அஸ்வினி தேவர்கள் என்னும் அற்புதக் கடவுள்! ரிக் வேத மர்மம்!! (Post No.4226)

Written by London Swaminathan

 

Date: 19 September 2017

 

Time uploaded in London- 12-34

 

Post No. 4226

 

Pictures are taken from various sources; thanks.

 

அஸ்வினி தேவர்கள் பற்றி ரிக் வேதத்தில் அற்புதமான கவிதைகள் உள்ளன. வெளிநாட்டோருக்கு இவை பெரும் வியப்பை அளிக்கின்றன. எல்லா வெளிநாட்டு “அறிஞர்களும்” இவர்கள் மர்மமானவர்கள் என்று சித்தரித்துள்ளனர். இவர்கள் இரட்டையர்; உலகில் எல்லா கலாசாரங்களிலும் இரட்டையர் உண்டு. ஆயினும் யாரையும் அஸ்வினி தேவர்களுடன் ஒப்பிட முடியவில்லை; ஆரியர்கள் வெளியேயிருந்து இந்தியாவுக்குள் நுழைந்தார்கள் என்று பேசும் அறிவிலிகளுக்கு ரிக் வேதம் பெரிய புதிர் போடுகிறது; இன்றுவரை எவரும் புதிருக்கு விடை காண இயலவில்லை. இத்ஹாச, புராணங்களில்  பல கதைகள் இருந்தாலும் ரிக் வேதம் கூறும் அஸ்வினி தேவர்கள் வியப்பான சுவையான செய்திகளை அளிக்கிறார்கள்; படித்து மகிழுங்கள்:-

 

நோயாளிகளைக் குணப்படுத்துவது அஸ்வினி தேவர்கள் என்னும் இரட்டையரே!

ஆபத்தில் மாட்டிக்கொண்டவர்களை விரைந்து சென்று காப்பாற்றுவது அஸ்வினி தேவர்கள் என்னும் இரட்டையரே!

 

தொல்லையில் சிக்கியவர்களின் கஷ்டங்களை அகற்றுவது அஸ்வினி தேவர்கள் என்னும் இரட்டையரே!

அஸ்வினி தேவர்களில் ஒருவர் பெயர் நாசத்ய (அசத்தியம் இல்லாதவர்); மற்றொருவர் பெயர் தஸ்ரா (ஒளி வீசும்)

அஸ்வினி தேவர்கள் அவர்களுடைய தேரில் சூரியனையும் சந்திரனையும் ஏற்றிச் செல்கின்றனராம்; தேனையும் கொண்டு செல்கின்றனராம். அவர்களுடைய தேரை குதிரை, கழுதைகள், கழுகு அன்னங்கள் செலுத்துவதாகவும் கவிகள் பாடியுள்ளனர் அவர்கள் இருக்கும் இடம் மலை உச்சி, ஆகாயம், அந்தர வானம், தாவரங்கள், வீடுகள் என்று பலவிதமாகச் சொல்லபட்டுள்ளன. சங்கத் தமிழ் இலக்கியத்தில் அணங்குகள் பற்றிய குறிப்புகளை இவைகளுடன் ஒப்பிடலாம்!

 

இவர்கள் மருத்துவர்கள், சர்ஜன்கள், வேத கால டாக்டர்கள்! கடலில் மூழ்கியவர்களைக் காப்பாற்றினர்!

எரியும்  வீட்டில் இருந்தோரை மீட்டனர்!

உடைந்த காலை ஒட்ட வைத்தனர்!

வேத காலத்தில் மருத்துவத் துறை எவ்வளவு முன்னேறி இருந்தது, கடல் பயணம் எவ்வளவு முன்னேற்றம் கண்டது என்பதை அஸ்வினி தேவர்கள் பற்றிய துதிகள் காட்டுகின்றன.

வேத கால நாகரீகம், அக்காலத்தில் இருந்த ஏனைய நாகரீங்களை விட மிக மிக முன்னேறி இருந்ததை அஸ்வினி தேவர்கள் காட்டுவர்!

 

இவர்களை கிரேக்க புராணத்தின் கஸ்டோர், பாலிட்யூக்ஸ் ஆகியோருடனும், ரோமன் க லாசாரத்தில் காஸ்டர் பொல்லக்ஸ் (ஜெமினி) ஆகியோருடனும் பால்டிக்கில் உள்ள தீவஸ் என்னும் தேவர்களுடனும் மேல்நாட்டினர் ஒப்பிடுவர். ஆனால் இவற்றில் எல்லாம் எல்லாம் முழுமையான ஒற்றுமை எதுவும் இராது; ஒரு அம்சம் மட்டுமே இருக்கும். ஆயினும் இவை எல்லாம் கி.மு800-க்குப் பிற்பட்டவை. ஆனால் அஸ்வினி தேவர்களை இவர்களுக்கு பல்லாயிரம் ஆண்டு முன்னவர்கள்!

 

துருக்கி நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் குறிப்பிடப்படும் (கி.மு. 1380) கடவுளரில் அஸ்வினி தேவர்களும் இருக்கின்றனர்! மிட்டனி- ஹிட்டைட் உடன்படிக்கையில் மித்ர வருண இந்திரனுடன் இவர்களும் காணப்படுகின்றனர். ரிக் வேத துதி வரிசையில் இவர்கள் பெயர்கள் இருப்பதால் கி.மு 1400-க்கு முன்னரே ரிக்வேதம் சிரியா-துருக்கி பகுதிக்குச் சென்றுவிட்டது உறுதியாகிறது!

 

 

துக்ரா என்பவன் அவனது மகன் பூஜ்யுவை கப்பலில் அனுப்பினான்; இறக்கும் மனிதன் எப்படிச் செல்வத்தை பூமியில் விட்டுப் பிரிவானோ அப்படி மகனை இழந்தான். அவன் கடலில் தத்தளித்தபோது அஸ்வினி தேவர்கள்தான் அவர்களை மூன்று பகல் மூன்று இரவுக்குப் பின்னர் கரை சேர்த்தார்கள். நூறு சக்கரம், ஆறு குதிரைகள் பூட்டிய தேரில் வேகமாக அழைத்துவந்தார்கள். பிடித்துக்கொள்ள ஆதாரமே இல்லாத கொழு கொம்பே இல்லாத நடுக்கடலில் அஸ்வினி தேவர்கள் இதைச் செய்தனர். 100 சக்ரம் என்பது 100 துடுப்புள்ள பெரிய கப்பலை குறிக்கும் (1-16-4) ரிக் வேதத்தில், இன்னொரு இடத்திலுமிக்கதை வருகிறது.

 

இதன் மூலம் 100 துடுப்பு கொண்ட பெரிய கப்பல்கள் இருந்ததையும் கடல் மீட்புப் படை  இருந்ததையும் அறிகிறோம்.(1-116-4)

 

“ஓ அஸ்வினி தேவர்களே! எனது இந்த துதி உங்களை கூர்மையாக்கட்டும்; ஒரு சாணைபிடிக்கும் கல் எப்படி கத்தியைக் கூர்மையாக்குமோ அப்படி கூர்மையாக்கட்டும் 3-39-2

 

அதாவது கூரான கத்தி   எவ்வளவு பலன் தருமோ அப்படி நீயும் எனக்கருள்வாயாக.

 

 

(வேத கால சமுதாயம் வீரர்களைக் கொண்டது என்பதை இந்த உவமை விளக்குகிறது. இது போல அவ்வையார் பாடிய கூர்மையான வாள் பற்றிய கவிதை சங்க இலக்கியத்தில் உள்ளது)

 

வேத கால மக்கள் மிக மிக நாகரீக முன்னேற்றம் கண்டவர்கள்! இரும்பைக் காய்ச்சி உருக்கும் தொழில் உவமையாக வருகிறது. தங்கம் பற்றி நூற்றுக் கணக்கான இடங்களில், ஆயிரக்கணக்கான இடங்களில் என்றும் சொல்லலாம்— உவமைகள் வருகின்றன. இது அவர்கள் இடையே இருந்த செல்வச் செழிப்பைக் காட்டுகிறது.

 

கிணற்றில் கிடந்த ரேபா என்பவனைக் அஸ்வினி தேவர்கள் காப்பாற்றுகின்றனர். இது எப்படி இருந்ததென்றால் பானைக்குள் இருந்த தங்கத்தைக் கண்டுபிடித்தது போல இருந்ததாம் (1-117-12)

 

பானைக்குள் தங்கத்தை வைத்து புதைத்து வைப்பது இந்துக்களிடையே உள்ள வழக்கம். தமிழன் புதைத்துக் கெட்டான் என்ற பழமொழியையும் ஒப்பிடலாம். பாடலிபுரத்தில் கங்கை நதிக்குள் நந்த வம்ச அரசர்கள் தங்கப் புதையலை ம றைத்து வைத்த சங்க இலக்கியப் பாடலையும் ஒப்பிடலாம் (கங்கை நதி தங்கம் பற்றிய எனது கட்டுரையில்  மேல்  விவரம் காண்க)

வேத கால இந்துக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினர் என்பதை அஸ்வினி தேவர்கள் பற்றிய கவிதைகள் காட்டுகின்றன.

 

“யாகத்திற்கு இரண்டு பசுமாடுகள் போல, இரண்டு மான்கள் போல, இரண்டு அன்னங்கள் போல விரைந்து வாருங்கள் (5-78-1)” என்று வேத கால ரிஷிகள் துதிக்கின்றனர். இந்த உவமைகள் அஸ்வினி தேவர்களின் அழகையும் விரைவையும் காட்டுகின்றன. அதிகமாக அவர்கள் பறவைகளுடன் உவமிக்கப்படுகின்றனர் (8-35-7)

ஹம்ச (அன்னம்), ஸ்யேன (கழுகு) ஆகியவற்றுடனும் இரட்டைச் இ றகுகளுடனும் உவமைகள் உள்ளன.

அஸ்வினி தேவர்களுக்குப் பல விளக்கங்கள் இருப்பதை யாஸ்கர் நிருக்த்தத்தில் குறிப்பீட்டுள்ளர்:

இரவும் பகலும்

வானமும் பூமியும்

சூரியனும் சந்திரனும்

பழங்கால அரசர்கள் (என்று வரலாற்று ஆராய்ச்சியாளர் கூறுவதாகவும் யாஸ்கர்  கூறுவார். அந்தக் காலத்திலேயே வரலாற்று அறிஞர்கள் இருந்தது யாஸ்கர் மூலம் நமக்குத் தெரிய வருகிறது. வேத கால மன்னர்கள் சகல கலா வல்லவர்கள்)

 

 

என்று அஸ்வினி தேவர்களுக்கு விளக்கங்கள்!

 

அஸ்வினௌ என்பதை குதிரை உடையோர் என்றும் மொழி பெயர்க்கலாம். அவர்கள் இருவரும் சகோதரர்களோ ,நண்பர்களோ

 

அவர்கள்தான் உலகில் முதல் முதலில் சமூக சேவை செய்த இரட்டையர். எல்லோருக்கும் உதவுவதே தொழில்!

 

அவர்கள் சோம பானத்தை மறுத்ததாகவும் குறிப்பு உள்ளது!

 

வேத கால மக்கள், கணக்கில் அசகாய சூரர்கள்! கணிதப் புலிகள்! யாப்பு இலக்கணத்தில் கூட எண் படி மீட்டர் அதிகரிக்கும் (காயத்திரி, உஷ்னிக், அனுஷ்டுப், பங்க்தி…….)

Image of Discouri

அஸ்வினுக்கு 2, பிருஹஸ்பதிக்கு 17!

அக்னிக்கு ஒரு அசை (சிலபிள்)

அஸ்வினிக்கு இரண்டு

விஷ்ணுக்கு மூன்று

சோமனுக்கு நான்கு

பூசனுக்கு ஐந்து

பிரஜாபதிக்கு 17

 

தத்யாங் என்ற முனிவர்தான் அஸ்வினி தேவர்களுக்கு தேனின் ரஹசியத்தைச் சொல்லிக் கொடுத்தனர். இது அதர்வ வேதத்தில் உள்ளது.

விவஸ்வான் சரண்யுவின் புதல்வர்கள் என்று பிற்கால நூல்கள் பகரும்.

 

அஸ்வின சாத்ர பரிசுக்கு நடந்த போட்டியில், கழுதைகளால் இழுத்துச் செல்லப்பட்ட அஸ்வினி தேவர்களின் தேரே வெற்றி பெற்றது. அவைகள் அதிகம் கஷ்டப்பட்டதால் கழுதைப் பால் அளவு குறைந்ததாகவும், அவைகள் மிகவும் மெதுவாக நடக்கத் துவங்கின என்றும் ஐதரேய பிராமணம் ஒரு கதை சொல்லும்.

 

அவர்கள் அழகானவர்கள்; இளமை மாறாத இளம் சிங்கங்கள்; பொன்னிறமானவர்கள்; தங்க ரதத் தில் பவனி வருபவர்கள் என்றெல்லாம் புகழப்படுகிறார்கள்.

அவர்கள் அதிகாலைப் பொழுதில் வெளிச்சத்தைக் கொணருவார்கள். உதயத்தை—உஷஸ்– வருவதை அறிவிப்பவர்கள். அவர்கள் குதிரையை விரட்ட சாட்டையைச் சொடுக்கினால் அதிலிருந்து தேன் சிந்தும். அபூர்வ சக்தி படைத்த சோமம் என்னும் கொடிகள் எங்கே வளருகின்றன என்ற ரஹசியத்தை கடவுளருக்குத் தெரிவிப்பதும் அஸ்வினி தேவர்களே!

சியவன மஹரிஷிக்கு இளமையைக் கொடுத்த வரலாறும் பிற்கால நூல்களில் இருக்கிறது.

OLD ARTICLES FROM MY BLOGS:

 

  1. அஸ்வினிநட்சத்திரக் கதை | Tamil and Vedas

tamilandvedas.com/tag/அஸ்வினி…

நட்சத்திர அதிசயங்கள் -Part 3. அஸ்வினி தேவர்கள், இழந்த கண் பார்வையை …

  1. அஸ்வினி| Tamil and Vedas

tamilandvedas.com/tag/அஸ்வினி

Posts about அஸ்வினி … இதன் அதி தேவதை அஸ்வினி தேவர்கள்! … //tamilandvedas.com/2012/06/29 …

 

 

–SUBHAM–

பிரம்மானந்தம் என்றால் என்ன? சிருங்கேரி சுவாமிகளின் அற்புத விளக்கம் (Post No.4202)

Written by London Swaminathan

 

Date: 11 September 2017

 

Time uploaded in London- 9-30 am

 

Post No. 4202

 

Pictures are taken from various sources; thanks.

 

 

ப்ரஹ்லாத போஷகத்வம் தவ ஸித்தமஹோ ஹிரண்ய வைரித்வம்,

தஸ்மாத் நரஸிம்மகுரோ ஹ்ருத்ஸ்தம்பம் மே விபித்யபுர ஏஹி

 

“இந்த ஸ்லோகத்தில் நம் குருநாதர் பரமகுருநாதரை நேரில் பார்த்துக் கேட்பதுபோல் கேட்கிறார். ஹே நரஸிம்ம குரோ என்று அந்த அபிநவ நரஸிம்மபாரதீ என்ற குருவை வணங்கிப் பிரார்த்திக்கிறார்.

ஹே குரோ, உங்களுக்கும் நரஸிம்ம மூர்த்திக்கும் பலவிதத்திலும் ஸாம்யமே காணப்படுகிறது. எவ்விதமென்றால் ‘ப்ரஹ்லாத போஷகத்வம்’, ‘ஹிரண்ய வைரித்வம்’ என்ற முக்கியமான தர்மங்கள் இரண்டும் ஸமமாகவே உங்கள் இருவரிடமும் பொருந்தி இருக்கின்றன. உக்ர நரஸிம்மர் ப்ரஹ்லாதன் என்ற அசுர பாலகனை அபயம் கொடுத்து அனுக்ரஹம் செய்தபடியால் அவனைப் போஷித்தார், காப்பாற்றினார். அதனால் ப்ரஹ்லாத போஷகரானார்.

 

சாந்த நரஸிம்ம ரூபமான தாங்களோ ‘ப்ரக்ருஷ்டோ ஹ்லாத: ப்ரஹ்லாத:’ என்ற வ்யுக்தத்தின்படி பக்தர்களுக்குப் பலவிதத்திலும் உத்கிருஷ்டமான ஆனந்தத்தைக் கொடுக்கிறீர்கள். ‘ஹ்லாதம்’ என்றால் ‘ஆனந்தம்’ என்று பொருள் கொள்ளலாம்.

ஆனந்தம் என்பது பொதுவாக விஷயானந்தத்தையே குறிக்கும். அதுவோ விஷயங்களின் மாறுபாடுகளை அனுசரித்து மாறுபடக்கூடியது.தைத்ரீயத்திலும், பிருஹதாரண்ய உபநிஷத்திலும் இந்த ஆனந்தங்களைப் பற்றி விரிவாகக் கூறியிருப்பதை இந்த ஸந்தர்ப்பத்தில் கொஞ்சம் சுருக்கமாகக் குறிப்பிட்டால்தான் வாசகர்களுக்கு குருநாதரது சுலோகத்தில் அர்த்தம் நன்கு விளங்குமாதலால் அதைக் கொஞ்சம் காண்பிக்கிறோம்.

 

சுலோகத்திலுள்ள ‘ப்ரஹ்லாத’ பதத்திதிற்கும் ‘ஹ்லாத’ பதத்திற்கும் அர்த்தத்தில் எவ்வளவு வேற்றுமை இருக்கிறது என்பதையும் வாசகர்கள் இந்த விளக்கத்தின் மூலம் உணரலாம்.

 

தைத்ரீயோபநிஷத்தில் ‘தஸ்யேயம் ப்ருதிவீ ஸர்வா வித்தஸ்ய பூர்ணாஸ்யாத் . ஸ ஏகோ மானுஷ ஆனந்த:’ என்று கூறப்பட்டிருக்கிறது அதாவது பூமண்டலத்துக்கே சக்ரவர்த்தியாயிருப்பவனுக்கு ஏற்படும் ஆனந்தம்தான் மானுஷாநந்தம் எனப்படுகிறது. அந்த சக்ரவர்த்தி நல்ல ஆரோக்யமும் தேஹதிடமும் பலமும் யௌவனமும் நல்ல கீர்த்தியும் படிப்பும் குறைவில்லாமல் பெற்றிருக்க வேண்டும். தர்மபுத்திரர்போல் ஏகச் சத்ராதிபதியாகவும் இருக்க வேண்டும் அப்படியிருந்தால்

ஓர் ஆனந்தம் அவனுக்கு  இருப்பதாகக் கூறலாம். ஆனால் அவன் தேவலோக ஸுகங்களில், காமனை உள்ளவானாயிருந்தால் அவ்வித காமனையில்லாத சுரோத்திரனுடைய ஆனந்தத்தில் நூற்றில் ஒரு பங்காகத்தான்  அந்த சக்ரவர்த்தியின் ஆனந்தம் இருக்கக்கூடும்.

 

இப்படியே ஹிரண்யகர்பானந்த்தம் வரையில் ஒவ்வொரு படியிலும் நூறு மடங்கு ஆனந்தம் விருத்தியாகிக் கொண்டே போனா லும் அந்த ஹிரண்ய கர்ப்ப ஆனந்தம்  வரையிலுள்ள எல்லா ஆனந்தங்களும்  நிஷ்காமனான பிரஹ்மம்மவித்தின்  ஆனந் தத்தில் ஒரு பாகமேயாம். ஆகவே காமனையில்லாத ப்ரஹ்மவித்தின்  ஆனந்தம்தான் எல்லாவற்றையும் விட மேன்மையானது. அதைத்தான் பிரஹ்மானந்தம் என்று சாஸ்திரங்களில் பாஷ்யகாராதிகள் வர்ணிக்கிறார்கள்.

அதைத்தான் முன்கூறிய ப்ரஹ்லாத போஷகத்வம் என்ற சுலோகத்திலுள்ள ப்ரஹ்லாத பதத்தால் நம் குருநாதர் குறிப்பிடுகிறார்.

ஹ்லாதம் என்றால் ஆனந்தம் ப்ரஹ்லாதம் என்றால் உத்க்ருஷ்டமான ஆனந்தம். உத்க்ருஷ்டம் என்றால் எதைவிட உத்க்ருஷ்டம் என்ற கேள்வி வருகிறது.

 

மானுஷானந்தத்தை விட மனுஷ்ய கந்தர்வ ஆனந்தம் நூறு மடங்கு உயர்ந்தது.

அதைவிட தேவ கந்தர்வானந்தம் நூறு மடங்கு சிறந்தது.

இப்படியே பித்ருக்கள், ஆஜான தேவர்கள், கர்ம தேவர்கள், தேவர்கள், இந்திரன், பிருஹஸ்பதி, ப்ரஜாபதி என்ற முறையில் ஒன்றைவிட ஒன்று 100 மடங்கு உயர்ந்தது என்று சொல்லிக் கடைசியாக ஹிரண்ய கர்ப்பானந்தம்  எல்லாவற்றையும் விட உயர்ந்தது. ஆனால் பிரஹ்மவித்தானவன் ஆனந்தமோ எல்லை இல்லாதது.  நிரதிசயமானது என்று தைத்ரீய உபநிஷத்திலும் பிருஹதாரண்யகம்  முதலியவற்றிலும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

 

அப்பேற்பட்ட நிரதிசய ஆனந்தத்தைதான் ப்ரஹ்லாத பதத்தால் குருநாதர் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது எல்லை இல்லாத ஆனந்தமாகிய  பிரஹ்மானனதந்தத்ததையே  தம் பக்தர்களுக்கு அளிக்க வல்லமையுள்ளவர் குருநாதர்.”

xxxx

இதுபோன்ற நிறைய பொக்கிஷங்கள் அடங்கிய இப்புத்தகம் இல்லம்தோறும் இரு க்க வேண்டும். வாங்கிப் பயன் பெறுக.

ஆதாரம்: ஸ்ரீ குருகிருபா விலாஸம்

ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மஹாஸ்வாமிகளின் திவ்ய மஹிமைகளை எடுத்துக் காட்டும் கட்டுரைகளின் தொகுப்பு, எழுதியவர்– ஸ்ரீ பாஷ்ய ஸ்வாமிகள், முதல் பாகம், 2011

 

–SUBHAM–

பாஹுபலி வாழ்க! கோமடேஸ்வர் வெல்க! (Post No.4158)

Written by London Swaminathan

Date: 24 August 2017

Time uploaded in London- 17-16

Post No. 4158

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.

சமண மதம் அஹிம்சையை போதிக்கும் மதம். ஆனால் இலங்கையில்  புத்த துறவிகள் (பிட்சுக்கள்) எப்படி அரசியலில் தலையிட்டு குழப்பம் விளைவித் தார்களோ அப்படி 1500 ஆண்டுகளுக்கு முன்னர் சமண துறவிகள் தமிழ்நாட்டு அரசியலில் தலையிட்டு குழப்பம் விளைவித்தனர்.

இதை விளக்க ஒரு சிறிய சம்பவம் போதும்; பாண்டிய நாட்டில் சைவம் தழைத்தோங்க அருள் புரியுங்கள் என்று வளவர்கோன் பாவை மங்கையற்கரசியும் முதல் அமைச்சர் குலச்சிறையாரும் விடுத்த வேண்டுகோளின் பேரில் மதுரைக்கு எழுந்தருளினான் ஒரு சிறிய பிராமணப் பையன். அவன் பெயர் சம்பந்தன். அவன் தங்கியிருந்த மடத்துக்குத் தீ வைக்க சமணர்கள் முயன்றனர். உடனே அந்த தீயைப் “பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே” என்று அவர் கட்டளையிட அக்கினிதேவன் பாண்டிய மன்னன் வயிற்றில் புகுந்து சூலை நோயை உண்டாகினான். அதைத் தீர்த் வைக்க திரு ஞான சம்பந்தர் முயன்று,  அனல்வாதம், புனல் வாதம் போட்டிகளில் வென்று உலகப் புகழ் பெற்றார். அழிவு நிலையில் இருந்த சைவ சமயத்தை தழைத்தோங்க வைத்தார். சுப்பிரமணியரின் மறு அவதாரம் சமபந்தப் பெருமான் என்பதை உலகம் உணர்ந்தது. அஹிம்சையைப் பின்பற்ற வேண்டிய சமணர்கள் ஹிம்சை செய்ததால் பாண்டிய மன்னர் அவர்களைக் கழுவில் ஏற்றினான்.

மத மாற்றம் செய்ய முயல்பவர்கள் உலகெங்கும் என்ன அட்டூழியங்களை செய்தார்களோ அதையே புத்த, சமண அரசியல்வாதிகள் செய்தனர்.

இவ்வளவு தெரிந்தும் சமணர்கள் மீது எனக்கு அபார அன்பு உண்டு. அவர்கள் இலக்கணப் புலிகள்;    மொழியியல் வல்லுநர்கள்! தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் அரிய பெரிய நிகண்டுகளையும், இலக்கண நூல்களை யும் யாத்த பெருமை அவர்க ளையே சாரும்.

லண்டனிலிருந்து நான் என் குடும்பத்துடன் சென்னைக்குப் பயணம் செய்து கொண்டிருந்தேன். எங்கள் அருகில் இரு இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். எங்களுக்கு விமானப் பணிப்பெண்கள் உணவு தந்த போது இவ்விரு இளைஞர்களும் அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவர்கள் கொண்டுவந்த உணவுப் பொட்டலங்களை அவிழ்த்துச் சாப்பிட்டனர். பின்னர் நான் மெதுவாகப் பேச் கொடுத்து காரணம் என்ன என்று கேட்ட போதுதான் தெரிந்தது அவர்கள் சமண (ஜைன) மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கிழங்கு, வெங்காயம், பூண்டு, மாமிச வகையறாக்களை அறவே வெறுப்பவர்கள் என்றும், சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு சாப்பிட மாட்டார்கள் என்றும் அறிந்தேன். பின்னர் கொடுக்கப்பட்ட உணவுகளையும் மறுத்து பட்டினியுடன் இந்தியாவரை பயணம் செய்தனர் அந்த இளைஞர்கள். என்னுடன் வேலை பார்த்த ஒரு சமணரும் இப்படித்தான். மேலும் லண்டன் வாழ் ஜைனர்கள், இந்துக்களின் கோவில்களுக்கும் வருவர். தீபாவளியைக் கொண்டாடுவர். ஏனெனில் கர்ம வினைக் கொள்கைகளில் அவர்கள் நம்முடைய கொள்கை ஏற்கின்றனர்.

இன்ன பிற காரணங்களால் சமண மத சின்னங்கள் உள்ள இடங்களுக்குத் தவறாமல் போய் வருவேன். மதுரையைச் சுற்றி நாகமலை யானை மலை, திருப்பறங்குன்ற மலைகளில் உள்ள சமன குகைகளுக்கு விஜயம் செய்ததை இங்கு படங்களுடன் வெளியிட்டும் உள்ளேன்.

இந்த முறை எனது  இந்திய விஜயத்தில் மிகக் குறுகிய காலம் இருந்த போதும், கர்நாடகத்தில் உள்ள சிரவண பெலகோலா செல்ல வாய்ப்பு கிடைத்ததை நழுவவிட விரும்பவில்லை. மழைத் தூறலுக்கு இடையே 2300 ஆண்டுப் பெருமை வாய்ந்த விந்திய கிரி- சந்திர கிரி குன்றின் அடிவாரத்தை அடைந்தோம். இங்குதான் மௌரியப் பேரரசன் — அலெக்ஸாண்டரை நடுநடுங்க வைத்த பிரம்மாண்ட இந்தியப் படை கொண்ட— சந்திர குப்த மௌரியன்  துறவி போல வாழ்ந்து உயிர்நீத்தான் என்பது ஐதீகம்- செவிவழிச் செய்தி.

அந்த மலையின் மீது பிரமாண்டமான ஒற்றைக் கல் சிலையாக நிற்கும் பாஹுபலி — கோமடேஸ்வர் — ஆயிரம் ஆண்டுப் பழமையுடையவர். உலக அதிசயங்களில் ஒன்று. இது பற்றி 12 ஆண்டுக்கு ஒரு முறை அவருக்கு நடக்கும் மஸ்தகாபிஷேகம் பற்றி தினமணியில் விரிவாக எழுதியுள்ளேன். மேலும் அவரது தபால் தலை வெளியான போது ஒரு ஷீட் (sheet) வாங்கி வைத்துக் கொண்டேன் .  நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்த போது புளகாங்கிதம் ஏற்பட்டது.

57 அடி உயரம் உடைய கோமடேஸ்வர் (பாஹுபலி) நிற்கும் மலை 2000 அடி உயரம். அதுவும் செங்குத்தான படிகளில் ஏற வேண்டும். எல்லோரும் மூச்சு இளைக்க மெதுவாக ஓய்வு எடுத்துதான் ஏற முடியும்.

மேலே ஏறுவதற்கு 45 நிமிடம்! இறங்குவதற்கும் 45 நிமிடம்! மேலே சென்றவுடன் செலவழிக்கும் நேரம் நம் இஷ்டத்தைப் பொறுத்தது. ஆனால் செருப்பு போட்டுக் கொள்ள அனுமதி இல்லை. இது சமணர்களின் கோவில். அங்கே ஒரு அர்ச்சகர் தேங்காய் பழம் நைவேத்தியம் செய்கிறார். ஆகவே இரண்டு மணி நேரத்துக்கு பாத அணிகள் இல்லாமல் சென்று தரிசனத்தை முடித்தோம்.

சிரவண பெலகோலா , கர்நாடக மாநிலத்தில், பெங்களூரில் இருந்து சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில், ஹாசன் மாவட்டத்தில் உள்ளது. இந்த சிலை கி.பி.980-ஐ ஒட்டி, கங்க வம்ச மன்னர் ராஜமல்லனின் தளபதி சவுண்டராயன் என்பவரால் உருவாக்கப்பட்டது.

கோமடேஸ்வர் என்பவர் முதல் தீர்த்தங்கர ரிஷபதேவரின் புதல்வர். ஒரு சமண துறவி. ஒரு யோகி, புலன்களை வென்ற நிலையில், தவம் செய்யும் காட்சி இது. அவர் மீது, செடி கொடிகள் வளரும்; பாம்புப் புற்றுகள் தோன்றும். வால்மீகி முனிவரைப் போல!! அதைத் தத்ரூபமாகச் சித்தரித்துள்ளார்கள் சிற்பிகள்  இங்கே. மாபெரும் சிலை மீது செடிகொடிகள் படருவது போல சிற்பம். கீழே பாம்புகள்; அதில் ஒரு பாம்பு பொந்துக்குள் நுழைந்து வால் மற்றும் தெரியும் காட்சி. அதைச் சுற்றிலும் சமண தீர்த்தங்கரர், சமண துறவிகளின் அற்புதமான சிலைகள். யோகம் என்றல் என்ன என்பதை விளக்கும் சிலைகள். இது போல, ஆனால் தலையில்லாத நெடிய சிலைகள் சிந்து-சரஸ்வதி நாகரீக இடங்களில் இருந்தும் கிடைத்துள்ளன.

பெல  கோலா என்பது தூய தமிழ்ச் சொற்கள் – சமண முனிவரின் ‘வெள்ளைக் குளம்’ என்பது சிரவண ‘பெல குலா’ என்று திரிந்து விட்டது!

இங்கு 800-க்கும் மேலான கல்வெட்டுகள் உள்ளன. கோமடேஸ்வர்– பாஹு பலியின் காலடியில் பிராக்ருத, தேவநாகரி லிபி கல்வெட்டு உள்ளது. கி.பி. 600 முதலான கல்வெட்டுகள் உள்ளன. ஆனால் மௌரியத் தொடர்பைக் காட்டும் கல்வெட்டுகள் கிடைக்கவில்லை. செவிவழிச் செய்தி, இலக்கியம் மூலம் மௌரியர் தொடர்பு பற்றி அறிகிறோம். சமண தீர்த்தங்கர சிலைகள் இருட்டு அறைகளில் உள்ளதால் அதன் முழு அழகையும் காண இயலவில்லை. சிலை அருகில் அன்ன தானத்துக்கு பணம் செலுத்தலாம். நன்கொடைக்கு ரசீதும் கொடுக்கிறார்கள்.

 

கர்நாடகத்தில் ஒரு அதிசயம்!

நாங்கள் சென்ற பேலூர், ஹலபேடு, சிரவணபெலகோலா — எங்குமே நுழைவுக் கட்டணம் கிடையாது; காலணிகளைப் பாதுகாக்க மட்டுமே கட்டணம் கொடுத்தோம்; அதற்கும் தொல்பொருட் துறைக்கும் தொடர்பு இல்லை.

இந்தச் சிலைகளைக் காணும் போது அச்சமும் பயபக்தியும் ஏற்படுகிறது. அங்கங்கள் அனைத்தும் பரிபூரண அழகில், கன கச்சித அளவுகளில் அளவில் செதுக்கப்பட்டுள்ளன.

(2017 ஆகஸ்ட் 21-ஆம் தேதி சிரவண பெலகோலா சென்ற பின்னர் எழுதிய கட்டுரை.)

சுபம்–

திருக்குறளுக்கு தமிழ் வேதம் என்று பெயர் சூட்டியது யார்? (Post No.4086)

Written by London Swaminathan


Date: 16 July 2017


Time uploaded in London- 6-34 am


Post No. 4086


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

திருக்குறளைப் பாராட்டி 53 புலவர்கள் பாடிய பாடல்கள் திருவள்ளுவ மாலையில் இடம் பெறும். இதைத்தவிர அவ்வையார், இடைக்காடர் ஆகிய இருவர் பாடல்களையும் சேர்த்து 55 பாடல்கள் என்றும் கொள்வர். இதில் பல புலவர்கள் சம்ஸ்கிருதத்தில் உள்ள வேதத்துடன் ஒப்பிட்டு திருக்குறளை தமிழ் வேதம் என்று அழைக்கின்றனர். அவர்கள் சூட்டிய பெயர்தான் தமிழ் வேதம். இதோ அந்தப் பாடல்கள்:

 

ஆரியமுஞ் செந்தமிழும் ஆராய்ந்திதனினிது

சீரியதென் றொன்றைச் செப்பரிதா – லாரியம்

வேதமுடைத்துத் தமிழ்திரு வள்ளுவனா

ரோது குறட்பா வுடைத்து

வண்ணக்கஞ் சாத்தனார்.

 

சம்ஸ்கிருதத்தையும், தமிழையும் ஆராய்ந்து இதைக் காட்டிலும் இது சிறப்புடைத்தென்று ஒன்றைத் தெரிந்து சொல்லுதல் முடியாது; சம்ஸ்கிருதம் வேதமுடையது; தமிழ் திருவள்ளுவர் தந்த குறட் பாக்களை உடையது.

 

இங்கு சம்ஸ்கிருதத்துக்கு வேதத்தால் பெருமை; தமிழுக்கு திருக்குறளால் பெருமை என்று வண்ணக்கஞ் சாத்தனார் கூறுகிறார்

 

காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் கூறுகிறார்:-

 

ஐயாறு நூறு மதிகார மூன்றுமா

மெய்யாய வேத பொருள்விளங்கப் – பொய்யாது

தந்தானுலகிற்குத் தான் வள்ளுவராகி

யந்தா மரை மேலயன்

 

அதிகாரம் நூற்று முப்பத்து மூன்றுமாம்,  உண்மையான வேதப்பொருள் பொய்யாது விளங்க அழகிய தாமரை மலர் மேல் வீற்றிருக்கின்ற பிரம்மா, வள்ளுவராகி உலகில் வந்தான்.

 

பிரம்மாவின் நான்கு முகங்களிலிருந்து நான்கு வேதங்கள் வந்தன என்று புராண, இதிஹாசங்கள் விளம்பும். அது போல திருக்குறள் என்னும் தமிழ் வேதத்தை அளித்ததும் அவனே— என்பார் காரிக்கண்ணனார்.

 

வெள்ளி வீதியார் சொல்வார்

செய்யா மொழிக்குந் திருவள்ளுவர் மொழிந்த

பொய்யா மொழிக்கும் பொருளொன்றே — செய்யா

வதற்குரியா ரந்தணரே யாராயி னேனை

யிதற்குரியா ரல்லாதாரில்

ஒருவராலே செய்யப்படாத மொழியாகிய வேதத்துக்கும் —–(அபௌருஷேயம்=வேதங்கள் மனிதன் இயற்றியது அல்ல) —திருவள்ளுவாரால் அருளிச் செய்யப்பட்ட பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றே. ஆராய்ந்து பார்த்தால்  செய்யப்படாத அந்த வேதம் ஓதுதற்குரியோர் அந்தணர் மட்டுமே; ஆனால் திருக்குறளை ஓதுதற்குரியவர் எல்லோரும் ஆவர்.

 

நாமகள் செப்பியது

நாடா முதனான் மறைநான் முகனாவிற்

பாடா விடைபாரதம் பகர்ந்தேன் — கூடாரை

யெள்ளிய வென்றி யிலங்கிலைவேன் மாற பின்

வள்ளுவன் வாயதென் வாக்கு

 

பொருள்:

பகைவரைப் புறமுதுகு காட்டச் செய்து வெற்றி பெற்ற, வேற் படையுடைய பாண்டிய ராஜனே!  படைப்புக் காலத்தில் பிரம்மாவின் வாயிலிருந்து நான்கு வேதங்களைப் பாடினேன்; இடைக்காலத்தில் பாரதம் பகர்ந்தேன்; அதற்குப் பிற்பட்ட காலத்தில் என்னுடைய வாக்கு வள்ளுவன் வாயின் கண்ணதாயிற்று

 

ஆகவே சரஸ்வதியின் கூற்றுப்படி, வேதமும், பாரதமும், திருக்குறளும் ஒவ்வொரு காலத்தில் சரஸ்வதியின் வாயிலிருந்து வந்தவையே.

வேதம் = மஹா பாரதம் = திருக்குறள்

மஹா பாரதத்தை பஞ்சமோ வேத: = ஐந்தாவது வேதம் என்பார்கள்.

திருக்குறளை ஆறாவது வேதம் என்று சொல்லாமல் சொல்கிறாள் சரஸ்வதி!

Tags:- தமிழ் வேதம், தமிழ் மறை, திருக்குறள்

–சுபம்–

 

திருக்குறளில் பசு, ‘கோ மாதா’ (Post No.4054)

Written by London Swaminathan
Date: 5 July 2017
Time uploaded in London- 17-44
Post No. 4054
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

இமயம் முதல் குமரி வரை பண்பாடு ஒன்றே. பசுவுக்கும் பிராமணனுக்கும் மதிப்பும் மரியாதையும் கொடுப்பது இலக்கிய வழக்கு. வாழ்க அந்தணர், வானவர் ஆனினம் (திருஞான சம்பந்தர் தேவாரம்) என்பர்.  இதையே சம்ஸ்கிருதத்தில் “கோப்ரஹ்மணேப்ய சுபமஸ்து நித்யம், லோகாஸ் சமஸ்தோ சுகினோ ப வந்து” என்பர். அதாவது பிராமணன் முதலான எல்லாரும் பசு முதலான எல்லா ஜீவன்களும் சுபமாக இருக்கட்டும் உலகம் முழுதும் சுபமாக இருக்கட்டும் என்பது இதன் பொருள்.

 

ஏன் பசுவையும் பிராமணனையும் மட்டும் சொல்ல வேண்டும்? சுயநலம் இல்லாமல் எல்லாவற்றையும் மற்றவர்களுக்கு அளிப்பதாலும் பாலும் வேதமும் எல்லோருக்கும் பயன்படுவதாலும் அவர்களை முதலில் வைத்து மற்றவர்களையும் வாழ்த்தினர்.

 

ஒரு வட்டத்தில் முதல் புள்ளி முடிவான புள்ளி, துவங்கும் இடம், முடியும் இடம் என்று எதுவும் கிடையாது. ஆனால் நாமாக ஒரு கோடு போட்டு இது துவங்கும் இடம், இது முடியும் இடம் என்போம்; ஓட்டப் பந்தயம் நடக்கும் வட்டமான மைதானங்களில் இதைக் கண்கூடாகக் காணலாம். அது போலவே சமுதாயத்தில் எல்லோரும் ஒரு உடலின் அங்கம் என்று ரிக்வேதம் (புருஷ சூக்தம்) சொல்கிறது. எல்லோரும் சமம் ஆயினும் ஒரு துவக்கம் இருக்க வேண்டும்.

 

தமிழ் வேதம் என்று திருவள்ளுவ மலை போற்றும் திருக்குறளில் பசுவையும் பிராமணனையும் வள்ளுவரும் முதலிடத்தில் வைக்கிறார்.

 

ஆபயன் குன்றும் அறு தொழிலோர் நூல் மறப்பர்

காவலன் காவான் எனின் (குறள் 560)

 

ஒரு நாட்டில் ஆட்சியாளர்கள் நியாயமான ஆட்சி நடத்தாவிடில் ஆறு தொழில்களைக் கொண்ட அந்தணர்கள் வேதங்களை மறந்து விடுவர்; பசுக்களும் பால் தராது. இந்தக் கருத்தும் “பசு-பிராமணன்” என்ற ஜோடியும் இமயம் முதல் குமரி வரை எல்லா மொழி நூல்களிலும்,

குறைந்தது  மூவாயிரம் ஆண்டுகளாக, உள்ளது.

 

புற நானூற்றில் நெட்டிமையார் (புறநானூறு பாடல் 9)

பாடிய பாடலில்— பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாராட்டும் பாடலில்—- ஆவும் ஆன் இயற் பர்ப்பன மாக்களும் என்ற வரிகள் வருகிறது.

 

கண்ணகிக் பிராமணர்களையும் பெண்களையும் எரிக்காமல் தீயோரை மட்டும் எரி என்று மதுரையில் அக்கினி தேவனுக்கு உத்தரவிட்டது போல பாண்டிய அரசனும் பிராமணர்களும் பசுக்களும் பெண்களும்,நோயாளிகளும் என்று சொல்லிவிட்டுப் போர் தொடுப்பானாம் என்கிறார். அது தர்ம யுத்தம் நடந்த காலம்.

 

இவ்வாறு சங்க இலக்கியத்தில் பல இடங்களில் பிராம- பசு ஜோடி  வருகி றது

 

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு

இரவின் இளி வந்தது இல் (குறள் 1066)

 

பசுவைக் காப்பது புனிதமானது. ஆயினும் ஒருவன் பசுவுக்காக தண்ணீர் கொடுங்கள் என்று தர்ம நியாயப்படி தண்ணீர் கேட்டாலும் பிச்சை, பிச்சைதான்; அது போல பிச்சை எடுப்பதைப் போல  நாவுக்கு இழிவான செயல் வேறு ஒன்றும் இல்லை.

 

பசு மாட்டை ஏன் வள்ளுவர் உதாரணமாக வைத்தார். பசுக்களைப் பூஜித்து காப்பாற்றுவது இந்துக்களின் கடமை. அதற்காக தண்ணீர் வேண்டும் என்று கேட்பது தர்மமே. ஆனாலும் அதை பிச்சை கேட்கும் நிலை வந்துவிட்டால், அதுவும் ஒருவனுக்கு இழிவான செயலே.

 

 

தமிழ் நாட்டில் கோவில் வாசல்களில் பசுமாடுகளைக் கட்டி வைத்திருப்பர். அதன் அருகிலேயே அகத்திக் கீரையை விலைக்கு விற்கும் பெண்களும் நிற்பர். பக்தர்களில் பலர் காசு கொடுத்து அகத்திக் கீரையை வாங்கி பசுமாட்டுக்குப் போடுவர். இது ஒரு பெரிய தருமம்; எளிதில் புண்ணியம் சேர்க்கும் வழி.

 

இதைத் திருமூலரும் செப்புவார்:

 

யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை

யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை

யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி

யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே

பொருள்:-

 

எல்லோரும் எளிதில் செய்யக் கூடிய வைகளைத் திருமூலர் சொல்லிக் கொடுக்கிறரர். இதை யாரும் செய்யலாம்; எப்போதும் செய்யலாம்; செலவின்றிச் செய்யலாம். பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் சொல்வதைப் புறநானூற்றில் புலவர் கபிலர் அப்படியே சொன்னார்; “பத்ரம் புஷ்பம் பலம் தோயம்” (பச்சிலை, பூ, பழம், தண்ணீர்) ஆகிய எதனாலும் என்னைப் பூஜிக்கலாம். இதைப் புறநானூற்றில் (106) புல், இலை, எருக்கம் ஆயினும் — கடவுள் ஏற்பார் என்று கபிலர் சொன்னார்.

 

திருமூலரும் கடவுளுக்கு ஒரு வில்வ இலையையோ, அருகம் புல்லையோ, துளசி இலையையோ கொடுத்தால் போதும் என்பார். அது போல பசு மாட்டுக்கு ஒரு கைப்பிடி புல் அல்லது அகத்திக் கீரை கொடுத்தால் போதும்.  நாம் சாப்பிடும் முன்னால் ஒரு கைப் பிடி அரிசியை ஏழைகளுக்கு, அனாதை ஆச்ரமங்களுக்கு என்று ஒரு பானையில் எடுத்து வைக்க வேண்டும். இதை

 

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) பிடி அரிசித் திட்டம் என்று துவக்கி வைத்தார். இதை எல்லாம் செய்ய முடியாதவர்கள் கூட தன் இன்மொழியால் மற்றவர்களுக்கு நல்லதை உரைத்து அவர்களைக் கடைத்தேற்றும் புண்ணியத்தைச் செய்யலாம்.

ஆக, யார் பசுவைப் பற்றிப் பேச வந்தாலும் அத்தோடு பத்து நல்ல செயல்களும் கூடவே வரும்!

 

–Subahm–

 

 

 

பசு வதை செய்யாதே! (Post No.4017)

Written by S NAGARAJAN

 

Date: 20 June 2017

 

Time uploaded in London:-  5-17  am

 

 

Post No.4017

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

 

 

by ச.நாகராஜன்

 

 

அஹிம்ஸா பரமோ தர்ம: என்பது ஹிந்து மதத்தின் உயிரான கொள்கைகளில் ஒன்று.

எந்த மிருகத்தையும் கொல்லாதே என்பது அற நூல்கள் நமக்குத் தரும் அறிவுரை.

 

 

கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா உயிரும் தொழும் என்பது வள்ளுவர் வாக்கு.

பசு, பிராம்மணன் – கோ, ப்ராஹ்மண் – ஹிந்து மதம் மிகச் சிறப்பாகக் கூறும் பிறவிகள்.

 

 

இதன் காரணம் பசுவும் பிராம்மணனும் தன் நலம் இன்றி பிறர் நலத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டதே தான்!

கோ ஹத்யா – பசுக் கொலை பாவம் என்கிறது வேதம்.

கோ அஹத்யா – பசுவைக் கொல்லாதே என்று வேதம் நூறு தடவைகளுக்கு மேல் கூறுகிறது.

 

பசுவையும் விருந்தினர்களையும் அது இணைத்துப் பல முறைகள் கூறுகிறது.

 

அதிதி தேவோ பவ: – விருந்தினர்கள் தேவர்களே என்று கூறும் வேதம் பய பாயஸம் வா என்று கூறுகிறது.அவர்களை அருமையான பாயஸத்துடன் உபசரி – என்று பால் கலந்த இனிப்பைத் தரச் சொல்கிறது. பசுவின் பால் விருந்தினர்களுக்குத் தர உகந்த அற்புதமான வரவேற்புப் பொருளாம்!

 

சம்ஸ்கிருதம் கற்காதே என்ற தற்கொலைக் கொள்கையால் அறிவுச் செல்வம் நம நாட்டில் வறள ஆரம்பித்தது.அரைகுறை படிப்பாளிகளும் கிறிஸ்தவ மதத்திற்கு நாட்டையே அடகு வைத்து கிறிஸ்தவமாக மாற்ற வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட் ஆங்கிலேய “மெக்காலே அறிவாளிகளும் வேதம் உட்பட்ட பல நூல்களுக்குத் தங்கள் கோணல் பார்வையாலும் அரைகுறை அறிவாலும் வியாக்யானம் அல்லது விரிவுரை தர முற்பட்டனர்.

 

அதனால் வந்தது கோளாறு பெரிது!

 

பசு மாமிசத்தை வேத காலத்தில் சாப்பிட்டனர் என்று உள்நோக்கத்தோடு எடுத ஆரம்பித்தனர்.

எடுத்துக்காட்டாக ஒரே ஒரு விஷயத்தை இங்கு பார்க்கலாம்:

மூன்று அல்லது நான்கு விருந்தினர்கள் வீட்டிற்கு வந்து விட்டால் அவர்களை அரிசியை சாதமாக சமைத்து அத்துடன் கொஞ்சம் உக்ஷ அல்லது ருஷவத்தையும் தருமாறு அற நூல்கள் பகர்கின்றன.

 

 

உக்ஷ என்பது சோமலதா. ருஷவ என்பது ஒரு வகை மூலிகைச் செடி.ஊட்டச் சத்து நிறைந்த இவற்றைத் தந்து அவர்களை உபசரி என்பது அறிவுரை.

இந்தச் செடிகள் எருதின் கொம்பு போல பெரிதாக இருக்கும். ரிஷவம் என்பதற்கு இன்னொரு அர்த்தம் ஏழு இசை ஸ்வரங்களில் ஒன்றாகும். இது எருதின் சப்தத்தை ஒத்து இருக்கும்.

 

ஆனால் அரைகுறை சம்ஸ்கிருத அறிவாளிகளும் பாரத நாட்டைக் கெடுப்பதில் குறியாக இருந்த ஆங்கிலேய அதி மேதாவிகளும் இதை எருதின் மாமிசம் என்று எழுதி விட்டனர்; சந்தோஷப்பட்டனர்.

 

பெரிய ராக்ஷஸர்கள் – ஆங்கிலேய ராக்ஷஸர்கள் கூட சில எருதுகளைக் கொன்ற மாமிசத்தைச் சாப்பிட முடியுமா? சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். அந்த அளவு முட்டாள்களா, அதிதிகளை உபசரிக்கும் வழிகளைக் கூறும் அறவோர்?!

எதை வேண்டுமானாலும் எழுதலாம் – அதுவே பத்திரிகை சுதந்திரம் என்று மார் தட்டும் மதியீனர்களை சுதந்திரத்தின் பேரால் சகித்துக் கொள்ள வேண்டியிருப்பது கொடுமையிலும் கொடுமை அல்லவா?!

 

 

மேலை நாடுகளிலும் – இந்த அரைகுறை அறிவாளிகள் கூற்றுப்படி நமது நாட்டிலும் கூட பசு வதை செய்யப்படும் போது வெளிப்படும் மீதேன் வாயு நூறு சதவிகிதம் கார்பன் டை ஆக்ஸைடு வெளிப்பாட்டை விட  அதிகம் என்பதாவது இவர்களுக்குத் தெரிகிறதா?

 

செலக்டிவ் அம்னீஷியா எனப்படும் வேண்டுமென்றே மறப்பது இவர்களுக்குக் கை வந்த கலை.

 

சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடு என்று பல இடங்களில் அரசியலுக்காக ஆதாயம் தேடி கிளர்ச்சியில் ஈடுபடும் கம்யூனிஸ தோழர்களும், ஹிந்து மத செகுலர் விரோதிகளும் வேண்டுமென்றே இந்த சுற்றுப்புறச் சூழல் கேட்டை மனதில் கொள்ள மாட்டார்கள் – பசுவதை செய்யாதே என்ற சட்டத்தை அமுல் படுத்து என்று அரசும் ஹிந்து மத அறவோரும் சொல்லும் போது!

 

 

பசுவதையால் ஏற்படும் பொருளாதாரச் சீர்கேட்டையும் பிரபலமான பொருளாதார மேதைகள் – செகுலரிஸ்டுகள் – மறந்து விடுகின்றனர் என்பது வேதனையான விஷயம்.

நன்கு சீர்தூக்கிப் பார்த்து நியாயமான முறையில் ஆய்வை நடத்தும் எவரும் பசுவை வதைக்காதே என்று சொல்வதோடு இந்த விஷமிகளின் தவறான கொள்கையையும் வெளிப்படுத்த முனைய வேண்டும்.

 

தாமதமாக இருந்தாலும் கூட பசு வதை நிறுத்தபட்டே ஆக வேண்டும். நிறுத்தப்படும்.

 

தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும் – சில காலம் தான் கவ்வ முடியும்.

 

மறுபடி தர்மமே வெல்லும்!

****

 

Q and A on Kali Yuga and Nava Graha Homa (Post No.3968)

Written by London Swaminathan

 

Date: 3 June 2017

 

Time uploaded in London- 21-55

 

Post No. 3968

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

Sir

 

I came across this article and it says that the kaliyuga will be over by year 2025?

 

how come, if each yuga is 4,300, 3,600,2,400 and 1,200 years each ?

 

so we should have been over with the Kaliyuga

 

or is this the demigod years 360 human years Still it doesn t stand ground

 

thanks

G.D

 

 

Answer:

 

Dear GD,

 

About Yugas there are two different calculations.

One with more zeroes and another with less zeroes.

Whatever it may be, we see for ourselves Kaliyuga now.

 

It will not finish in 2025 unless there is Third World War.

 

I have read an article in Madras Mail in 1970s that Krta Yuga has already begun.

Now it looks ridiculous.

 

We published another book review in Dinamani Kadir (where I worked as Senior Sub Editor for 16 years) that Kalki Avatar would appear in 1985.

Nothing happened. It was written by a Swamiji of a famous Mutt!

 

But let us try to bring Kaliyuga like the great Tamil poet Bharati said.

 

 

Navagraha Homam

 

Navagraha Homa  and Nine types of Wood

 

Question

I have been given a note to buy nine different fuel sticks for the fire sacrifice to propitiate nine planets. I cant identify the nine plants. More over they are not available here. Can you please tell me the nine different woods.

VS

 

Answer

Dear VS’

Nowadays all are available in different parts of the world through courier service. You can google Navagraha Samithu and get the bundle. But please be aware of the import restrictions in your country.

 

Following are the nine types of woodds or fuel sticks in English and Tamil:-

When Hindus do Navagraha Homa ( Fire Sacrifice) to celebrate entering a new house (House warming) or for a long life they sacrifice nine different sticks in the fire. They display nine different grains, pulses and nine differently coloured cloths to propitiate the nine heavenly bodies, roughly translated as Nine Planets.

 

அத்தி- சுக்கிரன் (Ficus Udumbura) = Venus

நாயுருவி- புதன் (Achyranthe aspera) = Mercury

புரசு /பலாச மர – சந்திரன் (Butea monosperma) = Moon

அரச மர – குரு (Ficus Religiosa)= Jupiter

வன்னி மரம்- சனைஸ்வரன் (Prosopis cineraria) = Saturn

அருகம் புல் – ராகு (Cynodon dactylon) = ascending node

தர்ப்பை – கேது (Desmostachya bipinnata) = descending node

கருங்காலி—செவ்வாய் (Diospyros ebenum) = Mars

எருக்கு- சூரியன் (Calotropis gigantean) = Sun

 

In Tamil from my previous post:-

நவக்கிரக ஹோம சமித்து

நவ சமித்துகள், நவ தானியங்கள்

நவக்ரஹ ஹோமத்தில் போடப்படும் நவதானியங்கள், நவ சமித்துகள் ஆகியனவும் தாவரங்களே; இதோ அந்தப் பட்டியல்:

நெல், கோதுமை, துவரை, பாசிப்பயறு, எள், வெள்ளை மொச்சை, கொள்ளு, உளுந்து, கொத்துக் கடலை

நவக்ரஹ ஹோம சமித்துகள்

எருக்கு, புரசு (பலாசம்), அத்தி, அரசு, வன்னி, அருகம் புல், கருங்காலி, நாயுருவி,, தர்ப்பை.

அரச மரம் வேதத்தில் உள்ளது, சிந்து சமவெளியிலும் உள்ளது. அரசு, ஆல், அத்தி ஆகிய மூன்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. இது மூன்றும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் மூன்று நாமங்களாக வருகின்றன.
வன்னி மரத்தையும் அரச மரத்தையும் கொண்டு தயாரிக்கப்பட்ட அரணிக் கட்டையைக் கொண்டே யாக யக்ஞங்களுக்கான தீ/ அக்னி மூட்டப்படும்.

பலாச மரத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் கரண்டிகளைக் கொண்டே யாகத்தில் ஹவிஸ், நெய் முதலியவற்றை ஆகுதி செய்வர்.

 

—Subham–

 

 

 

ஸ்ரீ ஆனந்தமயீ மா- எல்லோரையும் வியக்கவைத்த பெண்மணி (Post No.3967)

Written by London Swaminathan

 

Date: 3 June 2017

 

Time uploaded in London- 12-50

 

Post No. 3967

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

கிழக்கு வங்காளத்தில் ஒரு சிறு கிராமத்தில் ஏழைப் பிராமணனக் குடும்பத்தில் பிறந்த நிர்மலா என்ற பெண் பிற்காலத்தில் உலகம் போற்றும் ஆனாந்த மயீ மா என்ற புனிதவதியாக உயர்ந்த கதை கேட்பதற்கே சுவையானது; புனிதமானது.

 

1896ஆம் ஆண்டு ஏப்ரல் 30 தேதி பிறந்த அவர் 86 ஆண்டுகளுக்கு வாழ்ந்து இந்தியாவிலுள்ள புனித ஹரித்வாரில் 1982 ஆகஸ்ட் 27ல் சமாதி அடைந்தார். உடனே அப்போதைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி விசேஷ  ஹெலிகாப்டரில் வந்து அந்திமக் கிரியைகளில் கலந்து கொண்டார்.

 

தெய்வ நெறிக் கழகத்தின் சுவாமி சிவாநந்தா, யோகதா சத் சங்கத்தின் பரமஹம்ச யோகாநந்தா போன்றோர் புகழ் மாலை சூட்டிய ஆன்மீகப் பேரரசி அவர்.

 

ஆனந்தமயீ மா, கியோரா என்னும் சிறு கிராமத்தில் விபினவிஹாரி பட்டாசார்யா- மோக்ஷதா சுந்தரி தேவி ஆகிய தம்பதியருக்கு தவப் புதல்வியாக  அவதரித்தார் நிர்மலா சுந்தரி. சிறுவயதிலிருந்தே படிப்பில் நாட்டமில்லாமல் ஆன்மீக விஷயங்களில் நாட்டம் செலுத்தினார். எல்லா இந்துக் குடும்பங்களிலும் உள்ளது போலவே அவரது வீட்டிலும் ஒரு சுவாமி அறை இருந்தது. அதிலுள்ள பல கடவுளரிம் படங்களுக்கு முன்னால் தியானம் செய்வது இவரது வழக்கம்.

அந்தக் கால வழக்கபடி நிர்மலாவுக்கும் விக்ரமபுரத்தைச் சேர்ந்த ரமணி மோஹன சக்ரவர்த்திக்கும் திருமணம் நடந்தது. அப்போது நிர்மலாவுக்கு வயது 13. ஆயினும் கணவருடன் சேர்ந்து வாழ்ந்தது அதற்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர்தான். எப்படி பிற்காலத்தில் நிர்மலா– ஆனந்தமயீ ஆனாரோ,  அப்படி ரமணி மோஹன் — போலாநாத் ஆனார்.

 

நிர்மலாவும் ரமணியும் பெயர் அளவிலேயே மனைவி- கணவனாக இருந்தனரே தவிர தாம்பத்திய உறவு என்பது கிடையவே கிடையாது.

 

சிறிது காலத்தில் போலாநாத்துக்கும் ஆன்மீக உணர்வு அதிகமானது எப்படி ராமகிருஷ்ன பரமஹம்சரால், அவரது மனைவி சாரதா தேவி சந்யாசினி ஆனாரோ அப்படி ஆனந்தமயீ முன்னிலையில் போலாநாத் சந்யாசி ஆனார்.

 

 

ஆனந்தமயீ மாவின் தவ வலிமை அவ்வளவு சக்தி வாய்ந்தது.

பிறப்பிலேயே இறை உணர்வு பெற்ற ஆனந்தமயீ, அடிக்கடி தன்னை மறந்த நிலையை அடைந்தார். நாளடைவில் இது அதிகமாகி, பல நாட்களுக்கு நினைவற்றுக் கிடப்பார். கணவனும் கூட அவருக்கு சேவகம் செய்யத் துவங்கினார். அறியாத ஒரு மகளுக்கு தந்தை எப்படி உதவுவாரோ அது போல போலாநாத் தன் மனைவிக்கு உதவினார்.

 

ஆனந்தமயீயின் பெருமை கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியத் துவங்கியது அவரது கணவருக்கு பாஜிப்பூரில் நவாப்பிடம் முதலில் வேலை கிடைத்தது. பின்னர் டாக்காவில் வேலை கிடைத்தது.

 

 

டாக்காவில் ஆனந்தமயீ இருக்கும் போது சமூகத்தின் உயர் நிலையில் இருந்த டாக்டர்கள், வக்கீல்கள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் அவரைப் பார்க்க குவிந்தனர். காலப் போக்கில் பக்தர்கள் அனைவரும் சேர்ந்து டாக்காவில் அவருக்கு ஒரு ஆஸ்ரமம் கட்டினர். ஆனால் தன்னை சி றைப்படுத்திக் கொள்ள விரும்பாத ஆனந்தமயீ தேச சஞ்சாரம் செய்யத் துவங்கினார். நாடு முழுதும் தீர்த்த யாத்திரை செய்யத்  துவங்கினார். எந்த இடத்திலும் இரண்டு நாட்களுக்கு மேல் தங்குவதில்லை.

 

 

தென்னிந்தியாவில் ரமண மகரிஷிக்கு வெளிநாட்டு பக்தர்கள் சேர்ந்தது போல ஆனந்தமயீக்கும் நிறைய வெளி நாட்டு பக்தர்கள் சேர்ந்தனர். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு,  அவரது மகள் இந்திரா காந்தி , தத்துவ அறிஞர் கோபிநாத் கவிராஜ் ஆகியோர் இவரது பக்தர்களாயினர்.

 

இவரது ஆன்மீக சக்தி, இவரைத் தரிசித்த அனைவரிடமும் பரவியது. அனைவரும் இவரது செல்வாக்கின்கீ ழ் வந்தனர். குறிப்பிடத்தக்க ஒரு வெளிநாட்டுக்காரர் ஆஸ்திரிய நாட்டின் தலைநகரான வியன்னாவில் பிறந்த பிளாங்கா (Blanca) ஆவார். அ ந்த யூத மதப் பெண்மணி இவரது உபதேசத்தில் உருகி ஆத்மாநந்தா என்ற பெயர் பெற்றார். அவர் எழுதிய டயரி, ஆத்மாநந்தா சமாதி அடைந்தபின்னர்  ராம் அலெக்ஸாண்டர் என்பவரால் வெளியிடப்ப ட்டது. அதில் ஆனந்தமயீ மற்றும் ஆத்மாநந்தாதாவின்  வரலாறு வெளியானது.

 

ஆனந்ததமயீயிடம் வந்த அறிஞர்களில் ஒருவர் ஒரு நாள் திடீரென்று உரத்த குரலில் பேசினார். இன்று நான் உங்களை “அம்மா” என்று அழைத்துக் கதறிவிட்டேன்; எதிர்காலத்தில் உலகம் முழுதும் உங்களை “அம்மா” என்று அழைக்கும் என்று ஆரூடம் சொன்னார். அது உண்மையும் ஆயிற்று. உலகமே அவரை மா (அன்னை) என்று அழைக்கத் துவங்கியது.

 

வெளிநாட்டுப் பேராசிரியர்கள், தத்துவ அறிஞர்கள் ஆகியோர் இவரிடம் பல வினாக்களுக்கு விளக்கம் கேட்டறிந்தனர். அவர் படிக்காத மேதையாக விளங்கினார்.

குரு இல்லை!

 

ஆனந்தமயீ தனக்குத் தானே குரு ஆனார். அவருக்கு குரு என்று எவரும் இல்லை. தனக்கு ஏற்பட்ட அனுபவங்களில் ஆயிரத்தில் ஒரு பகுதியை கூட தான் வெளி உலகிற்குச் சொல்லவில்லை என்று பிற்காலத்தில் அவரே கூறியதுண்டு. சுமார் 60 ஆண்டுக் கால தர்மப் பிரசாரத்திற்குப் பின்னர் ஆனந்தமயீமா 1982 ஆகஸ்ட் 27ல் ஹரித்வாரில் சமாதி அடைந்தார். அங்கே அவரது புனித சமாதி இருக்கிறது.

அவர் பரப்பிய ஞான ஒளியும், அவர் பொழிந்த அருள் மழையும் இன்றும் நீடிக்கிறது; அவரை நினைப்போருக்கு அவை என்றும் கிடைக்கும்!

 

xxxx SUBHAM xxxxxx

 

பகுத்தறிவாளர்களுக்கு சவால்! (Post No.3966)

Written by S NAGARAJAN

 

Date: 3 June 2017

 

Time uploaded in London:-  6-29  am

 

 

Post No.3966

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

திருக்குறள் மர்மம்

பகுத்தறிவாளர்களுக்கு சவால் விடும் குறள்பாக்கள்!

 

ச.நாகராஜன்

 

 

வள்ளுவர் தமிழ் சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கையாளும் மஹாகவி. மஹரிஷி.

 

அவரது குறளில் பகுத்தறிவு என்ற ஒரு அறிவைப் பற்றிச் சொல்லவே இல்லை.

பகுத்து என்ற வார்த்தை,

 

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” (குறள் 322)

 

என்ற ஒரே ஒரு குறளில் மட்டுமே வருகிறது. பகுத்து உண் என்பதில் மட்டுமே பகுத்து என்ற வார்த்தை வருகிறது.

பகுத்தறிவு என்பதைச் சொல்லாத வள்ளுவர் அறிவை அற்புதமாக மூன்று விதமாகச் சுட்டிக் காட்டுகிறார்.

கார் அறிவு (குறள் 287)

களவென்னும் காரறிவாண்மை அளவென்னும்

ஆற்றல் புரிந்தார் கண் இல்

 

இங்கு கார் அறிவு என்பது குறுமதி அல்லது இருண்ட அறிவு என்பதைக் குறிப்பிடுகிறது.

ஆக அறிவில் கீழ்த்தரமான கீழ் மக்களது அறிவு கார் அறிவு.

அடுத்து பேரறிவு (குறள் 215)

 

ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்

பேரறிவாளன் திரு

 

பொது சேவையில் ஈடுபடும் ஒருவனது பேரறிவை இக்குறள் சுட்டிக் காட்டுகிறது.

 

ஆக கார் அறிவு மற்றும் பேரறிவைச் சொல்லிய வள்ளுவர் இன்னொரு அறிவைச் சொல்கிறார்.

வால் அறிவு (குறள் 2)

 

கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

 

வால் அறிவு இறைவனது அறிவு. தூய அறிவு.

ஆக இப்படி கார் அறிவு, பேரறிவு, வாலறிவு ஆக மூன்று விதமாக நுண்ணறிவைப் பிரிக்கிறார் வள்ளுவர்.

பகுத்தறிவாளர்கள் என்ற ஒரு புது வித இனத்தைச் சேர்ந்தவர்கள் வள்ளுவரைப் படிக்க ஆர்வப்படலாமா?

 

பகுத்தறிவாளர்களுக்கு சவால் விடும் குறள்கள் ஏராளமாக திருக்குறளில் உள்ளன.

 

எடுத்துக்காட்டிற்காக சில குறள்களை மட்டும் கீழே காணலாம்:

  • தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55)

தெய்வத்தைத் தொழாமல் தன் கணவனைத் தொழுது எழுகின்ற ஒரு பெண் பெய் என்றால் மழை பெய்யும்.

கேள்வி: பெண்ணியத்திற்குத் துணை போகும் ஒருவரா வள்ளுவர். அது எப்படி பெய் என்று ஒரு பெண்மணி சொன்னால் மழை பெய்யும்? உலகத்தில் வாழ்கின்ற தாய்க்குலத்தில் பத்தினிகளே இல்லையா? யாருமே பெய் என்று சொல்லி மழை பெய்ததைப் பார்க்க முடியவில்லையே!

  • வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீ ர் என்று (குறள் 1317)

3) தும்முச் செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல்

எம்மை மறைத்தீரோ என்று (குறள் 1318)

 

தும்மல் என்பது இயற்கையில் மனிதருக்கு ஏற்படும் ஒன்று. இதற்கும் காதலி நினைப்பதற்கு என்ன, ஐயா சம்பந்தம்? காதலனை நோக்கிக் காதலி யாரை நினைத்து தும்மினாய் என்று கேட்பது பகுத்தறிவுக்கு ஒத்ததா?

 

  • அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொற்த்தானோடு ஊர்ந்தான் இடை (குறள் 37)

சிவிகையை ஒருவன் சுமக்கிறான். அதனுள் ஒருவன் உட்கார்ந்திருக்கிறான். ஆயிரக்கணக்கில் கார்கள் போகின்றன. டிரைவர் ஓட்டுகிறார். முதலாளி அமர்கிறான்.

இது உலகியல்பு. இதையும் வினையையும் எப்படி முடிச்சு போடலாம். எங்கள் பகுத்தறிவுக்கு இது ஒத்ததல்ல.

  • மலர்மிசை மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார் (குறள் 3) நீண்ட ஆயுளுக்கும் இறைவனுக்கும் என்ன சம்ப்ந்தம்?
  • கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும் (குறள் 260)

கொலை செய்யப்பட உள்ள உயிர் வேண்டுமானால் ஒரு வேளை மனதிற்குள் தப்பித்தேன் என்று நினைக்கலாம். ஆனால் எல்லா உயிரும் எப்படித் தொழும்?

  • மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை

எந்நோற்றான் கொல் எனும் சொல்

தந்தை நோன்புக்கும் மகனுக்கும் என்ன தொடர்பு? அவனவன் வாய்ப்பு, அறிவு, பணம் போன்றவற்றிற்குத் தக முன்னேறுகிறான். தந்தை உதவி செய்யாவிட்டாலும் கூட பலர் முன்னேறவில்லையா, என்ன?

  • ஊழிற் பெருவலி யா உள? மற்றொன்று

சூழினும் தான் முந்துறும் (குறள் 380)

விதி எப்படியும் தான் செய்வதைச் செய்தே தீரும் என்பது பொருந்தாத ஒன்று.

விதியின் மீதே பகுத்தறிவாளருக்கு நம்பிக்கை இல்லை. ஆக வள்ளுவரின் இந்தக் குறள் பகுத்தறிவுக்குப் பொருந்துமா?

  • ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப்பு உடைத்து (குறள் 398)

இந்தப் பிறவியில் தான் கற்ற கல்வி ஒருவனுக்கு ஏழு பிறவிகளில் பயன் தரும்.

மனிதனுக்கு ஒரு பிறவி மட்டுமே உண்டு. அதில் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்க வேண்டியது தான். எங்கிருந்து வந்தது ஏழு பிறவி? இது இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்குப் பொருந்தாதே. அவர்கள் ஒரு பிறவி நம்பிக்கை உடையவர்கள் அல்லவா? ஹிந்துக்கள், புத்த மதத்தினர், ஜைன மதத்தினருக்கு மட்டுமே இது பொருந்தும்.

 

 

இப்படிப் பல குறள்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஐயன் வள்ளுவனுக்கு விழா எடுப்பதாகச் சொல்லிக் கொண்டு தனக்கு விழாவைத் தவறாமல் எடுத்துக் கொள்ளும் பகுத்தறிவுத் தலைவருக்கும் அவரது அன்புத் தம்பிகளுக்கும் இந்த வள்ளுவர் சரிப்பட்டு வருவாரா?

ஒன்று தங்கத் தம்பிகள் தவறாக வழி சொல்லும் தலைவனைக் கைவிட வேண்டும். அல்லது வள்ளுவரைக் கைவிட வேண்டும்.

 

 

சற்று சிந்தித்தால் ஒரே ஒரு விஷயம் புலப்படும்.

வள்ளுவரின் குறள்கள் ஆழ்ந்த தத்துவங்களின் அடிப்படையில் எழுந்தவை. காலம் காலமாக நிற்பவை. காலத்தை வென்றும் நிலைப்பவை.

 

எளிதில் மேலெழுந்தவாரியாகச் சொல்லப்படும் பொருளுக்கும் அப்பாற்பட்டு ஆழ்ந்த உட்கருத்தைக் கொண்டவை.

 

அதனால் தான் வேதங்களுக்குச் சொல்லப்படும் புகழ்மொழியான மறை என்று இதற்கு பெயர் சூட்டப்பட்டிருக்கிறது தமிழில் இருப்பதால் தமிழ் மறை.

 

 

அதி மானுடவியல் என்னும் சைக்கிக், அதற்கும அப்பாற்ப்ட்ட வால் அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே இவற்றின் உட்பொருளை ஒருவர் அறிய முடியும்.

புண்ணிய பாவங்கள் பிறப்பைத் தரும்.

 

அதற்கேற்ப இன்றைய வாழ்வு அமையும்.

நல்லதைச் செய்து நல்ல பிறவியை எடு.

பின்னர் பிறவிச் சுழலிலிருந்து இறைவனை வேண்டி அவன் அருள் பெற்று விடுபடு.

 

கற்பில் சிறந்தவள் கடவுளே. அவள் ஆணைக்கு பஞ்ச பூதங்களும் அடி பணியும்.

 

நோன்பு அல்லது தவம் செய்தால் நன் மக்களைப் பெறலாம்.

எண்ணம் என்பது சக்தி வாய்ந்தது. ஒருவர் நினைக்கும் போது அதே லயத்தைக் கொண்டவர்க்கு எண்ண சக்தியின் ஓட்டம் தெரியும்.

 

இப்படி அதிமானுடவியல், ஹிந்து தத்துவம், சாஸ்திரங்கள் அல்லது அறநூல்களின் அடிப்படையில் மட்டுமே வள்ளுவரைப் புரிந்து கொள்ள முடியும்.

இன்றைய பகுத்தறிவின் அடிப்படைக்கு அப்பாற்பட்டவர் வள்ளுவர்.

 

 

தமிழ் மக்கள் செய்த தவத்தால் வந்தவர் வள்ளுவ.ர்

கார் அறிவை (இன்றைய பகுத்தறிவு) விட்டு விட்டு பேரறிவை ஈட்டி, அடைந்து, வாலறிவனை அறியும் முயற்சியில் ஈடுபடும் போது வள்ளுவம் புரியும்; வாழ்க்கையும் சிறக்கும்!

****

 

 

 

 

சிலப்பதிகாரத்தில் கொற்றவை வழிபாடு (Post No.3964)

 

Research ArticleWritten by London Swaminathan

 

Date: 2 June 2017

 

Time uploaded in London- 8-40 am

 

Post No. 3964

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

(I wrote this for ‘Soundaryam’ published by Hindu Tamil Cultural Association, Enfield,London)

 

“ஆனைத் தோல் போர்த்துப் புலியின் உரி உடுத்துக்

கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால்—

வானோர் வணங்க, மறைமேல் மறையாகி,

ஞானக் கொழுந்தாய், நடுக்கு இன்றியே நிற்பாய்!

(வேட்டுவ வரி, சிலப்பதிகாரம்)

 

செந்தமிழில் உள்ள ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று சிலப்பதிகாரம். “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” — என்று பாரதியாரால் போற்றப்பட்ட அற்புத காவியம். பழந்தமிழ் நாட்டில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற நாநிலப் பிரிவுகளுக்கு முறையே விஷ்ணு,முருகன், இந்திரன், வருணன் தெய்வங்களாக இருந்ததை “ஒல்காப்புகழ் தொல்காப்பியன்” எழுதிய தொல்காப்பிய சூத்திரம் மூலம் அறிகிறோம்:

மாயோன் மேய காடுறை யுலகமுஞ்

சேயோன் மேய மைவரை யுலகமும்

வேந்தன் மேய தீம்புன லுலகமும்

வருணன் மேய பெருமணலுலகமும்

முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே

(தொல். பொருள். 1-5)

 

இந்த நாநிலம் அதன் நிலை திரிந்து வறண்டு போனால் அது பாலை நிலம் எனப்படும். அதற்கான தெய்வம் கொற்றவை என்னும் ‘தேவி’யாகும். சம்ஸ்கிருதத்தில் கொற்றவையை ‘துர்கா’ என்று அழைப்போம். கொற்றவை வழிபாடு குறித்து பல சுவையான தகவல்களை, நமக்கு, இளங்கோ அடிகள் யாத்த, சிலப்பதிகாரம் தருகிறது. அவை இன்று வழக்கற்றுப் போனது மேலும் வியப்பை ஏற்படுத்தும்.

 

தற்போதுள்ள உலக மதங்களில் இந்து மதம் ஒன்றில் மட்டுமே கடவுளைப் பெண் வடிவத்திலும் வணங்குகிறோம். அந்த அளவுக்குப் பெண்களுக்கு உயர்நிலை கொடுக்கப்பட்டது. சங்க காலம் முதல் இந்தக் கொற்றவை எனும் பெண் தெய்வம் (முருகு.368, பெரும்.583, நெடு.192) வழிபாடு இருப்பதற்குப் பல சான்றுகள் உள. இக்கட்டுரையில் சிலப்பதிகாரக் குறிப்புகளை மட்டும் காண்போம்:

மான் வாகனம்

துர்கைக்கு/ கொற்றவைக்கு மான் வாகனம் என்ற குறிப்பு சிலம்பில் வருகிறது. பிற்காலத்தில் நால்வரில் ஒருவரான திருஞான சம்பந்தரும் மான் வாகன தேவி பற்றி (கலையதூர்தி) என்று பாடுகிறார். ஆனால் சிங்கத்தின் மீதும், புலியின் மீதும் காட்சி தரும் தற்கால துர்கை, மான் வாகனத்தில் அமர்ந்த கட்சி எங்கேயும் காணக் கிடைக்கவில்லை; அதாவது சிலையிலோ, படத்திலோ இல்லை! இது ஒரு வியப்பான செய்தி. இளங்கோ பாடிய சிலம்பிலிருந்து, சம்பந்தர் பாடிய தேவாரம் வரை காணப்படும் கொற்றவையின் மான்  வாகன ‘’போஸ்’’ நமக்குக் கிடைத்தில.

 

பாலைவனத்தில் வாழ்வோர் மறவர்கள் ஆவர். அவர்கள் கொலைக்கும் அஞ்சாத வீரர்கள். பாலைவனம் வழியாகக் கடந்து செல்லும் வணிகர், தூதர் முதலியோரைத் தாக்கி, அவர்களைக் கொன்று, பொருள்களை வவ்வுவதே பாலை நில மக்களின் தொழில். தாங்கள் கொன்ற மிருகங்களை கொற்றவைக்குப் படைப்பதும் இவர்கள் வழக்கமாகும்.

சிலப்பதிகாரத்தில் ஐயை, கார்த்திகை என்ற பெயர்களுடைய பெண்களும் காட்சி தருகின்றனர். அவை துர்க்கையின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது

மதுரை நகருக்கு கவுந்தியடிகளுடன் நடந்து வந்த கண்ணகியும் கோவலனும் முதலில் ஒரு கொற்றவை கோவிலில்தான் தங்குகின்றனர்:

“விழிநுதற் குமரி, விண்ணோர் பாவை,

மையறு சிறப்பின் வான நாடி

ஐயை தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு – என்”

(காடுகாண் காதை, சிலம்பு)

 

இதைத் தொடர்ந்துவரும் வேட்டுவ வரிப் பாடல் முழுதும் கொற்றவை வருணனை வருகிறது.

கொற்றவை கோவிலில் சாலினி வெறியாடியதை (சாமி ஆடல்)  எல்லோரும் வியப்புடன் பார்த்தனர். கலையமர் செல்விக்கு பலிதந்தால்தான் நன்மைகள் விளையும் என்று அவள் சாமி ஆடுகையில் முழங்குகிறாள். இதோ இளங்கோவின் வரிகள்:

 

“கலையமர் செல்வி கடன் உணின் அல்லது

சிலையமர் வென்றி கொடுப்போள் அல்லள்;

மட்டு உண் வாழ்க்கை வேண்டுதீர் ஆயின்

கட்டு உண் மாக்கள்! கடம் தரும் என் ஆங்கு”

(கலை= மான்)

பெண்ணுக்கு கொற்றவை வேஷம்

இன்னொரு விநோத வழக்கத்தையும் சிலம்பு பாடுகிறது. அதாவது ஒரு சிறு பெண்ணை கொற்றவை போல அலங்கரித்து மான் வாஹனத்தில் ஏற்றி ஊர்வலம் விட்டு வணங்கியதையும் இளங்கோ சொல்லுகிறார். சங்க காலத்தில் நடந்த இக்கொற்றவை வழிபாடு இன்று எங்கும் காணக் கிடக்கில. நேபாள  நாட்டில் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து “குமாரி” என்று தெய்வமாக வழிபடுவதை இன்றும் காணலாம்.

 

“பழங்குடிக் குமரியின் முடியை உயர்த்திப் பொன்கயிற்றினால் கட்டினர். காட்டுப் பன்றியின் கொம்பை பிறைச் சந்திரன் போல அவளுக்கு அணிவித்தனர். புலிப்பல் தாலியை அணிவித்து புலித்தோலை ஆடையாகப் போர்த்தி, அவளை மான் மீது ஏற்றி ஊர்வலம் விட்டனர். அவள் கையில் கிளி, கோழி முதலியவற்றைக் கொடுத்து வழிபட்டனர். அவளைத் தொடர்ந்து பெண்கள் பலர், சோறு, எள்ளுருண்டை, நிணச் சோறு, நறுமணப் பொருட்கள் ஆகியவற்றைச் சுமந்து வந்தனர். பெரிய வாத்தியங்கள் முழங்கின. இது இளங்கோ அடிகள் நமக்கு அளிக்கும் செய்தி.

 

இதற்குப் பிறகு இளங்கோ அடிகள், துர்கையை மஹிஷாசுரமர்த்தனியாக வருணிக்கிறார். இன்றும் மாமல்லபுரத்தில் “எருமை அசுரனை” (மஹிச அசுரன்) தேவி, வதம் செய்த காட்சி, அருமையானச் சிலை வடிவில் காட்சிதருகிறது;

பல்லவர்கள் சிலை செய்வதற்கு முன்னரே இளங்கோ அடிகள் செய்யுள் வடிவில் ஓவியம் தீட்டிவிட்டார்:

 

“மதியின் வெண்தோடு சூடும் சென்னி

நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்

பவள வாய்ச்சி, தவளவாள் நகைச்சி,

நஞ்சு உண்டு கறுத்த கண்டி, வெஞ்சினத்து

அரவு நாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்

துளை எயிற்று உரகக் கச்சுடை முலைச்சி,

வளியுடைக் கையில் சூலம் ஏந்தி

கரியின் உரிவை போர்த்து, அணங்கு ஆகிய

அரியின் உரிவை மேகலை ஆட்டி

சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி,

வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை!

இரண்டு வேறு உருவின் திரண்டதோள் அவுணன்

தலைமிசை நின்ற தையல்; பலர் தொழும்

அமரி, குமரி, கவுரி, சமரி,

சூலி, நீலி, மால் அவற்கு இளங்கிளை

ஐயை, செய்யவள், வெய்யவாள் தடக்கைப்

பாய்கலைப் பாவை, பைந்தொடிப் பாவை;

ஆய்கலைப் பாவை, அருங்கலப் பாவை

தமர் தொழ வந்த குமரிக் கோலத்து

அமர் இளங்குமரியும் அருளினள்

வரியுறு செய்கை வாய்ந்ததால் எனவே”

 

பொருள்: சந்திரப் பிறை சூடிய தலை; நெற்றிக் கண்; பவள வாய், முத்துச் சிரிப்பு, நஞ்சுண்ட கறுத்த கழுத்து, பாம்பையே கயிறாகக் கொண்டு மேரு மலையை வில்லாக  வளைத்த வில்லி; துளை அமைந்த பல்லுடைய விஷப் பாம்பையே கச்சு ஆக அணிந்த முலையுடையாள்; வளைகள் அணிந்த கையில் சூலம், யானைத்தோல் போர்வை, புலித்தோல் மேகலை, இடப்புற காலில் சிலம்பு, வலப்புறக் காலில் கழல், வெற்றி கொடுக்கும் வாள் ஏந்திய கை, மகிஷாசுரன் தலையில் நிற்பவள்; எல்லோரும் தொழும்குமரி, கறுப்பி, போரின் அதிதேவதை, சூலம் ஏந்திய பெண்; நீல நிறத்தவள்; எம் தலைவி, செய்யவள், தடக் கையில் கொடிய வாளேந்திய நங்கை; பாயும் மான் மீது ஏறி வருபவள்; மலைமகள், கலைமகள், திருமகளின் உருவம்; இளங்குமரி; அவள் அருள் நமக்குக் கிடைத்துவிட்டது.

 

வழக்குரை காதையிலும் கண்ணகியின் தலைவிரி கோலத்தைக் கண்டவுடன், வாயிற்காப்போன், பாண்டிய மன்னனிடத்தில் சொல்லுகையில் வாசலில் வந்து நிற்கும் பெண் கொற்றவை அல்லள், காளி அல்லள், பிடாரி அல்லள் என்று பல பெண் தெய்வங்களின் பெயர்களை எல்லாம் சொல்லுகிறான். சங்க காலத்தில் பெண் தெய்வ வழிபாடு, குறிப்பாக கொற்றவை வழிபாடு, எந்த அளவுக்குப் பரவியிருந்தது என்பதைக் காண முடிகிறது. புராணத்தில் வரும் மஹிஷாசுர மர்தனி, அர்த்தநாரி முதலிய கருத்துகளும் துர்கை என்பவள் சிவன், நாராயணன் எனும் வடிவத்தின் பெண் உரு என்ற கருத்தும் மூன்று தேவியரின் மாற்று உரு என்றும் கருத்து தொனிக்கும் அற்புத வரிகள் இவை. சங்க காலத்தில் ஒரே தெய்வம் என்ற கொள்கையை மக்கள் உணர்ந்த போதிலும் அவளைப் பல்வேறு வடிவங்களில் வழிபட முழ்டியும் என்பதை இளங்கோ சொல்லும் போது நாம் துர்கா அஷ்டோத்திரம் படிக்கும் உணர்வு ஏற்படும்!

 

மேலும், வேட்டுவ வரி முழுதும் கொற்றவை வழிபாடுதான்; படிக்கப்படிக்கக் கழிபேருவகை தரும்!

 

கண்ணகி, தனது கணவன் கோவலன் கொலையுண்ட செய்தி கேட்டவுடன், அவள் வளையல்களை உடைத்தெரிகிறாள். இதுவும் கொற்றவை கோவிலில் நடந்த நிகழ்ச்சி.

 

சிலப்பதிகாரம் தவிர தமிழில் பல்வேறு கால கட்டங்களில் எழுந்த இலக்கியங்களில் கொற்றவைக்குப் பல பெயர்கள் காணப்படுகின்றன:

அமரி, எண்டோளி, வெற்றி, அந்தரி, அம்பணத்தி, சமரி, ஆளியூர்தி, பாலைக் கிழத்தி, வீரச் செல்வி, மகிடற்செற்றாள், குமரி, கலையதூர்தி, கொற்றவை, சக்கிரபாணி, விமலை, கலையானத்தி, விசயை, அரியூர்தி, நாரணி, விந்தை, நீலி, காத்தியாயனி, சுந்தரி, யாமலை, சயமகள், மேதிச் சென்னி, மிதித்த மெல்லியல், கௌரி, ஐயை, பகவதி, கொற்றி, சக்கராயுதத்தி, மாலுக்கிளையநங்கை, சூலி, வீரி, சண்டிகை, கன்னி, கார்த்திகை, நாராயணி, தாருக விநாசினி

 

வாழ்க கொற்றவை / துர்க்கை புகழ்!

பெருகுக! தேவியின் அருள்!

எங்கும் மங்களம் பொங்குக!!!

 

-Subham-