அவ்வையார், வள்ளுவர் பற்றிய அதிசய தகவல்கள்!

aathi-sudi1

Compiled by London swaminathan

Date: 14 November 2015

POST No. 2328

Time uploaded in London :– காலை 10-26

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES;

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

((மற்றவர்கள் எழுதிய கட்டுரைகளைத் திருடாதீர்கள். இது தமிழையும் உங்கள் குடும்பத்தையும் அழித்துவிடும்; “ஷேர்” செய்யுங்கள் தவறில்லை; ஒரு வாரத்துக்குப் பின் “ரீப்ளாக்” செய்யுங்கள்; தவறில்லை. கட்டுரை எழுதியவர் பெயரையும், பிளாக்- கின் பெயரையும் வெட்டிவிட்டு வெளியிடாதீர்கள்))

 

லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரியிலுள்ள பழைய தமிழ் புத்தககங்களில் பல சுவையான விஷயங்கள் கிடைக்கின்றன. திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்னர் இவையனைத்தும் மறைக்கப்பட்டு விட்டன. ஆயினும் 100 ஆண்டுகளுக்கு முன் வெள்ளையர்களும் தமிழர்களும் எழுதிய நூல்களில் இவை அப்படியே உள்ளன.

நமக்குத் தெரிந்த திருவள்ளுவர் ஒருவர்தான். ஆனால் கபிலர், அவ்வையார் என்ற பெயர்களில் பல புலவர்கள் உண்டு. ஆறு அவ்வையார்கள் இருந்ததாக ஒருவர் ஆராய்ச்சிப் புத்தகம் எழுதியுள்ளார். நான் மொழியியல் அடிப்படையில் குறைந்தது மூன்று அவ்வையார்கள் இருந்ததை நிரூபிப்பேன். இந்தக் கதையில் வரும் அவ்வையார் வள்ளுவர், பிற்கால அவ்வையாரின் சமகாலத்தவராக இருக்கக்கூடும். இவைகள் கட்டுக் கதைகளோ என்று எண்ணத் தோன்றும். ஆயினும் நெருப்பில்லாமல் புகையுமா? என்ற தமிழ்ப் பழமொழியை நினைவிற்கொண்டு படியுங்கள்.

அவ்வையார் ஏழு பேருடன் பிறந்தார். அவர்களில் கடைசி சகோதரர் திருவள்ளுவர்!

coin valluvar

யார் அந்த எழுவர்?

பூர்வத்தில் ஆதி என்ற பெண்மணிக்கும் பகவன் என்ற பிராமணனுக்கும் பெண்மக்கள் நால்வரும் ஆண் மக்கள் மூவரும் பிறந்தனர்.

அவ்வை

உப்பை

அதிகமான் (ஆண்)

உறுவை

கபிலர் (ஆண்)

வள்ளியம்மை

திருவள்ளுவர் (ஆண்)

பகவனும் ஆதியும் யாத்திரை புறப்பட்டனர். இது வாழ்நாள் முழுதும் செய்யும் புனித யாத்திரை என்பதால் பகவன் ஒரு நிபந்தனை போட்டார். உனக்கும் எனக்கும் பிறக்கும் குழந்தையைப் பிறந்த இடத்திலேயே விட்டுவிட்டு வரவேண்டும் என்றார். தாய் மனம் பொறுக்குமா? “அது எப்படி, சுவாமி முடியும்?” என்று கேட்டார். “மரத்தை வைத்தவன் தண்ணீர் வார்ப்பான்” என்று இறைவன் மீது பாரத்தைப் போடு என்று பதில் சொன்னார் பகவன்.

அந்தப் பெண்ணும் குழந்தை பிறக்கும்போது அவர் மனம் மாறிவிடுவார் என்று பேசா மடந்தையாக தீர்த்த யாத்திரையைத் தொடர்ந்தாள். ஒரு ஆண்டில் முதல் குழந்தை பிறந்தது. முன்னரிட்ட நிபந்தனையின் படி “குழந்தையை விட்டுப் புறப்படு” – என்றார் பகவன். அவள் தயங்கினாள். ஆனால் குழந்தையே அதிசயமாக வாய்திறந்து ஒரு பாட்டுப்பாடியது:–

என்னுடைய தலைவிதி இதுதான் என்று எழுதிய சிவன் செத்தா விட்டான்?. நீ கவலையில்லாமல் போ – என்று அக்குழந்தை பாடியது.

“இட்டமுடன் என் தலையில் இன்னபடி என்றெழுதி

விட்ட சிவனுஞ் செத்துவிட்டானோ? – முட்டமுட்டப்

பஞ்சமே யானாலும் பாரமவனுக்கன்னாய்

நெஞ்சமே யஞ்சாதே நீ”

 

இப்படி அதிசயமாக ஒரு பிறந்த குழந்தை பாடியவுடன் ஆதி நம்பிக்கையுடன் அக்குழந்தையை விட்டுச் சென்றாளாம். அந்த முதல் குழந்தையே அவ்வை.

இதற்கடுத்த குழந்தை உப்பை என்னும் பெண். அந்தக் குழந்தையும் பிறந்தவுடன், யானை முதல் எறும்பு வரை காக்கும் இறைவன் என்னைக் காப்பாற்றுவான் என்று பாடியதாம்.

 

“அத்தி முதல் எறும்பீறான உயிர் அததனைக்கும்

சித்த மகிழ்ந்தளிக்கும் தேசிகன் – முற்றவே

கற்பித்தான் போனானோ? காக்கக் கடனிலையோ?

அற்பனோ அன்னாய் அரன்?”

 

இதைக்கேட்டவுடன் அவள் குழந்தையை அங்கேயே போடுவிட்டுப் புறப்பட்டாள்.

மூன்றாவது குழந்தை ஆண். அதிகமான் என்ற பெயர். அக்குழந்தையும் பாடியது:

அம்மா கருப்பைக்குள் இருக்கும் குழந்தைக்கும், கல்லுக்குள் வசிக்கும் தேரைக்கும் உணவளிப்பவன் இறைவன். நீ கவலையிலாமல் செல் என்றது.

கருப்பைக்குண் முட்டைக்கும் கல்லினுட் டேரைக்கும்

விருப்புற்றமுதளிக்கும் மெய்யன் – உருப்பெற்றால்

ஊடி வளர்க்கானோ? ஓகெடுவாய் அன்னாய்! கேள்

வாட்டமுனக்கேன்? மகிழ்!

ஔவையார்1

நான்காவது குழந்தையோ, அம்மா, கருப்பைக்குள் இருக்கும் குழந்தை தாயின் உணவையே உண்டு வளரவில்லையா? இதுவும் இறைவனின் செயலில்லையா? நீ ஏன் கவலைப்படுகிறாய்? என்று கேட்டவுடன் அக்குழந்தையையும் விட்டுச் சென்றாள்.

சண்டப்பைக்குள்ளுயிர்தன் தாயருந்தத் தானருந்தும்

அண்டத்துயிர் பிழைப்பதாச்சரியம்  – மண்டி

அலைகின்ற அன்னாய்! அரனுடைய உண்மை

நிலைகண்டு நீயறிந்து நில்.

இதைக் கேட்டு ஆதி , சமாதனம் அடைந்தாள் பின்னர் ஐந்தவது பிள்ளையைப் பெற்றபோது அதுவும் ஒரு வெண்பா பாடியது.

நடுக் காட்டில் கல்லுக்குள் இருக்கும் தவளையையும் அறிந்து அதற்குப் படியளக்கும் இறைவன் எனக்கு உணவளிக்கமாட்டானா? இதைவிட அவனுக்கு வேறு என்ன வேலை?

கண்ணுழையாக் காட்டிற் கருங்க ற்றவளைக்கும்

உண்ணும் படியறிந் தூட்டுமவர் – நண்ணும்

நமக்கும் படியளப்பார் நாரியோர் பாகர்

தமக்குத் தொழிலென்னதான்?

ஆறாவது குழந்தை, “தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கே உணவளிக்கும் கடவுள் எனக்கும் உணவளிப்பான். தாயே, வருந்தாது செல்க” என்று வெண்பா இயற்றியது:

அன்னை வயிற்றில் அருத்தி வளர்த்தவன் தான்

இன்னும் வளர்க்கானோ? என் தாயே! – மின்னரவஞ் சூடும் பெருமான், சுடுகாட்டில் நின்று விளை

யாடும் பெருமான் அவன்”

இதைக்கேட்டவுடன் தாயும் உச்சி குளிர்ந்து விடை பெற்றுச் சென்றாள்

ஏழாவது குழந்தையும் ஒரு வெண்பா பாடி தாய்க்கு நம்பிக்கையூட்டியது. அக்குழந்தைதான் பிற்காலத்தில் பெரும்புகழெடுத்த வள்ளுவன்:

உலகத்திலுள்ள எல்லா உயிர்களையும் கடவுள் காப்பாற்றுவான். அதில் நானும் ஒருவனில்லையா? எனக்கு என்ன வரும் என்பது அவனுக்குத் தெரியும். கவலையில்லாமற் செல்க – என்றது.

எவ்வுயிரும் காக்கவோர் ஈசனுண்டோ, இல்லையோ?

அவ்வுயிரில் யானொருவன் அல்லனோ? – வவ்வி

அருகுவது கொண்டிங் கலைவதேன்? அன்னே

வருகுவதுதானே வரும்?

 

sundarambal2

இந்தக் கதையில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, தெரியாது. பாடல்கள் அனைத்தும் இந்துமதக் கருத்துக்களை எதிரொலிக்கிறது. ஆகையால் இவற்றைப் போற்றிப் பாது காக்கவேண்டும்.

எல்லாப் பாடல்களிலும் சிவ பெருமான் அருள் போற்றப்படுகிறது!

உலகத்தைப் படைத்த கடவுள் யாரையும் பட்டினி போடாமல் ஏதோ ஒருவிதத்தில் காப்பாற்றி விடுவான். காளிதாசன் சொன்னது போல அவனே உலகிற்கெல்லாம் தாயும் தந்தையும்:

ஜகதப் பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ – காளிதாசனின் ரகு வம்சம்.

வாழ்க தமிழ்! வளர்க அவ்வை- வள்ளுவன் புகழ்!!

–சுபம்–

Leave a comment

2 Comments

  1. Dear Swaminathan, Continue presenting matters from Tamil Books in British Library. Very informative and interesting. Thanks. R.Ramaswami

  2. Thanks. I will do it. If I have a secretary or assistant to type matters in English and Tamil,
    I will publish six articles a day!! So much matter is available.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: