கோஹினூர் வைரம் மீட்கப்படுமா? – 3 (POST No.4302)

Written by S.NAGARAJAN

 

 

Date:15 October 2017

 

Time uploaded in London- 5–51 am

 

 

Post No. 4302

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

பாக்யா 13-10-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 34வது) கட்டுரை

 

 

உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர், மீட்கப்படுமா? – 3

 ச.நாகராஜன்

 

“மூன்று விஷயங்கள் மிக மிக கடினமானவை 1) எஃகு 2) வைரம் 3) தன்னைத் தானே அறிவது – பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்

 

 

பஞ்சாபின் தலை நகரான லாகூர் நகரமே சோகக் கடலில் மூழ்கியது.

கூட்டம் கட்டுக்கடங்காமல் போக, கூட்டத்தில் இருந்தோரெல்லாம் ‘வேண்டாம், வேண்டாம் என்று கண்ணீரும் கம்பலையுமாக அழுதவாறே அரற்றிக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு வந்த செய்தி சரியானது தான்.

தங்களுக்குப் பிரியமான மஹாராஜா ரஞ்சித் சிங் எரிக்கப்படும் போது அவரது ராணிகள் உடன்கட்டை ஏறப்போவதாக செய்தி நகரெங்கும் பரவி இருந்தது.

காவல் வீரர்கள் கூட்டத்தைக் கட்டுப் படுத்தி ஒழுங்கை நிலை நாட்ட முயன்று கொண்டிருந்தனர்.

ரஞ்சித் சிங்கின் உடல் அலங்கரிக்கப்பட்டு தங்க ரதத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அந்த ரதத்திற்குப் பின்னால் அவருக்கு மிகவும் பிரியமான் நான்கு ராணிகள் – இளம் விதவைகள் -தங்க நாற்காலிகளில் அமர்ந்து வர ஐந்து அடிமைப் பெண்கள் கூடவே நடந்து வந்தனர்.

உடல் மயானத்தை அடைந்தது.

நல்ல பட்டுப் போர்வையால் தன் உடலைப் போர்த்திக் கொண்டு ரஞ்சித் சிங்கின் பிரியமான மஹாராணி அவர் சிதைக்குத் தன் கையாலேயே தீ மூட்டினார்.

சந்தனக் கட்டைகளின் மேல் நெய் பொழிய தீ ஜுவாலைகள் வானளவு உயர்ந்தன. கூடவே கொஞ்சமும் கந்தகமும் அதில் சேர்க்கப்பட்டிருந்ததால் தீப்பந்து சுழன்று எழுந்தது. ராணிகள் நால்வரும் அடிமைப் பெண்கள் ஐவருடன் சிதையில் பாய்ந்தனர்.

அவ்வளவு தான்!

ஒரு சில நிமிடங்களில் எல்லாம் முடிந்து போனது.

அனைவரும் கருகிச் சாம்பலாயினர்.

மஹாராஜா இறந்த மறு நாள் அவரது மகன் முடி சூட்டப்பட்டார். அவரோ போதை மருந்துக்கு அடிமையானவர்.

ஆறு வருடங்கள் சரியான தலைமை இல்லாமல் பஞ்சாப் அல்லோல கல்லோலப் பட்டது.

இதை விட ஒரு இனிய சந்தர்ப்பம் ஈஸ்ட் இந்தியா கம்பெனிக்கு அமைய முடியுமா என்ன?

வெள்ளைக்காரன் பஞ்சாபின் மீது கண்ணை நன்கு பதித்தான்.நடப்பதை தனக்குச் சாதகமாக எப்படி ஆக்குவது என்பதே ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் ஒரே நோக்கமாக ஆனது.

      சரியாக பதினைந்தே மாதங்களில் மூடி சூட்டப்பட்ட மன்னனை அவரது மனைவியும் மகனுமே விஷத்தைக் கொடுத்துக் கொன்றனர். மகன் தானே முடி சூடிக் கொண்டான்.

ஆனால் அரசனாக அவன் ஒரே ஒரு நாள் மட்டும் தான் இருந்தான்.

உப்பரிகை இடிந்து விழ அவன் கொல்லப்பட்டான்.

ரஞ்சித்சிங்கின் இரண்டாவது மகன் ஷெர்சிங் 1841ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அரியணை ஏறினார்.

இரண்டு ஆண்டுகள் கழித்து 1843இல் அவர் மல்யுத்த மைதானம் ஒன்றில் மல்யுத்த நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்த போது கொலையாளி ஒருவரால் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலை நடந்து  முடிந்த சில நிமிடங்களிலேயே அவரது 12 வயது மகனும் கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டான்.

அவர் மந்திரியும் இரண்டு துண்டாக வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்.

 

   ரத்தக் களரி தொடர்ந்தது.இந்த நிலையில் தான் இதுவரை பொறுத்திருந்த மஹா ராணி ஜிந்த் கௌர் (பிறப்பு 1817; மறைவு 1-8-1863) களத்தில் குதித்தார். இவரை மக்கள் ஜிண்டான் என்ற செல்லப் பெயரால் அழைத்தனர். ரஞ்சித் சிங்கின் மிக இளவயது மனைவியான இவர் பேரழகி. பெரிய புத்திசாலி. செயலூக்கம் மிகுந்த சுறுசுறுப்பான மஹாராணி ஜிண்டான் 1843 முதல்  மூன்று வருடம் அரசாண்டார்.

   இவரை புரட்சி ராணி என்றே சொல்லலாம். (இவரைப் பற்றிய தி ரெபல் க்வீன் என்ற படம் நியூயார்க் நகரில் பன்னாட்டு சீக்கிய திரைப்பட விழாவில் 2010ஆம் வருடம் திரையிடப்பட்டது)  பிரிட்டிஷ் அரசு இவரை அப்படித்தான் பார்த்தது.

   ரஞ்சித் சிங்கை அடுத்து அரியணை ஏறிய மூவரும் கொல்லப்பட்ட சூழ்நிலையில் ஜிண்டானின் குமாரரான துலிப் சிங் பட்டம் சூடினார். அப்போது அவருக்கு வயது 5 தான். ஜிண்டான் அரசாட்சிப் பொறுப்பாளர் (regent) ஆனார்.

 உள்ளூரில் சதி வேலை ஆரம்பித்தது. மஹாராணியை எதிர்க்க ராணுவம் துணிவு கொண்டது. கால்ஸா – அதாவது சீக்கிய ராணுவம் தக்க தருணத்தை எதிர் நோக்கிக் காத்திருந்தது.

    அப்போது பிரபலமான ஒரு தளகர்த்தன் இறந்து விடவே இந்தக் கொலையில் மந்திரியை சம்பந்தப்படுத்தி அவரைத் தங்கள் முன்னே ஆஜராக உத்தரவிட்டது ராணுவம்.

    யானை மீது அம்பாரி ஏறி பாதுகாப்பிற்காக இளம் மஹாராஜாவைத் தன் மடியின் மீது அமர்த்தி பவனியாக வந்தார் மந்திரி. மஹாராஜாவை பத்திரமாக இறக்கி விட்ட ராணுவம் மந்ரியைக் குத்திக் கொலை செயதது.

ராணுவத்தை பயப்பட வைக்க வழி என்ன? அரண்மனையில் ஆலோசனை நடந்தது.

   எல்லையில் பலம் மிக்க எதிரி வந்தால் ராணுவம் அங்கே போய்த்தானே ஆக வேண்டும். பிரிட்டிஷாரை விட சிறந்த பலம் பொருந்திய எதிரி வேறு யார்?

ஒரு பிரிட்டிஷ் தளகர்த்தன் எல்லையில் போர் தொடுக்குமாறு செய்யப்பட்டான்.

கால்ஸா ராணுவம் எல்லைக்குச் சென்று போரிட ஆரம்பிக்கவே பெரும் போர் எழுந்தது. சீக்கிய ராணுவம் பெருமளவு அழிந்தது.

     தொடர்ந்து ஏற்பட்ட லாகூர் உடன்படிக்கையை அடுத்து பிரிட்டிஷ் பிரதிநிதி அரசுப் பொறுப்பை ஏற்க மகாராஜா துலிப் சிங் அரசாட்சி செய்தார்.

மஹாராணி ஜிண்டான் பிரிட்டிஷார் தன்னைக் கைவிட்டுவிட்டதை எண்ணி மனம் நொந்தார். என்றாலும் அவரது வசீகரமும் அரசியல் சாதுரியமும் அவரை பலம் பொருந்திய ஒரு சக்தியாக ஆக்கவே, அதைப் பொறுக்க முடியாத பிரிட்டிஷார் அவரை கண்காணாத ஒரு கோட்டையில் சிறை வைத்தனர். பதிமூன்று ஆண்டுகள் கழித்தே அவர் தன் மகனைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார்.

     1848ஆம் ஆண்டு நடந்த இன்னொரு போரில் கவர்னர் ஜெனரலான லார்ட் டல்ஹௌஸி,  மகாராஜாவின் பெரும் பகுதிச் சொத்தை விற்று விட்டார்.

 தனது பட்டங்கள், உரிமைகள், அதிகாரம் அனைத்தையும் படிப்படியாகத் துறக்குமாறு செய்யப்பட்டார் துலிப் சிங். சொத்தெல்லாம் பிரிட்டிஷார் வசம் போகவைக்கப்பட்டது.

அந்த சொத்தில் ஒன்று தான் கோஹினூர் வைரம்!

   கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கு பதிலாக வருடாந்திர பென்ஷனாக சுமார் 50000 பவுன் தர பிரிட்டிஷ் அரசு முன் வந்தது. அதன் இன்றைய மதிப்பு 20 லட்சம் பவுன்)

  வஞ்சக சூழ்ச்சிக்கு இரையான துலிப் சிங் இங்கிலாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது பதினொன்று.

   புதிய இடம் துலிப் சிங்கை ஈர்த்தது.புதிய நண்பர்கள், தோழியர் கிடைத்தனர். கிறிஸ்தவ மதத்தில் சேர முடிவு செய்தார் துலிப்.

  ஈஸ்ட் இந்தியா கம்பெனி கோஹினூர் வைரத்தை மஹாராணி விக்டோரியாவுக்கு அளிக்க முடிவு செய்தது.

       (வைரத்தின் சரிதம் தொடரும்)

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் …

 

எட்வின் ஜி. க்ரெப்ஸ் (Edwin Gerhard Krebs — பிறப்பு :6-6-1918 மறைவு: 21-12-2009) அமெரிக்காவைச் சேர்ந்த உயிர் வேதியியல் விஞ்ஞானி (Bio chemist).

அவருக்குக் காது கேட்காது. இருந்தாலும் கூடத் தனது ஆராய்ச்சியில் முனைப்பாக இருந்து அபூர்வமான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தார்.

ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் மனித உடலில் உள்ள உயிரணுக்களின் இயக்கம் பற்றிப் பல புதிய கண்டுபிடிப்புகளைத் தெரிவித்தார். இதனால் ஹார்மோன்களைப் பற்றிப் பின்னால் நன்கு அறிய முடிந்தது.

தனக்கு இயல்பாக இருந்த காது கேளாமையை அவர் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். உலகின் பெரும் விஞ்ஞானி ஆனார்.

அவரது அரிய சேவையைக் கருதி 1992ஆம் ஆண்டு அவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட செய்தி ஒரு சில நொடிகளில் உலகமெங்கும் டெலிபோன் மூலம் பரவியது.

ஆனால் அதைக் கடைசியாகத் தெரிந்து கொண்டவர் க்ரெப்ஸ் தான்.

ஏனெனில் அவர் டெலிபோன் மணி இடைவிடாது ஒலித்துக் கொண்டிருந்த போதும் அவரால் எடுக்க முடியவில்லை – அவருக்குத் தான் காது கேட்காதே!

சாதனை புரிய உடல் குறை ஒரு பொருட்டல்ல என்று நிரூபித்த விஞ்ஞானிகளில் ஒருவர் க்ரெப்ஸ்.

****

 

 

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: