ஒரு வேண்டுகோள்: எனது கட்டுரைகளை உடனே “ரீபிளாக்: – செய்யாதீர்கள். ஒரு வாரம் இடைவெளி விடுங்கள். படங்கள் என்னுடையவை அன்று. ஆகையால் பயன்படுத்தாதீர்கள். கட்டுரை எழுதியவர் பெயர், பிளாக்-கின் பெயருடன் வெளியிடுங்கள்; மாற்றாதீர்கள்.
Compiled by London swaminathan
Date : 5 September 2015
Post No. 2127
Time uploaded in London : -7- 29 am
அழுக்காறு உடையார்க்கு அது சாலுமொன்னார்
வழுக்கியும் கேடீண்பது – குறள் 165
பொருள்:பொறாமை உடையார்க்கு அழிவினைத் தருவதற்கு வேறு எதிரியே தேவை இல்லை. அவன் கொண்டுள்ள பொறாமையே அந்த ஆளை அழித்துவிடும்.
தமிழில் ஒரு பழமொழி உண்டு: ‘எனக்கு ஒரு கண் போனாலும் சரி, எதிரிக்கு இரண்டு கண்களும் போகட்டும்’ என்று. பொறாமையாலோ, பழிவாங்கும் குணத்தாலோ இப்படி எண்ணம் வரலாம். இந்தப் பழமொழிக்குப் பின்னால் ஒரு கதையே உள்ளது!
ஒரு ஊரில் அடுத்தடுத்து இருவர் வசித்தனர். ஒருவருக்கு நல்ல, பெரிய, அழகான வீடு; அவர் மிகவும் நல்லவர். அடுத்த வீட்டுக்காரனுக்கு ஒரு சிறிய வீடுதான் இருந்தது. அவன் பொறாமைக்காரன். அடுத்தவர்களைப் பார்த்தே அவன் குடல் வெந்தது; கண்கள் கருகின. எப்படியாவது நாமும் பணம் சம்பாதிக்கவேண்டும் என்று எண்ணி காட்டுக்குத் தவம் செய்யப்போனான். அவர்கள் வீடுகள் காட்டை ஒட்டியிருந்தன.
காட்டில் தவம் செய்யப் போனவுடன் ஒரு முனிவர் வந்தார். “என்னப்பா, காட்டில் தவம் செய்கிறாயே, எதற்காக?” என்றார். அவன் தனக்கு அடுத்த வீட்டுக்காரனைப் போல பெரிய வீடு, வாசல், நில புலன்கள் வேண்டும் என்றான். இப்படிச் சொன்னவுடன் அவனுடைய பொறாமைக் குணம் அவருக்குப் புரிந்துவிட்டது.
“அன்பனே! உனக்கு ஒரு தாயக்கட்டை தருவேன். அதை நீ மூன்று முறை மட்டுமே உருட்டலாம். ஒவ்வொரு முறை நீ உருட்டும்போதும், ஒரு கோரிக்கை நிறைவேறும். ஆனால் அடுத்தவீட்டுக்காரன் மீதுள்ள பொறாமை போகாவிட்டால், நீ வேண்டுவது எல்லாம், அவனுக்கு உன்னைப் போல, இரண்டு மடங்கு கிடைக்கும் என்றார்.
பொறாமைக்காரனுக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி சொல்லிவிட்டு, தாயக் கட்டையை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தான். அடுத்த வீட்டைப் பார்த்தவுடன் பொறாமை கொப்புளித்தது. எனக்கு அவனைப் போல பெரிய வீடு வாசல், மாட மாளிகை வேண்டும் என்று சொல்லி காயை உருட்டினான். என்ன அதிசயம்? அவனுக்கு கேட்டதெல்லாம் கிடைத்தது. ஆனால் பொறாமை போகாததால், அடுத்தவீட்டுக் காரனுக்கு இரு மடங்கு பெரிய வீடு கிடைத்துவிட்டது.
இப்பொழுது அவனது பொறாமை கொழுந்துவிட்டு எரிந்தது. அப்படியா சேதி! எனது அறிவை அந்த முனிவன் குறைத்து எடை போட்டுவிட்டான். இதோ பார் என்று சொல்லிக்கொண்டே இரண்டாவது முறை தாயக்கட்டையை உருட்டினான். எனக்கு ஒரு கண் போகட்ட்டும் என்றான். ஒரு கண் குருடாய்ப் போயிற்று. அடுத்தவீட்டுக் காரனுக்கு இரு மடங்கு கிடைக்கும் அல்லவா? அவனுக்கு இரண்டு கண்களும் போயிற்று. பொறாமைக்காரன் கைகொட்டிச் சிரித்து ஆனந்த நடனம் ஆடினான்.
சரி, வேறு எப்படி அடுத்த வீட்டுக் காரனை நாசமாக்கலாம் என்று யோசித்தபோது, திடீரென ஒரு யோஜனை பளிச்சிட்டது. எடுத்தான் தாயக் கட்டையை; என் வீடு பாதிப்பகுதி நிலத்தில் ஆழக் கடவதாகுக! என்றான். அப்படியே ஆயிற்று. அடுத்தவீட்டுக் காரனுக்கோ முழு வீடும் நிலத்துக்கு அடியில் போனது. பொறாமைக்காரனுக்குப் பேரானந்தம். கைகொட்டிச் சிரித்தான். வரம் கொடுத்த முனிவனையே முட்டாளாக்கிவிட்டேன் என்று கொக்கரித்தான்.
தோட்டத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்த அடுத்த வீட்டு வேலையாட்கள், இவை எல்லாம் பொறாமைக்காரனோடு வேலைதான் என்பதை அவனது ஆட்ட,பாட்டத்தால் உணர்ந்து பொறாமைக்காரனை அடித்து நொறுக்கி அவனது செல்வங்களையெல்லாம் எடுத்துக்கொண்டு காட்டிற்குள் ஓடிவிட்டனர்!
உள்ளதும் போச்சுடா லொள்ளைக் கண்ணா! என்று அவன் தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்தான்.
பொன்மொழிகள்:—-
1.ஔவியம் பேசேல் – ஆத்திச்சூடி
(ஔவியம்=பொறாமை, அழுக்காறு)
2.ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு – கொன்றைவேந்தன்
(ஔவியம்=பொறாமை, அழுக்காறு; ஆக்கம் = செல்வம்)
3.அவ்வித்து அழுக்காறு உரையாமை முன்னினிது – இனியவை நாற்பது.
(நான் எழுதிய முந்திய பொறாமைக் கதையையும் படிக்கவும்)
–சுபம்–