ஆரியம் முதல் பதினெண் பாடையில்…… கம்பன் மொழி (Post No.3130)

tamil-alphabet

Written by London swaminathan

 

Date: 7 September 2016

 

Time uploaded in London: 8-23 AM

 

 

Post No.3130

 

Pictures are taken from various sources; thanks.

 

பழங்கால இந்தியாவில் பதினெட்டு மொழிகள் பெரிய அளவில் பேசப்பட்டன என்பதை கம்பனும் பாரதியும் நமக்கு சொல்லும் அழகே தனி!

 

பம்பை நதியின் இயற்கை அழகை கம்பன் வருணிக்கும் அழகு படித்து இன்புறத் தக்கது. முதலில் பம்பை என்னும் நதி பற்றி ஓரிரு வார்த்தை; இது பழங்காலச் சொல். கேரளத்தில் ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் வழியில் ஒரு பம்பை நதி உளது; தென் அமெரிக்காவில் ஒரு பம்பை நதி உளது; கிஷ்கிந்தா காண்டத்தில் ராம பிரான் கண்ட பம்பை நதி வட இந்தியாவில் உளது!

 

ஆரியம் முதலிய பதினெண் பாடையில்

பூரியர் ஒரு வழிப்புகுந்தது ஆம் என

ஓர்கில கிளவிகள் ஒன்றொடு ஒப்பில

சோர்வில விளம்பு புள் துவன்றுகின்றது

 

பொருள்:–

அந் நீர் நிலை சம்ஸ்கிருதம் முதலான பதினெட்டு மொழிகளில் நல்ல தேர்ச்சி பெறாத அற்பப் புலமை உடையவர்கள் ஓரிடத்தில் ஒன்று சேர்ந்து ஆரவாரம் செய்வது போல இன்ன இன்ன பறவையின் ஒலி இது இது என்று ஆராய்ந்து அறிய மாட்டாதவைகளும், ஒன்றுடன் ஒன்று ஒத்திராதவைகளுமாய் உள்ள ஒலிகளை ஓய்வின்றி ஒலிக்கும் பலவகைப்பட்ட பறவைகள் கூடி நெருங்கி இருக்கப்பெ ற்றதாகும்.

 

இதிலிருந்து தெரிவதென்ன?

sanskrit_vwl

1.இந்தியாவில் பதினெட்டு மொழிகள் பெரிய மொழிகளாகக் கருதப்பட்டன. அதில் சம்ஸ்கிருதமே முதலிடம் பெற்றது

2.ஆரியம் என்றால் ரிஷி முனிவர்கள், வடக்கில் வாழும் பண்பாடுமிக்கோர் என்னும் பொருள், சங்க இலக்கியம் முதல் கம்பன் காலம் வரை இருந்தது. அதாவது மாக்ஸ்முல்லர்களும், கால்டுவெல்களும் “சிவபூஜையில் கரடி புகுந்தது போல” புகும் வரை ஆரிய என்ற சொல்லுக்கு இனத் துவேஷப் பொருள் இல்லை. கால்டுவெல்களும் மாக்ஸ்முல்லர்களும் இன வெறியைப் பரப்பியதால் ஹிட்லர் தன்னை ஆரியன் என்று சொல்லி மற்றவர்களைக் கொடுமைப்படுத்தியதை வரலாறு படித்தோர் அறிவர் (விவரங்களை எனது பழைய கட்டுரைகளில் காண்க)

 

  1. ஆரியருக்கு எதி ர்ப்பதம் பூரியர் என்பதாலும் இது உறுதியாகிறது அதுவே ஆங்கிலத்தில் இன்றும் ஸ்பூரியஸ் (Spurious = false, fake, illegitimate) என்று வழங்கப்படும்

 

4.கம்பன் பல்வேறு மொழிகளைப் பயின்றான் அவனே வால்மீகி புகழைப்பரப்ப அவனுடைய ராமாயணத்தை மொழிபெயர்ப்பதாக பால காண்டத்தில் கூறியதையும் அகத்தியனையும் தமிழையும் வானளாவப் புகழ்வதையும் எனது முந்தைய கட்டுரைகளில் காண்க

 

5.பறவைகள் பற்றிய தமிழனின் அறிவையும் இப்பாடல் விளக்கும். ஒவ்வொரு பறவையையும் அதனுடைய ஒலியைக்கொண்டே அறிவான் தமிழன்.ஆனால் பம்பை நதிக்கரையிலோ எல்லாப் பறவைகளும் சேர்ந்து ஒலித்தது “குறை குடம் தழும்பியது போல” இருந்தது!

 

பாரதி மொழியில்

முப்பது கோடி முகமுடையாள் உயிர்

மொய்ம்புற ஒன்றுடையாள் – இவள்

செப்பு மொழி பதினெட்டுடையாள்- எனிற்

சிந்தனை ஒன்றுடையாள் (பாரதியார் படல்)

 

என்று பாரத தேவியைப் பாரதி புகழ்வதையும் ஒப்பிட்டுப் பார்ப்பது பேரின்பம் தரும்.

 

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு

இறுதியாக ஒவ்வொரு மொழியும் அவரவர் காதுக்கு இனிமையானது என்பதை உணர்தல் வேண்டும். பார்லிமெண்டில் பேசிய சேத் கோவிந்த தாஸ், தமிழ் மொழி என்பது தகர டப்பாவில் கற்களைப் போட்டுக் குலுக்கினால் எப்படி ஒலி வருமோ அது போலக் கடூரமானது என்று கிண்டல் செய்தார். உடனே தி.முக. உறுப்பினர்கள், இந்தி மொழியில் உள்ள மிகப்பெரும் இலக்கியம் டெலிபோன் டைரக்டரிதான் என்றும் செப்பினர். இரண்டும் மொழிப்பற்றினாலும், அறியாமையினாலும் வெளிப்பட்ட கூற்றுகள்!

 

பி.பி.சி. தமிழோசையில்…………

 

லண்டனில் புஷ் ஹவுசில் (Bush House, London) ஏழாவது மாடியில் நான் B.B.C. தமிழோசை ஒலிபரப்பளராக வேலை பார்த்த காலத்தில் நானும் சங்கர் அண்ணாவும் ஏதேனும் ஒரு விஷயம் பற்றி விவாத்தித்துக் கொண்டிருப் போம். அடுத்த அறையிலுள்ள நேபாளி ஒலிபரப்பாளர்கள் வந்து ஏன் இப்படிச் சண்டை போடுகிறீர்கள்?  என்று சிரித்துக்கொண்டே சொல்லுவர். அவர்களுக்குத் தெரியும் நாங்கள் சுவையான விவாதத்தில் இருக்கிறோம் என்பது. ஆயினும் தமிழ் மொழியின் குரல் அவர்களுக்குச் சண்டை போடுவது போலக் கடூரமாக இருப்பதை அவர்கள் சொல்லாமல் சொல்லுகின்றனர் என்பது எங்களுக்குப் புரிந்து விடும். இதே நேரத்தில் எம்.எஸ். சுப்புலெட்சுமி, .சுசீலா, ஜானகி போன்றோரி ன் பாடல்களைக் கேட்டிருந்தால் அவர்கள் கருத்து வேறு மாதிரி இருந்திருக்கும்!

 

–Subham–

உப்பு விற்கும் பெண் பாடிய கவிதை! (Post No.3070)

saltpans

Written by London swaminathan

Date: 18th August 2016

Time uploaded in London: 5-14 AM

Post No.3070

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

 

சிவப்பிரகாச சுவாமிகள் என்பவர் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சியில் பிறந்தார். தந்தை குமார சுவாமி தேசிகர் இறந்த பிறகு, சகோதரர்கள் வேலாயுதம், கருணைப் பிரகாசம் ஆகியோருடன் திருவண்ணாமலைக்குச் சென்று கல்வி பயின்றார். அருணாசல மலையை வலம் வருகையில் அண்ணாமலையான் அருளால் அருட் கவிகள் இயற்றினார். 100 செய்யுட்களால் “சோண சைல மாலை” என்ற நூலை இயற்றினார்.

 

பின்னர் இலக்கணம் கற்பதற்காக தென் திசையை நோக்கிப் பயணம் செய்கையில் திருச்சிக்கு அருகிலுள்ள துறை மங்கலத்தில் ஒரு தோட்டத்தில் சிவ பூஜை செய்துகொண்டிருந்தார். அவருடைய வருகையை அறிந்த கிராமாதிபதி அண்ணாமலை ரெட்டியார் அவரை அங்கேயே தங்குமாறு வேண்டினார். ஆனால் அவரோ தாமிரபரணி தீரம் வரை சென்று வெள்ளியம்பலவாண சுவாமிகளிடம் இலக்கணம் கற்க விரும்புவதாகச் சொன்னார். உடனே அண்ணாமலை ரெட்டியார் 400 பொற்காசுகள் கொடுத்து அவரை அனுப்பி வைத்தார்.

 

கு-வில் துவங்கி கு-வில் முடியும் கவிதை!

 

வெள்ளியம்பல வாண சுவாமிகளிடம் சென்றவுடன் அவர் ஒரு தேர்வு வைத்தார். “எங்கே பார்ப்போம். கு – என்னும் எழுத்தில் துவங்கி அதே எழுத்தில் முடிவடையும் ஒரு வெண்பா இயற்று. இடையில் ஊருடையான் என்ற சொல் இருக்க வேண்டும் என்றார்.

 

சிவப்பிரகாச சுவாமிகள் உடனே

குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழன்

முடக்கோடு முன்ன மணிவாற்கு – வடக்கோடு

தேருடையான றெவ்வுக்குத் தில்லைதோன் மேற்கொள

லூருடையா நென்னு முலகு

என்று பாடி முடித்தார்.

 

அம்பலவாணர், அந்தக் கவிதையைக் கேட்டு வியந்து, அவரைப் பாராட்டி சகோதரர் இருவருக்கும் இலக்கண பாடத்தைச் சொல்லிக் கொடுத்தார். அண்ணாமலை ரெட்டியார் தமக்களித்த பணத்தை  — 400 பொன்னை — குருதட்சிணையாக தட்டில் வைத்து வணங்கினார் சிவப்பிரகாசர்.

 

“அப்பனே, எமக்கு இந்த தட்சிணை வேண்டாம். திருச்செந்தூரில் உள்ள ஒரு தமிழ் புலவன் என்மீது வசை பாடுதலையே தொழிலாகக் கொண்டுள்ளான். அவனை வென்று என்னிடம் கொணர்க. அதுதான் குருதட்சிணை என்றார்.

 

உடனே சிவப்பிரகாசரும் திருச்செந்தூர் சென்று, அப்புலவரை வாதுக்கு அழைத்தார். இருவரும் சபதம் செய்து, முருகன் மீது நீரோட்டக யமக அந்தாதி பாடத் துவங்கினர் (உதடு ஒட்டாத எழுத்துகளை அமைத்து அந்தாதி பாடுவது). சிவப் பிரகாசர் 30 பாடல்களை ப் பாடி முடித்தபோதும், அந்தப் புலவர் ஒரு நீரோட்டகப் பாடல் கூடப் பாட முடியவில்லை.

salt1

அந்தப் புலவர் தோல்வியை ஒப்புக்கொண்டார். அவரை இட்டுக்கொண்டு போய் அம்பலவாணர் காலடியில் வணங்கி விழச் செய்தார். குருவுக்கு மெத்த மகிழ்ச்சி. அவர் சிவப் பிரகாசருக்கு, சிதம்பரத்திற்குச் சென்று மேலும் பயில அனுமதி கொடுத்தார்.

 

போகும் வழியில் துறை மங்கலத்துக்குச் சென்று அண்ணாமலை ரெட்டியாரை சந்தித்து, திருவெங்கை நகரத்தில், அவர் கட்டிய மடத்தில் சில காலம் தங் கி பல நூல்கள் இயற்றினார். பின்னர் தல யாத்திரை செய்துகொண்டு, திருக்காட்டுப் பள்ளியை அடைந்தார்.

 

ஒரு நாள் அவ்வூர் வீதியில் கல்வியிற் சிறந்த ஒரு பெண் உப்பு வியாபாரம் செய்வதைக் கண்டார். அவருக்கு நயன தீட்சை கொடுத்தார். பலருக்கும் அப்பெண்மணியின்  புலமையைக் காட்டுவதற்காக

 

நிறைய வுளதோ வெளிதோ கொளுவேம்

பிறையை முடிக்கணிந்த பெம்மா – நுறையுந்

திருக்காட்டுப்பள்ளி திரி பாவாய் நீயிங்

கிருக்காட்டுப்பள்ளி யெமக்கு

 

என்ற வெண்பாவைப் பாடினார். அதைக் கேட்ட மாத்திரத்தில் அப்பெண்,

 

தென்னோங்கு தில்லைச் சிவப் பிரகாசப் பெருமான்

பொன்னோங்கு சேவடியைப் போற்றினோ – மன்னோன்

றிருக்கூட்ட மத்தனைக்குந் தெண்டனிட்டோம் தீராக்

கருக்கூட்டம் போக்கினோங் காண்

 

— என்னும் வெண்பாவைப் பாடிக்கொண்டு வந்து நமஸ்கரித்து கைகூப்பி நின்றார். அப்பெண்ணுக்கு அன்று முதல் மெய்ஞ்ஞானம் ஏற்பட்டது. சிவப் பிரகாசர் அருளினால் ஆன்மீக பாதையில் நடக்கத் தொடங்கினார்.

–சுபம்–

உத்வேகம் ஊட்டும் உத்தமருக்கு அஞ்சலி! (Post No.3062)

I day map 2

Article Written S NAGARAJAN

Date: 15th  August 2016

Post No. 3062

Time uploaded in London :– 5-50 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

சிறந்த தியாகியும், பத்திரிகையாளரும், ஆன்மீகத்தைத் தமிழகத்தில் வளர்த்த சிறந்த கர்மயோகியுமான எனது தந்தையார் தினமணி திரு வெ.சந்தானம் அமரரான தினம் ஆகஸ்ட் 15.(15-8-1997) ஒரு அஞ்சலிக் கட்டுரை இது!

 

உத்வேகம் ஊட்டும் உத்தமருக்கு அஞ்சலி!

ச.நாகராஜன்

 

ஒருவரை எப்பொழுது வேண்டுமானாலும் நினைக்கும் போது உடனே உத்வேகம் பிறந்து பல அரிய காரியங்களைச் செய்ய முடியும் என்றால் அப்படிப்பட்ட உத்வேக வாழ்க்கையை வாழ்ந்தவர் —வாழ்வாங்கு வாழ்ந்த சிறந்த மனிதர்– என்று அர்த்தம். ஆகஸ்ட் 15ஆம் தேதி கொடி ஏற்றியாகி விட்டதா என்று கேட்டு அமரரான திரு வெ.சந்தானம் சிறந்த மனிதர்களில் ஒருவர் என்பதை உத்வேகமூட்டும் அவர் வாழ்க்கை நிகழ்ச்சிகள் எப்பொழுதும் உணர்த்தும்.

 

மாபெரும் அரசியல் தலைவர்களுடன் சகஜமாகப் பழகியவர் அவர். ஆன்மீகத்திலோ இணையிலா ஆசார்யர்களுடன் நெருங்கிப் பழகும் பாக்கியம் கொண்டவர். சித்தர்களிலோ எனில் கணபதியுடன்நேருக்கு நேர் பேசும்  மகத்தான ஸ்வாமிஜியின் அன்புக்கு பாத்திரமானவர்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
சில நிகழ்ச்சிகள் ..

 

காமராஜர் மதுரையில் நடக்கும் காங்கிரஸ் மாநாட்டு பந்தலைப் பார்வையிட வந்தார். பந்தலோ டி.வி.எஸ் நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட அருமையான் பந்தல். தினமணி நிருபர் காமராஜரிடம் சென்றார். எங்கள் ஆசிரியருக்கு (தினமணி வெ.சந்தானம்) தேச் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளுக்காக அரசு தரும் எதுவம் வரவில்லையே என்றார்.

ஏன் என்று கேட்டார் காமராஜர்.

 

அதற்கு சிறை இருந்ததற்கான சான்றை சக சிறைவாசி ஒருவர் தர வேண்டும் என்று விதி இருக்கிறதே என்றார் நிருபர்.

எவன் அப்படி விதியைப் போட்டான்?

“தாங்கள் தான்! முதலமைச்சர் விதி இது”

ஹ ஹ ஹா என்று சிரித்தார் காமராஜர்.

 

ஒரே ஒரு வரி.

ஆங்கிலத்தில்,

திரு சந்தானம் என்னுடன் சிறையில் இருந்தார்.

கேகாமராஜ்

 

I day squirrel

உடனுக்குடன் செயலபடும் மாபெரும் தலைவர் காமராஜர். என் தந்தையாரிடம் மீது அவர் கொண்ட அன்பும் மதிப்பும் எல்லையற்றது.

 

எனது தந்தையாரை “சாமி” என்று அழைக்கும் முத்துராமலிங்கத் தேவர் ஆன்மீகம் தேசீய்மும் இழைந்து ஓடும் உத்வேகமூட்டும் சொற்பொழிவுக்குச் சொந்தக்காரர். மகுடி கேட்ட நாகம் போல மக்கள்  கூட்டம் சொக்கும் அவரது பேச்சால். மதுரையில் அவர் சொற்பொழிவு ஆற்றும் கூட்டங்கள் பலவற்றிற்கு என் தந்தையார் தான் தலைவர். மறுநாள் அப்படியே தேவர் பெருமானின் சொற்பொழிவு தினமணியில் வெளியாகும். மக்கள் பெரிதும் மகிழ்வர். தேவர் பெருமானும் தான்! அப்படியே வந்திருக்கிறதே என்று மகிழ்வார். எங்கள் குடும்பத்திற்கு தேவர் சமூகத்தினரின் உதவி காலம் காலமாக இருந்து வந்தது!

 

ஆயக்குடி ஸ்வாமிஜி கிருஷ்ணா ஒரு அபூர்வமான சித்தருக்கெல்லாம் சித்தர். தினமும் கணபதி ஹோமம் இளமையிலிருந்தே செய்து வந்தவர். கணபதியை பிர்த்யட்சமாகக் கண்டு பேசுபவர்.

 

அவரை தரிசிக்கும் போதெல்லாம் ஏராளமான அபூர்வமான சம்பவங்களை எங்கள் குடும்பத்தினர் அனுபவித்து மகிழ்வது வழக்கம்.

 

ஆய்க்குடியி (தென்காசி அருகில் உள்ள அற்புதமான கிராமம்) வசித்து வந்தார் அவர்.

 

அவராலேயே பரசுராமர் பூஜை செய்த ஐயப்பனின் சிலை அச்சன்கோவிலில் ஸ்தாபிக்கப்பட்டது. இன்று லட்சக்கணக்கில் மக்கள் அங்கு செலவ்தை அனைவரும் அறிவர்.

 

அங்கு வருடந்தோறும் நடக்கும் புஷ்பாஞ்சலி அபூர்வமான ஒன்று.

என் தந்தையார் மீது அளவு  கடந்த அன்பு கொண்டவர் அவர் அவர் செய்யும் கணபதி ஹோமம் கணபதியை பிரத்யட்சமாக எழுந்தருளச் செய்யும் ஹோமம் ஆகும்.

 

எங்கள் வீட்டிலும் கணபதி ஹோமம் நடந்தது. நண்பர் ஒருவர் வீட்டிலும் ஹோமம் நடந்தது. அங்கு அனைவரையும் தீடீரென்று கீழே விழுந்து நமஸ்கரிக்கச் சொன்னார். அனைவரும் நமஸ்கரித்தோம்.

 

பின்னால் தான் அவர் நடந்ததைச் சொன்னார்,

ஹோமத்தைப் பார்க்க குழந்தையானந்தர் உள்ளிட்ட பலர் வந்திருந்ததாகவும் அவர்களைத் தரிசித்ததால் எங்களையும் நமஸ்கரிக்கச் சொல்லி அவர்களின் ஆசியைப் பெற வைத்ததாகவும் தெரிய வந்தது.

 

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஏராளமான சுவையான நிகழ்வுகள்.

காலம் நிறபதில்லை; ஓடுகிறது. நல்ல நினைவுகள் நீடிக்கின்றன மறைவதில்லை!

 

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்றார் வள்ளுவர்.

 

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து இன்றும் நினைப்பவருக்கு உத்வேகம் ஊட்டும் உத்தமர் திரு வெ.சந்தானம்.

எனது தந்தையார்.

 

இந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அவரை நினைத்து அஞ்சலி செலுத்துகிறோம்.

 

*********

 

திருடர்கள் இரண்டு வகை! ஜோதிடர்கள் மீது மனு தாக்குதல்! (Post No.3036)

260px-Japanesethieves

Written by london swaminathan

Date: 5th    August 2016

Post No. 3036

Time uploaded in London :– 7-52 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

kili 2

சம்ஸ்கிருதத்தில் திருட்டுக் கலை பற்றி தனி நூல்களே இருக்கின்றன. சம்ஸ்கிருதத்தில் இருக்கும் அளவுக்கு பரந்த வீச்சு உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை. காம சாஸ்திரம், விமான சாஸ்திரம், ஆயுர்வேதம், மூலிகை விஷயங்கள், திருட்டு சாஸ்திரம்,  ஜோதிட சாஸ்திரம், இலக்கணம், இலக்கியம், தர்க்க சாஸ்திரம், நாடகம், கவிதை, பழமொழிகள், பொன்மொழிகள், சட்ட நூல்கள்,  நிகண்டு, மொழியியல்  என பல நூறுவகை விஷயங்கள் அதில் அடக்கம். எனக்குத் தெரிந்தவரை, கிரேக்க மொழி இதற்கு கொஞ்சம் பக்கத்தில் வரும். ஆனால் கிரேக்க மொழி சம்ஸ்கிருதத்தை விட குறைந்தது 600 வருடமாவது வயது குறைந்த மொழி.

நிற்க.

 

திருடர்கள் இரண்டு வகை என்கிறார் உலகின் முதல் சட்டப் புத்தகத்தை எழுதிய மனு. அதில் சோதிடர்கள், குறி சொல்லுவோர், ரேகை சாத்திரக்காரர் கள் மீதும் தாக்குதல் தொடுக்கிறார்!

 

இதோ அவர் எழுதிய மனு ஸ்மிருதியில் உள்ள சில பாக்கள் (ஸ்லோகங்கள்):–

 

ப்ரகாச வஞ்சகா: தேஷாம் நானா பண்ய உபஜீவின:

ப்ரச்சன்ன வஞ்சகா: து ஏதே யே ஸ்தேன ஆடவிகாதய:

 

உத்கோச  காஸ்ச: பதிகா: வஞ்சகா: கிதவா: ததா

மங்களாதேசவ்ருத்தா: ச பத்ரா ச ஏகக்ஷணிகை: சஹ

 

அசப்ய காரிணை: ச ஏவ மஹாமாத்ரா சிகித்சகா:

சில்யோபசாரயுக்தாஸ்ச நிபுணா: பண்யயோஷித:

மனு 9-258 -260

 

 kili 5

மனு 9-256

உளவாளிகள்தான் அரசனுக்குக் கண்கள்; அவர்கள் மூலமாக மக்களின்  உடைமைகளைத் திருடும்  வெளிப்படைத் திருடர்கள், மறைமுகத் திருடர்கள் ஆகிய இரண்டு வகைத் திருடர்களையும் அரசன் கண்டுபிடிக்க வேண்டும்

 

மனு 9-257

வணிகத்தில் மோசடி செய்யும் அனைவரும் வெளிப்படைத் (தெரிந்த) திருடர்கள்; வீடு புகுந்து திருடுவோர், காடுகளில் வழிப்பறி செய்வோர் முதலியோர் மறைமுகத் திருடர்கள்.

 

மனு 9-258

லஞ்சம் வாங்குவோர், மோசடிப் பேர்வழிகள், ஏமாற்றுப் பேர்வழிகள், சூதாட்டக்காரர்கள்,  மற்றவர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது என்று ஆரூடம் சொல்லுவோர், குறி சொல்லுவோர்…………..

 

மனு 9-259

முறையற்ற வழியில் ஈடுபடும் மந்திரிகள், டாக்டர்கள், கலைகள் மூலம் சம்பாதிப்போர், வேசிகள்………….

 

மனு 9-260

இப்படிப்பட்டோர் வெளிப்படைத் திருடர்கள்; நல்லோர் வேஷம் போட்ட கீழ் ஜாதியார் மறைமுகத் திருடர்கள்.

 

மனு 9-261

இப்படிப்பட்ட திருடர்களை ரகசிய உளவாளிகள் மூலம் கண்டுபிடித்தவுடன் அவர்களைக் குற்றம் செய்யும் சூழ்நிலையை உருவாக்கி அதில் சிக்கவைத்து  கையும் களவுமாகப் பிடிக்கவேண்டும்.

மனு 9-262

ஒவ்வொருவர் செய்த தவறு என்ன என்பதைச் சொல்லி, தவற்றுக்கு ஏற்ற அளவு தண்டணை கொடுக்கவேண்டும்.

மனு 9-263

இந்தப் பூமியில் அமைதியாக உலவிவரும் தீயோரின்  நடவடிக்கைகளை  தீயோரைத் தண்டிப்பது ஒன்றினால்தான் செய்ய இயலும்.

மனு 9-264— மனு 9-266

சபைகள், சாலை ஓர நீர் குடிக்கும் இடங்கள், தாசி வீடுகள், உணவு விடுதிகள் (ஆப்பக் கடைகள்), மதுபானக் கடைகள், முச்சந்திகள், பொதுமக்கள் வேடிக்கை பார்க்கக் கூடும் இடங்கள், புனித மரங்கள், தோட்டங்கள், கலைஞர் வீடுகள், காலியாக இருக்கும் மனைகள், பொட்டல் காடுகள், புதர் மண்டிய பிரதேசங்கள் ஆகிய இடங்களில் உளவாளிகளையும் துருப்புகளையும் நிறுத்தி வைப்பதாலோ, அல்லது ரோந்து (காவல் சுற்று) செய்வதாலோ திருட்டுகளைக் கட்டுப்படுத்தலாம்.

 

kili 7

மனு 9-267

ஏற்கனவே திருட்டில் ஈடுபட்டு, இபோது திருந்தியவர்களைக் கொண்டு  புதிய திருடர்களைப் பிடிக்க வேண்டும் . அவர்களுடன் பழக வைத்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து, அந்தத் திருடர்களை அடியோடு அழிக்க வேண்டும்

மனு 9-268

சாது சந்யாசிகளை சந்திக்க அழைப்பது போல அழைத்தோ, உணவு, கேளிக்கைக்காக கூப்பிடுவது போல கூப்பிட்டோ அல்லது அவர்களது சாகச செயல்களைப் பாராட்டுவது போல பாசாங்கு செய்தோ அவர்களை வளைத்துப் பிடிக்க வேண்டும்.

மனு 9-269

 

இந்த வலையில் சிக்காமலோ, அல்லது இதை அறிந்தோ தப்பித்து ஓடும் திருடர்களையும் , அவர்களுடைய தாய்வழி, தந்தை வழி உறவினர்களை  யும், நண்பர்களையும் அழிக்க வேண்டும் (உறவினர் நண்பர் மூலம் தான் செய்தி தெரிந்திருக்கும் என்பதால்)

 

(திருக்குறள் 550–ம் கொலையில் கொடியாரை மரண தண்டனை கொடுத்து தீர்த்துக் கட்டுங்கள் என்று செப்பும்.)

 

ஒரு திருடனிடம், அவன் திருடிய பொருட்கள் இல்லை என்றால் அவனைத் தண்டிக்கக்கூடாது. திருடிய பொருட்களோ திருட்டுச் சாதனங்களோ இருந்தால் தயக்கமின்றி தண்டணை கொடுக்க வேண்டும்.

 

இதற்குப் பின்னர், திருட்டுகளை ஒழிப்பதில் உதவாத அதிகாரிகளைத் தண்டிப்பது பற்றி பகர்கிறார்.

 

அதற்குப்பின்னுள்ள ஒரு ஸ்லோகம் குறிப்பிடற்பாலது:–

ஒரு கிராமம் கொள்ளை இடப்படுகையிலோ, ஒரு அணை உடைந்தபோதோ, சாலை வழிப்பறி நடக்கும்போதோ, அவர்களுக்கு உதவாதபடி, வேடிக்கை பார்ப்பவர்களை நாடுகடத்த வேண்டும்.

 

இரவில் திருடுபவர்களின் இரண்டு கைகளையும் வெட்டுங்கள். பிக் பாக்கெட் அடிக்கும் ஜேப்படித் திருடர்களின் விரல்களை வெட்டுங்கள் என்றும் மனு உத்தரவு இடுகிறார்.

 

ஒன்பதாவது அத்தியாயம் திருடர்கள் பற்றி இன்னும் பல விசயங்களை இயம்புகிறது. அக்காலத்தில் திருடர்கள் விஷயத்தில் எவ்வளவு கடுமையான விதிகள் இருந்தது என்பதை அறிவது அவசியம். 1600 ஆண்டுகளுக்கு முன்னர் – குப் தர் காலத்தில் — இந்தியாவுக்கு விஜயம் செய்த சீன யாத்ரீகன் பாஹியான், இந்தியாவில் திருட்டு பயமே இல்லை, மக்கள், வீடுகளின் கதவுகளைப் பூட்டாமல்தான் தூங்குவார்கள் என்று எழுதியுள்ளான்.

 

வாழ்க மனு! வளர்க மனு நீதி!

 

வேதம் விளக்கும் சந்தோஷம்! (Post No.3030)

av3

Article Written S NAGARAJAN

Date: 3rd  August 2016

Post No. 3030

Time uploaded in London :– 8-22 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

வேத நெறி

வேதம் விளக்கும் சந்தோஷம்! (Post No.3030)

ச.நாகராஜன்

rigveda_front

வாழ்க்கையில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது வேதத்தின் அன்புக் கட்டளை!

 

மனதால் சந்தோஷம்

வாக்கால் சந்தோஷம்

சரீரத்தால் சந்தோஷம்

 

 

இந்த மூன்று வகை சந்தோஷங்களையும் அடைந்து விடு என்று அறைகூவுகிறது வேதம்.

இப்படி ‘சந்தோஷ அறைகூவலை’ உலகில் வேறு எந்த ஒரு நூலுமே ஆதி காலத்திலேயே விடுத்ததில்லை என்பது நிதர்சனமான உண்மை.

உண்மையான சந்தோஷத்தை அடையும் விதத்தையும் அது விளக்குகிறது.

சந்தோஷம் என்ற பதத்தை அப்படியே வேதம் கூறவில்லை.

ஆனால்

 

 

தோஷமானா:  (யஜுர் வேதம்)

துஷயந்தி      (ரிக் வேதம்)

தோஷதமா:    (ரிக் வேதம்)

என்று இப்படி பல விதங்களில் கூறுகிறது.

தர்மார்த்த காம எனப்படும் அறம் பொருள் இன்பம் என்ற மூன்று வித  புருஷார்த்தங்களால் நியாயமான வழியில் பொருளைத் தேடு என்கிறது அது.

 

 

அதிக பணம் வந்தாலும் சரி, குறைவாகப் பணம் வந்தாலும் சரி,  அதிக மகிழ்ச்சியையோ அல்லது  அதிக துக்கத்தையோ அடையாதே என்று அது கூறுகிறது.

உழுது பிழை; உழைத்துப் பிழை என்பது யஜுர் வேதம் கூறும் அறிவுரை!

 

பதஞ்சலி முனிவரும் வேத வழியில் நின்று வாழும் சந்தோஷத்தின் பலன் உத்தமமான சுகத்தை அடைவதே என்கிறார்,

 

சந்தோஷத்தை மூன்று வகையாக விள்க்குகிறது வேதங்கள்.

மானஸிக சந்தோஷம் – மனத்தால் ஏற்படும் சந்தோஷம்

வாஸிக சந்தோஷம் – வாக்கினால் ஏற்படும் சந்தோஷம்

சாரீரிக சந்தோஷம் – உடலால் ஏற்படும் சந்தோஷம்

ஆக இப்படி சந்தோஷத்தை ஒவ்வொருவரும் மூன்று வகையாக அடைய முடியும்!

 

the vedas

 

மனத்தால் ஏற்படும் சந்தோஷம்

‘சூதாடி வரும் பணத்தைக் கண்டு மகிழ்ச்சி அடையாதே. அது பாவம்’ என்று நண்பனுக்குக் கூறும் அறிவுரையாக வேதம் கூறுகிறது.

 

தியாகம் செய்வதன் மூலமாக சுகம் பெறலாம் என்ற ரகசியத்தை அது விளக்குகிறது.

(தேன த்யக்தேன புஞ்ஜீயா மா க்ருத: கஸ்யஸ்வித்தனம்!)

சோம்பேறியாக இருக்காதே; அதிர்ஷ்டத்தினால் உன்னிடம் இருக்கும் பணத்தால் ஆனந்தப்படாதே, உழைப்பினால் வருவதே செல்வம் என்றும் அது விளக்குகிறது.

 

 

வேத சம்ஹிதைகள் போலி சந்தோஷத்தையும் உண்மையான சந்தோஷத்தையும் இப்படி இனம் பிரித்து நன்கு காட்டுகின்றன!

உண்மையாக பணம் சம்பாதிக்கும் போது மனதில் உண்மை சந்தோஷம் ஏற்படுகிறது; அது நிலைக்கிறது.

 

 

வாக்கால் ஏற்படும் சந்தோஷம்

 

அடுக்குமொழி வசனங்க்ளை அள்ளி வீசுவதை வேதம் ஆதரிக்கவில்லை.

 

அனுத்வேககரம் வாக்யம் சத்யம் பிரியம் ஹிதம் (கீதை)

அடுத்தவருக்கு ஆத்திரம் ஊட்டாத வார்த்தைகள்

உண்மையான வார்த்தைகள்;

 

அடுத்தவருக்கு பிரியமான வார்த்தைகள் (உண்மையாக இருந்தாலும் அடுத்தவரைப் புண்படுத்தினால் அதைப் பேசாதே) அடுத்தவருக்கு ஹிதமான வார்த்தைகள்

இவற்றையே பேச வேண்டும்.

 

வாசம் வததி சாந்திவாம் – அதர்வண வேதம்

வாசம் வதத் பத்ரயா  – அதர்வண வேதம்

 

ம்ங்களம் பொருந்திய மதுரமான வாணி, சாந்திமயமான வார்த்தைகள் இவ்ற்றையே அதர்வண வேதம் வலியுறுத்துகிறது.

 

 rig

சரீரத்தால் ஏற்படு சந்தோஷம்

 

காம குரோதங்களால் ஏற்படும் திருட்டு, ஹிம்சை, விபசாரம் இவற்றை விட்டு விடுக.

அடுத்தவருக்கு சேவை செய்க

நல்ல கர்மங்களை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வருக (நடைமுறைப்படுத்துக) என்கிறது வேதம்.

 

 

சந்தோஷம் பரமாஸ்வாய சுகார்த்தீம் ச்மயதோ பவேத்

ச்ந்தோஷமூலம் ஹி சுகம் துக்கமூலம் விபர்யய: (மனு 4 -12)

வெறுப்பு, ஆசை, பொறாமை ஆகியவற்றை விடுத்து சந்தோஷத்துடன் உற்சாகமாக வாழ்க்கையை நிர்வகித்தலே சுகத்திற்கான அடிப்படை மூலம்; மாறாக இவற்றை விட்டு விட்டு வாழ முற்படுவதே துக்கத்தின் மூலம் என்கிறார் மனு.

 

இன்னும் இராமாயணம் மஹாபாரதம் ஆகிய இதிஹாஸங்கள் வேத வழியை விரிவாகக் கூறி சந்தோஷம் பெறும் வழியைக் சுட்டிக் காட்டுகின்றன.

 

ஹிந்து மதம் காட்டும் வாழ்க்கை நெறியே அலாதியானது. அநாதி காலம் தொட்டு இருந்து வருவதும் கூட!

**********

 

சுதந்திரப் போராட்ட வீரர், பத்திரிக்கை ஆசிரியர்: எனது தந்தையார் (Post No.3009)

appa, amma picture

Article Written S NAGARAJAN
Date: 27 July 2016
Post No. 3009
Time uploaded in London :– 5-24 AM
( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

திரு திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுக்காக

சுதந்திரப் போராட்ட வீரரும், சிறந்த தமிழ் பத்திரிக்கையாளரும். ஆன்மீகவாதியுமான தினமணி மதுரைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய திரு வெ.சந்தானம் அவர்களின் புத்திரர் தனது தந்தையாரைப் பற்றிய நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்

வெ.சந்தானம்  தோற்றம்:4-9-1911 மறைவு:15-8-1998

 

 

எனது தந்தையார்

————————

சந்தானம் நாகராஜன்

 

தேசப்பணி

எனது தந்தையார் திரு வெ.சந்தானம் தேசீயம் இலக்கியம் தெய்வீகம் ஆகியவற்றில் ஈடுபட்டு நல்லனவற்றை நாள் தோறும் பரப்பிய புண்ணியர் என்று அவரை நன்கு அறிந்தவர்கள் கூறும் போது தான் அவரின் பெருமையை என்னால் உணர முடிந்தது. ஏனெனில் மிகவும் நெருக்கமாகப் பல ஆண்டுகள் கூடவெ வாழ்ந்த போதிலும் தன்னைப் பற்றியும் தான் ஆற்றிய பணியைப் பற்றியும் அவர் ஒரு வார்த்தை கூடக் கூறியதே இல்லை.

 

 

அவர் ஏன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதே எங்களுக்குத் தெரியாது. இதைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆசையிருந்தாலும் அது பற்றி அவர் கூறியதே இல்லை. ஆனால் டி,வி.எஸ் ஸ்தாபனத்தார் வெளியிடும் ஹார்மனி இதழின் ஆசிரியராக புதுக்கோட்டை திரு வெங்கடராமன் பொறுப்பேற்றிருந்தார். அவர் ஒரு நல்ல நண்பர். அவர் என்னிடம் தந்தையாரின் சுதந்திரப் போராட்ட பங்கைப் பற்றி ஒரு கட்டுரை வாங்கித் தருமாறு கேட்டுக் கொண்டார். இதை முன் வைத்து என் தந்தையாரிடம் ஒரு கட்டுரை கேட்டேன். அதில் மலர்ந்தது ஒரு அற்புத கட்டுரை- அதில் அவரது பணி லேசாக குறிப்பிடப்பட்டு இருந்தது. சைமன் கமிஷன் பகிஷ்காரத்தை ஒட்டி வெள்ளையனே வெளியேறு என்று அச்சிடப்பட்டிருந்த பிரசுரத்தை அவர் சென்னை கடற்கரையில் விநியோகம் செய்ததற்காக ஆறு மாத சிறை தண்டனை பெற்றார் என்று அந்தக் கட்டுரை வாயிலாகத் தெரிய வந்தது.

 

 

 

தாமிரப் பட்டயம் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்காக வழங்கப்பட்டபோது திரு வை.சங்கரன், திரு ராஜாராம் உள்ளிட்டோர் மதுரையிலேயே கலெக்டர் புருஷோத்தமதாஸிடமிருந்து பெற்றனர்.பழைய போர் வீரர்கள் ஒன்றாகக் குழுமிய காட்சியைக் கண்ட கலெக்டர் இப்படிப்பட்ட பெரியவர்களுக்கு பட்டயம் வழங்க தனது நற்பேறை எண்ணி மகிழ்ந்தார்.

 

 

இலக்கியப் பணி

 

திரு பி.எஸ்,ராமையா மதுரையில் அவர் எழுதிய பிரஸிடெண்ட் பஞ்சாக்ஷரம், மல்லியம் மங்களம், தேரோட்டி மகன் ஆகிய நாடகங்களை நடத்தும் எஸ்.வி.சஹஸ்ரநாமம் குழுவினருடன் வந்தார். எங்கள் வீட்டிற்கு நேரடியாக அவர் வந்தது வெங்கலக் கடையில் யானை நுழைந்தது போல இருந்தது. நீண்ட காலப் பழக்கம் ஆதலால் வாடா, போடா என்ற வசனங்களைக் கேட்ட எனக்கு அது புதிதாக இருந்தது, ஏனெனில் என் வீட்டிற்கு என் தந்தையாரைப் பார்க்க வருவோர் தினமணி பொறுப்பாசிரியர் என்ற முறையில் மிகுந்த மரியாதை தருவர்.

 

 

ஆகவே திரு பி.எஸ். ராமையா வீட்டில் அமர்ந்த போது அவரது பழைய கால நினைவுகளைக் கிண்டி விட்டேன். சரசரவென்று அவர் அந்த மணிக்கொடி காலத்தைப் பிட்டு வைத்தார். அவர் பேசுவதே ரஸமாக இருந்தது. ஐந்து ரூபாய் சந்தாவாக வந்தால் அன்று தீபாவளிக் கொண்டாட்டம் தானாம்! அனைவரும் நடந்தே சென்று ஒரு பெரிய ஹோட்டலில் விருந்து போல சாப்பிட்டு உற்சாகமாக வந்து அடுத்த இதழின் பணியைத் தொடங்குவார்களாம்.

 

 

 

பின்னால் தனது மணிக்கொடிக் காலம் என்ற நூலில் எனது தந்தையாரைப் பற்றி பி.எஸ்.ராமையா குறிப்பிட்டிருக்கிறார். அவரது மணி விழாவைப் பெரிய அளவில் நடத்துவது என இலக்கிய அன்பர்களால் தீர்மானிக்கப்பட, என் தந்தையாருடன் நானும் வத்தலகுண்டு சென்றேன்.

 

 

வத்தலகுண்டு ஒரே விழாக்கோலம் பூண்டிருந்தது. மேளதாளத்துடன் திரு ராமையா அழைத்து வரப்பட்டார். திரு சி.சு.செல்லப்பா உற்சாகமாக ஆடி ஓடி அனைவரையும் வரவேற்றார். திரு ராமையாவின் முகம் மலர்ந்திருந்தது. வாழ்நாளிலேயே தன்னை கௌரவித்துவிட்டார்களே தமிழர்கள் என்று நினைத்தாரோ, என்னவோ!

 

 

கையில் காசு இல்லாமல் ஈஸி சேரை முறித்து விறகாகவும் அவர் ஆக்கியதுண்டு. பணம் ஆயிரக்கணக்கில் புரள லண்டனிலிருந்து,, “சந்தானம் உடனடியாக இங்கு வந்து விடு” என்று உற்சாகமாக அவர் என் தந்தைக்கு கடிதம் எழுதியதும் உண்டு. தமிழ் ஜீனியஸாக விளங்கிய அவர் மூலம் அவர்களது பழைய மணிக்கொடிக் காலத்தைப் பற்றியும் பாரதியார் பாடல்களைப் பரப்ப அவர்கள் எடுத்த முயற்சிகளையும் உணர முடிந்தது.

 

 

‘வெடிபடு மண்டலத் திடிபடு தாளம் போட’ என்ற பாட்டை எனது தந்தையார் ஞாயிற்றுக்கிழமைகளில் மதிய நேரத்தில் பாடும் போது காளி நேரில் நர்த்தனம் ஆடும் பிரமை எனக்கு உண்டாகும். அன்னை அன்னை அன்னை ஆடும் கூத்தை நாடச் செய்தாய் என்னை என்ற வரிகளை உச்சஸ்தாயியிலும் அமைதியாக இறக்கமாகவும் பாடும் போது பாரதியின் சக்தி ஆவேசத்தை சுற்றி இருந்து கேட்கும் எங்களால் சுலபமாக உணர முடிந்தது.

 

 

லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனா என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்து அதில் கரீனினா என்பதை கரீனாவாக தமிழ் படுத்தியதன் காரணத்தையும் குறிப்பிட்டார். (தமிழில் கரீனினாவின், கரீரினாவை என்று வருவதைப் படிக்க வாசகர்கள் சிரமப்படுவார்கள் என்பதால் கரீனா என்ற மாற்றம் ஏற்பட்டது!)

 

 

தெய்வீகப் பணி

 

சுவாமிஜி கிருஷ்ணாவின் உபதேசத்தால் அதிகாலையில் கணபதி ஹோமம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என் தந்தையார். அச்சன்கோவிலுக்கு புஷ்பாஞ்சலிக்காக சென்றது, தர்மபுரம் திருவாவடுதுறை ஆதீனங்களில் நடத்தப்படும் திருமந்திர மற்றும் சைவ மகாநாடுகளில் பங்கேற்றது, பிரசாந்தி நிலையத்தில் ஸ்ரீ சத்யசாயி பாபாவை தரிசித்தது, இளையாத்தங்குடியில் பெரியவாளை தரிசித்தது, சிருங்கேரி மஹா சந்நிதானம் எங்கள் இல்லத்திற்கு வந்தது என ஏராளமான நிகழ்ச்சிகளை உணர்ச்சிபூர்வமாக அனுபவித்து இறையருளை அனுபவித்தோம். ஸ்ரீ சத்யசாயி பாபாவிடம் எனது தந்தையார் அவர் மீது தான் இயற்றிய கீர்த்தனங்களை சமர்ப்பித்தபோது அது பாடியபோதே சமர்ப்பிக்கப்பட்டதாகவும் பதங்கள் நன்கு வந்துள்ளன என்றும் கூறியதைக் கேட்டு நான் அதிசயித்துப் போனேன்.பாபா அவரை ஆபட்ஸ்பரியில் நடந்த மகாநாட்டில் ஒரே மேடையில் தன்னுடன் பேசுமாறு அழைத்தார்,

இதே போல திரு முத்துராமலிங்க தேவரும் என் தந்தையாரை தலைமை தாங்க அழைத்து மதுரையில் தெய்வீகப் பணியைப் பரப்பி வந்தார்.

 

 

பத்திரிகைப் பணி

எமர்ஜென்ஸி காலத்தில் தினமணி தலையங்கப் பகுதியை வெற்றிடமாக வெளியிட்டுத் தன் எதிர்ப்பைத் தெரிவித்தது. அந்தக் காலத்திலும் அதற்கு முன்னும் பின்னரும் திரு ராம .கோபாலன் உள்ளிட்டோர் எனது இல்லத்திற்கு அடிக்கடி வந்து ஜனநாயகம் தழைக்க வேண்டிய அவசியத்தைப் பகிர்ந்து கொள்வர். எமர்ஜென்ஸி நீக்கப்பட்ட போது ஜனநாயகம் புதிய பிறப்பை எடுத்தது. அந்த கால கட்டத்தில் அரசு அதிகாரிகள் ஒழுக்கம் உள்ள சீலர் என்று என் தந்தையாரைப் பாராட்டி தினமணி அவசர நிலையைக் கடுமையாக எதிர்த்த போதிலும் தங்களின் அதீத செய்கைகள் எதையும் செய்யவிடவில்லை.

 

 

பத்திரிக்கை பணி என்பதால் அதுவும் தினசரி என்பதால் அன்றாடம் நூற்றுக் கணக்கான நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கும். இவற்றை சமூகப் பொறுப்புடன் அவர் கையாண்டு செய்திகளைப் பிரசுரித்து வந்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

ராமேஸ்வரத்தில் கடல் பொங்கி ஊருக்குள் வந்து விட்டது என்று கேள்விப்பட்டவுடனேயே ஒரு சிறிய காரில் நேரடியாக என்ன நடந்தது என்பதைப் பார்க்கத் தந்தையார் கிளம்பினார். விவரத்தின் முழு தாக்கமும் தெரியாத சிறுவனான நானும் காரில் ஏறி அமர்ந்து கொண்டேன். மானாமதுரைக்கு முன்பாகவே கடல் சாலையை மூட சாலையைக் கண்டுபிடிக்க பல ஆட்கள் இறங்கி இரு பக்கமும் சாலையின் ஓரத்தில் இருந்து சாலையின் எல்லையைக் காண்பித்தவாறே கார்களை மெதுவாக வழி நடத்திச் சென்றனர். போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராமையா அரசு வாகனங்களுடன் வந்தார்.

மானாமதுரையில் ஓரிடத்தில் வாகனங்களை நிறுத்தி  அனைவரையும் பின் தொடர வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.நிலைமையின் தீவிரம் அவருக்கும் ஏனையோருக்கும் கொஞ்சம் கொஞ்சமாகப் புலப்பட ஆரம்பித்தது.ஒரு ரயிலையே காணோம் என்ற செய்தி வர ஆரம்பித்திருந்தது. உடனே என் தந்தையார் மதுரை திரும்பி அச்சில் ஓடிக் கொண்டிருந்த பத்திரிக்கையை நிறுத்தி நேரில் கண்ட நிலைமையை பிரசுரித்தார்.

 

 

ராமநாதபுர தினமணி நிருபர் திரு ஆதிநாராயணன் ஒரு தோணி மூலமாக ராமேஸ்வரத்திலிருந்து வந்து உலகத்திற்கு ராமேஸ்வரத்தின் நிலைமையை தினமணி மூலமாக அறிவித்தார். உடனே மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

இது போல ஆபத்து அல்லது அவசர காலங்களில் செய்தித்தாளின் முழு பலத்தையும் மக்களின் நலனுக்காக பலமுறை அவர் அர்ப்பணித்திருக்கிறார்.

 

 

 

செய்தித் தாள் என்பதே அன்றாட நிகழ்ச்சிகள் ஆயிரமாயிரத்தை எடிட் செய்து ஆறு அல்லது பத்துப் பக்கங்களில் கொடுப்பது தான். இதில் வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டிருந்த எடிட்டரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடிட் செய்து சுருக்குவது முடியாத காரியம். ஏனெனில் அவை ஒவ்வொன்றும் சமுதாய நலனுக்காக பத்திரிக்கை எப்படி பாடுபட வேண்டும் என்பதை உணர்த்தி வந்ததால் தான்!அவற்றில் முக்கியம் அல்லாதது எதுவும் இல்லை!!

 

 

தந்தயாரின் மறைவை தாங்கிக் கொள்ள முடியாத ஒருவர் அவர் ஒரு மஹரிஷி போல என்று குறிப்பிட்டுப் புலம்பிக் கொண்டே இருந்தார்.

 

பணம், சொத்து, புகழ் இவற்றுக்கெல்லாம் ஏங்காமல் “என் கடன் சமுதாயம் நலன் பெற பணி செய்து கிடப்பதே” என்பது தான் மஹரிஷிக்கு இலக்கணம் என்றால் அவரும் ஒரு மஹரிஷி தான் என்று எனக்கும் தோன்றுகிறது.

 

**************

 

 

 

மதசார்பற்ற (செகுலரிஸம்) கொள்கை சரியா? (Post No 3006)

razan karunanidhi

 

Article Written S NAGARAJAN
Date: 26 July 2016
Post No. 3006
Time uploaded in London :– 7-59 AM
( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

செகுலரிஸம் சரியா?
ச.நாகராஜன்
இன்று கடைப்பிடிக்கும் வோட் பேங்க் அர்த்தத்தில் செகுலரிஸம் சரியா?
சற்று அலசிப் பார்ப்போம்.
செகுலரிஸம் என்றால் ஹிந்து மதத்தின் எந்த அம்சமும் ஒதுக்கப்பட வேண்டும், மற்ற மதங்களுக்கு குறிப்பாக கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாத்திற்கு தன்னுடைய தலையை வணங்கி விட்டுக் கொடுக்க வேண்டும், குனிந்து குனிந்து குட்டு வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் அரசியல் கட்சிகளின் எண்ணமாக இருக்கிறது – சிவ சேனா, ஹிந்து முன்னணி, பாரதீய ஜனதா பார்ட்டி போன்ற சில கட்சிகளைத் தவிர.
இது ஏன்?
கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர் ஓட்டுக்களைப் பெற்று விடலாம் என்ற தீய ஆசை தான்!
நமது அரசியல் சட்டம் (Constitution) இப்படிச் சொல்கிறது:
‘We the people of India have resolved to constitute India into …. …a Secular Republic “
ஆச்சரியமாக இருக்கிறது. இந்திய மக்கள் இப்படியா சொன்னார்கள். ஒரு சில தலைவர்களே அரசியல் லாபத்திற்காக இப்படி அரசியல் சட்டத்தில் சொன்னார்கள்!
இன்று 120 கோடி மக்களிடம் இந்த வரியை ஓட்டிற்கு விட்டால் அந்த வாசகங்கள் உருப்படுமா? தேறுமா?
தேறாது.
அரசியல் சட்டத்தில் மைனாரிடிகளைப் பாதுகாக்க 29 மட்டும் 30 ஆகிய பிரிவுகள் இணைக்கப்பட்டன.
இவற்றை 25.2b யுடன் இணைத்துப் பார்த்தால் அதிர்ச்சி தான் மிஞ்சும்?
ஏன், எப்படி?
இவற்றில் ஹிந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், புத்தமதத்தினர் சொல்லப்பட்டனர்.
கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் விடப்பட்டனர்.
ஏன்?
அவர்கள் தாம் மைனாரிட்டியாம்!
பாவம், பார்ஸிகளைக் காணவே காணோம்.
கப்பலில் வந்த பார்ஸி இனத்தினர் ஒரு தூதுவரை ஹிந்து அரசனிடம் அனுப்பினர். இங்கு வந்து தங்க அனுமதிக்க வேண்டும் என்ற தூதுவரின் கோரிக்கையைக் கேட்ட ஹிந்து அரசன் ஒரு கிண்ணத்தில் பாலை முழுவதுமாக தளும்பத் தளும்ப நிரப்பி அதை தூதுவரிடம் கொடுத்து கப்பலில் உள்ள உங்கள் தலைவனிடம் நான் கொடுத்ததாகக் கொடுங்கள் என்றான்.
ஒன்றும் புரியாத தூதுவர் அந்தக் கிண்ணத்தை அப்படியே தலைவனிடம் சேர்ப்பித்து நடந்ததைச் சொன்னார்.
தலைவரோ அந்தக் கிண்ணத்தில் இருந்த பாலில் ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு அதை மீண்டும் சென்று மன்னனிடம் கொடுக்கச் சொன்னார்.
தூதுவர் நடந்ததை மன்னனிடம் சொல்ல சிரித்தவாறே அவன் அனைவரும் உள்ளே வாருங்கள் என்று அனுமதி கொடுத்தான்.
இதில் என்ன அர்த்தம் பொதிந்து இருக்கிறது என்பதை அறிய அவையில் அனைவரும் ஆர்வம் கொண்டனர்.
மன்னன் விளக்கினான்.
“எனது நாட்டில் கிண்ணத்தில் முழுவதுமாக உள்ள பால் போல மக்கள் நிரம்பியுள்ளார்கள், உங்களுக்கு இங்கு இடமில்லையே’ என்று சொல்லி அனுப்பினேன். இடமில்லையே என்ற ஆதங்கத்தில் சொன்னதை பார்ஸி தலைவர் புரிந்து கொண்டு சர்க்கரையை அதில் அள்ளிப் போட்டார்.
உங்கள் மக்களுடன் மக்களாக பாலில் சர்க்கரை போலக் கலந்து விடுகிறோம் என்றார் அவர்.
எப்படிப்பட்ட பதில்!
அருமையான உணர்வுகளைக் கொண்ட பார்ஸிகளை அனுமதித்து உள்ளே வரச் சொன்னேன் என்றான் ஹிந்து அரசன்.
அன்று பார்ஸிகள் கொடுத்த வாக்கை இன்று வரை அவர்கள் காப்பாற்றி வருகின்றனர்.
ஒரு கலவரம், ஒரு மத மாற்றம், ஒரு கிளர்ச்சி – ஊஹூம், பார்ஸிகளிடமிருந்து இன்று வரை இந்தியாவில் ஒன்று கூட எழவில்லை. ஒட்டு மொத்த இந்தியாவின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள இனம் பார்ஸி இனம்.
கொடுத்த வாக்கை தலைமுறை தலைமுறையாகக் காப்பாற்றும் மக்கள் என்றால் அவர்கள் பார்ஸிகளே!
இந்தப் பார்ஸிகளை எந்த பட்டியலிலும் சேர்க்கவில்லை நமது அரசியல் சட்டம்.
புத்த மதத்தினர்
ஜைன மதத்தினர்
சீக்கியர் – இவர்கள் மைனாரிடி இல்லையாம்.
கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் மைனாரிடியாம்?
எந்த அடிப்படையில்?

secular-4
எண்ணிக்கையிலா? அப்படியானால் மேலே சொன்னவர்கள்: எண்ணிக்கையும் குறைவு பட்டது தானே!
ஆக அரசியல் சுய லாபத்திற்காக ஒரு விஷ வித்து விதைக்கப்பட்டது.
அதன் பலனை இன்று சுதந்திர பாரதம் அனுபவித்து வருகிறது.
சமத்துவம் – Equality – என்பது போய் செகுலரிஸம் சமத்துவமற்ற ஹிந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என்று ஒரு பிளவை ஏற்படுத்தி விட்டது.
இதனால் மதமாற்றம், தீவிரவாதிகளின் மிரட்டல்கள், குண்டுவெடித் தாக்குதல் என்று தேவையற்ற அனைத்து தீமைகளும் அணிவகுத்து பாரதத்திற்கு அச்சுறுத்தல்களாக விளங்குகின்றன!
ஒரு பொது சிவில் சட்டம் அல்லவா இங்கு தேவை!
இந்திய அரசியல் சட்டம் ஹிந்துக்கள் மீது – அவர்கள் வாழ்க்கை முறை மீது, அவர்களின் மணச் சடங்கு, சுவீகாரம் உள்ளிட்டவற்றின் மீது – மட்டும் பாயும்.
ஆனால் இஸ்லாம், கிறிஸ்தவம் என்றால் ஓடும்!
இது என்ன செகுலரிஸம்?
அதிசய செகுலரிஸம்?!
சற்று இன்னும் யோசித்துப் பார்ப்போம்!

-தொடரும்

உலகை வலம் வருவதற்கு எளிய வழி! (Post No.2989)

globe trotting 2

Written by London swaminathan

Date:20 July 2016

Post No. 2989

Time uploaded in London :–21-21

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

உலகை வலம் வருவதற்கு விநாயகரும் முருகனும் பின்பற்றிய தந்திரங்களை நாம் திருவிளையாடல் புராணம் மூலம் அறிவோம். ஒரு மாம்பழத்தைப் பெறுவதற்காக முருகன்  மயில் மீது வலம் வந்தார். ஆனால், அவனது அண்ணனான பிள்ளையாரோ தாய், தந்தையான பார்வதி-பரமேஸ்வரனைச் சுற்றி வந்து ஒரு மாம்பழத்தைப் பரிசாகப் பெற்றார்.

 

இதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா என்றால் ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் இருக்கிறது:–

 

பூ ப்ரதக்ஷிண ஷடகேன காசீயாத்ரா (அ)யுதேன ச

சேது ஸ்நான சதைர்யச்ச தத்பலம் மாத்ருவந்தனே

 

தாயை வணங்குவதானது ஆறு முறை உலகை வலம் வந்ததற்கும், பத்தாயிரம் முறை காசியில் கங்கையில் குளித்ததற்கும் நூற்றுக் கணக்கான முறை ராமேஸ்வரத்தில் கடலில் குளித்தற்கும் மேலானது.

 

இப்போது புரிகிறதா? தாயை ஒரு முறை வணங்கிவிட்டால் ஆறுமுறைக்கு மேல் உலகை வலம் வந்ததற்குச் சமம்.

 

Xxx

babay, mother

 

 

தாயிற் சிறந்ததோர் கோயிலில்லை

 

சம்ஸ்கிருதத்தில் இன்னொரு வசனம் இருக்கிறது:–

“ந காயத்ரயா: பரோ மந்த்ரோ, ந மாதுர் தைவதம் பரம்”

 

பொருள்:–

காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமில்லை

தாய்க்கு  மிஞ்சிய தெய்வமில்லை.

 

Xxx

 

 

மனு சொல்கிறார்: ஆயிரம் தந்தை = ஒரு தாயார்

 

பத்து உபாத்தியாயர்களைவிட ஒரு ஆசார்யார் (குரு) பெரியவர்; அப்படிப்பட்ட நூறு ஆச்சர்யார்களைவிட தந்தை பெரியவர்;  ஆனால் தாயாரோ ஆயிரம் தந்தைகளைவிடப் பெரியவர்.

 

–மனு ஸ்மிருதி 2-145

 

–SUBHAM–

பெண்ணுக்கு புதிய இலக்கணம்: பெண் – உரிச் சொல்; ஆண் -பெயர்ச் சொல் (Post No.2986)

IMG_3681

Written by London swaminathan

Date:19 July 2016

Post No. 2986

Time uploaded in London :–16-43

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

கேசவ சந்திர சென் என்னும்  பெரியார் பெண்களை உரிச் சொல் (Adjective) என்றும் ஆண்களை பெயர்ச் சொல் (Noun) என்றும் வருணித்துள்ளார்.

 

எந்த மொழி இலக்கணத்திலும் பெயர்ச் சொல்லுக்கு அணுசரனையாக, அழகூட்டுவதாக உரிச் சொல் வரும். (எ.கா. அழகான ஆண், அழகான பெண்).

 

வேதத்திலும் இதுபோன்ற உவமை இருக்கிறது. அக்னிதேவனின் பிரகாசம், ஒரு வீட்டிலுள்ள பெண்மணியின் பிரகாசத்தைப் போல் இருந்தது என்று வேதகாலப் புலவர் பாடுகிறார். மனைவியை குடும்ப விளக்கு என்று சங்க இலக்கியமும், சம்ஸ்கிருத இலக்கியமும் போற்றும்.

 

வால்மீகி ராமாயணத்தில் சீதையும் ராம பிரானிடம் சொல்லுகிறாள்:-

 

உலகம் என்னைப் பற்றி கவலை கொள்ளாது

நானும் உங்கள் ஒருவரையே உண்மை என்று நம்பி இருக்கிறேன்

 

இதையே கொஞ்சம் மாற்றிப்போட்டு, ராமனும் சீதையிடம் நான் உன்னையே உண்மை என்று நம்பியிருக்கிறேன் என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். ஆண்கள், பெண்களிடத்திலும் , பெண்கள் ஆண்க ளிடத்திலும் அவ்வளவு விசுவாசம் கொண்டால், வாழ்க்கையின் துயரங்கள் மறையும்; பள்ளங்கள் மேடுகளாகிவிடும்.

 

இதையெல்லாம் சுட்டிக்காட்டும் அப்துல்லா யூசுப் அலி என்னும் பாரிஸ்டர், ஆணைப் பெயர்ச் சொல் என்றும், அதை செயல்பட வைக்கும் வினைச் சொல் (Verb) பெண் என்றும் வேடிக்கையாக வருணிக்கிறார்.

 

அமெரிக்காவில் ஒரு பொன்மொழி — பெண் மொழி — உளது. பெண்கள், இங்கிலாந்தில் கலியாணத்துக்கு முன்பாக சுதந்திரமானவர்கள்; பிரான்ஸில் கலியாணத்துக்குப் பின்னர் சுதந்திரமானவர்கள்; அமெரிக்காவிலோ எப்போதுமே சுதந்திரமானவர்கள்.

IMG_3686

மனு என்ன சொன்னார்: பெண்கள் எப்போதுமே பாதுகாக்கப்பட  வேண்டியவர்கள்: சிறுமியாக இருக்கையில் தந்தையும், இளமையோடு இருக்கையில் கல்யாணமானவுடன் கணவனும் வயதான காலத்தில் மகனுன்களும் பெண்களைப் பாதுகாக்க வேண்டும்; அவர்களை எப்போதும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்கிறார்.

 

பெண்களுக்கு சகோதரனும், கணவனும் நகை, நட்டுகளையும் துணி மணிகளையும் வாங்கித் தந்து சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்; பெண்கள் மகிழ்ச்சியோடு இருக்கும் இடத்தில் தெய்வம் வசிக்கும்; பெண்கள் துயரக் கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் வேரோடு சாயும் என்றும் மனு பாடி வைத்தார்.

 

பெண்களுக்கு குடும்ப பாரம் ஒன்றே போதும்; வேலை செய்யும் பாரம் வேறு வேண்டாம் என்று இந்துக்கள் நம்பினர். ஆனால் தர்மம் என்பது காலத்துக்கு காலம் மாறும் என்று மனு எழுதிவைத்தார். அதன்படி இன்று பெண்களும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

 

ஆனால் அந்த பொருளாதார சுதந்திரம் வந்தவுடனே அடங்காபிடாரித்தனமும், கட்டுப்பாடின்மையும், விவாக ரத்துகளும்  — அதனுடனேயே பவனி வருவதைக் காண்கிறோம். காலத்தின் கோலம் இது.

–SUBHAM–

 

அவன் யார் தெரியுமா?

q mark

Article Written S NAGARAJAN
Date: 15 July 2016
Post No. 2972
Time uploaded in London :– 5-48 AM
( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

அவன் யார்? – 1
ச.நாகராஜன்
அவன் பெயர் சங்கரன்.  ஊர் கேரளாவில் உள்ள திருச்சூர். தந்தையும் தாயும் அந்தண வகுப்பைச் சேர்ந்தவர்கள். பயபக்தியுடன் நெறியுடன் வாழ்ந்து வரும் குடும்பங்களுள் அந்தக் குடும்பமும் ஒன்றாக இருந்தது.
இள வயதில் ஒரு நாள் கனவு ஒன்று அவனுக்கு வந்தது. அதில் அருகிலிருந்த சிவன் கோவிலிலிருந்து பிரகாசமான ஒளி ஒன்று தோன்றி அவனை நோக்கி வந்து அவனைச் சுற்றி வளைத்தது போல காட்சி ஒன்றைக் கண்டான்.
அருகில் இருந்த ஒல்லூரில் உயர்நிலலப் பள்ளியில் அவன் படித்து வந்தான்.
அவனுக்குப் பத்து வயது நடந்து கொண்டிருந்த போது ஒரு நாள் அவனது தாயாருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது.
நல்ல மழை. ஆற்றின் மறு க்ரையில் வைத்திய்ர் இருந்தார். ந்தியில் படகைச் செலுத்திப் போக வேண்டும். யாராவது தன்னுடன் துணைக்கு வருவதாக இருந்தால் படகைச் செலுத்தத் த்யார் என்றார் வீட்டிலிருந்த சமையல்காரர்.
சங்கரன் உடனே முன் வந்தான். மாத்ரு பக்தி ஒரு பக்கம் என்றால் சாகஸ செயல்களைச் செய்ய வேண்டும் என்ற இயல்பான துடிப்பு இன்னொரு பக்கம்.
பின்னாளில் அவன் வாழ்க்கையில் சாதித்த எல்லா காரியங்களுக்கும் அடிப்படையாக் இந்த சாகஸ துணிச்சல் அமைந்தது.
திருச்சூர் நூலகத்தில் ஒரு நாள் நண்பன் ஒருவன் அவனிடம் இந்தப் புத்தகத்தைப் படிக்கிறாயா என்று கேட்டான்.
அந்தப் புத்தகத்தின் பெயர் ‘தி காஸ்பல் ஆஃப் ஸ்ரீ ராமகிருஷ்ணா’
ஆவலுடன் அதைக் கையில் எடுத்த சங்கரன் அதில் நூறு பக்கங்களைப் படித்து முடித்த பிறகே கீழே வைத்தான்.
அந்தப் புத்தகம் அவன் வாழ்க்கையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

q uestion mark 2
ராமகிருஷ்ணர் மீது அளவிலா பக்தி அவனுக்கு ஏற்பட்டது. ராமகிருஷ்ண க்தாம்ருதத்தை வழங்கிய மாஸ்டர் மஹாசய (எம் என்று அழைக்கப்படுபவர்) மீதும் அவனுக்கு பக்தி ஏற்பட்டது.

1924ஆம் வருடம். அவனுக்கு பதினைந்தரை வயது தான்.
ஆனால் உலக வாழ்க்கையைத் துறந்து ராமகிருஷ்ண இயக்கத்தில் சேர்ந்து விட வேண்டுமென்ற முடிவான தீர்மானத்துக்கு அவன் வ்ந்து விட்டான்.
1926இல் பள்ளியில் இறுதித் தேர்வு முடிந்தது. டைப்ரைட்டிங்கும் ஷார்ட் ஹாண்டும் படிக்க திருச்சூர் இன்ஸ்டிடியூட்டில் ஒன்றில் அவன் சேர்ந்தான்.
அங்கிருந்து மதராஸ் ராமகிருஷ்ண மடத்திற்கு ஒரு கடிதம் எழுதினான். அதில் அங்கு சேர வேண்டும் என்ற தன் விருப்பத்தை எழுதினான். பதில் வந்தது. மதராஸ் மடத்தில் இடம் இல்லை என்றும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மைசூர் மடத்தை அணுகலாம் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சங்கரன் மடத்தில் சேர்ந்தானா? அந்த சங்கரன் யார்?
அடுத்த பகுதி வ்ரும் வரை பொறுத்திருங்கள்!
-தொடரும் .