
Post No. 12,091
Date uploaded in London – – 6 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
வழக்கமான சுவையான உணவை உண்ணாமல் இறைவனின் நாமத்தைச் சொல்லி, புண்ணியம் சம்பாதிக்கும் காலம் நோன்பு அல்லது விரதம் எனப்படும் . இந்துக்கள் குறைந்தது மாதத்துக்கு இரண்டு முறை இதைச் செய்யவேண்டும் என்று புராண, இதிஹாசங்கள் இயம்புகின்றன . அவை ஏகாதசி எனப்படும் . இதன் தமிழ் மொழிபெயர்ப்பு பதினோறாவது நாள்.
இந்துக்கள் நிலவின் இயக்கத்தைப் பின்பற்றி ஒவ்வொரு மாதத்தையும் இரண்டு பகுதிகளாகப் பிரித்தார்கள் . அமாவாசைக்குப் பின்னர் வரும் 14 நாட்கள் சுக்ல பட்ச இருவாரம் (14 நாள்); அதே போல பெளர்ணமி க்குப்பின்னர் வரும் 14 நாட்கள் கிருஷ்ண பட்ச இருவாரம் (14 நாள்). இந்தக் கணக்குப்படி ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசி (11 ஆம் நாள்) வரும். அந்த நாளில் உணவு உண்ணாமல் இறைவனின் பெயரைச் சொன்னால் உடலுறுப்புகளுக்கு ஓய்வும் கிடைக்கும்; ஆரோக்கியமும் பெருகும். ஆண்டவன் பெயரைச் சொல்லுவதால் மன அமைதியும் மகிழ்ச்சியும் பெருகும் என்பது இந்துக்களின் மாபெரும் கண்டுபிடிப்பு.
இதுபற்றி இந்துமதத்தை நன்கு ஆராய்ந்த ஸர் மோனியார் வில்லியம்ஸ் (Sir Monier Williams) சென்ற அறிஞர், உண்ணா விரதம் இருப்பதில் இந்தியாவில் வாழும் இந்துக்களையோ, முகமதியர்களையோ யாரும் மிஞ்ச முடியாது கிறிஸ்தவர்களில் கத்தோலிக்க, ப்ராட்டஸ்டண்ட் ஆகிய இரு பிரிவினரும் இப்படி விரதம் இருப்பதை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது . எந்த ஒரு சாக்கினையும், காரணத்தையும் கண்டுபிடித்து நோன்பு அனுஷ்டித்து விடுவார்கள் இந்துக்கள் என்று எழுதியுள்ளார் .
மஹாத்மா காந்தியும் ஒரு கட்டுரையில் இதையே சொல்கிறார் :
எனக்கு ஒரு விஷயம் புரியமாட்டேன் என்கிறது; என்னவென்றால் எனக்கு நிறைய ப்ராடண்ஸ்ட் பிரிவு கிறிஸ்தவ நண்பர்கள் இருக்கிறார்கள்; அவர்களது நட்பை நான் மிகவும் மதித்துப் போற்றுபவன் ; ஆனால் ஒரு உண்மையை நான் பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறேன். அவர்களுக்கு உண்ணாவிரதம் , நோன்பு என்பன அறவே பிடிக்கவில்லை ; இது ஏன் என்றே எனக்கு விளங்கவில்லை — இது காந்திஜியின் புலம்பல்.
முஸ்லீம்களையும் மோனியர் வில்லியம்ஸ் சொன்னாலும் அவர்கள் விரதம், நம் கணக்குப்படி விரதமே இல்லை. அவர்கள் ரம்ஜான் / ரமலான் மாதத்தில் இருக்கும் விரதம் பகல் நேரத்தில் உணவு அருந்தக்கூடாது என்பதுதான். மற்ற நேரங்களில் வயிறுபுடைக்க சாப்பிடலாம். பகல் நேரத்தில் சாப்பிட முடியாது என்ற பயத்தினால் அவர்கள் இரவு நேரத்தில் கூடுதலாக உண்ணுவதால் ரமலான் விரதத்துக்குப் பின்னர் அவர்களுடைய எடை அதிகரிப்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன . ஆக, இந்துக்கள் விரதத்துக்கும் முஸ்லீம்கள் விரதத்துக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது .
தற்காலத்தில் பெரும்பாலான இந்துக்கள் ஏகாதசி இரதம் இருப்பதில்லை. ஆயினும் சிலர் சோமவார விரதம் , செவ்வாய்க்கிழமை விரதம், சனிக்கிழமை விரதம் என்ற பெயரில்– குறிப்பாகப் பெண்கள் — உண்ணாமல் இருப்பதைக் காணமுடிகிறது .
கட்டிட வேலை செய்யும் குஜராத்தி தொழிலாளர்கள் நாள் முழுதும் வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டு ஏகாதசி விரதம் இருப்பதை லண்டனில் கூடக் காண்கிறேன். ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர், சுவாமி நாராயணன் இயக்கத்தினர், இன்றும் ஏகாதசி விஷயத்தில் கண்டிப்பு காட்டுகின்றனர் ; வெங்காயம், உள்ளிப் பூண்டு இவைகளைக் கலக்காமலேயே தினமும் சுவையான உணவுகளையும் சமைக்கிறார்கள். ஏகாதசி நாட்களில் வயதுக்கு ஏற்ப உப்பு, புளி , மிளகாய் ருசி இல்லாத கஞ்சி குடிப்பதையும் பால் பழம் மாட்டும் சாப்பிடுவதையும் பலர் கடைப்பிடிக்கின்றனர் ; ஆனால் இறைவன் பெயர் நினைவில் இருப்பதுதான் முக்கியம்.
காந்திஜி கூட ஜன்மாஷ்டமி (கிருஷ்ணன் பிறந்த நாள்) விரதக்காரர் களைக் கிண்டல் செய்கிறார்; அவர்கள் கிருஷ்ணன் பெயரைச் சொல்லாமல் பொழுதைக் கழிக்க அன்று சூதாட்டம் விளையாடுவதை அவர் குறிப்பிடுகிறார் .
இந்துக்கள் நிர்ஜல ஏகாதசி அன்று தண்ணீர் (ஜலம் ) கூடக் குடிக்காமல் இருக்கின்றனர். இலங்கை இந்துக்கள் ஸ்கந்த சஷ்டி விரத காலத்தில் இவ்வாறு கடும் விரதம் இருப்பதையும் இங்கே குறிப்பிடுதல் பொருத்தம் .
இப்பொழுது ஏகாதசி பெருமையை விளக்கும் முதல் கதையை மஹாபாரத்திலிருந்து காண்போம்
முதல் கதை
காலவ முனிவரின் மகன் பத்ரசிலா அவருக்கு சின்ன வயது முதலே
விஷ்ணுவின் மேல் அபார பக்தி. இதனால் வேத அத்யயனம், சமிதாதானம், யாக, யக்ஞங்களைக் கூட செய்யவில்லை. ஆனால் ஏகாதசி விரதம் போன்ற உண்ணாவிரதங்களைக் கடைப்பைடித்தார்; ஒருநாள் அவரை தந்தை அழைத்தார் . மகனே! உன் உடம்பை ஏன் இப்படி பட்டினி கிடந்து வாட்டிக்கொள்கிறாய்? இட்லியும் தோசையும் பொங்கலும் வடையும் சப்பாத்தியும்(Dhal) தால் – உம் சாப்பிட்டு அனுபவிக்க வேண்டிய காலத்தில் ஏன் இப்படிச் செய்கிறாய்? என்று கேட்டார்.
பத்ரசிலாவவும் தயங்கமால் பதில் சொன்னார். “அப்பா, ஏகாதசி விரதத்தின் மஹிமை மிகப்பெரியது. அதனால் கிடைக்கும் பலன்கள் எல்லையற்றவை; கங்கு கரையற்ற மஹாசமுத்திரம் போனற அளவுக்கு புண்ணியம் கிடைக்கும் வானத்திலுள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட அதிக மானது அது . இந்த விரதத்தால் நான் பூர்வ ஜன்மத்தையும் அறிவேன் . அப்போது நடந்த கதையைக் கேளுங்கள்” .
“முன் ஜென்மத்தில் நான் சந்திர குலத்தில் உதித்த அரசன். அப்போது என்பெயர் தர்ம கீர்த்தி . நான் அப்போது செய்யாத பாவமில்லை ; பாவத்தின் மூட்டை நான்; ஆட்சியிலோ கொடுங்கோலன். அப்படி திமிரு பிடித்து ஆண்ட காலத்தில் ஒரு நாள் பரிவார சேனையுடன் வேட்டைக்குச் சென்றேன். அழகான கொழு கொழு மான் ஒன்றைக் கண்டேன். வீரர்களே இது தப்பி விடாமல் போக வளையம் போல் இதைக் காத்து நில்லுங்கள் என்று சொல்லி முடிப்பதற்குள் நான் காவலாக நின்ற பகுதியிலேயே அது தப்பித்து ஓடிவிட்டது. அம்பை விட்டு எறிந்தேன் ; பயனில்லை; விடேன் தொடேன் என்று நான் மட்டும் குதிரையில் காற்று வேகத்தில் பறந்தேன் ; மான் கிடைக்கவில்லை; இதற்குள் இரவு நெருங்கவே மரத்தடியில் படுத்தேன். இதற்குள் களைப்படைந்த என் குதிரை மலையிலிருந்து உருண்டு செத்தது. நான் படுத்ததுதான் தெரியும். என் உயிர்போனது கூடத் தெரியாது. எம கிங்கரர்கள் என்னைப் பிடித்து எமன் முன் நிறுத்தியபோதுதான் என்ன நடந்தது என்பதே புரிந்தது . நான் நடுங்கி நடுங்கி ஒவ்வொரு நொடியும் மீண்டும் மீண்டும் செத்துக் கொண்டிருந்தேன் ஆனால் என்ன வியப்பு! என் உயிரை ஏன் தவறாக எமலோகத்துக்குக் கொண்டுவந்தீர்கள்? என்று தனது வேலைக்காரகளைத் திட்டி வசைமாரி பொழிந்தார் எமதர்மன் .
இந்த ஆள் ஏகாதசியில் அல்லவா இறந்தான் ? அதுவும் நாள் முழுதும் சாப்பிடாமல் அல்லவா இறந்தான் ? அது ஏகாதசி விரதம் இருந்ததற்குச் சமம்; இது தெரியாதா ? உடனே இவரை வைகுண்டத்துக்கு அழைத்துக் செல்லுங்கள் என்று கடிந்து, என் அருகே வந்து சல்யூட் Salute போட்டு மரியாதையுடன் என்னை வழி அனுப்பினார். இதெல்லாம் ஏகாதசியின் பெருமை, மஹிமை அல்லவா ?
இதைக்கேட்டவுடன் தந்தையான காலவ முனிவரும் விஷ்ணு பக்தராக மாறி மாதம் இரு முறை ஏகாதசி விரதம் இருக்கத் துவங்கினார்..
மஹா பாரதத்தில் மேலும் ஒரு கதையும், நாரத புராணத்தில் ஒரு கதையும் இருக்கிறது. அதையும் கேளுங்கள் . தொடரும் …………………………………………..
TAGS – ஏகாதசி விரதம், ஏன்?, 3 கதைகள், காலவ முனி, பத்ரசிலா


















