
Post No. 11,865
Date uploaded in London – – 3 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கிறிஸ்தவ நாடுகளில் பேட்டைக்குப் பேட்டை பெரிய சர்ச் இருக்கும்; அவரவர் பேட்டையில் உள்ள சர்ச்சுக்குச் சென்று வழிபாட்டில் கலந்து கொண்டு காணிக்கை செலுத்துவர். அந்தந்த Parish Priest பாரிஷ் குருவுக்கு வரும்படி கிடைத்துவிடும். இன்னும் சில நாடுகளில் வரிப் பிடித்தம் போல சம்பளத்திலேயே சர்ச்சுக்குப் பணம் போய்விடும்.

இந்துக்களும் இதே முறையை வேறு வழியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பின்பற்றி வருகின்றனர் . பெரிய மன்னர்கள் கோவில்களைக் கட்டி கொஞ்சம் மானியமும் விட்டுச் சென்றனர். ஆனால் அதை சேதமடையாமல் பாதுகாக்கும் பணியை ஊர் மக்களிடம் விட்டுச் சென்றனர். அந்தந்த ஊர் மக்கள், உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் முதலில் பணம் கொடுக்க வேண்டியது குல தெய்வத்துக்குத்தான் .
பல குடும்பங்களில் பல தடைகளும், குறைகளும், சண்டை சச்சரவுகளும் முளைப்பதற்குக் காரணம் குல தெய்வத்தை மறப்பதுதான்.
இது எனது கற்பனை அல்ல. நான் தரிசித்த சுவாமிஜிக்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். நல்ல ஜோதிடர்கள் ஒருவருடைய ஜாதகத்தைப் பார்த்தவுடனேயே அவர்களுக்கு அருள் தரும் குல தெய்வத்தின் பெயரைச் சொல்லிவிடுவார்கள் .
கோமதி என்றால் சங்கரன் கோவில்,சுவாமிநாதன் என்றால் சுவாமி மலை , வைத்திய நாதன் என்றால் வைத்தீஸ்வரன் கோவில், அரங்கநாதன் என்றால் ஸ்ரீரங்கம் என்று குத்துமதிப்பாகச் சொல்லுவது அல்ல. அதை யாருமே செய்யமுடியும்.. ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளே அவரவர் தெய்வங்களைக் காட்டிவிடும்.
என்னுடைய அண்ணன் சீனிவாசன், லண்டனுக்கு (August 1990) வந்தபோது நான் வேலை பார்த்த பிபிசி அலுவலத்துக்கு அழைத்துச் சென்றேன். ஒலி பரப்பு முடிந்தவுடன் ஒவ்வொருவருக்காக ஜோதிடம் சொன்னார். பேஸ் ரீடிங் FACE READING முறையில்; ஆளையோ போட்டோவையோ பார்த்துச் சொல்லிவிடுவார் . ஒரு கிறிஸ்தவ ஒலி பரப்பாளரைப்பார்த்து உங்களுக்கு முருகன் குல தெய்வம் என்றார் . அவருக்குக்ச் சிரிப்பு தாங்கவில்லை. மிகவும் மரியாதையாக, என்ன ஸார் நானோ கிறிஸ்தவன்; சரியாக இல்லையே எனறார் . பின்னர் ஒரு பெரிய தீ விபத்தில் நீங்கள் சிக்குவீர்கள் என்றார் என்னுடைய அண்ணன் ; அவருக்கு ஆச்சரியம் .
சார் , நான் நைஜீரியாவில் வேலை பார்த்த காலத்தில் பெரிய தீ விபத்திலிருந்து தப்பித்ததே கடவுள் புண்ணியம் ஸார் , என்று சொல்லி சட்டையின் கைப்பகுதியை உயர்த்திக்காட்டினார் . கை வெந்துபோன வெள்ளைத் தழும்புகள் இருந்தன ஆனால் முன்னரே நடந்ததை என் அண்ணன் நடக்கப்போவதாகக் கண்டார். அது ஒன்றே பிழை.
சில மாதங்களுக்குப் பின்னர் இலங்கை சென்றுவிட்டுத் திரும்பி வந்தார் . சுவாமிநாதன், உங்கள் அண்ணன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை . யாழ்ப்பாணத்தில் அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு ஊர் முருகன் கோவில் பெயரைச் சொல்லி அங்கே போக வேண்டும் என்றார் . என்ன, அம்மா, நாம் கிறிஸ்தவர் ஆயிற்றே முருகன் எதற்கு என்று கேட்டதற்கு, குடும்பம் கிறிஸ்தவ மதத்தைத் தழுவுவதற்கு முன்னர் அந்தக் கடவுள்தான் குல தெய்வம் என்று குறிப்பிட்டாராம் . இதை அவரே என்னிடம் சொன்னவுடன் , சென்னைக்குச் சென்ற என் அண்ணனுக்கு போன் செய்து சொன்னேன் .
அதே விஜயத்தின்போது, என் பரம எதிரி யைப் பார்த்து உங்களை யாராலும் அசைக்க முடியாது. முருகன் அருள் உண்டு என்று சொன்னார். வெளியே வந்தவுடன் நான் என்னுடைய அண்ணனைக் கோபித்துக் கொண்டேன் ; பரம எதிரி என்று தெரிந்தும் இப்படி ஆசீர்வாதம் கொடுத்துவிட்டாயே என்றேன்.
நானாக ஆசீர்வாதம் செய்யவில்லை. அவர் என் முன்னே நின்றவுடன் அவருடைய அம்மா சொன்ன கந்த சஷ்டிக் கவசம்தான் தெரிகிறது என்றார்
ஆகவே உங்கள் குழந்தைகளுக்காக நீங்கள் செய்யும் பிரார்த்தனைகளும் வீண் போகாது. கவசம் போல அவர்களை சுற்றி நின்று காக்கும்.
எங்கிருந்தாலும் குல தெய்வக் கோவிலுக்கு வந்து தரிசியுங்கள் ; குல வழ க்கப்படி பொங்கல் வையங்கள்; முடி இறக்குங்கள் ; ஆடு வேண்டுமானாலும் வெட்டுங்கள்; அந்தக் கோவில் சீரும்சிறப்புடனும் விளங்க உதவுங்கள்..

Xxx
1400 ஆண்டுகளுக்கு முன்னர் அப்பர் பெருமான் பாடிய தேவாரப்பாடல் இதோ:
பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
பொருள் :
ஆயிரம் நாமங்கள் பாடி தேவர்களாளல் போற்றப்பட்ட பெருமானை,
கிடைக்கப்பெறாத செல்வமாகிய வீடு பேறு இன்பத்தை தனது அடியவர்களுக்கு கிடைக்க செய்பவனை,
தீராத நோய்களையும் தீர்ப்பவனை, திரிபுரங்கள் திக்கெட்டும் எரிகையில் போரிட்டு அதனை வென்றவனை,
வைத்தீஸ்வரனை இத்தனை நாள் போற்றிப் பாடாமல் இருந்து விட்டேனே என்று புலம்புகிறார் அப்பர்.
(புள்ளிருக்கு வேளூரான்- வைத்தீஸ்வரன் கோவில் மூலவர் ; தாயார் : தையல் நாயகி)
எங்கள் குல தெய்வமான பாலாம்பிகா சமேத வைத்யநாத சுவாமி எழுந்தருளிய வைதீஸ்வரன் கோயில் திருத்தலம் பற்றி இதே பிளாக்கில் பல முறை எழுதிவிட்டேன். மூன்று மாதங்களுக்கு முன்னர் வெளியான கட்டுரை இணைப்பையும் கீழே கொடுத்துள்ளேன் .
சென்ற 2023 பிப்ரவரி 12, 13ம் தேதிகளில் வைத்தீஸ்வரன் கோவிலில் தங்கி பேரக்குழந்தைக்கு முடியெடுத்தோம் . எங்கள் குடும்ப முதல் மொட்டை வைத்திய நாதனுக்கு; இரண்டாம் மொட்டை திருப்பதி வெங்கடாசலபதிக்கு ..ஹரியும் சிவனும் ஒன்னு ; அறியாதவன் வாயில மண்ணு!
எங்கே உள்ளது?
தமிழ் நாட்டில் மாயூரம் அருகில் உள்ளது.
என்ன கோவில் ?
சிவன் கோவில்
வேறு என்ன சிறப்பு?
அன்னை பாலாம்பிகா சந்நிதியைத் தவிர, செல்வ முத்து குமார சுவாமி என்னும் முருகன் சந்நிதி, அங்காரகன் சந்நிதி, தன்வந்திரி சந்நிதி ஆகியன முக்கியமானவை .
நாங்கள் ஒவ்வொருமுறை இந்தியாவுக்குச் செல்லும்போதும், தமிழ்நாட்டில் நுழைந்தால் வைத்யநாதன் தரிசனம் இல்லாமல் வருவதில்லை ; காரணம் எங்கள் குல தெய்வம்!!!
கணபதி அர்ச்சனை துவங்கி அருகிலுள்ள அங்காரகன் (செவ்வாய் கிரகம்), பின்னர் வைத்தியநாதன், பாலாம்பிகா, செல்வமுத்துகுமார சாமி, தன்வந்திரி முடிய ஆறு அர்ச்சனைகள் செய்வோம்.
முன்னதாக, புகழ்பெற்ற குளத்தில், வழுக்கி விழாமல், மிக ஜாக்கிரதையாக கால் கழுவி , தலையில் நீரைத் தெளித்துக்கொண்டு பின்னர் கோவில் வழிபாட்டுக்கு வருவோம்
அதற்கு சற்று முன்னர் உப்பு, மிளகு வாங்கி காணிக்கையாக செலுத்துவோம். ஒரு சாந்து உருண்டை பிரசாதம் கொடுப்பார்கள். அது நோயை எல்லாம் தீர்க்கும்.
நேர்த்திக் கடன் உள்ளவர்கள் வெள்ளியில் ஆன உடல் உறுப்புகளை காணிக்கையாக உண்டியலில் செலுத்துவார்கள். உண்டியலில் பணம் போடுவது அவரவர் நம்பிக்கையின் அளவைப் பொறுத்தது ; அதே போலத்தான் அய்யர் தட்டில் தட்சிணை போடுவதும்.

வாராத செல்வத்தைப் பெற, தீராத நோயைத் …
tamilandvedas.com
https://tamilandvedas.com › வார…
1 Jan 2023 — … பேரைக் கேட்டாலோ தீராத நோய் எல்லாம் தீர்ந்து விடும்; வாராத செல்வம் எல்லாம் …
—subham—
Tags-குல தெய்வம், வழிபாடு, அவசியம், வைத்தீஸ்வரன் கோயில்