

இரும்பு போல உடல் இருக்க இரும்புச் சத்து தேவை -1 (Post 9746)
Post No. 9746
Date uploaded in London – –17 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
அலுமினியம் முதல் குளோரின் வரை இதுவரை 33 மூலகங்கள்/தனிமங்கள் (elements) பற்றி சுவையான கதைகளைக் கண்டோம். இன்று இரும்பின் (Iron) கதையைக் காண்போம்.
நம் அனைவருக்கும் உடம்பில் இரும்புச் சத்து அவசியம்; குறிப்பாக மேலை நாடுகளில் கர்ப்பிணிகளுக்கு இரும்புச் சத்து மாத்திரை இலவசமாகக் கொடுக்கின்றனர். முதலில் இரும்பு (Iron) பற்றி ஒரு சுவையான விஷயத்தைக் காண்போம்.
இந்த பூமியில் 70 சதவிகிதம் பகுதி கடல் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்தக் கடல் ஒரு ‘காலி டப்பா’ (empty) என்பது பலருக்கும் தெரிந்திராது. கடல் முழுதும் மீன்களும் திமிங்கிலங்களும் கடல் பாசியும் நிறைந்திருப்பதாக நாம் நினைக்கிறோம். ஆனால் 80 சதவிகித கடல் பகுதி உயிரினம் வாழாத இருண்ட பகுதியாகும். சூரிய ஒளி, சில மீட்டர் ஆழத்துக்கே பாயும். அதற்கப்பாலுள்ள இருண்ட பகுதி கிட்டத்தட்ட மீன்களோ கடல் தாவரங்களோ இல்லாத பகுதியே!
விஞ்ஞானிகளுக்கு திடீரென்று ஒரு யோஜனை பிறந்தது. இந்த 80 சதவீதப் பகுதியில் மீன்களை வளர்த்தால் உலகில் உணவுப் பிரச்சினையைத் தீர்க்கலாமே என்று.
முதலில், கடலின் மேல்பகுதி நீர் மட்டத்தை ஆராய்ந்தார்கள். அங்கு இரும்புச் சத்து குறைவான இடங்களில் மீன்கள் இல்லாததைக் கண்டு வியந்தார்கள். அந்த இடங்களில் பிளாக்ட்டான் (Planktons) என்னும் நுண்ணுயிர்கள் வசிக்கவில்லை. இதற்கு இரும்புச் சத்து இல்லாததே காரணம் என்று தெரிந்தது. நம் கண்ணுக்குத் தெரியாத பிளான்க்ட்டான்(Plaktons) களை சாப்பிட்டுத்தான் சின்ன மீன் முதல் பெரிய திமிங்கிலம் வரை வளருகின்றன. உடனே கலிபோர்னியாவில் (அமெரிக்கா ) உள்ள மாஸ் லாண்டிங் மரைன் சோதனைச்சாலையைச்(Moss Landing Marine Laboratories) சேர்ந்த ஜான் மார்ட்டின் ஒரு யோசனையை முன் வைத்தார். கடலிலும் உரம் தூவுவோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்றார் .
பசிபிக் பெருங்கடலில் காலபாகஸ் (Galapagos Islands) என்ற புகழ் பெற்ற தீவு உள்ளது. அங்குதான் ராட்சஸ ஆமைகள் வசிக்கின்றன. அந்தத் தீவுக்கு மேற்கே 60 சதுர கிலோமீட்டர் பரப்பில் உரம் போட்டார்கள். அதாவது இரும்பு சல்பேட் கரைசலை (Ferrous sulfate) பரப்பினார்கள். இது 1980-ம் ஆண்டுகளில் நடந்தது. ஒரே வாரத்தில் அற்புதம் நிகழ்ந்தது. கடல் முழுதும் பிளாங்க்ட்டான் உயிர் இனங்களுடன் பச்சைப் பசேல் என்று காட்சி தந்தது. . அதன் மூலம் மீன்கள் பெருகிற்று. உயிர் வாழும் பிராணிகளுக்கு இரும்பு எவ்வளவு அவசியம் என்பதை இது காட்டியது. இரும்பு சல்பேட்- Fபெர்ரஸ் சல்பேட் – தயாரிப்பது மலிவான, சுலபமான பணி . துருப்பிடித்த இரும்பில் கந்தக அமிலத்தை ஊற்றினால் ‘பெர்ரஸ் சல்பேட்’ கிடைத்துவிடும்.
கட்டிடம் கட்ட அடிப்படை செங்கல்; கடல் உயிரினங்களின் அடிப்படை உணவு பிளாங்க்ட்டான்.
***
ஒவ்வொரு மனிதனுக்கும் நாள் ஒன்றுக்கு 7 மில்லிகிராம் இரும்புச் சத்து தேவை. பெண்களுக்கு 11 மில்லிகிராம் தேவை. நாம் சாப்பிடும் சாதாரண உணவில் இரும்புச் சத்து இருப்பதால் அதிகம் கவலைப்படத் தேவை இல்லை. கீழ்கண்ட உணவுகளில் இரும்புச் சத்து அதிகம் உளது:–
முட்டை, மாட்டு மாமிசம், பிராணிகளின் ஈரல் (லிவர்).
காய்கறி உணவு மட்டும் சாப்பிடுவோருக்கு ரொட்டி, கருவேப்பிலை, சுல்தானா பழம் , காலையில் சாப்பிடும் (Breakfast Cereals) தானிய உணவு, பேக்ட் பீன்ஸ்(Baked Beans) , பீநட் பட்டர் (Peanut Butter) , சோயா பீன்ஸ், பட்டாணி, பீட்ருட், பருப்பு வகைகள்
மேலை நாட்டுக்காரர்களின் உணவில் இரும்புச் சத்து அதிகமாக இருக்கிறது அவர்கள் மாமிசம் சாப்பிடாத நாள் எதுவுவும் இல்லை. உலகில் 50 கோடி மக்களுக்கு இரும்புச் சத்து உணவு கிடைப்பதில்லை .
ரத்த பரிசோதனையில் இரும்புச் சத்து குறைவாக இருப்பது தெரிந்தால் டாக்டர்களே இரும்பு மாத்திரை (Iron Tablets) எழுதிக் கொடுப்பார்கள். இதைச் சாப்பிடுகையில் மலத்தின் நிறம் கருப்பாக இருக்கும்; பயப்பட வேண்டியது இல்லை. ஆனால் இரும்பு மாத்திரைகள் மலச்சிக்கலை உண்டாக்குவதால் அதை ஈடு கட்ட நிறைய தண்ணீர் அருந்தல், பழங்கள் சாப்பிடுதல் தேவைப்படும்.
இரும்பின் கதையைத் தொடர்ந்து காண்போம்.
இரும்புச் சத்து குறைந்தால் ரத்த சோகை (anaemic condition) என்பர். அதிகம் உடலில் போனாலும் ஆபத்து. குறிப்பாக இரும்புத் தூசி பறக்கும் ஆலைகளில் பணிபுரிவோருக்கு வெல்டர்ஸ் லங் (Welders Lung) என்னும் நுரையீரல் நோய் வரும்.
நம் உடலில் உள்ள ரத்தத்துக்கு சிவப்பு நிறம் அளிக்கும் பொருள் ஹீமோக்ளோபின் (Haemoglobin) . அதற்கு இரும்புச் சத்து மிகவும் தேவை.
ஆங்கிலத்தில் இரும்பை ‘அயன்’ (IRON) என்போம். லத்தீன் மொழியில் பெர்ரம் (FERRUM) என்பர். இதைத்தான் ரசாயன பொருட்களின் பெயர்களில் பயன்படுத்துவர்.
கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் கருவுக்கு 700 மில்லிகிராம் இரும்புச் சத்து தேவைப்படுவதால் அவர்களுக்கு இரும்பு மாத்திரைகள் (Iron Tablets) கொடுப்பது வழக்கம்.அதிகமான இரும்புச் சத்து கல்லீரலில் சேமிக்கப்படுகிறது.
அண்மைக்கால ஆராய்ச்சியில் மூளையின் சில பகுதிகளில் அதிகம் இரும்புச் சத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மன வளர்ச்சி குறைந்தோர், மந்த புத்தி உடையோருக்கு இரும்பு இல்லாததும் ஒரு காரணம் என்பது அப்போது தெரிந்தது .
****
உடலுக்குள் நடக்கும் ஒரு போர்/ யுத்தம்
நமது உடலுக்குள் ட்ரான்ஸ்பெரின் (Transferrin) என்ற புரத்தச் சத்து ஒன்று இருக்கிறது. இது இரும்புச்சத்தைக் கட்டிப் பிணைப்பதோடு செல்களுக்கு இடையே பரிமாறவும் உதவிசெய்கிறது . இது இரும்பைப் பயன்படுத்துகிறது. உடலில் ஒரு பாக்டிரியா கிருமி நுழைந்து தாக்கத் தொடங்கினால் , உடனே இந்த ட்ரான்ஸ் பெரின் ரத்தத்தில் உள்ள இரும்பை எல்லாம் எடுத்து ‘ஒளித்துவைத்து’ விடுகிறது. அதாவது தனக்குள் வைத்துக் கொண்டுவிடும். அப்போது இரும்புச் சத்துக்கிடைக்காத பாக்டீரியா வளர முடியாது. சுருங்கச் சொல்ல வேண்டுமானால் ஒரு ஆன்டிபயாடிக் (Anti biotic) மாத்திரை போல செயல்பட்டு நோய்க்கிருமிகளை ஒழிக்கிறது
ஒரு சுவையான இரும்புக் கதையையைக் கேளுங்கள்…………….
தொடரும் ——–
tags- இரும்பு , இரும்புச் சத்து ,iron

