வள்ளிமலை ஶ்ரீசச்சிதாநந்த ஸ்வாமிகள்-Part 2 (Post No.10,532)

WRITTEN BY B. KANNAN, DELHI

Post No. 10,532

Date uploaded in London – –    6 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

            Written By  B. Kannan, New Delhi

“ஆத்மா த்வம் கிரிஜா மதி:” என்ற சுலோகத்தை விளக்குகிறார். ” நம் உடலே ஐயனும் அம்மையும் உறையும் திருக்கோயில். நாம் நுகர்வது அனைத்தும் அவர்களுக்குச் செய்யும் வழிபாடுகளே. நம் உறக்கமே சமாதிநிலை வழிபாடு. நடந்து செல்வதெல்லாம் அவர்களை வலம்வருதல் போன்றதே.பேசும் சொற்கள் எல்லாம் அவர்களை ஏத்தும் தோத்திரங்களே. நம் செயல்கள் அனைத்தும் ஆராதனைக்கு ஒப்பாகும். இவையெல் லாம் நம்மைத் தவநிலைக்கு உயர்த்துகிறது என அறிந்துகொள்,”  என்றவர் மேலும் தொடர்ந்துக் கூறலானார்,

” இனி நீ வெளிப்படையாகப் பூஜை செய்தால் மட்டும் போதாது. உன் எண்ணங்களும், செயல்களும் உனக்காக எனக் கருதாமல், அனைத்தும் தெய்வத்தின் பொருட்டே என்ற மனநிலையை அடைந்துவிட்டால் ‘நான்-பிறர்’ என்ற பேதம் பாராட்டாத உயர்ப் பதவியை அடைவாய். ஆமாம்,இதே பொருள் கொண்ட பாடல் ஏதேனும் திருப்புகழில் உள்ளதோ?” என்று ஏதும் தெரியாதது போல் மகான் வினவ, ‘மைசூரு சாமி’, வேகமாகத் தலையை ஆட்டி “இருக்கிறது,சுவாமி! அது,’ஆசைகூர் பத்த னேன்மனோ பத்ம மானபூ வைத்து….(1212) என்ற பாடல் தான், என்ன ஒற்றுமை!” என வியந்தார்.

    (உன் மீது ஆசை மிகுந்த பக்தியை உடைய நான்,மனம் என்ற தாமரை மலரை வைத்து,இடையில் அன்பு எனும் நாரைக் கொண்டு,நாக்கு என்ற இடத்திலே அழகான ஒரு மாலையைத் தொடுத்து,அந்த மாலையின் மீது ஒப்பற்ற ஞானம்  என்ற நறுமணத்தைத் தடவி, அது மேலும் ஒளியுடன் விளங்க அதைச் சுற்றிக் குற்றமற்ற ஒரு அறிவு எனும் வண்டு மொய்த்துப் பாடவும்,மாத்ருகா மந்திர மாலையான  இப் பூமாலையை அழகியப் பவளம் போல் சிவந்த உன் பாதங்களில் அணிவிக்கும் பாக்கியத்தை எப்போது பெறுவேனோ?) -சுப்ரமண்ய பராக்ரமம் என்ற நூலில் இடம் பெறும் மாத்ருகா மந்திரம் முருகன் ‘அ’ முதல் ‘க்ஷ’ முடிய உள்ள 51 அக்ஷர உருவில் இருப்பதை விளக்குகிறது.

மகான் மிகவும் மனம் மகிழ்ந்து,”அப்பனே! திருப்புகழே மகா மந்திரம்.அதுவே உனக்குப் போதுமானது,வேறு நூல்கள் படிக்க வேண்டாம். கந்தபுராணத்தில் கூறப்பட்டிருக்கும் முருகன்-வள்ளி வசிக்குமிடமான வள்ளிமலைக்குச் சென்று உன் தவ வாழ்வை மேற்கொள்” என்று ஆணையிட்டார்.

ஶ்ரீசேஷாத்திரி மகானே இனி உன் குரு என்று சொல்லாமல் சொல்லத்தான் தன்னைப் போய்விடு என்று ரமணர் கூறியதன் பொருள் இப்போது புரிந்தது சச்சிதானந்தருக்கு.

குருநாதரின் சொற்படி நடக்கலானார். வள்ளிமலை, முருகனின் இச்சாசக்தியும். கானசுந்தரியுமான வேடர்குல நம்பிராஜனின் மகளாகப் பிறந்து, தினைப்புனம் காத்து,தவமியற்றி முருகனை மணந்த வள்ளியின் பீடம். காட்பாடி-அரக்கோணம் வழித்தடத்தில் திருவலம் ரயில்நிலையத்துக்கு வடக்கே 15கி.மீ. தொலைவில் உள்ள வள்ளிமலைக்கு 1916-ம் ஆண்டு கோயில் கும்பாபிஷேகம் நடந்த சமயம் வந்தவர்அங்கு பர்வதராஜன்-கன்னிக் குன்றுகளுக்கிடையே ஆசிரமம் அமைத்துக் கொண்டார். அங்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் திருப்புகழின் மேன்மையை விளக்கி,பாடல்களை ராகம்-தாளங்களுடன் கற்றுக் கொடுத்து வந்தார். நாளடைவில் அவரது மகிமையும், புகழும் நாடெங்கும் பரவியது. திருப்புகழ் சுவாமிகள் என்ற புதுப்பெயரும் அவருடன் ஒற்றிக் கொண்டு விட்டது.

சுவாமிகள் தானே கைப்படத் தயாரித்த நான்கு தந்திகளுடைய அரிய இசைக் கருவி ஜதி வாத்தியமாகும். இதை ஒரு பெரிய கோல் மற்றும் சிறிய கோல் ஒன்றால் மீட்டி , மனமுருகத் திருப்புகழ் பஜனை இவர் செய்வது கேட்போர் மனதை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்திவிடும். அப்பொழுதுதான் வள்ளி-கந்தன் இருவரையும் நேரில் சந்திக்கும் பாக்கியத்தை அவர் பெற்றார். வள்ளி மீது அளவுகடந்தப் பக்தி கொண்டவர், அவளைத் திருப்புகழ்ப் பாடல் மூலமே புகழ்ந்துப் பாட வேண்டும் எனவும்,அப்போதுதான் அவள் நாம் வைக்கும் கோரிக் கைகளை முருகனிடம் எடுத்துச் சொல்வாள் என்றும் கூறுவார்.

ஒருசமயம், திருப்புகழ் பாடியபடி வள்ளிமலையில் சென்றபோது அவர்முன்னால் ஓர் சிறுமி திடீரென்றுத் தோன்றி,அவரது பாட்டையே பொங்கிப் பொங்கிச் சிரித்து மகிழ்ச்சியுடன் பாடியவாறு மறைந்து விட்டாள்.அதுவுமில்லாமல் அவர் கையிலிருந்த வாத்தியத்தைக் கண்களுக்குப் புலப்படாமல் எடுத்து மீட்டி,. பாட்டிசைத்து மகிழ்ந்தாளாம். யோகிகள் உணரும் சங்கோதை நாதம் மூலம் (கிண்கிணி,சிலம்பு,மணி,சங்கம்,யாழ்,தாளம்,வேய்ங்குழல்,பேரி,மத்தளம்,முகில்)அச் சிறுமி வள்ளிதான் என்று புலப்பட்டு விட அவர் பரவசமடைந்தார். அதனாலேயே வள்ளியை அன்றிலிருந்து ‘ பொங்கி ‘ என்றே அழைக்கலா னார்.அவள் வாசித்த வாத்தியத்தைப் ‘பொங்கி வாத்தியம்’ எனப் பெயரிட்டார்.ன (பொங்கி=உற்சாகம்/செல்வம் பெருகுவது).

முருகன் அவருக்கு நேரிடையாக வேதியர் உருவிலும்,இஸ்லாமியப் பெரியவரா கவும்,அன்னதானமிடும் சாதாரண அடியாராகவும் காட்சியளித்து அருள் பாலித்த துண்டு. வள்ளி அவரிடம் பல சித்து விளையாடல்களைக் காட்டியுள்ளாள்.

அவரிடம் உபதேசம் பெற்றுச் சென்றவர்கள் வாழ்வில் அதிசயங்கள் பல நடந்தேறியுள்ளன. அவர்களுள் ஒருவரான ஸ்வாமி அன்வானந்தாவின் கனவில்தோன்றிய வள்ளி,தனக்கு ஒரு கோயில் எழுப்ப ஆணையிட்டாள். அதற்குத் தகுந்தாற் போல் யாரோ ஒரு வியாபாரி அவரிடம் சிலை ஒன்றைக் கொடுத்து விட்டுச் செல்ல அதுவே ஓர் அரிய வைஷ்ணவி சிலை என்பது உறுதியாயிற்று.

சென்னை அம்பத்தூர் அருகில் திருமுல்லைவாயில் தலத்தில் அம்மனைப் பிரதிஷ்டை செய்தார்.  12-1-1950-அன்று ஶ்ரீசச்சிதானந்தர் ‘திவின்திர கன்பு வகாப்பு’ என்ற முறையில் அமைந்திருந்தத் திருப்புகழைப் பாடியபடியே அங்கி ருந்த வைஷ்ணவிதேவி சிலைக்குள் தன் சக்தி முழுவதையும் மாற்றினார். 1954ல் ஆலயம் எழுப்பப்பட்டது. பக்தர்களுக்கு அந்த அம்மன் மூலம் திருப்புகழ்ச் சாமியின் அருளும்,ஆசியும் கிடைத்து வருகின்றது.

திருப்புகழைப் பரப்புவதற்கு அவர் கையாண்ட மற்றொரு வழி காலத்தின் கட்டா யமாகக் கருதப்பட்டது. ஆங்கிலேயர்கள் ஆண்ட அந்நாளில்,புதுவருட நாளன்று மேலதிகாரிகளான துரைமார்களைச் சந்தித்து வாழ்த்துக் கூறி,பரிசுப் பொருட் களை அளிப்பது வழக்கம்.இதைக் கண்டு ஆறாத் துயரமடைந்த சுவாமிகள், தணிகைத் துரையைப் போற்றி வழிபடாமல் இருக்கிறார்களே என்று அங்க லாய்ந்தார்.அதற்கு மாற்றாக ,நாட்டுப் பற்றுடன், ஆன்மிகத்திலும் ஈடுபாடு கொள்ளச் செய்யப் படி உற்சவ நிகழ்ச்சியை டிசம்பர் 31,1917, ஜனவரி 1, 1918 முதல் நடத்தலானார். படியேறி வேலனைத் தரிசிக்க மொத்தம் 365  படிக் கட் டுகள் உள்ளன. அவை வருடத்தின் ஒவ்வொரு நாளையும் குறிப்பதாக அமைந் துள்ளன. அன்று பல பஜனைக் குழுக்கள் ஒன்றுகூடி மலை மேல் ஆலயத்தில் மாலைத் தீபம் ஏற்றிய வுடன்,அடிவாரத்தில் முதல் படியிலிருந்து ஒவ்வொரு படிக்கும் ஒரு திருப்புகழ்ப் பாடல் பாடி,நிவேதனம் செய்து ஆரத்தி எடுப்பார் கள்.’தணிகை மலை முருகனுக்கு அரோகரா’ என்ற அடியார்களின் பக்தி கோஷம் விண்ணைப் பிளக்கும்!

சுவாமிகளுக்குப் பின்னர்,’திருப்புகழ் மணி’ டாக்டர் கிருஷ்ணஸ்வாமி மற்றும் மௌனகுரு சுவாமிகளால் இப்படித் திருவிழா

பிரபலமானது. ‘அடியார் திருக் கூட்ட இறைப் பணிமன்றம்’ என்ற அமைப்பின் மூலம் இவ் விழா தடையின்றி இன்றளவும் நடைப் பெற்று வருகிறது.365 படிகளையும் ஆராதித்துப் படியேறி னால் புத்தாண்டு முழுவதும் நற்பலன்கள் விளையும் என்பது பக்தர்களின் அசையாத நம்பிக்கை!

to be continued…………………………..

tags- வள்ளிமலை சுவாமிகள்,part 2

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: