கோயில், கோவில் இரண்டில் எது சரி? (Post 8780)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8780

Date uploaded in London – – 6 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

QUESTION ASKED BY AMBI IYER (IN OUR COMMENT BOX.)

5-10-2020 ஞானமயம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியில்ஒளிபரப்பட்ட கேள்வி-பதில்

கோயில், கோவில் இரண்டில் எது சரி?

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.

கோயில், கோவில் இரண்டில் எது சரி என்பது கேள்வி!

இந்தக் கேள்விக்கான பதில் இரு வார்த்தைகளும் சரியே என்பது தான். கோயில் என்ற வார்த்தையை சங்க இலக்கியத்திலும் சைவத் திருமுறைகளிலும் வைணவ இலக்கியத்திலும் காண்கிறோம்.       கோயில் என்பது கோ, இல் ஆகிய  இரு வார்த்தைகளின் சேர்க்கை. கோயில் என்பதற்கு இறைவன் உறைந்திருக்கும் இடம் என்று பொருள். கோ என்பதற்கு மன்னன் என்ற பொருளும் உண்டு என்பதால் மன்னன் வாழும் இல்லம் அதாவது அரண்மனை என்ற பொருளும் உண்டு.   

அரண்மனை என்ற பொருளில் கலித்தொகையில் வரும் வரிகள் இவை:

பேயும்பேயும் துள்ளல் உறுமெனக்                                        கோயிலுட் கண்டார் நகாமை வேண்டுவல் (கலி 94- வரிகள் 38, 39)

புறநானூறில்  127ஆம் பாடலில் சாயின் றென ஆஅய் கோயில் என்ற வரியைக் காணலாம் (வரி 6)

அதே புறநானூறில் 378ஆம் பாடல் ஐந்தாம் வரி நற்றார்க் கள்ளின் சோழன் கோயில் என்று  கூறுகிறது. அதாவது சோழனது அரண்மனை என்று பொருள்.

வெண்கோயில் மாசூட்டும் என்று பட்டினப்பாலையும் (வரி 50) திருக்கிளர் கோயில் ஒருசிறைத் தங்கி என்று பொருநர் ஆற்றுப்படையும் (வரி 90) இதே அரண்மனை என்ற பொருளைத் தரும் வரிகளாகும்.

கோயில் என்பது இறைவன் உறையும் இடம் என்ற பொருளில் வரும் சங்க இலக்கியப் பாடல்களும் நிறைய உண்டு. புறநானூறு 241ஆம் பாடல் மூன்றாம் வரி வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலும் என்கிறது. இங்கு நெடியோன் கோயில் என்றால் இந்திரன் கோயில் என்று பொருள்படும்.

BALAJI TEMPLE, TIRUPATI

பட்டினப்பாலை 286வது வரி கோயிலொடு குடிநிறீஇ என்று சொல்லும் போது இது தெய்வம் உறையும் கோயிலைக் குறிப்பிடுகிறது.புகார் நகரத்தில் சிவன்கோயில், பலராமனுக்கும் கண்ணனுக்கும் கோயில் இருந்ததைச் சிலப்பதிகாரம் இந்திர விழவு ஊர் எடுத்த காதையில், ‘பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்’ என்றும் வால்வளை  மேனி வாலியோன் கோயிலும் என்றும் நீலமேனி நெடியோன் கோயிலும் என்றும் குறிப்பிடுகிறது.

கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் என்கிறது உலகநாத பண்டிதர் இயற்றிய உலக நீதி.

ஓகார ஈற்றைக் கொண்ட கோ என்னும் மொழியினை இல் என்னும் வருமொழியோடு சொல்லின் ஓகாரம் மிகாது இயல்பாய் முடியும் போது கோவில் என்று ஆகிறது.

இரு வார்த்தைகள் சேரும் போது இசைபட அவை சேர வேண்டும் என இலக்கண விதி கூறுகிறது. இசையின் திரிதல் நிலைஇய பண்பே என தொல்காப்பியம் கூறுகிறது. ஆகவே இசையொடு திரியும் போது வரும் கோவில் என்பதும் சரி தான்; கோயில் என்பதும் சரிதான்.

திருக்கோயில் என்றாலேயே அது சிதம்பரத்தைத் தான் குறிக்கும் என்பது வழக்கு. கோயில் என்று முடியும் தேவாரத் தலங்கள் பல உண்டு. அம்பர்ப் பெருந்திருக்கோயில், கண்ணார்கோயில், தில்லைக் கோயில், நன்னிலத்துப் பெருங்கோயில், மீயச்சூர் இளங்கோயில், வைகல் மாடக் கோயில் என்று இப்படிப் பல கோயிலில் முடியும் தலங்கள் உண்டு.

அதே சமயம் நாகர்கோவில், சங்கரன்கோவில், அழகர் கோவில் என்பதையும் வழக்கில் கூறப்படும் சொற்களாக நாம் கொண்டுள்ளோம்.ஆகவே இறைவன் உறையும் இடத்தை கோயில் என்றும் சொல்லலாம், கோவில் என்றும் சொல்லலாம்.

தொன்றுதொட்டு தமிழகத்தில் அனைவராலும் கூறப்படும் பழமொழிகளில் கோயிலும் உண்டு; கோவிலும் உண்டு. தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. படிக்கிறது திருவாய்மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்; ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி இப்படி ஏராளமான பழமொழிகளில் இரு சொற்களையும் காணலாம்.

இரண்டிற்கும் பொருள் ஒன்றே. வண்ணத்தை colour color என்று இருவிதமாக ஸ்பெல்லிங் குறிப்பிடுவது போல எல்லா  மொழிகளிலும் காலத்திற்கேற்ப மாற்றங்கள் உண்டு. கோவில், கோயில் இரண்டும் சரியே, ஒன்றே தான் என்று தெளிந்து கொள்ளலாம்!

நன்றி கூறி விடை பெறுவது சந்தானம் நாகராஜன்

TAGS- கோயில், கோவில்

**

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: