காணப்படுகின்றன:–
சுவரில் கோடு கிழித்து நாட்களை எண்ணுதல்
இடது கண் துடித்தல்
பூக்காரிகள்
காகத்துக்கு சோறிடல்
கூண்டில் கிளி வளர்த்தல்
நாவல் பழம்- நண்டு மயக்கம்
வளை நழுவுதல் (உடல் மெலிதலால்)
நாகன் என்ற பெயரில் பல கவிஞர்கள்.
கோவிந்தசாமி
சாமி என்று முடியும் பெயர்கள் தமிழ் நாட்டில்தான் அதிகம் காணப்படுகிறது. ஆயினும் 2000 ஆண்டுகளுக்கு முன் உருவான இன்னூலில் பல சாமி பெயர்கள் உள்ளன!
கோவிந்தசாமி
சந்திர ஸ்வாமி
மீன ஸ்வாமி
துர்கஸ்வாமி
சத்யஸ்வாமி
பீமஸ்வாமி — என்ற புலவர்கள் கவிதை எழுதியுள்ளனர்.
ராஜ என்ற பெயரில் முடியும் கவிஞர்கள் 28 பேர் உள்ளனர்!! ரவிராஜ, ரதிராஜ, மஹாராஜ, அனுராஜ என்று இப்படிப் பல ராஜாக்கள்!
சேன என்ற பெயரில் முடியும் பல பெயர்கள் மஹாபாரதத்தில் இருப்பது குறித்தும் இந்தப் பெயர் சுமேரியாவில் பல பெயர்களில் “சின்” — என்று ஒட்டிக் கொண்டிருப்பதையும் முன்னர் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் தந்தேன். சின் என்பதை சுமேரிய மொழியில் சந்திரன் என்பர் என்றும் அப்படிப் பார்த்தாலும் நம் அரிச்சதிரன், உதயசந்திரன், சந்திரமதி முதலிய பெயர்களுடன் ஒப்பிடலாம் என்றும் சொன்நேன். ஆனால் இங்கு புலவர்களில் பலர் சேனர்கள் என்று இருப்பது ஆராயப்பட வேண்டிய விஷயம். ஏனெனில்
சங்க இலக்கிய நூல்களில் பல தமிழ் மன்னர்கள் கவிதை எழுதியது போல ஆந்திர தேச மன்னர்களும் எழுதி இருக்கலாம்.
குறைந்தது எட்டு பெயர்களாவது சேன என்று முடிகிறது. மகரந்த சேன, ப்ரவர சேன, சத்யசேன, மல்லசேன, வசந்தசேன, விஷமசேன, ஜய சேன, மாதவ சேன என்று பல புலவர்கள் உளர்.
பெண் புலவர்கள்
ரிக் வேதத்தில் 20க்கும் மேலான பெண் புலவர்கள் உள்ளனர். சங்க இலக்கியத்தில் 20க்கும் மேலான பெண் புலவர்கள் உள்ளநர். ஆனால் ஆந்திரத்தில் கொஞ்சம் குறைவு. 12 பெண் புலவர்கள் பெயர்கள் மட்டுமே இருக்கின்றன: ரேவா, ரேவதி, க்ராம குட்டிகா, ஆந்திர லெட்சுமி, சரஸ்வதி, கிரி சுதா, ரேஹா, சந்திர புட்டிகா, குணமுக்தா, ஜக்குரங்கி, சசி ப்ரபா, தரங்க மதி
சங்க இலக்கியத்தில் ஏராளமான காதல் கவிதைகள் உண்டு. ஆனால் அங்கே கெட்டுப் போன குடும்பப் பெண்கள் கிடையா. தொழில் ரீதியிலான பரத்தைகள் நிறைய உண்டு. சங்க இலக்கியத்தில் அகத்துறைப் பாடல்களில் ஏறத்தாழ பாதி பரத்தை பற்றிய பாடல்களே. காதாவிலோ கெட்ட செயல்களில் ஈடுபடும் “குடும்பப் பெண்களை”யும் சித்தரித்திருக்கின்றனர்.
காதா சப்த சதியில் சாத வாகன மன்னன் ஹாலனின் 44 பாடல்கள் உள. அவ ன்தான் இந்த நூலைத் தொகுப்பித்தான். அவனது காலம் கி.பி.60. ஆனால் காதாவில் பல பிற்கால கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அதாவது பழைய காதா இது அல்ல.
செவ்வாய்க்கிழமை யாத்திரை செய்வது துரதிருஷ்டமானது என்று ஒரு பாடலில் வருகிறது. தமிழில் முதல் முதலில் சிலப்பதிகாரத்தில்தான் கிழமை வருகிறது. கண்ணகி மதுரையை எரித்தது வெள்ளிக் கிழமையில்! இதை வைத்து சிலப்பதிகாரம் ஏழாம் நூற்றாண்டுக் காவியம் என்போரும் உளர். அது சரியென்றால் காதாவின் காலத்தையும் பின் போட வேண்டும்.
ஹோரா என்ற சொல் இன்னூலிலும் வருகிறது. தொல்காப்பியத்தில் இச்சொல் உள்ளதால் அது பிற்காலத்தியது என்று பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை முதலியோர் வாதிடுவர். அது சரியென்றால் காதாவின் காலத்தையும் பின் போட வேண்டும்.
கணபதி (பிளையார்) வழிபாடு பற்றியும் ஒரு பாடலில் வருகிறது. பிள்ளையார் வழிபாடு வந்தது பிற்காலத்தில் —– ஆகவே அந்த வகையிலும் இது பிற்கால த்தியதே —– காளிதாசன், மாணிக்க வாசகர் ஆகியோர் பிள்ளையார் பற்றிக் குறிப்பிடவில்லை.
காதாவில் முருகன், கங்கை, இமயமலை பற்றிய பேச்சே இல்லை. சிவன் என்ற பெயரில் புலவர்கள் உள்ளனர். சிவன் என்ற சொல் தேவார , திருவாசக காலத்துக்கு முன் தமிழில் கிடையாது. அவ்வகையிலும் காதாவின் காலத்தைப் பின் போட வேண்டும்.
ராதா, கிருஷ்ணன் பற்றிய குறிப்பும் இதில் உண்டு. ஆனால் சங்க இலக்கியத்திலும் கிருஷ்ணன்-கோபியர் பற்றிய குறிப்பு உளது. ராதா என்ற பெயர் இல்லை. காதாவில் ராதா பெயர் உள்ளதால் அவ்வகையிலும் காதாவின் காலத்தைப் பின் போட வேண்டும்.
காளிதாசனைக் காப்பி அடித்தனர்
பல புலவர்கள் காளிதாசன் உவமைகளைக் “காப்பி” அடித்துள்ளனர். இதுவும் விக்ரமாதித்தன் பற்றிய ஒரு பாடல் குறிப்பும் காதாவுக்கு முன் காளிதாசன் வாழ்ந்ததைக் காட்டுகின்றன.
காளிதாசன் என்னும் உலக மகா கவிஞன் சங்க காலத்துக்கு முன் வாழ்ந்தவன் என்பதை ஐந்தாறு கட்டுரைகளில் நிரூபித்தேன். இங்கே மேலும் பல சான்றுகள் கிடைக்கின்றன. அவன் ஹாலன் வாழ்ந்த காலத்துக்கும் முந்தியவன்:
சாலிவாஹனன் எழுதிய ஒரு கவிதை இதோ:
கலவியில் மெந்துயில் கழற்றிய சிவன்தன்
இருகண்களைத்தன் இருகரம் பொத்தி
மூன்றாம் கண்ணையும் முத்தமிட்டு
மூடும் உமையவள் நீடு வாழ்க — சாலிவாஹனன் 5-55
(காதா சப்த சதி– மு.கு ஜகன்னாத ராஜாவின் மொழிபெயர்ப்பு)
கலவியின் போது சிவன் உமையம்மையின் உடையை நீக்கினான். அவளுக்கு வெட்கம் தாங்கவில்லை. சிவநுடைய இரு கண்களையும் இரு கரங்களால் மூடிவிட்டாள். சிவன் அதி புத்திசாலி. மூன்றாம் கண்ணால் (நெற்றிக்கண்) பார்த்தான். முத்தமிடும் சாக்கில் மூன்றாம் கண்ணில் முத்தமிட்டு அதையும் மூடி வீட்டாள் உமை.
இந்தக் கவிதை காளிதாசனிலும் இருக்கிறது. அதை ஹாலன் எடுத்தாண்டார் என்பதே சால ப்பொருந்தும். காளிதாசன் இது போல ஒவ்வொரு விஷயத்தையும் காப்பி அடித்திருந்தால் அவனுக்கு உலகப் புகழ் பெற்ற கவிஞன் என்ற பெயரை பழங்கால இந்தியக் கவிஞர்கள் சூட்டியிருக்க மாட்டார்கள். சில வெளி நாட்டு அறிஞர்கள் அவன் தீபசிகா உவமையைக் காப்பி அடித்ததாக எழுதியுள்ளனர். உண்மையில் தீப சிகா உவமை மதுரைக் காஞ்சியிலும் உளது.ஆகவே இதை காளிதாசனிடமிருந்தே அனைவரும் எடுத்தனர்.
பெண்கள் சாதுர்யமாக நடந்துகொள்வர். இதோ காளிதாசன் கவிதை:
சூலின: கரதலத் வயேன ஸா சம்னிருத்ய நயனே ஹ்ருதாம் சுகா
தஸ்ய பஸ்யதி லலாட லோசனே மோக! யத்ன விதுராரஹஸ்பூத்
–குமாரசம்பவம்
. இதோ மேலும் சில எடுத்துக் காட்டுகள்:
அ) பாடல் 430- பாடியவன் கலசன்– மேகத்துக்கு அவன் கூறும் அறிவுரை காளிதாசனின் மேகதூதம் போல உளது
ஆ)காளிதாசனின் புகழ்பெற்ற தீபசிகா உவமை காதாவிலும் உளது.
இ)சங்கர, சங்கர சக்தி என்ற பெயர்களும் மாணிக்ய ராஜ என்ற பெயரும் ஆதி சங்கரர், மாணிக்கவாசகர் ஆகியோரை நினைவு படுத்துகின்றன.
ஈ)விக்ரமாதித்தன், அவன் படைகளுக்கு ஒரு லட்சம் பொன் வரை பரிசுகள் வழங்க்கியதைப் பெருமையுடன் பாடுகிறத் காதா. காளிதாசனும் விக்ரமாதித்தனும் சமகாலத்தவர்கள்.
contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.