
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 12 December 2018
GMT Time uploaded in London – 10-53 am
Post No. 5771
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
தற்காலத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் பற்றி பத்திரிக்கைகளில் நிறைய செய்திகளைப் படிக்கிறோம். அவர்கள் நேரடியாகத் தாக்கினால் ‘வீரர்கள்’ என்று புகழ்வோர் சிலர். ஆனால் பொய் வேடம் கொண்டு நண்பன் போல, சீடன் போல நடித்துக் கொன்றால் அத்தகையவரை கோழை என்று உலகமே இகழும். நமது காலத்திலேயே காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியை விடுதலைப் புலி இயக்கத்தைச் சேர்ந்த பெண் வணங்குவது போல வணங்கி வெடிகுண்டு வைத்து இருபதுக்கும் மேலானவர்களைப் படுகொலை செய்த வன் செயலை உலகமே கண்டித்தது.
ஷேக்ஸ்பியர் நாடகத்தில் ஜூலியஸ் ஸீஸரைக் கொல்ல வந்த நண்பன் ப்ரூட்ட,,,, ஸைப் பார்த்து ‘யூ டூ ப்ரூட்டஸ்’ (et tu Brute? You too Brutus?) என்று சீஸர் சொன்ன வரிகளை நாம் அறிவோம்.
காளிதாசன் காலத்திலும் இது நடந்தது. கி.மு.73-ல் சுங்க வம்ஸத்தின் கடைசி அரசனான தேவ பூதியை ஒரு அடிமைப் பெண், ராணி போல வேடம் அணிந்து, படுக்கை அறைக்குள் நுழைந்து கொன்றாள். அமைச்சன் வாசுதேவனின் சதியின் பெயரில் அது நடந்தது. பஞ்ச தந்திரமும் மன்னர்களின் படுகொலை பற்றிப் பேசுகிறது.
வள்ளுவர், சேக்கிழார், திருத்தக்க தேவரும் அத்தகைய சம்பவங்களைப் பாடி வைத்திருப்பது, இந்தப் படுகொலைகள் தொன்றுதொட்டு நிகழ்கின்றன என்பதை அறிய முடிகிறது.
சேக்கிழார் பாடிய பெரிய புராணத்தில் வரும்
மெய்ப்பொருள் நாயனார் சரிதம் மிகவும் உருக்கமானது.

கதையின் சுருக்கம் இதுதான்
சேதிநாட்டில், திர்க்கோவலூரில்,மலையமான் குலத்தில் வந்த அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். எப்பொழுதும் திருநீறு பூசி சிவனைப் பூஜித்து, மெய்ப்பொருள் காண்பதையே லட்சியமாகக் கொண்டிருந்ததால், அவர் பெயரே மெய்ப் பொருள் நாயனார் என்று ஆயிற்று. அவரிடம் பலமுறை போரில் தோற்றுப்போன முத்தநாதன் என்பவன், நேர் வழியில் வெல்லுவது அரிது என்று கருதி, பொய்யான தவ வேடம் பூண்டு வந்தான். சிவ குரு என்று சொல்லி எல்லாக் காவல் நிலைகளையும் தாண்டி வந்தபோதும் மெய்ப் பொருள் நாயனாரின் முக்கியக் காவல் அதிகாரி தத்தன் மட்டும் சந்தேகக் கண்ணுடன் பார்த்தான். படுக்கை அறையில் மனைவியுடன் இருப்பதையும் மீறி மெய்ப்பொருள் நாயனாரின் பள்ளி அறையில் நுழைய மஹா ராணி திடுக்கிட்டு எழுந்தாள். மன்னரோ முத்த நாதன் சிவனியார் வேடத்தில் வந்ததால் வணங்கி என்ன காரணத்தினால் வந்தீர்? என வினவ புதிய ஆகம நூல் கிடைத்து இருப்பதாகவும் அதை உபதேசிக்க வந்து இருப்பதாகவும் சொன்னான்.
முத்தநாதன் ‘மனதிலே கரு(று)ப்பு வைத்து’
முத்த நாதனின் வேடத்தை சேக்கிழார் வருணிக்கும் அழகே அழகு. உடம்பெல்லாம் வெண்மை நிறம். ஆனால் மனம் மட்டும் கறுப்பாம்:
மெய்எலாம் நீறு பூசி
வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினில் படைக ரந்த
புத்தகக் கவளி ஏந்தி
மைபொதி விளக்கே என்ன
மனத்தின்உள் கறுப்பு வைத்துப்
பொய்த்தவ வேடம் கொண்டு
புகுந்தனன் முத்த நாதன்
மனைவி உடனிருந்தால் உபதேசிக்க முடியாது என்று சொல்லி அவளை அனுப்பச் செய்துவிட்டு, மன்னர் தனியாக வந்த போது புத்தக் கட்டை (ஏட்டுச் சுவடிக் கட்டு) அவிழ்ப்பது போல அவிழ்த்து ஏடுகளுக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி அவரைக் கொலை செய்தான்.
சப்தம் கேட்டு தத்தன் உள்ளே வந்து, முத்த நாதனைக் கையும் களவுமாகப் பிடித்த போதும் சிவ சின்னங்களை அணிந்திருந்த ஒரே காரனணத்துக்காக அவரை, ‘தத்தா இவர் நமர் (நம்ம ஆள்)’ என்று சொல்லி ஊர் எல்லை வரை பாதுகாப்போடு அழைத்துச் சென்று விடுக என்று கட்டளையும் இடுகிறார். தத்தனும் அப்படியேசெய்தான்.
பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே
தின்னவரும் புலிதனையும் -……………….
பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே
என்ற பாரதி பாட்டை நினைவுபடுத்துகிறது மெய்ப்பொருள் நாயனாரின் செயல்.
கைத்தலத்து இருந்த வஞ்சக்
கவளிகை மடிமேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று
புரிந்துஅவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான்முன்
நினைந்தஅப் பரிசே செய்ய
மெய்த்தவ வேட மேமெய்ப்
பொருள்எனத் தொழுது வென்றார்
நிறைத்தசெங் குருதி சோர
வீழ்கின்றார் நீண்ட கையால்
தறைப்படும் அளவில் தத்தா
நமர் எனத் தடுத்து வீழ்ந்தார்
xxx

வள்ளுவன் வாக்கு
திருவள்ளுவரும் சொல் வணக்கம், வில் வணக்கம் பற்றி எச்சரிக்கிறார். தொழுத கைக்குள்ளும் ஆயுதம் இருக்கும் என்றும் எச்சரிக்கிறார். அவருக்கும் தேவ பூதி, ஜூலியஸ் சீஸர் கதைகள் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு
சொல் வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமையான்— குறள் 827
பொருள்
வில் வளைவது தீமை வரப் போவதைக் காட்டும். அதே போல பகைவர்கள் வணக்கத்தோடு சொல்லும் சொல்லை நன்மை என்று கருதி விடக்கூடாது ((வணங்குவது போல வணங்கி காலை வாரி விடுவர்; புலி பதுங்குது பாய்வதற்காகத் தானே)- 827
தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து- 828
பொருள்
பகைவர் வணங்கும் கைகளுக்கு உள்ளும் கொலைக் கருவியை மறைத்து வைத்திருப்பர். அவர்கள் அழுது சொரியும் கண்ணீரும் அத்தகையதே-828
xxx

சீவக சிந்தாமணி
தொழுத்தங் கையினுள்ளும் துறுமுடி அகத்துமும் சோர
அழுத கண்ணீரினுள்ளும் அணிகலத்தகத்து மாய்ந்து
பழுத கண்ணரிந்து கொல்லும் படையுடன் ஒடுங்கும் பற்றா
தொழிகயார் கண்ணும் ஹேற்றம் தெளிகுற்றார் விளிகுற்றாரே – சீவக சிந்தாமணி 1891
tags–பயங்கரவாதிகள்,முத்தநாதன், மெய்ப்பொருள் நாயனார்
–subham–