பிராமணன் ராவணன், ராவணன் பிராமணன்–கம்பர், அப்பர் செப்பல் (Post No.4393)

பிராமணன் ராவணன், ராவணன் பிராமணன்–கம்பர், அப்பர் செப்பல் (Post No.4393)

 

 Written by London Swaminathan 

 

Date: 13 NOVEMBER 2017

 

Time uploaded in London- 18-21

 

 

Post No. 4393

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

பூணூல் அணிந்த ராவணனை, “இரா+வண்ணன்= இருட்டு போலக் கருப்பு நிறத்தன்” என்று சொல்லி அவனுக்கு திராவிட முத்திரை குத்தும் அறிவிலிகள் உலகில் உண்டு! இப்படிப் பிரித்தாளும் சூட்சி உடையோர் தமிழ் நாட்டில் காலடி எடுத்து வைப்பர் என்று முன் உணர்வால் அறிந்து இராவணனுக்கு பிராமணன் என்று ‘அக்மார்க்’ முத்திரை வைத்துவிட்டனர் அப்பரும் கம்பரும். ஒருவர் சுமார் 1500 ஆண்டுகளுக்கும் மற்றொருவர் 1000 . ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்தவர்.

 

 

அப்பர் நாலாம் திருமுறையில் ராவணன் பற்றிச் சொல்லுகையில் அவனுடைய பூணூலையும் சேர்த்துப் பாடுகிறார்.

 

அசுரர்கள் ராக்ஷசர்கள் தேவர்கள், நாகர்கள் முதலியோர் , ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்று நம் வேத, இதிஹாச புராணங்கள் பேசும்; ஆனால் வேற்றுமை பாராட்டி இந்துக்களைப் பிரிக்க விரும்பும் அரசியல்வாதிகளும், பிற மதத்தினரும் ஒரு சாராரை திராவிடர்கள் என்றும், பழங்குடி மக்கள் என்றும் சொல்லிப் பிரித்தாளுவர்.

 

எல்லாக் கதைகளிலும் சிவனிடமோ, பிரம்மாவிடமோ அசுரர்களும் வரம் வாங்கினர். அவர்களும் ஒரே கடவுளை வணங்கினர்; அந்தக் கடவுளரும் பாரபட்சமின்றி வரம் ஈந்தனர். ஆனால் உலக விதி, ‘அறம் வெல்லும், பாவம் தோற்கும்’ என்பதாகும். இதனால் வரம் பெற்றும் கூடத் தீயோர் வெல்ல முடியாது. ராவணனும் பல வரங்களைப் பெற்றும், செய்த தவற்றினால் உயிர் இழந்தான். ராவணன் பூணூல் பற்றி அப்பர் தரும்  தகவல் இதோ:

 

மாலினா ணங்கையஞ்ச மதிலிலங் கைக்குமன்னன்

வேலினான் வெகுண்டெடுக்கக் காண்டலும் வேத நாவன்

நூலினா  னோக்கிநக்கு நொடிப்பதோ ரளவில்வீழக்

காலினா  லூன்றியிட்டார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே

பொருள்:-

பெருமையுடைய உமா தேவியார் அஞ்சுமாறு, முப்புரிநூல் அணிந்த திரு மார்பினரும், வேதம் ஓதும் திரு நாவினை உடையவருமான இராவணன், கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க,  ஈசன் ஒரு நொடிப்பொழுதில் அவ்வரக்கன் அஞ்சுமாறு திருப்பாத விரலால் அமுக்கியவர். அந்த ஈசன் உறையும் இடமே கழிப்பாலை என்னும் திருத்தலம்

 

 

வேத நாவர்- மறை ஓதும் நாவினை உடையோர்

நூலினான் – நூல்களை உணர்ந்தவன், பூணூல் அணிந்தவன்

 

இரண்டும் இராவணனைக் குறித்தன எனக் கொண்டு, சாம வேத கானம் பாடியவன், நூல்களை உணர்ந்தவன், பூணூல் அணிந்தவன் என்றுரைத்தல் பொருத்தம் உடைத்து என்று தருமபுர ஆதீனப் புலவரின் தேவார உரை கூறும்.

 

இதி வேதம் ஓதுதலையும், முப்புரி நூல் அணிவதையும் சிலர் சிவன் மீது ஏற்றிச் சொல்லுவர். அப்படிச் சொல்லும் வழக்கம் அரிது. அப்படிச் சொன்னாலும் அதை பிரம்மனுக்கே ஏற்றிச் சொல்லுவர்.

 

பூணூலும் வேத நாவும் ராவணனையே குறிக்கும் என்பதற்கு கம்ப ராமாயணம் துணை புரியும்; இதோ கம்பன் கூற்று:–

வையம் தந்த நான்முகன் மைந்தன் மகன் மைந்தன்

ஐயன் வேதம் ஆயிரம் வல்லோன் — என்று சுந்தர காண்ட நிந்தனைப் படலத்தில் ராவணனை வருணிக்கிறான் கம்பன்; இதன் பொருள்:-உலகைப் படைத்தவன் பிரம்மன்; அவன் மகன் புலஸ்தியன்; அவன் மகன் விசிரவசு; அவன் மகன் ராவணன்; ஆயிரம் கிளைகளை உடைய சாம வேதத்தில் வல்லவன்.

பிரம்மாவை வேதியன், பிராமணன் என்றே இலக்கியங்கள் போற்றும்

அக்க குமாரன் வதைப் படலத்தில் கம்பன் சொல்லுவான்:

அயன் மகன் மகன் மகன் அடியில் வீழ்ந்தனள்

மயன்மகள் வயிறு அலைத்து  அலறி மாழ்கினாள் என்று. இதன் பொருளாவது– மயனுடைய மகளான மண்டோதரி தன் கணவனான ராவணனிடம் சென்று வயிற்றில் அடித்துக்கொண்டு அலறினாள்– சீதையை விட்டுவிடு என்று. ராவணனுக்குக் கம்பன் கொடுக்கும் அடை மொழி– பிரம்மனின் மகனான, புலஸ்தியன் மகனான, விசிரவசுவின் மகனான ராவணன்  என்பதாகும்.

அதே சுந்தர காண்டத்தில் பிணிவீட்டு படலத்தில்,

அந்தணன் உலகம் மூன்றும் ஆதியின் அறத்தின் ஆற்றல்

தந்தவன் அன்புக்கு ஆன்ற தவநெறி உணர்ந்த தக்கோய்” என்று சொல்லுவான்; உலகங்கள் மூன்றையும் ஆதிகாலத்தில் படைத்த அந்தணன் பிரம்மாவின் வழி வந்தவனே! என்று  ராவணனை போற்றும் வரிகள் இவை. ஆக கம்பராமாயணம் முழுதும் ராவணன் ஒரு பிராமணன் என்று அடிக் கோடிட்டுக் கொண்டே செல்வான் கம்பன். இதன் காரணமாகவே தேவாரத்துக்கு உரை எழுதிய பெரியாரும் பூணுல் அணிந்ததையும் வேத பாராயணம் செய்ததையும் அப்பர் பாட்டில் ராவணனுக்கு உரித்தானதாகச் சொல்கி றார். நாம் அதை ஏற்பதில் தயக்கம் ஏதுமில்லை.

 

சுபம் –

 

Leave a comment

1 Comment

  1. ராவணன் கயிலையைப் பெயர்த்தெடுக்க முயற்சி செய்தபோது, சிவபிரானால் இடர்ப்பட்டு, அவரை மறைபாடித் தொழுதான் என்பது தேவாரத்தில் பல இடங்களில் வருகிறது. சம்பந்தர் பாடல்களில் சில இடங்கள்:

    தீதிலா மலையெடுத்த அவ்வரக்கன்
    நீதியால் வேதகீதங்கள் பாட
    ஆதியானாகிய அண்ணல் எங்கள்
    மாதிதன் வள நகர் மாற்பேறே.

    கதிரொளிய நெடுமுடி பத்துடைய கடல்
    இலங்கையர் கோன் கண்ணும் வாயும்
    பிதிரொளிய கனல் பிறங்கப் பெருங்கயிலை
    மலையை நிலை பெயர்த்த ஞான்று
    மதிலளகைக்கு இறைமுரல மலரடி யொன்று
    ஊன்றி மறைபாட ஆங்கே
    முதிரொளிய சுடர் நெடுவாள் முன்னீந்தான்
    வாய்ந்த பதி முதுகுன்றமே.
    (முதல் திருமுறை)

    இன்றைய நாட்களில் தமிழ் இலக்கியம் பயில்பவர் அதிகமில்லை. பாடப்பகுதியில் வருவதை மட்டுமே படிக்கின்றனர். அரசினர் வகுத்த பாட திட்டத்தில் பழைய இலக்கியத்தின் பல பகுதிகள் வேண்டுமென்றே விடப்படுகின்றன.. பொருளும் தம் கற்பனைப் போக்கிலேயே தருகின்றனர். அதனால் நம் இளைஞர்கள் விஷயத்தை உள்ளபடி தெரிந்துகொள்வது அரிதாகிவிட்டது.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: