
WRITTEN BY S NAGARAJAN
Post No.7776
Date uploaded in London – – 3 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
வள்ளல் சீதக்காதியை இழந்து வருந்திய புலவரின் பாடல்கள்!
ச.நாகராஜன்


தமிழ்ப் புலவர்களை ஆதரித்த மன்னர்களும், வள்ளல்களும், ஜமீந்தார்களும் தமிழ் நாட்டில் ஏராளமானோர் உண்டு.
இவர்களுள் குறிப்பிடத் தகுந்த ஒருவர் தமிழ் நாட்டில் வாழ்ந்த சீதக்காதி.. இஸ்லாம் சமயத்தைச் சேர்ந்த இவரது இயற் பெயர் ஷைகு அப்துல் காதிறு மரக்காயர் என்பதாகும். ஷெய்க் அப்துல் காதர் என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.
சமய வேறுபாடின்றி அனைவரையும் ஒரு சேர ஆதரித்த சீதக்காதி தமிழ் புலவர்கள் பால் பேரன்பும் பெரு மதிப்பும் கொண்டவர்.
இவரது காலம் பற்றிச் சரியாகச் சொல்ல முடியவில்லை என்றாலும் ஆய்வாளர்கள் இவரை பதினேழாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இருந்திருக்கலாம் என்கின்றனர். (1650-1720)
இவர் மறைந்ததைக் கேட்டு துக்கம் தாளாமல் அரற்றி அழுது புலம்பிய பாவலர் பலர்.
பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் சீதக்காதி மறைவு கேட்டு இரங்கிப் பாடிய பாடல் இது:
விண்ணுக்கு மண்ணுக்கும் பேராய் விளங்குதே வேந்த்ரனெனும்
கண்ணுக் கினிய துரை சீதக் காதி கமலநிகர்
தண்ணுக் கிசைந்த வதனசந்த் ரோதய சாமியிந்த
மண்ணுக்குள் ளேயொளித் தான்புல வோர் முகம் வாடியவே

பாடலின் பொருள் ;- விண்ணுக்கும் மண்ணுக்கும் பேராய் விளங்கும் – விண்ணுலகிலும் மண்ணுலகிலும் பிரபலமாய் விளங்கும்
தேவேந்த்ரன் எனும் – தேவேந்திரன் என்று கூறப்பட்ட
கண்ணுக்கு இனிய துரை சீதக்காதி – கண்ணுக்கு இனிய துரையாகிய சீதக்காதி
கமல நிகர் – தாமரை மலரை நிகர்த்த
தண்ணுக்கிசைந்த வதன சந்த்ரோதய சாமியானவன் – குளிர்ச்சி பொருந்திய சந்திரோதயம் போன்ற முகத்தை உடைய சாமி ஆனவன்
இந்த மண்ணுக்குள்ளே ஒளித்தான் – இந்த மண்ணுக்குள்ளே மறைந்தான்
புலவோர் – புலவர்களது
முகம் வாடியவே – முகங்கள் வாடிப் போயினவே
மறந்தாகி லுமரைக் காசுங் கொடாமட மாந்தர் மண்மேல்
இறந்தாவ தென்ன விருந்தாவ தென்ன விறந்து விண்போய்ச்
சிறந்தாலுங் காயற் றுறைசீதக் காதி திரும்பிவந்து
பிறந்தா லொழியப் புலவோர் தமக்குப் பிழைப்பில்லையே
பாடலின் பொருள் :-
மறந்தாகிலும் அரைக் காசு கொடா மட மாந்தர் – மறந்தும் கூட அரைக்காசு கூட ஒருவர்க்குக் கொடாத அறியாமையுள்ள மக்கள்
மண் மேல் இறந்து ஆவது என்ன – உலகில் இறந்தால் உண்டாகும் நஷ்டம் தான் என்ன
இருந்து ஆவது என்ன – அவர்கள் உயிர் வாழ்வதால் உண்டாகும் லாபம் தான் என்ன
இறந்து விண்போய் சிறந்து ஆளும் – இறந்து விண்ணகம் சென்று மேன்மையை அடைந்து அவ்வுலகையும் ஆளுகின்ற
காயல் துரை சீதக்காதி – காயல்பட்டணத்தைச் சேர்ந்த துரையாகிய சீதக்காதி
திரும்பி வந்து பிறந்தாலொழிய – திரும்பி வந்து பிறந்தால் அன்றி
புலவோர் தமக்கு பிழைப்பு இல்லையே – புலவர்களுக்கு பிழைப்பு இல்லை
சீதக்காதி மறைந்ததைக் கேட்டு பெரிதும் வருந்திய இன்னொரு புலவர் நமச்சிவாயப் புலவர்.
அவர் வருந்திப் பாடிய பாடல் இது:
பூமா திருந்தென் புவிமா திருந்தென் பூதலத்தில்
நாமா திருந்தென்ன நாமிருந் தென்னநன் நாவலற்குக்
கோமா னழகமர் மால்சீதக் காதி கொடை மிகுந்த
சீமா னிறந்திட்ட போதே புலமையும் செத்ததுவே
பாடலின் பொருள் :
பூமாது இருந்து என் – திருமகள் இருந்து என்ன பயன்
புவி மாது இருந்து என் – நிலமகள் இருந்தால் என்ன பயன்
பூதலத்தில் நாமாது இருந்தென்ன – உலகில் சரஸ்வதி இருந்தால் என்ன பயன்
நாம் இருந்து என்ன – நாமிருந்தால் தான் என்ன பயன்
நல் நாவலர்க்கு – நல்ல வித்வான்களுக்கு
கோமான் – தலைவன்
அழகு அமர் – அழகு அமைந்த
மால் – பெருமையை உடையவன்
சீதக்காதி – சீதக்காதி
கொடை மிகுந்த சீமான் – ஈகை மிகுந்த பெரும் செல்வன்
இறந்திட்ட போதே – அவன் இறந்த பொழுதே
புலமையும் செத்ததுவே – புலமையும் இறந்தது.
இன்னும் சீதக்காதியின் பெருமை பேசும் சோகம் மிகுந்த பாடல்கள் ஏராளம் உண்டு. வள்ளலின் பெருமையையும் புலவர்களின் பெருமையையும் உணர்த்தும் அந்தப் பாடல்கள் தமிழுக்குப் பெருமை சேர்ப்பவை.

Tags — சீதக்காதி, இஸ்லாம், நமச்சிவாயப் புலவர், படிக்காசுத் தம்பிரான், வள்ளல்
Seethakathi | Tamil and Vedastamilandvedas.com › tag › seethakathi
Translate this page2 Dec 2013 – சீதக்காதி, தனசெகரன் போட்டோ. Picture of Seethakkathi arch at Keelakkarai. Hits so far 210,636. Post No. 729 dated 2nd December 2013 by london swaminathan. There is a well known proverb in Tamil …
***