5 Jun 2016 – இரவில் பால் சாதம், பகலில் தயிர் சாதம் ஆயுளை அதிகரிக்கும்! (Post No 2869) … (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). Contact …
4 Jun 2016 – இரவில் பால் சாதம், பகலில் தயிர் சாதம் ஆயுளை அதிகரிக்கும்! (Post No 2869). Written by … (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). Contact .
1-4-2019லிருந்து பாக்யா இதழ் மாதம் இருமுறை வெளிவரும் இதழாக
மாறியுள்ளது. 1-5-2019 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஒன்பதாம் ஆண்டு
ஏழாம் கட்டுரை) கட்டுரை – அத்தியாயம் 423
அறிவியல் துளிகள்
உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 1
ச.நாகராஜன்
tamilandvedas.com,
swamiindology.blogspot.com
உலகின் அதிக சூப்பர் வலுவான மனிதன் யார் தெரியுமா?
ஹூஸ்டனைச் சேர்ந்த டென்னிஸ் ரோஜர்ஸ் (Dennis Rogers) என்பவர் தான் உலகின் அதிக வலுவான
மனிதர்! பள்ளியில் படிக்கும் போது 36 கிலோவுக்கும் குறைவாக இருந்த ரோஜர்ஸ் தொலைக்காட்சியில் வரும் அதிசாகஸ வீரர்களைப் பார்த்து
படிப்படியாக அதைப் போல தானும் செய்ய முடியுமா என்று பார்க்க ஆரம்பித்தார். மிக சுலபமாக
அவரால் அதைச் செய்ய முடிந்தது. எந்த விளையாட்டு வீரரையும் போலத் தன்னால் ஒன்றும் செய்ய
முடியாது என்று நினைத்தவர் அதிசயிக்கத்தக்க விதத்தில் உலகின் பிரபலமான மல்யுத்த வீரர்
ஆனார்.
மிக தடிமனாக இருக்கும் போன் டைரக்டரிகளை மிகச் சுலபமாக அவர் தன் வெறும் கையால் கிழித்து விடுவார். இரும்புத் தகடுகளை வளைப்பது அவருக்கு கைவந்த கலை. கனமான பாத்திரங்களை சுருளாக உருட்டுவது, அல்லது நசுக்கி விடுவது என்பதெல்லாம் அவர் எல்லோருக்கும் முன் செய்து காட்டுவது வழக்கம். யூ டியூபில் அவரது சாகஸ நிகழ்ச்சிகளை அனைவரும் பார்க்க முடிகிறது. அனைவருக்கும் உத்வேகமூட்டும் ரோஜர்ஸ், உடலின் வலு முழுவதும் கைகளில் தான் இருக்கிறது என்கிறார்.
டேனியல் கிஷ் (Daniel Kish) ஒரு
அபூர்வமான கண்ணில்லாத ஆனால் ‘பார்வையுள்ள’ மனிதர். 13 மாதக் குழந்தையாக
இருந்த போது அவரது இரு கண்களும் அகற்றப்பட்டன. பார்வையற்ற மனிதரான அவர் பார்வையுள்ள
அனைவரையும் போல வாழ்க்கையை நடத்த ஆரம்பித்தார். அது எப்படி சாத்தியம்? அவர் எதிரொலியை
வைத்து அனைத்துப் பொருள்களும் எங்கு இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்கிறார். வௌவால்களுக்கே
இது சாத்தியம் என்பதால் அவரை பேட் – மேன் (வௌவால் மனிதன்) என அனைவரும் அழைக்க ஆரம்பித்தனர்.
வாழ்க்கையில் சில கசப்பான சம்பவங்கள் நிகழும் போது அதை எப்படி எதிர்கொள்வது என்பது
தெரியாமல் அனைவரும் விழிக்கின்றனர். குறிப்பாக பார்ப்பது, கேட்பது, பேசுவது போன்ற புலன்
சார்ந்த விஷயங்கள் ஒருவருக்கு இல்லை என்று ஆகி விட்டால் அவர் உடைந்து போய் விடுகிறார்.
ஆனால் அப்படிப்பட்டவர்கள் தனது இதர புலன்களை வைத்து தனது சக்தியை எப்படி விரிவாக்கிக்
கொள்ள முடியும் என்பதை டேனியல் அனைவருக்கும் செய்து காண்பித்து வாழ்க்கையைச் சிறப்பாக்கிக்
கொள்ள வழி காட்டுகிறார். உத்வேகமூட்டும் வௌவால் மனிதன் உண்மையிலேயே உலகின் ஒரு அதிசய
மனிதர் தான்!
நியூயார்க்கைச் சேர்ந்த ஸ்காட் ஃப்ளான்ஸ்பர்க் (Scottt Flansburg)
என்பவர் தான் உலகின் அதிவேக மின்னல் கணக்கு மன்னர் ஆவார். ஒரு கணக்கைக் கால்குலேட்டர்
போடுவதற்கு முன்னாலேயே ஒரு சில விநாடிகளில் மனதினாலேயே அந்தக் கணக்கைப் போட்டு விடையைச்
சொல்லி அசத்துபவர் இவர். அவர் கணக்கைப் போடும் போது எம் ஆர் ஐ ஸ்கான் செய்து பார்த்த
விஞ்ஞானிகள் மூளையில் கார்டெக்ஸுக்கு அருகில் உள்ள ஒரு வித்தியாசமான பகுதியை அவர் பயன்படுத்துகிறார்
என்று கண்டுபிடித்தனர். கணக்கை விளையாட்டாகக் கற்பது எப்படி என்பதை சொல்லிக் கொடுத்து
வரும் அவர் மின்னல் வேகக் கணக்கு போடும் முறை பற்றி புத்தகமும் எழுதியுள்ளார். மேத்
மாஜிக் – Math Magic என்ற அவரது புத்தகம் பிரபலமான ஒன்று. ஹ்யூமன் கால்குலேட்டர் என்ற பட்டத்தை கின்னஸ்
வோர்ல்ட் ரிகார்ட் அவருக்கு 2001,2003 ஆண்டுகளில் தந்து அவரை கௌரவித்தது.
இதே போல இன்னொரு கணித மன்னன் ரான் ஒயிட் (Ron White) என்பவர். கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் இவர். ஆனால் மனதில் ஒரு முறை ஏற்றியதை இவர் மறக்கவே மாட்டார். ஆப்கானிஸ்தானத்தில் உயிர் நீத்த ஹீரோக்கள் 2300 பேர்களின் பெயரையும் விடாது வரிசையாகச் சொல்வார் இவர்.
பருந்துப் பார்வை உடைய ஒரு அதிசய மனிதர் பைரன் ஃபெர்கூஸன் (Byron
Ferguson). இவரை 15/20 பார்வைக்காரர் என அழைக்கின்றனர். அதாவது மற்றவர்கள்
15 அடி தூரத்தில் பார்க்கும் ஒரு பொருளை இவரால் 20 அடி தூரத்தில் இருந்து பார்க்க முடியும்.
நான் ஒன்றைப் பார்த்தால் போதும் அதை என்னால் குறி பார்த்து அடிக்க முடியும் (I
believe if I can see it I can hit it) என்பது இவரது புகழ் பெற்ற மணி மொழி. ஆம்,
கையில் வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டால் வெகு தூரத்தில் உள்ள இலக்கை இவர் குறி
பார்த்து அடித்து விடுகிறார். நம்ப முடியாத இவரது வில்- அம்புக் காட்சிகளை யூ டியூப்
வீடியோ காட்சிகளில் காணலாம். அலபாமாவில் பிறந்த இவர் ஆரம்ப காலத்தில் ஷீட் மெடல் தொழிலாளியாக
வேலை பார்த்தார். 12வது வயதில் வில்லையும் அம்பையும் கையிலேந்தி வேட்டையாடுவதில் வல்லவரானார்.
ஒரு கடையில் வேலை பார்த்து வந்த வாண்டா என்ற பெண் இவரிடம் வில் வித்தையைக் கற்றுக்
கொள்ள வர காதல் வித்தை மலர்ந்து அவரையே மணமுடித்தார்.
உலகெங்கும் தனது வில் வித்தையைக் காண்பிக்கவே மக்கள் இந்த வில் வீரரை பல ஷோக்களுக்கும்
அழைக்கலாயினர். ஜனவரியிலிருந்து மே முடிய வார இறுதி நாட்களில் தன் ஆர்ச்செரி ஷோவில்
ஈடுபடும் இவர் ஜூன், ஜூலை, ஆகஸ்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெறுகிறார்.
செப்டம்பரில் பெரும் கண்காட்சிகளில் பங்கு கொள்கிறார்.
மக்கள் இவரை மாடர்ன் ராபின்ஹூட் என்று செல்லமாக அழைக்கின்றனர்.
அடுத்து இன்னும் சில அதிசய மனிதர்களைப் பார்ப்போம்.
அறிவியல் அறிஞர் வாழ்வில் ..
கணினி நிபுணர் ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஏராளமான
சம்பவங்களில் இன்னும் ஒன்று :
2004இல் ஜாப்ஸுக்கு கணைய ஆபரேஷன் முடிந்த பின்னர் கலிபோர்னியாவில் பாலோ ஆல்டோவில் ஸ்டான்ஃபோர்ட் ஷாப்பிங்
சென்டரைத் திறக்க வந்தார். 750 சதுர அடி கொண்ட சின்ன ஷாப் தான் அது. மேற்கூரை வெள்ளை
பெயிண்ட் அடிக்கப்பட்டிருக்க, ஜப்பானிய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சுவர்களின் மேல் பதிக்கப்பட்டிருக்க
காற்று வர வசதியாக மேலே துளைகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தத்தில் அழகிய ஸ்டோர் தான்
அது. பத்திரிகையாளர்களும் பார்வையாளர்களும் திரளாகக் குழுமி இருந்தனர். ஸ்டீவ் ஜாப்ஸ்
கடையைத் திறக்க இருந்த கடைசி நிமிடத்தில் அதைத் திறக்க மறுத்து விட்டார். காரணம் கடையில்
தரைப் பகுதியில் எராளமான காலடித் தடங்கள் பதிந்து இருந்தன. அதை அமைத்த பணியாளர்களும்
எஞ்ஜினியர்களும் கடுமையாக உழைத்து அதை உருவாக்கி இருந்தாலும் கடைசியில் தரையைச் சுத்தம்
செய்யவில்லை.சுவர்களிலோ அவர்களின் கைத் தடங்கள் இருந்தன.
ஒருவாறாக ஜாப்ஸிடம் பேசி கடை திறக்கப்பட்டது. அன்றிரவே அதை அமைப்பதில்
ஈடுபட்டிருந்த அனைத்து பணியாளர்களையும் எஞ்ஜினியர்களையும் வரவழைத்த ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களைத்
தரையில் அமர வைத்து அதைச் சுத்தமாக்க வைத்தார். சுவர்களும் நன்கு துடைக்கப்பட்டன.
பின்னால் தரையின் டிசைனையே அவர் மாற்றிய பின்னர் தான் அவர் திருப்தியுற்றார்.
ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்பது ஸ்டீவ் ஜாப்ஸின் அறிவுரையாக
இருந்தது!
சென்னையிலிருந்து வெளியாகும்
கோகுலம் கதிர் 2019 மே
இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
3 D மாஜிக் வீ டுகள்!
ச.நாகராஜன்
பாண்டவர்களுக்காக மயன் நிர்மாணித்த அரண்மனை ஒரு மாயாஜால அரண்மனை
என்று மஹாபாரதம் வாயிலாக அறிகிறோம். காண்டவ வனத்தை எரித்த போது மயன் பாண்டவர்களுக்குச்
சேவை செய்ய முன் வர கிருஷ்ணரின் வழிகாட்டுதலில் அற்புதமான ஒரு அரண்மனையை மயன் அமைத்தான்.
நீர் இருக்கிறது என்று மெதுவாக நடந்தால் அங்கு நீர் இருக்காது. வெறும் தரை என்று நினைத்து
நடந்தால் அது ஒரு குளமாக இருக்கும். தொப்பலாக நனைய வேண்டியது தான்.
இந்த மஹாபாரத மாஜிக் வீ டு இப்போது சாமான்யருக்கும் சாத்தியமாகி
வருகிறது. ஆம்,அறிவியல் செய்யும் அற்புதம் இது.
வீடுகளில் தரைகளில்
பதிக்கும் செராமிக் டைல்ஸ் பற்றி அனைவரும் அறிவோம். பீங்கானால் செய்யப்படும் இந்தத்
தரை பதிகல் தரையை வழுவழுப்பாக வைத்திருக்கும். நீர் விட்டுக் கழுவி தரையைச் சுத்தமாக்குவதை
இது சுலபமாக ஆக்கும். பார்வைக்கோ அழகு; பார்ப்பவர்க்கோ வியப்பு.
இந்த தரை பதிகல்களில் இப்போது ஒரு மாஜிக் நுழைந்திருக்கிறது. அது தான் 3 D தரை பதிகல்கள்.
நீங்கள் நினைத்தபடி
வடிவமைக்கக் கூடிய இந்த பதிகல்களில் உங்களின் ஆர்வத்திற்குத் தக வடிவமைப்பு அமையும்.
விளையாட்டில் ஆர்வம் என்றால் அதற்கென ஒரு வடிவமைப்பு. Landscape
எனப்படும் இயற்கை நிலக்காட்சியில் தான் உங்கள் ஆர்வம் என்றால் அதற்குத் தக ஒரு
டிசைன்! ஆக மனதிற்குத் தக அமையும் பதிகல்கள் வீட்டிற்குள் நுழைவோரை அயர வைக்கும்.
இந்தப் பதிகல்கள்
கம்ப்யூட்டர் மூலமாக வடிவமைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் சித்திரத்தை சீரான
இணைப்புத் தொகுதியாக மாற்றி அதைக் குறிப்பிட்ட அளவிற்குள் ஒவ்வொரு தொகுதியிலும் அமைத்து
இவை உருவாக்கப்படுகின்றன.
இதில் தான் முப்பரிமாண விந்தைகள் தோற்றுவிக்கப்படுகின்றன. அதாவது
நீளம் மற்றும் அகலம் என்ற இரு பரிமாணங்களுடன் ஆழம் என்பதையும் சேர்த்துப் பார்த்தால்
வாழ்க்கையில் நாம் காணும் உயிர்ச் சித்திரங்கள் போலவே வீட்டின் தரையிலும் சுவரிலும்
தோற்றங்கள் அமைகின்றன.
சமையலறை, ஒதுங்குமிடம்,
வரவேற்பறை, படுக்கை அறை என வீடு முழுவதும் மனதிற்கு ஏற்ற ரம்யமான அழகான காட்சிகளை வாழ்நாள்
முழுவதும் பார்க்கும் போது மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவை தோன்றவே தோன்றாது.
காட்சிகள் நம்முடன்
பேசும். கற்களின் ஸ்டைல் நம்மை உயர்த்தும்.
இந்த வடிவமைப்பு
நெகிழ்வானதும் கூட; அதாவது இஷ்டத்திற்குத் தக மாற்றிக் கொள்ளக் கூடியவை. இவை பலவகையிலும்
கிடைக்கக் கூடியவை.
எந்த ஒரு நிலைக்கும்
தக மாற்றி அமைத்துக் கொள்ளக் கூடியவை. துல்லியமானவையும் கூட.
ஆக இவ்வளவு சிறப்பு அம்சங்களைக் கொண்ட இந்த டைல்ஸ் இன்று எல்லோருடைய வீட்டிலும் அரசோச்ச ஆரம்பித்து விட்டதில் வியப்பே இல்லை.
இதன் விலையும் கூட
நடுத்தர வர்க்கத்தினருக்கு உகந்த விலையாக அமைகிறது. சதுர அடிக்கு சுமார் 250 ரூபாயில்
அற்புதமான காட்சி அமைப்புகள் கிடைக்கின்றன.
நீடித்து உழைக்கும் இவற்றிற்கு இந்த விலை சரிதான் என்பதை காலம்
உணர்த்தும்.
ஆங்கிலத்தில் மேலே
கூறிய அனைத்தையும் சுருக்கமாகச் சொல்லி விட முடியும் : Open, Optimized for streaming and
rendering, Designed for 3D, Interactive, Styleable, Adaptable, Flexible,
Heterogeneous, Precise, Temporal
இவற்றின் இன்னொரு சிறப்பு நமக்குக் கிடைக்கக்
கூடிய வண்ணங்கள் தாம். எப்படிப்பட்ட வண்ணக் கலவையையும் இதில் உருவாக்கிக் காட்ட
முடியும்.
கணினியில்
என்னென்ன வித்தைகள் முடியுமோ அத்தனை வித்தைகளும் 3 D பதிகல்களில்
அடக்கம்.
பதிகல்களின் வரலாறு எகிப்திய நாகரிகத்தில்
ஆரம்பிக்கிறது. அழகானவை, வழுவழுப்பானவை என்பதோடு ராக்கெட்டுகளிலும் கூட இந்தப்
பதிகல்களே உபயோகப்படுத்தப் படுகின்றன. இவை நீடித்து உழைக்கும் அளவு வலுவானவையும்
கூட.
ஆகவே தான் காலம் காலமாக இருந்து வந்த
சிமெண்ட் தரைக்குப் பதிலாக இவை புழக்கத்திற்கு வந்தன.
தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டமாக காலத்தின் தேவைக்கேற்ப இப்போது 3D தொழில்நுட்பம் நடைமுறைக்கு வர இந்த பதிகல்கள் ஒவ்வொரு வீட்டையும் மாஜிக் வீடாக மாற்றி வருகின்றன.
இதைப்
பற்றிப் படிப்பதை விட இவற்றின் படங்களைப் பார்க்கலாம். அல்லது நேரில் ஒரு
வீட்டிற்குச் சென்று பார்க்கலாம் – அப்போது தான் இதன் அருமை தெரியும்.
சென்னையிலிருந்து
வெளியாகும் தினசரியான மாலை மலர் பத்திரிகையில் 29-4-2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
புவி வெப்பமயமாவதால் ஏற்படும் பெரும் அபாயம்!
ச.நாகராஜன்
உலகின்
தட்பவெப்ப நிலை வெகு
வேகமாக மாறி வருகிறது.புவி
வெப்பமடைந்து வருகிறது.
புவி வெப்பம்
அடைவதால் பல்வேறு
உயிரினங்கள் அழிந்து
வருகின்றன; அவற்றின்
உறைவிடங்கள் மறைகின்றன;
சுற்றுப்புறச் சூழல்
அமைப்புகள் பாதிக்கப்படுகின்றன.பூமியை
எதிர்நோக்கியுள்ள அபாயங்களில்
மிகப் பெரிய
அபாயம் புவி வெப்பமாதலே
(Global
Warming) என்பதை விஞ்ஞானிகள்
உள்ளிட்ட அனைவரும்
ஒரு மனதாக
ஒப்புக் கொண்டுள்ளனர்.
சமீபத்திய
ஆய்வுகள் உலகின்
பல்வேறு இடங்களிலும்
உஷ்ணம் அதிகரித்து
வருவதையும் தட்பவெப்ப
நிலையில் சீரற்ற
மாறுபாடுகள் அதிகரிப்பதையும்
அறிவிக்கின்றன. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 22 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் மிக அதிகமான வெப்பத்தை உலகம் கண்டிருக்கிறது.
2015,2016,2017,2018 ஆகிய நான்கு ஆண்டுகள் அதிக வெப்பமுள்ள ஆண்டுகள் என விஞ்ஞானிகள்
தெரிவிக்கின்றனர்.
பசுமை வாய்வுகள் பற்றி ஆய்வு நடத்தும் வோர்ல்ட் மெடியோரோலாஜிகல்
ஆர்கனைசேஷன் (World
Meteorological Organisation – WMO) பசுமை வாயுக்களின் நச்சுப் புகை வெளியேற்றம்
2018இல் மிக அதிகம் என்று அறிவித்ததோடு 2019ஆம் ஆண்டிலும் உலக வெப்பம் கூடுதலாகவே இருக்கும்
என்று கருத்துத் தெரிவித்துள்ளது.
புவி வெப்ப உயர்வானது
இந்தியாவின் பருவநிலை மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை புதிய ஆய்வு
ஒன்றின் முடிவு சமீபத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. வருகின்ற இருநூறு ஆண்டுகளுக்குக்
கோடைகால பருவ நிலையில் இந்தப் பாதிப்பு தொடரக்கூடும் என்பதை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதி நவீன கணினி தொழில்நுட்பத்தின்
மூலமாக பருவநிலை பற்றிய ஆய்வை மேற்கொண்ட ஐரோப்பிய விஞ்ஞானிகளின் குழு சராசரியாக இந்தியாவில்
கோடைகாலத்தில் பெய்யும் மழையின் அளவில் இனி 40 முதல் 70 சதவிகிதம் வரை குறைய வாய்ப்புண்டு
என்று தெரிவித்துள்ளது.
1870ஆம் ஆண்டிலிருந்து
பெய்துள்ள மழை அளவை ஒப்பிட்டுப் பார்த்ததில் இப்படி மழை பெய்கின்ற வாய்ப்பும் குறைந்த
அளவிலேயே உருவாகும் என்பதையும் ஆய்வு தெரிவித்துள்ளது.
தட்பவெப்ப நிலை மாறுபாட்டால்
ஏற்படும் விளைவுகள் வாக்கர் சர்குலேஷன் (Walker Circulation) மூலமாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் மேலை ஹிந்து மஹாசமுத்திரத்திற்கு உயர் அழுத்தப் பகுதிகளைக் கொண்டு வருவது எல்
நினோ ஏற்படும் காலங்களில் மாறி அதனால் இந்தியாவில் பருவ மழை அளவு குறையும் நிலை ஏற்படும்
என்பதைத் தெளிவாக ஆய்வு குறிப்பிடுகிறது.
(எல் நினோ என்பது பருவநிலை சீரற்ற தன்மையைக் குறிக்கும் சொல்)
புவி வெப்பம் உயர்வதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்று இந்தியாவில் நாளுக்கு நாள் வாகனங்கள் வெளிப்படுத்தும் நச்சுப் புகையே.
வளி மண்டலத்தைக்
கார்பன் டை ஆக்ஸைடும் கார்பன் மானாக்ஸைடும் தாக்கி பல்வேறு விபரீதங்களை ஏற்படுத்துவதை
நாம் அனைவரும் அறிவோம். இதற்குக் காரணம் இந்த நச்சுப் புகைகளை வெளியேற்றும் வாகனங்களே.
ஆகவே வாகனங்களுக்கே உரிய நச்சுப்புகை கட்டுப்பாடு விதிகளைக் கடைப்பிடித்தால் மட்டுமே
இதைத் தடுக்க முடியும்.
தொல்படிம
எரிபொருள்களான நிலக்கரி,
பெட்ரோல் உள்ளிட்டவை
எரிபொருளாகப் பயன்படுத்தப்படும்
போது அது காற்றை
மாசுபடுத்துகிறது. சூரிய
கிரணங்களை மேகங்கள்
சூரியனிலிருந்து பிரதிபலிக்க
வைத்து அவை விண்வெளியை
அடையச் செய்கின்றன.
இது ஒரு அசாதாரண
விளைவை ஏற்படுத்துகிறது.
இது க்ளோபல்
டிம்மிங் (Global Dimming) என்ற
சொற்றொடரால் குறிப்பிடப்படுகிறது.
இந்த க்ளோபல்
டிம்மிங்கின் விளைவாக
குறைந்த வெப்பமும்
ஆற்றலும் பூமியை
அடைகிறது. முதலில்
இது நலம் பயக்கும்
ஒன்றாகத் தோன்றினாலும்
இதுவே ஆயிரத்தி
தொள்ளாயிரத்து எழுபதுகளிலும்
எண்பதுகளிலும் எதியோப்பியாவில்
ஏற்பட்ட பஞ்சத்திற்குக்
காரணம் என கண்டறியப்பட்டது.
ஏனெனில் வட துருவத்தில்
உள்ள பெருங்கடல்கள்
மழையை உருவாக்கும்
வண்ணம் உரிய வெப்பத்தைக்
கொண்டிருக்கவில்லை. ஆகவே இந்தப்
பஞ்சங்களினால் லட்சக்கணக்கில்
அங்கு மக்கள்
மடிந்தனர்.
க்ளோபல் டிம்மிங்கிற்குக்
காரணமாக அமையும்
கார்பன் டை ஆக்ஸைடு
போன்ற நச்சுப்
புகை வளி மண்டலத்தில்
கலப்பதைத் தடுப்பதே
இதற்குச் சரியான
தீர்வாக அமையும்.
க்ளோபல்
டிம்மிங்கைத் தடுப்பதன் மூலம்
தட்பவெப்ப நிலை சீரடைந்து
புவி வெப்பமயமாதல்
தடுக்கப்படும். மக்களின்
ஆரோக்கியம் மேம்படும்.
புவியை வெப்பமயமாக்கும்
கார்பன் தரும் சவாலைச் சமாளிக்க இன்னொரு வழி உண்டு.
ஒளிச்சேர்க்கை எனப்படும் போட்டோ சிந்தஸிஸ் (Photo Synthesis) மூலமாகவே ஆக்ஸிஜன் அதிகம் உள்ள பூமியின் வளி மண்டலம் அமைந்துள்ளது. ஆனால் அற்புதமான இந்த வளிமண்டலத்தை நச்சுப் புகையை அதிகம் கக்குவதன் மூலமாக மாசு படுத்துகிறோம். மரங்கள் இயற்கையாகவே கார்பனை உறிஞ்சி ‘இயற்கைச் சமநிலையை’ ஏற்படுத்தினாலும் கூட செயற்கையாக மனிதன் வெளிப்படுத்தும் கார்பன் இந்தச் சமநிலையை சீர்குலைக்கும் அளவு அதிகமாக இருக்கிறது.
கார்பன் அளவை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதை ஆராய பன்னாட்டு
விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு குழுவை ஐரோப்பிய கமிஷன் அமைத்துள்ளது. இந்தக் குழு ஆப்பிரிக்காவில்
வளரும் இரோகோ (IROKO) என்ற ஒரு மரம்
மைக்ரோப்ஸ் (Microbes)
எனப்படும் சில நுண்ணியிர்களுடன் இணைந்து கார்பன் டை ஆக்ஸைடு கொண்டுள்ள புகையை சுண்ணாம்பாக
மாற்றுகிறது என்பதை நன்கு ஆய்ந்து கண்டுபிடித்துள்ளது.
புவி வெப்பமாதல் எனப்படும் குளோபல் வார்மிங் (Global Warming) அபாயத்தால் உலகெங்கும்
உள்ள காடுகள் தாங்கள் மண்ணில் சேமித்து வைத்திருக்கும் கார்பன் டை ஆக்ஸைடை வெளியிட்டு
வரும் இன்றைய சூழ்நிலையில் இது தக்க ஒரு மாற்றாக அமையும் என்பது நல்ல செய்தி.
அமில மண்ணில் இந்த மரங்கள் நடப்பட்டால் மண்ணில் காணப்படும் கால்சியத்துடன்
கார்பன் டை ஆக்ஸைடைச் சேர்த்து ஒரு குறிப்பிட்ட கனிமத்தை இரோகோ மரங்கள் உருவாக்குகின்றன.
இதன் மூலம் கார்பன் டை ஆக்ஸைடு நச்சுப்புகையினால் மாசுபடுத்தப்படும் வளி மண்டலம் சுத்தம்
செய்யப்படுகிறது. சில வகை பாக்டீரியாக்களுடனும் காளான்களுடனும் இது உரிய முறையில் சேர்க்கப்பட்டால்
இந்த மரம் உருவாக்கும் கனிமம் சுண்ணாம்பாக மாறுகிறது. பொலிவியா, ஹைதி, இந்தியா ஆகிய
நாடுகளில் இப்போது கார்பன் சவாலைச் சமாளிக்க இந்த இரோகோ மரங்களை நட்டு சோதனை செய்யும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மரம் தொழிலகத் திட்டங்களுக்குப் பயன்படுவதோடு இதனால் உருவாகும்
சுண்ணாம்பின் மூலம் ஒரு ‘பயோ சிமெண்டை’ உருவாக்கவும் இப்போது
அறிவியல் ரீதியிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பயோ சிமெண்ட் கட்டிடக் கலையில்
ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தும்.
இரோகோ மரத்தை ஆப்பிரிக்காவின்
தேக்கு மரம் என்று ஆப்பிரிக்கர்கள் கூறுகின்றனர். அத்தோடு அதை வெட்டி வீட்டு உபயோகத்திற்காக
அனாவசியமாகப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவருக்கு துரதிர்ஷ்டம் வந்து சேரும்
என்பது அவர்களின் நம்பிக்கை.
இது போன்ற மரங்களை இனம்
கண்டும் பயோ சிமெண்ட் போன்றவற்றை உருவாக்கியும் கார்பன் சவாலைச் சமாளிக்க புது விதமாக
நவீன அறிவியல் முனைந்திருப்பது உலக மக்கள் அனைவரும் வரவேற்கும் ஒரு நல்ல செய்தி அல்லவா!
வாகனக் கழிவாக வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் கார்பன் மானாக்ஸைடு ஒரு நச்சு வாயு. சிகரட் புகைக்கும் போதும், மண்ணெண்ணெய் அடுப்புகளிலிருந்தும் கூட இந்த நச்சு வாயு வெளிப்படுகிறது.
அபாயகரமான இந்த
வாயு சுவாசத்தின்
போது உள்ளே
சென்றால் தலைவலி,
கிறுகிறுப்பு, தடுமாற்றம்,
நினைவாற்றல் இழப்பு,
வாந்தி எடுத்தல்,
சுவாசிப்பதில் சிரமம்,மார்பு
வலி, நினைவற்று
கோமாவில் இருத்தல்
போன்ற அபாயகரமான
விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆகவே
சுற்றுப்புறத்திற்குக் கேடு
விளைவிக்கும் வாகனப்
புகை வெளியேற்றத்தைத்
தடுப்பதும், வீட்டிலும்
வெளியிலும் புகை பிடிப்பதால்
ஏற்படும் கார்பன்
மானாக்ஸைடு வெளியேற்றத்தைத்
தடுப்பதும் வளி மண்டலத்தைச்
சுத்தமாக்க உதவும்
வழிகளாகும்.
கார், மோட்டார்சைக்கிள்,
ஸ்கூட்டர் போன்ற
வாகனங்களைக் குறைவாகப்
பயன்படுத்துவோம். ஆரோக்கியமான
சுற்றுப்புறச் சூழலுக்கும்,
இல்லச் சூழலுக்கும்
எதிரியான கார்பன்மானாக்ஸைடு
நச்சுப் புகையைத்
தவிர்ப்போம்; வாழ்வை
வளமாக்குவோம்!
உலக மக்களை
பயமுறுத்தும் இன்றைய
உடனடி அபாயம் புவி வெப்பமயமாதல் தான்! ஆகவே அதைத்
தடுப்பதே நமது உடனடி கடமை ஆகும்.
முயற்சிப்போம்; வெல்வோம்!
பாக்யா
16-4-2019 இதழில் வெளியாகியுள்ள அறிவியல் துளிகள் ஒன்பதாம் ஆண்டு ஆறாம் கட்டுரை -அத்தியாயம் 422
காந்த மனிதன் !
ச.நாகராஜன்
மிரோஸ்லா மகோலா (Miroslaw Magola பிறப்பு :- 29-5-1958) இன்று உலகில் வாழும்
அதிசயமான மனிதர்களுள் மிக முக்கியமானவர். அவர் ஒரு காந்த மனிதர்.
ஆம். அவர் உடலே ஒரு காந்த மண்டலமாக இருக்கிறது. காந்தம் இரும்பை
இழுப்பது போல அவர் உடல் காந்த சக்தி கொண்டு காந்தம் இழுக்கும் இரும்பு போன்ற அனைத்தையும்
தன் பால் இழுக்கிறது.
போலந்தைச் சேர்ந்த மகோலா இப்போது ஜெர்மனியில் வாழ்ந்து வருகிறார்.
சைகோகைனஸிஸ் எனப்படும் அதீத உளவியல் ஆற்றலால் பொருள்களை அப்படியே
அலாக்காகத் தூக்கி வான் வழியே செல்ல வைத்து தன் உடம்புடன் ஒட்டிக் கொள்ள வைக்கிறார்
இந்த அபூர்வ மனிதர்.
1988ஆம் ஆண்டு இந்திய யோகா பயிற்சியில் ஆர்வம் கொண்ட மகோலா தியானத்தையும்
யோகா பயிற்சியையும் மேற்கொண்டார்.
மனித மனத்திற்கு எல்லையற்ற ஆற்றல் உண்டு என்பதையும் மனித மூளையைப்
பயன்படுத்தக்கூடிய விதத்தில் பயன்படுத்தினால் அபூர்வ சித்திகளைக் கொள்ளலாம் என்பதையும்
அவர் அனுபவ ரீதியாக உணர்ந்தார்.
வெவ்வேறு உத்திகளைக் கையாண்டு கடைசியில் உடலின் காந்தசக்தியால்
பொருள்களைத் தன் உடலில் ஒட்டும் பெரிய சித்தியைப் பெற்றார்.
இவரைப் பல விஞ்ஞானிகளும் ஆராய ஆரம்பித்தனர். ஜெர்மனியில் உள்ள
மாக்ஸ்ப்ளாங்க் இன்ஸ்டிடியூட்டில் பல விஞ்ஞானிகளுக்கு முன் இவர் தனது ஆற்றலைக் காட்ட
அவர்கள் வியந்தனர்.
ஏராளமான அரங்கக் காட்சிகளைப் பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு
முன் செய்து காட்டி அவர்களை மெய் சிலிர்க்க வைக்கும் இவருக்கும் பகுத்தறிவு நிறுவனமான
ஜேம்ஸ்ராண்டி நிறுவனத்திற்கும் இடைவிடாத போராட்டம் நடைபெற்று வருகிறது. இவர் ஒரு பிராட்
என்று பகுத்தறிவாளர் ஜேம்ஸ்ராண்டி கூறவே தன்னைச் சோதிக்காமல் அவர் இப்படிக் கூறுவது
தவறு என்றும் சோதனைக்குத் தான் தயார் என்றும் இவர் பதிலடி கொடுத்து வருகிறார்.
போலந்தில் பிறந்த
மகோலா துரதிர்ஷ்டவசமாக தனது இரண்டாவது வயதிலேயே தந்தையை இழந்தார். அவரது தந்தை ஒரு
வாகன விபத்தில் மரணமடைந்தார்; கஷ்டமான சூழ்நிலையில் வளர்ந்தார்.
1981இல் போலந்தின்
அரசியல் களம் குழப்பமான நிலையை அடைய சோவியத் ரஷியாவின் கொள்கைகளை மகோலா எதிர்த்தார்.
அதனால் அரசின் அடக்குமுறை ஏவி விடப்பட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது திறமையான
வக்கீல் ஜாசெக் டெய்லரின் வாதத்திறமையாலும் ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலையீட்டாலும்
அவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். மனைவி குழந்தையுடன் ஜூரிச்சுக்குச் சென்று
குடியேறினார். இவர் போன்றவர்களின் தீவிர முயற்சியால் 1989இல் போலந்தில் கம்யூனிஸ்ட்
ஆட்சி ஒரு முடிவுக்கு வந்தது.
பின்னர் சீனா, நேபாளம்,
திபத், இந்தியா முதலிய நாடுகளுக்குச் சென்று பல கலைகளையும் கற்றார். 1992 முதல் தீவிரமாக
தனது சைகோகைனஸிஸ் ஆற்றலை உலகினருக்குக் காட்ட ஆரம்பித்தார்.
இரும்பு பாத்திரங்களை
உயரத் தூக்குவது, அங்கும் இங்கும் பறக்க வைப்பது, கீழே இறக்குவது போன்றவற்றை அவையினருக்கு
முன்னே செய்து காட்டியதோடு நூற்றுக் கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்ற ஆரம்பித்தார்.
பிரபல காமடி எழுத்தாளரான
ஸ்டான் லீ ( 28-12-1922 – 12-11-2018) தனது சூபர் ஹ்யூமன் நிகழ்ச்சியில் 2010 ஆண்டு
மகோலாவை அழைக்க அதில் தோன்றி மிகவும் பிரபலமானார் மகோலா! ஹிஸ்டரி சானல், டிஸ்கவரி சேனல்
போன்ற அனைத்து சேனல்களிலும் இவர் தனது ஆற்றலைக் காட்டி உலகினரை அயர வைத்தார்.
ஆங்காங்கே மூளையின்
அபூர்வ ஆற்றலைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். தி பவர் ஆஃப் ப்ரெய்ன் (மூளையின் சக்தி)
என்ற இவரது புத்தகம் குறிப்பிடத் தகுந்த ஒரு புத்தகம்.
இவரது பல்வேறு
நிகழ்ச்சிகளை (யூடியூப் உள்ளிட்ட) இணையதள சேனல்களில் இன்றும் காணலாம்.
இது தவிர இன்னும் ஏராளமான காந்த மனிதர்கள் உலகில் தங்கள் ஆற்றலைக்
காட்டிப் பவனி வருகின்றனர்.
ருமேனியாவில் புசாரெஸ்டில் உள்ள மருத்துவமனையில் பிஸியோதெராபிஸ்டாகப்
(Physiotherapist) பணி புரியும் ஆரெல் ரெலேனு
(Arurel Raileanu, Bcuharest,
Romania) தனது அதீத காந்த ஆற்றலால் 26 கிலோ எடையுள்ள டி.வி.செட்டையே தூக்கி விட்டார்.
இவரை சோதனை செய்ய வந்த கின்னஸ் ரிகார்ட் நிபுணர்கள் முன்னர் தனது ஆற்றலைக் காண்பிக்கவே
அவர்கள் வியந்தனர்; உலகின் மிகச் சிறந்த காந்த மனிதன் (most powerful human magnet) என்ற கின்னஸ் ரிகார்டை
இவருக்கு வழங்கினர்.
இது ஒருபுறமிருக்க 2011ஆம் ஆண்டு ஆறு வயதுச்
சிறுவன் ஒருவன் தன் விசேஷ காந்த ஆற்றலைக் காண்பித்து உலகினரை வியக்க வைத்தான். க்ரோஷியாவைச்
சேர்ந்த ஐவான் ஸ்டாய்ஜிகோவிக் ( Ivan Stoiljkovic) என்ற சிறுவன் ஊடகங்கள்
முன்னே எவர்சில்வர் பாத்திரங்கள், ரிமோட் கண்ட்ரோல்கள், செல் போன்கள் உள்ளிட்டவற்றைத்
தன் உடலுடன் ஒட்டிக் காண்பித்தான். அவை அப்படியே காந்தத்தால் ஈர்க்கப்பட்ட இரும்புத்
துகள் போல அவனுடன் ஒட்டிக் கொண்டன. ‘மாக்னெடிக் பாய்’ – காந்தச் சிறுவன் என அவனை ஊடகங்கள்
புகழ்ந்தன.
மனிதனுக்கு காந்த
ஆற்றல் கிடையாது என்பது பகுத்தறிவாளர் ஜேம்ஸ் ராண்டியின் கொள்கை. ஒரு காம்பஸை காந்தப்
புலம் உடையதாகச் சொல்லும் ஒரு மனித உடலுக்கு அருகில் கொண்டு சென்றால் அதன் முள் அங்கும்
இங்கும் எல்லாத் திசைகளிலும் ஊசலாடும். ஆனால்
இப்படி ஆற்றல் உள்ளதாகக் கூறும் எவருக்கும் இப்படி ஆற்றல் உள்ளதை காம்பஸ் நிரூபிக்கவில்லையே
என்கிறார் அவர்.
ஆனால் கண்ணெதிரே நடக்கும் சம்பவங்கள் பொய்யா என்ன என்று அவரைக்
கிண்டல் செய்கின்றனர் பார்வையாளர்கள்.
பிம் பார்டிகிள் (PYM PARTICLE) என்ற ஒரு புது துகளை
விஞ்ஞானிகள் இனம் கண்டுள்ளதால், ஒருவேளை இப்படிப்பட்டவர்கள் மீது அந்த விசேஷ துகள்
இருக்குமோ என்று ஒரு விஞ்ஞானி கூறுகிறார்.
ஆக காந்த மனிதர்கள் அறிவியல் கொள்கைக்கு அப்பாற்பட்டு நிஜத்தில் உலா வருவதென்னவோ உண்மை தான்; அவர்களை கின்னஸ் தனது சாதனையாளர் பட்டியலில் சேர்ப்பதும் உண்மை தான்!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
மைக்ரோ கம்ப்யூட்டர் புரட்சிக்கு அடிகோலிய கணினித் துறை நிபுணரான
ஸ்டீவ் ஜாப்ஸ் (பிறப்பு : 24-2-1955 – மறைவு : 5-10-2011) ஒரு நாள் அவர் கீழ் பணியாற்றி
வரும் விஞ்ஞானிகளைச் சந்தித்தார். அவர்கள் அனைவருக்கும் ஒரே சந்தோஷம். ஏனெனில் முதல்
ஐ-பாட் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டு விட்டது. அதை ஸ்டீவ் பார்த்து அங்கீகரிக்க வேண்டியது
தான் பாக்கி.
மிக்க மகிழ்ச்சியுடன் அதை அவர்கள் ஸ்டீவ் ஜாப்ஸிடம் தர அவர்
அதை வாங்கிக் கொண்டார். அது எப்படி வேலை செய்கிறது என்பதைப் பார்த்தார். பின்னர் அதை
நுணுகி ஆராய்ந்தார். அதற்குப் பின்னர் அதன் எடை எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க
அதைக் கையால் தூக்கிப் பார்த்தார். பின்னர் அனைவரையும் நோக்கி அது சரியில்லை என்று
நிராகரித்து விட்டார். அது மிகவும் பெரிதாக இருக்கிறது என்றும் இன்னும் சிறிதாக இருந்தால்
நல்லது என்றும் தனது அபிப்ராயத்தை அவர் கூறினார்.
அங்கு குழுமியிருந்தோர் அனைவரும், எப்படி தாங்கள் மிகவும் முயன்று அதை அமைத்தோம் என்று கூறி
அதை இன்னும் சிறியதாக ஆக்க முடியவே முடியாது என்றும் விளக்கினர்.
ஸ்டீவ் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார்.
பின்னர் எழுந்து அந்த ஐ- பாடைக் கையில் தூக்கிக் கொண்டு பக்கத்தில்
இருந்த மீன் தொட்டி அருகே சென்றார். அதை தொபேரென்று அந்த மீன் தொட்டிக்குள் போட்டார்.
அனைவரும் திடுக்கிட்டனர்.
மீன் தொட்டியின் அடியை ஐ-பாட் தொட்டது. அதிலிருந்து நீர்க்குமிழிகள்
மேலே வரலாயின.
ஸ்டீவ் ஜாப்ஸ் கூறினார் : “ இதோ பாருங்கள், நீர்க் குமிழிகளை.
அதற்கு அர்த்தம் என்னவென்றால் அதில் நிறைய இடம் இருக்கிறதென்று.
அதை இன்னும் சிறியதாக்குங்கள்”
அனைவரும் அங்கிருந்து சென்றனர். ஐ- பாட் தனது சிறிய வடிவத்தைப்
பெற்றது.
டைரக்டர் திரு
கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வாரம் தோறும் வெளிவந்து கொண்டிருக்கும் பாக்யா
இதழ் 31ஆம் ஆண்டில் பெரிய அளவில் மாறி புதுப்
பொலிவுடன் வெளியாகி இருக்கிறது. வார இதழாக இருந்த பாக்யா 1-4-2019 முதல் மாதம் இருமுறை
வெளிவரும் இதழாக மாறியுள்ளது.
2019, ஏப்ரல்
1-15 இதழில் அறிவியல்
துளிகள் தொடரில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு ஐந்தாம் கட்டுரை – அத்தியாயம் 421
அதி நவீன F 16விமானத்தை எதிர்கொண்ட இந்திய
விமானப் படை!
ச.நாகராஜன்
உலகெங்கும் இப்போது பரவி வரும் ஒரு ஜோக் இது.
பாகிஸ்தானுக்கு F 16 ரக விமானங்களை அமெரிக்கா சப்ளை செய்தவுடன் அதன் அதி நவீன தொழில்நுட்பத்தைக்
கண்டு பிரமித்த பாகிஸ்தான் பைலட்டுகள் அதை இயக்குவதற்கான பயிற்சி பெற அமெரிக்க பயிற்சியாளரை
அழைத்தனர். அவர் வந்து விரிவாக அனைத்து தொழில்நுட்ப உத்திகளையும் விளக்க அதை பாகிஸ்தான்
பைலட்டுகள் ஆச்சரியத்துடன் கேட்டனர்.இறுதியாக பயிற்சி முடியும் சமயம் ஒரு பாகிஸ்தான்
பைலட், “சார், எல்லாவற்றையும் சொல்லி விட்டீர்கள். ஆனால் அதை எப்படி தரை இறக்குவது
என்று சொல்லவில்லையே” என்று கேட்டார்.
அதற்கு அமெரிக்க பயிற்சியாளர், “அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்; அதை இந்திய விமானிகள் பார்த்துக் கொள்வார்கள்” என்று பதில் சொன்னார்.
சமீபத்திய பாகிஸ்தானின் எல்லை மீறலிலும், தீவிரவாதிகளின் தாக்குதலிலும்
இந்திய விமானப்படையின் சாகஸம் உலகையே வியக்க வைத்து விட்டது.
அதி நவீன F
16 விமானங்கள் நமது
விமானப்படையை அச்சுறுத்த முடியவில்லை.
பழைய கால போரில் பாட்டன் டாங்கிகள் நம்மிடம் வாங்கிய அடியை அமெரிக்காவே
பார்த்து அயர்ந்து போனதில்லையா!
இப்போது F16
காலம்.
F16
பற்றிக் கொஞ்சம் அறிந்து
கொள்ள வேண்டியது நமது கடமை!
அமெரிக்கக் கண்டுபிடிப்பான F16 Fighting Falcon அதி நவீன போர் விமானம்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட F16
விமானங்கள்
அமெரிக்காவில் உள்ளன. பாகிஸ்தானில் இப்போது 85 F16 ரக விமானங்கள் உள்ளதாக நம்பப்படுகிறது.
வானில்
நேருக்கு நேர் சண்டை, தரையில் உள்ளவற்றின் மீது தாக்குதல், மின்னணுப் போர் என இப்படிப்
பல வகையிலும் F16
தனது சாகஸ வேலைகளைக்
காட்ட வல்லது.
இதன்
போரிடும் வட்ட எல்லை மற்ற எல்லா ஃபைட்டர் விமானங்களின் அளவை மீறியது. எல்லா தட்பவெப்ப
நிலைகளிலும் இது பறக்கும்; போரிடும். தாழ்ந்து பறக்கும் விமானங்களைக் கூட இது இனம்
கண்டு காட்டி விடும்.
500 மைல்களுக்கு மேலும் பறக்க வல்ல இது ஆயுதங்களை குறி பார்த்து வீசி இலக்கு தவறாமல் தாக்கும்; எதிரி விமானங்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும்.
இதன் தயாரிப்பில் இதற்கு முன்னர் இருந்த
F15 மற்றும் F111 ரக விமானங்களில் இருந்த அற்புதமான
அம்சங்கள் மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டன. பராமரிப்பு செலவைக் குறைத்து, எடையையும்
குறைத்து வடிவமைக்கப்பட்டது இது. எரிபொருள் நிரப்பிய நிலையில் இது ஒன்பது G அளவு தாக்குப்
பிடிக்கும் அதாவது புவி ஈர்ப்பு விசையின் ஒன்பது மடங்கு அளவு தாக்குப் பிடிக்கும்.
இப்போதிருக்கும் இதர விமானங்கள் இந்த நிலையை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.
பைலட் அமரும் காக்பிட் தெளிவான
பார்வையை பைலட்டுக்கு அளிக்கும். சீட்டின் பின் இருக்கையின் டிகிரி 13 இலிருந்து
30 டிகிரி என்ற பெரிய மாறுதலை அடைந்துள்ளதால் பைலட்டுக்கு அதிக வசதியைத் தரும்.
1981 நவம்பரில் முதன் முதலாகப்
பறக்க ஆரம்பித்த F16
விமானம், இரவு நேரத் தாக்குதலுக்கும் உகந்த ஒன்று.
2001, செப்டம்பரிலிருந்து பயங்கரவாதத்தை எதிர்க்கும்
செயல்களில் F16
வெற்றிகரமாக இயக்கப்படுவது
குறிப்பிடத் தகுந்த ஒன்று.
இப்படிப்பட்ட விமானங்களை எதிர்கொண்டு தான்
நாம் நமது வான் ரீதியிலான பாதுகாப்பை உறுதி செய்து கொண்டிருக்கிறோம்.
2019, பிப்ரவரி இறுதி வாரத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு F 16 ரக விமானத்தை நாம் சுட்டு வீழ்த்தியதாக நமது பாதுகாப்புத் துறை தெரிவித்தது. அந்தச் செய்தியின் முழுத் தாக்கத்தையும் உணர இவ்வளவு விவரங்களையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். நமது வீரர்களின் திறமையை உணர்ந்து அவர்களைப் போற்ற வேண்டும்.
இந்த நிலையில், நமது விமானப்படையை வலுப்படுத்த அதி நவீன ரக விமானங்களை
வாங்க வேண்டும் என நமது விமானப்படை தலைமை கூறி வருகிறது.
அதை இந்திய மக்களும் ஆமோதிக்க இப்போது வலுவான
நிலையில் நமது விமானப்படை உருமாற்றம் பெற்று வருகிறது! நம்மை பங்கப்படுத்த முயலும்
தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்கத் தயாராக ஆகி வருகிறது.
வாழிய பாரதம்! வெல்க பாரதம்!
அறிவியல் அறிஞர் வாழ்வில் ..
டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும்
மேம்பாட்டுப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்த காலம் அது. அக்னி II என்ற
Intermediate Range Ballistic Missile எனப்படும் இடைநிலை
வீச்சு எறி ஏவுகணை தயாராகி விட்டது. ஆறு மாதங்கள் ஆகி விட்டன. அதை விண்ணில் ஏவ வேண்டியது
தான் பாக்கி. ஆனால் அதை கலாம் தள்ளிப் போட்டதற்கான காரணம் இயற்கை மீது அவர் வைத்திருந்த
நேசம் தான். ஒரிஸ்ஸா கடற்கரையோரம் இருந்த வீலர் தீவில் (Wheeler
Island) தான் அது ஏவப்பட்டு பரிசோதிக்கப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. அங்குள்ள மணல்
திட்டில் தான் மிக மிக அருகி வந்த இனமான ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் (Olive Ridley Turtles) தங்கள் இனப்
பெருக்கத்தைச் செய்து முட்டை இட்டு வந்தன. நம்ப முடியாத தொலைவிலிருந்து – அதாவது ஆஸ்திரேலியாவிலிருந்து
அவை இவ்வளவு தூரம் வந்து ஒரு குறிப்பிட்ட இடமான இந்தத் தீவைத் தேர்ந்தெடுத்து வருடம்
தோறும் நவம்பர் முதல் மார்ச் வரை இனப்பெருக்கம் செய்து முட்டையிடுவது வழக்கம். ஒரிஸ்ஸாவில்
இருந்த இயற்கை ஆர்வலர்கள் இந்த கடல் ஆமைகளுக்கு ஒருவித இடையூறும் வரக்கூடாதே என்று
கவலைப்பட்டு கலாமை அணுகினர். மிக முக்கியமான பாதுகாப்புப் பணியில் இதை மிக சுலபமாக
தலைமை ஆலோசகரான கலாம் நிராகரித்து விட்டு திட்டமிட்டபடி சோதனையை நடத்த முடியும். ஆனால்
அவர் அப்படிச் செய்யவில்லை. உடனடியாக ஒரு உத்தரவைப் பிறப்பித்தார்.
அந்த உத்தரவின்
படி அந்தத் தீவில் இருந்த சோதனைக்கூட நிலையத்தில் பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகளும்
சுமார் ஐந்து மாத காலம் மிக மெதுவாக எரியும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தான் தங்கள்
வேலைகளைச் செய்து வந்தனர். ஆமைகளைப் பாதிக்கக்கூடாது என்று மின்சக்தி விளக்குகளையோ
அல்லது அதிக வெளிச்சத்தையோ அவர்கள் ஐந்து மாதம் பயன்படுத்தவே இல்லை.
கடல் ஆமைகளின் இனப்பெருக்க சீஸன் – காலம் – முடிந்தவுடன்,
‘மதிப்பிற்குரிய அந்த ஆஸ்திரேலிய விருந்தாளிகள்’ அனைவரும் புறப்பட்டுப்
போனதை உறுதி செய்த பின்னர் அக்னி II ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது; பெரிய வெற்றியை அடைந்தது.
இந்தியாவில் காலம் காலமாக இருந்து வரும் பாரம்பரியத்தை கலாம்
எப்படி அணுவளவும் பிசகாமல் பாதுகாத்தார் என்பதை அனைவரும் அறிந்து அவரை வெகுவாகப் போற்றினர்.
யாருக்கும் நாம் தீங்கு செய்ய மாட்டோம்; வம்புக்கு வந்தவரை சும்மா
விட மாட்டோம் என்பது தான் நமது பாதுகாப்புத் துறையினரின் இலட்சியம்! அதை உரமிட்டு வளர்த்தவர்
அப்துல்கலாம்!
ஆல்
இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் ஏ அலைவரிசையில் 10-3-2019 அன்று காலை சுற்றுப்புறச்
சூழல் சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பட்ட உரை
சுற்றுப் புறச் சூழலை மேம்படுத்த
எளிய வழிகள்!
ச.நாகராஜன்
நாம் வாழும் இடத்தை மாசற்ற நிலையில்
வைத்துக் கொள்ள எளிய வழிகள் ஏராளம் உள்ளன. இவற்றை ஒவ்வொருவரும் கடைப்பிடிப்பதன் மூலமாக
காற்று, நீர், வசிக்குமிடம் ஆகியவை மாசு நீங்கியதாக அமைந்து சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்தும்.
எளிய வழிகளைப் பார்ப்போமா?
பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கூடியமட்டில்
தவிர்ப்போம். மறுசுழற்சிக்கு உள்ளாகும் பைகளை மட்டுமே பயன்படுத்துவோம். மளிகை சாமான்கள்
வாங்க கடைக்குச் செல்லும் போது நமது துணிப்பைகளைக் கொண்டு செல்வோம்.
அச்சடிப்பதை எவ்வளவு குறைக்க முடியுமோ
அவ்வளவிற்குக் குறைப்போம். பேப்பர் பயன்பாட்டைக் கூடுமானமட்டில் தவிர்ப்போம். எழுத
வேண்டிய தருணங்களில் பேப்பரின் இரு புறமும் எழுதுவோம்.
நீர், ஜூஸ் போன்றவற்றிற்கான பாட்டில்களைப்
பயன்படுத்தும் போது மறுசுழற்சிக்குள்ளாக்கக் கூடிய பாட்டில்களையே பயன்படுத்துவோம்.
கூடுமானமட்டில் மின்சாரத்தைக்
குறைவாகப் பயன்படுத்துவோம்; மின் சக்தியைச் சேமிப்போம்; நமது செலவையும் குறைப்போம்.
நீரைச் சுத்தமாக இருக்கும்படி
மூடி வைத்துப் பாதுகாப்போம். நீரைத் தேவையான அளவு மட்டுமே பயன்படுத்துவோம். திறந்த
குழாயில் வரும் நீரைப் பயன்படுத்தி நீரை வீணாக்காது பக்கெட்டுகளில் நீரைப் பிடித்து
வைத்து தேவையான அளவு மட்டுமே பயன்படுத்துவோம்.அவ்வப்பொழுது குழாய்களைப் பராமரித்து
நீர் ஒழுகாமல் இருக்கும்படியும் நீர் வீணாகாமல் இருக்கும்படியும் பார்த்துக் கொள்வோம்.
குறைந்த தூரம் உள்ள இடங்களுக்கு
நடந்து செல்வோம் அல்லது சைக்கிளில் செல்வோம்.அவசியம் ஏற்படும் போது மட்டும் கார்களில்
பலருடனும் இணைந்து செல்லும் ஏற்பாட்டைச் செய்து கொண்டு செல்வோம்.
தனி நபருக்கு மட்டும் என்று கார்
எடுத்து ஓட்டும் நிலையைத் தவிர்ப்போம்.
வாகனப் பயன்பாட்டில் வெளிவரும்
புகை நாட்டையே மாசு படுத்தும் என்பதால் அதி நவீன கார் எஞ்ஜின்களை மட்டுமே பயன்படுத்துவோம்.
சிறு அளவில் என்றாலும் எங்கெல்லாம்
சூரிய ஆற்றலைப் பயன்படுத்த முடியுமோ அங்கெல்லாம் சோலார் எனர்ஜியைப் பயன்படுத்தி மற்றவருக்கு
எடுத்துக்காட்டாகத் திகழ்வோம்.
இது பற்றிய விழிப்புணர்வை தொடர்ந்து
அனைவருக்கும் ஊட்டுவதை தேசீயக் கடமையாக எண்ணிச் செயலாற்றுவோம்.
நாம் செய்யக்கூடிய அனைத்தையும்
திட்டமிட்டுச் செய்து நமது பகுதியை சுற்றுப்புறச் சூழல் மேம்பட்ட பகுதியாக மாற்றுவோம்.