Written by S NAGARAJAN
Date: 27 January 2017
Time uploaded in London:- 6-25 am
Post No.3580
Pictures are taken from different sources; thanks.
Contact: swami_48@yahoo.com
சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 20
இந்தக் கட்டுரையில் பரிபாடல் திரட்டில் வரும் 1,3,8 ஆம் பாடல்களில் வேதம் பற்றியும் அந்தணர் பற்றியும் வரும் குறிப்புகளைக் காணலாம்..
பரிபாடல் திரட்டில் அந்தணரும் வேதமும் !
ச.நாகராஜன்
பரிபாடல் திரட்டில் முதலாம் பாடல்
பரிபாடல் திரட்டு 13 பாடல்களைக் கொண்டுள்ள நூல். முதலாம் பாடல் திருமாலைப் பற்றியது. இருந்தையூர் அம்ர்ந்த இறைவனின் புகழ் பாடும் இந்தப் பாடலில் அந்தணர் இருக்கை பற்றிய வரிகள் வருகின்றன. இந்தப் பாடல் தொல்காப்பியம் 121ஆம் சூத்திரத்தில் பேராசிரியர் நச்சினார்க்கினியர் உரையில் கண்டெடுக்கப்பட்டது.
ஒருசார்- அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி
விறல் புகழ் நிற்ப, விளங்கிய கேள்வித்
திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி (வரிகள் 18-20)
இதன் பொருள்:
ஒரு சார் – ஒரு பக்கத்தில்
அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி – தர்மத்தொடு வேதத்தினைப் பின்பற்றித் தவம் புரியும்
விறல் புகழ் நிற்ப, விளங்கிய கேள்வித் திறத்தின் திரிவு இல்லா அந்தணர் –புகழ் வாய்ந்த புனித நூல்களில் நன்கு புலமை பெற்றோர், நீதியின்று திறம்பாத அந்தணர்
ஈண்டி – சேர்ந்து வாழ்வோர்
என இப்படி அந்தணர் வாழ்க்கை வேதத்தின் அடிப்படையில் விளங்கும் வாழ்க்கை என்று புகழ்ந்து உரைக்கப்படுகிறது.
அடுத்து வையையில் அந்தணர் நீராட விரும்பாததை கீழ்க்கண்ட வரிகள் காரணத்துடன் தெரிவிக்கின்றன.
பார்ப்பார் நீராட மாட்டார்கள் ஈப்பாய அடு நறாக் கொண்டது இவ்யாறு என்ப
பார்ப்பார் ஒழிந்தார் படிவு மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று என்று அந்தணர் தோயலர் ஆறு வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென ஐயர், வாய்பூசுறார், ஆறு (வரிகள் 58-63)
இந்த ஆற்றில் ஈக்களும் மதுவும் உள்ளது. என்று அந்தணர் அந்த ஆற்றை விட்டு நீங்கினர். மைந்தர் மற்றும் மகளிர் இதில் நீராடியதால் அவர்களின் நறுமணம் இதில் கலந்துள்ளதால் இது தூய்மை அற்றது என்று கூறி அந்தணர் அதில் நீராடவில்லை. – நீரானது பூக்களின் மதுவால் வழுவழுப்பாகியுள்ளது என்று கூறி அவர்கள் தங்கள் வாயையும் நீரால் கழுவ மறுத்தனர்
அந்தணர்கள் தங்களின் தூய்மையைக் காக்கும் விதத்தை இந்தப் பாடல் தெரிவிக்கிறது.
பரிபாடல் திரட்டில் மூன்றாம் பாடல்
பரிபாடல் திரட்டு மூன்றாம் பாடல் வைகை நதியைப் பற்றியது. இதுவும் தொல்காப்பியம் 121ஆம் சூத்திரத்தில் பேராசிரியர் நச்சினார்க்கினியர் உரையில் கண்டெடுக்கப்பட்டதேயாகும்.
அறவோர் உள்ளார் அரு மறை காப்ப (முதல் வரி)
என்ற வரியில் அருமறை காப்பதைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. அறவோர் உள்ளார் என்பதால் தர்ம வழியில் நிற்பவர் அந்தணர் என்பது உரைக்கப்படுகிறது. அவர்கள் வேதத்தைக் காத்து வருபவர்கள் என்பதையும் பாடல் வரி தெரிவிக்கிறது.
பரிபாடல் திரட்டில் எட்டாம் பாடல் இந்தப் பாடல் புறத்திரட்டில் நகர் என்னும் பகுதியில் வருகிறது.
நான்மாடக்கூடல் என்னும் மதுரையம்பதியின் சிறப்பை பாடல் வர்ணிக்கிறது. பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப
ஏம இன்றுயில் எழுதல் (வரிகள் 7,8,9)
என்னும் வரிகளில் பிரம்மாவையும் அவன் நாவில் வந்த வேதம் பற்றியும் சிறப்புறக் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம்.பூவினுள் பிறந்தவனான ப்ரம்மாவின் நாவினுள் பிறந்த வேதத்தின் குரல் எழுப்புதல் அல்லாது சேரனின் வஞ்சியும் சோழனின் கோழி எனப்படும் உறையூரும் கோழி கூவி எழுவது போல மதுரை மா நகரம் கோவி கூவி எழாது என்பது பாடலின் பொருள்.
அதாவது சேரனின் நகரமும் சோழனின் நகரமும் சாதாரணமாக கோழி கூவி எழும். ஆனால் பாண்டியனின் மதுரை மாநகரமோ அந்தணர் வேதத்தை ஓதும் குரல் கேட்டே எழும். புலர்காலைப் பொழுதில் அந்தணர்கள் வேதம் ஓத அந்த இனிய ஓசையிலேயே மதுரை தன் காலைப் பொழுதைத் தொடங்கும் என்று அழகுறப் புலவர் விளக்குகிறார்.
முடிவுரை
இதுகாறும் இருபது அத்தியாயங்களில் சங்க இலக்கிய நூல்களில் அந்தணரும் வேதமும் சொல்லப்படும் இடங்களின் ஆய்வுத் தொகுப்பைக் கண்டோம்.
சங்க காலத்தில் அந்தணர் பெற்றிருந்த இடத்தைத் தெளிவாக இப்பகுதிகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்தப் பின்புலத்தில் அந்தண்ர் என்போஈர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் (குறள் 30)
. என்ற குறளைப் பார்த்தால் அந்தணர் என்போர் மற்ற அனைத்து உயிர்களிடமும் அருளுடன் நடக்கும் தன்மை கொண்டிருக்கும் அறவோர் என்பது பெறப்படுகிறது.
தன்னலம் பாராமல் பிறர்க்குரியாளராக அவர்கள் திகழக் காரணம் அவர்கள் ஓதும் வேதமும் அதில் கூறப்பட்டுள்ள அற வாழ்க்கையுமே காரணம் என்பதை ஓர்ந்து உணர்ந்து கொள்ளலாம்.
காழ்ப்புணர்ச்சியற்ற ஒன்று பட்ட தமிழகத்தில் வேதத்தின் இடம் சிறப்பு வாய்ந்த ஒன்று. அதை ஓதும் அந்தணர் அந்த வேதச் சிறப்பால், அதை ஓதி அதன் படி நடந்ததால் சிறப்பினைப் பெற்ற்னர். இமயம் முதல் குமரி வரை பரவியிருந்த ஒரே பண்பாடு வேதப் பண்பாடே என்பதையும் இந்தப் பாடல்கள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
பின்னாளில் ஏற்பட்ட ஏராளமான படையெடுப்புகள் – கிரேக்கப் படையெடுப்பு, முகலாயரின் படையெடுப்பு, வெள்ளையரின் பிரித்தாளும் சூழ்ச்சியுடன் கொண்ட படையெடுப்பு என பல படையெடுப்புகளும் இந்த ஒன்று பட்ட வாழ்க்கையைக் குலைக்க ஏராளமான முயற்சிகளை எடுத்தன. என்ற போதிலும் அடிப்படைப் பண்பு குறையாமல் இன்றும் பாரதப் பண்பாடு ஒன்றெனத் திகழ்கிறது.
என்ற போதிலும் இடைவிடாது பல நூற்றாண்டு தொடர்ந்த கொடுமைக்கும் சூழ்ச்சிக்கும் பாரத சமுதாயம் சற்றே இரையாகி விட்டதை நிரூபிக்கும் வகையில் இன்றைய சில பிளவுகள் நம்மிடையே ஊடுருவி இருக்கின்றன.
அவற்றைக் களைய வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். பண்பாடு ஒன்றே என எடுத்துக் காட்ட இந்த வேதமும் அந்தணரும் என்ற பொருள் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இனி அடுத்த பகுதியில் பழக்க வழக்கங்கள், இறை வழிபாடு, நம்பிக்கைகள் எப்படி நம் தேசத்தில் ஒன்றாகவே விளங்கின என்பதை ஆராய்வோம்.
இதுவரை இதைப் படித்தவர்களுக்கு நன்றி. இனி அடுத்த பாகத்தைத் தொடர்வோம்.
முதல் பாகம் முற்றிற்று