சீதை சொன்ன பழமொழி

Paintings abroad: Sita garlands Rama.

9.ராமாயண வழிகாட்டி

அத்தியாயம் – 9 by ச.நாகராஜன்

 

உயிரைக் காப்பாற்றிக் கொள்! ஆனந்தம்  உன்னை  வந்து அடையும்!!

 

தினமும்  புரிய வேண்டிய சந்தியாவந்தனத்தில் மதிய வேளையில் சொல்லும் மந்திரத்தில் சூரியனைப் பார்த்துச் சொல்லும் மந்திரங்கள் இவை:

 

புரஸ்தாத் சுக்ரம் உச்சரத் – கிழக்கில் பரிசுத்தமாய் உதித்து

தேவஹிதம் சக்ஷு: – தேவர்களுக்கு நன்மை செய்வதும் கண் போன்றதுமான

தத் – அந்த சூர்ய மண்டலத்தை

சரத: சதம் – நூறாண்டு

பச்யேம – கண்டு வணங்குவோம்

ஜீவேம சரத: சதம் – அங்ஙனமே நூறாண்டு வாழ்வோம்

நந்தாம சரத: சதம் – நூறாண்டு உற்றார் உறவினருடன் கூடிக் குலவுவோம்

மோதாம சரத: சதம் – நூறாண்டு மகிழ்வோம்

பவாம சரத: சதம் – நூறாண்டு கீர்த்தியுடன் விளங்குவோம்

ச்ருணவாம சரத: சதம் – நூறாண்டு இனியனவற்றைக் கேட்போம்

ப்ரப்ரவாம சரத: சதம் – நூறாண்டு இனியனவற்றையே பேசுவோம்

அஜீதாஸ்யாம சரத: சதம் – நூறாண்டு தீமைகளால் ஜயிக்கப்படாதவர்களாக வாழ்வோம்

 

ஆக வேதம் நூறாண்டு ஒரு மனிதன் வாழ வேண்டியதை வலியுறுத்துகிறது. இதையே ஈசாவாஸ்ய உபநிடதத்தில் இரண்டாம் ஸ்லோகத்திலும் காண்கிறோம்.

ஒருவன் எப்பாடுபட்டேனும் எவ்வளவு கஷ்டத்தைஅனுபவித்தாலும் கூட உயிர் வாழ யத்தனிக்க வேண்டும் என்பதே மஹரிஷிகள் நமக்கு வலியுறுத்திக் கூறும் அன்புரை; அறவுரை!

 

இந்த வழியில் ஆதிகாவியத்தை இயற்றிய வால்மீகி முனிவர் தன் முக்கிய கதாபாத்திரங்கள் வாயிலாக இந்தப் பேருண்மையை வலியுறுத்துகிறார். ஒரு பெரிய மஹாகவி இப்படிப் பட்ட பேருண்மையை ஒரு தரத்திற்கு இரு தரம் வலியுறுத்துகிறார். அதுவும் கூட இருவேறு கதாபாத்திரங்கள் வாயிலாக வலியுறுத்துகிறார். அப்படியெனில் அந்த உண்மை எப்படிப்பட்ட  பேருண்மை என்பதை நாம் சுலபமாகப் புரிந்து கொள்ளலாம்.

 

சுந்தர காண்டத்தில் சீதை கூறுவதைப் பார்ப்போம்:
கல்யாணீ பத காதேயம் லௌகிகீ ப்ரதிபாதி மா I

ஏதி ஜீவந்த மாநந்தோ நரம் வர்ஷ ஸதாதபி II

 

ஜீவந்தம் –உயிர் வாழும்

நரம் – ஒரு மனிதனை

வர்ஷ ஸதாத் அபி – பல வருடங்கள் கழித்தாயினும்

ஆனந்தம்  – ஆனந்தமானது

ஏதி – வந்தடைகிறது

இயம் –என்ற இந்த

லௌகிகீ – உலகத்தாரால் வழங்கப்படும்

காயா – முதுமொழி

கல்யாணீ –உண்மையாகவே

மே – என் விஷயத்தில்

ப்ரதிபாதி – தோற்றுகின்றது

வத –சந்தோஷம்

           சுந்தரகாண்டம் 34ஆம் ஸர்க்கம்  6ஆம் ஸ்லோகம்

 

அனுமன் அசோகவனத்தில் சீதையைக் “கண்களால் கண்டு” ஸ்ரீ ராமர் க்ஷேமமாய் இருப்பதைத் தெரிவித்து “உமக்கும் க்ஷேம சமாசாரத்தை அறிவிக்க நியமித்தனர்”  (கௌஸலம் அப்ரவீத்) என்று கூறியவுடன் சீதை அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை அப்போது அவர் கூறிய வார்த்தைகளே இவை. உலகியல் முதுமொழி என்று அவர் கூறுவதிலிருந்தே இந்த அழகிய கருத்து பன்னெடுங்காலம் வழக்கில் இருந்து வந்திருக்கின்றது என்பதை அறிய முடிகிறது.

 

இதே  ஸ்லோகத்தை  நந்திகிராமத்தில் இருந்த பரதனும் கூறுகிறார். யுத்தகாண்டம் 129ஆவது ஸர்க்கத்தில் இரண்டாவது ஸ்லோகமாக பரதன் கூறுவது அமைகிறது.

 

அனுமன், ராமர் ராவணனை வென்று சீதையுடனும் லக்ஷ்மணனுடனும் வருகிறார் என்று பரதனிடம் தெரிவிக்கும் போது “ப்ரீதிகரம் கீர்த்தனம் அஹம் நாம ஸ்ருணோமி?” (உவப்பளிக்கும் செய்தியை நான் தானா கேட்கிறேன்?) என்று மகிழ்ச்சியுடன் கூவிய அவர் இந்த ஸ்லோகத்தைக் கூறுகிறார். உலகோர் கூறி வரும் முதுமொழி உண்மை என்பதை இரண்டாம் முறையாக இதே காவியத்தில் கூறி  நம்மை அதிசயிக்க வைக்கிறார்.

 

 

எந்த நிலையிலும் மனம் கலங்காது உயிரை எப்பாடுபட்டேனும் காக்க வேண்டும் என்பது உயிர்மொழியாக இங்கு இலங்குகிறது.

இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது ஹிட்லரின் கோரக் கொடுமைகளிடமிருந்து தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொண்டவர்களின் கதையை இங்கு நாம் நினைவு  கூறலாம். ஏராளமான நேச நாட்டுப் படையினர் மற்றும் யூதர்கள் சிறைக் கைதிகளாக இருந்து உயிரைக் காப்பாற்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டதையும் ஏராளமான உண்மைச் சம்பவங்கள் தெரிவிக்கின்றன. சிறைகளிலிருந்து தப்பித்தவர்களின் கதையோ இன்னொரு பெரிய ஆனந்த காண்டமாக அமைகிறது.

 

ஆகவே உடல்நலம், மனநலத்தோடு அருமையான உயிரைப் பாதுகாத்தல் எந்த வகையிலும் இன்றியமையாதது.

சீதா தேவி, பரதன் ஆகியோர் வாயிலாக மஹரிஷி வால்மீகி நமக்குத் தரும் முக்கிய ராமாயணச் செய்தி இது!

 

***********************

உற்சாகமே பலம்!

8.ராமாயண வழிகாட்டி

அத்தியாயம் – 8

ச.நாகராஜன்

 

உற்சாகமே பலம்!

 

உத்ஸாஹோ பலவானார்ய

   நாஸ்த்யுத்ஸாஹாத்பரம் பலம் I

ஸோத்ஸாஹஸ்யாஸ்தி லோகேஸ்மின்ன 

   கிஞ்சித்தபி  துர்லபம் II

 

ஆர்ய – அண்ணா! (பண்பாடுடையவரே!)

உத்ஸாஹ: – உற்சாகமே ( எதற்கும் சலியாத விடாமுயற்சியே)

பலவான் – எதையும் அளிக்க வல்லது

பலம் – பலனை அளிக்க வல்லது

உத்ஸாஹாத் –  உற்சாகத்தை விட

பரம் – சிறந்ததாய் வேறொன்று

அஸ்தி ந – இல்லை

ஸோத்ஸாஹத்ய – உற்சாகம் உடைய ஒருவனுக்கு

அஸ்மின் – இந்த

லோகே – உலகில்

துர்லபம் – அடைய முடியாததென்பது

கிஞ்சித் அபி – ஒன்றுமே

ந அஸ்தி – இல்லை

 

உத்ஸாஹவந்த: புருஷா  நாவசீதந்தி கர்மஸு I

உத்ஸாஹமாத்ரமாஷ்ரித்ரிய சீதாம் ப்ரதிலபேமஹி II

 

உத்ஸாஹவந்த: – உற்சாகமுடைய

புருஷா- மனிதர்கள்

கர்மஸு – காரியங்களில்

அவசீதந்தி ந – மனச்சோர்வடைய மாட்டார்கள்

உத்ஸாஹமாத்ரம் – உற்சாகம் ஒன்றையே

ஆஷ்ரித்ரிய – மேற்கொண்டு

சீதாம் –சீதா தேவியை

ப்ரதிலபேமஹி –அடைவோம்

 

கிஷ்கிந்தா காண்ட்த்தில் முதல் ஸர்க்கத்தில் 140,141,142 ஸ்லோகங்களாக அமைபவை இவை. பம்பா சரஸைக் கண்ட ஸ்ரீராமர் விரக தாபத்தால் புலம்ப அவரைத் தேற்றும் விதமாக  இவற்றை லக்ஷ்மணர் ராமரிடம் கூறுகிறார்.

 

மனிதனுக்கு வாழ்வில் உற்சாகமே இன்றியமையாதது. உற்சாகமே பலம்.உற்சாகமே வெற்றியைத் தரும். இடைவிடா முயற்சிக்கு ஆதார அடிப்படை உற்சாகமே.

 

இந்த அரிய  குணத்தை உடையவன் தான் ராமன் என்றாலும் சீதை பால் கொண்ட அன்பின் அதிசயத்திற்குக் கட்டுப்பட்டு (காமவசம் ஆபன்ன: என்பது வால்மீகி மஹரிஷியின் வாக்கு) அவன் சீதையை நினைத்துப் புலம்பும் போது லக்ஷ்மணன் அவரை நோக்கிக் கூறும் இந்த உண்மை மனித குலம் அனைத்திற்கும் என்றும் பொருந்தும்.

 

உற்சாகத்தைப் பற்றிய எனது ஆங்கிலக் கட்டுரையைக் கீழே தந்துள்ளேன். படித்து மகிழலாம்.இந்த ஆங்கிலக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஸ்லோகங்கள் ராமாயண வழிகாட்டி ஐந்தாம் அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.

 

The One Word That Makes the Difference between Success and Failure!

The difference between Success and Failure is determined by just one MAGIC WORD!

Yes, just by one word!

What is that?

Walter Chrysler, when asked to give the secret of success, listed the various qualities, such as ability, capacity, energy, but added that the real secret was enthusiasm.

“Yes, more than enthusiasm,” said Chrysler, “I would say excitement; I like to see men get excited.”

In the great epic Ramayana, Maharishi Valmiki is giving an interesting picture.

When Hanuman, the monkey God was not able to trace out the location of Sita, He was very much distressed.

He lamented, “How could I meet my colleagues at the other end of the ocean without finding out Sita!”

As He is the embodiment of Success, He immediately found out the required quality and uttered two verses (12th chapter verses 10 and 11).

In Sundara Kandam, the best part of Ramayana, He says, “Enthusiasm is the cause for getting wealth; enthusiasm is the greatest comfort; Enthusiasm makes one to do his best always, in all matters. Enthusiasm makes human effort fruitful. Hence I am going to do my best induced by enthusiasm.” Needless to say, Hanuman found Sita in Asokavanam. This is the turning point in the great epic. Rama went to Lanka and killed Ravana.

Norman Vincent Peale has written a book titled, “Enthusiasm Makes the Difference”. He points out that

 

Enthusiasm never runs down

Enthusiasm cancels fear and worry

Enthusiasm reduces stress and tension

Enthusiasm works miracles in problems

Enthusiasm is a powerful motivation which makes things happen

Enthusiasm builds power under your difficulties

Enthusiasm makes the difference- it leads everybody from failure to success.

The word enthusiasm from the Greek entheos means ‘God in you’ or ‘full of God’. In other words enthusiasm is a “Godly Quality”.

Emerson wrote:”Nothing great was ever achieved without enthusiasm.” God helps to those who work with great enthusiasm. So instead of blaming others or the environment, we have to work hard enthusiastically aiming at our goal.

This one word will definitely take us to success from failure!

«««««««

கவிஞருக்குத் துன்பம் தரும் ஏழு விஷயங்கள் !

9.சம்ஸ்கிருதச் செல்வம் 

9. கவிஞருக்குத் துன்பம் தரும் ஏழு விஷயங்கள் ! 

By ச.நாகராஜன்

 

   சம்ஸ்கிருத இலக்கியத்தில் தனக்கென அழியாத இடத்தைப் பெற்றவர் பர்த்ருஹரி. இவரது கவிதைகளை மேற்கோள் காட்டாதவர்களே கிடையாது.ஸ்வாமி விவேகானந்தர் முதல் மஹாத்மா காந்திஜி வரை எல்லாப் பெரியோரும் கவிஞர்களும் அறிஞர்களும் இவரது கவிதைகளைச் சுட்டிக் காட்டி தாம் சொல்ல வந்ததை விளக்கும் அளவு ஆழமான கருத்துடைய கவிதைகளைப் படைத்தவர் பர்த்ருஹரி.

 

நீதி சதகம், ச்ருங்கார சதகம், வைராக்ய சதகம் என மூன்று சதகங்களை அவர்  படைத்துள்ளார். சதகம் என்பது நூறு பாடல்களைக் கொண்டது.

 

அதிர்ஷ்டவசமாக இவரது மூன்று நூல்களும் இன்று நம்மிடையே உள்ளன. எளிய பதங்கள், இனிய நடை, ஆழ்ந்த கருத்து, வார்த்தை ஜாலங்களும் கருத்து ஜாலங்களும் மிக்க கவிதைகள் என இவரது அரிய படைப்புகளைப் பற்றி இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

 

சற்று மிகைப்பாடல்களுடன் கூட நீதி சதகத்தில் 111 பாடல்களும்,ச்ருங்கார சதகத்தில் 104 பாடல்களும் வைராக்ய சதகத்தில் 111 பாடல்களும் நம்மிடையே இன்று உள்ளன.

அனைத்துப் பாடல்களும் பொக்கிஷம். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒரே ஒரு தரமாவது படிக்க வேண்டிய கவிதைகள் இவை.

 

முதலில் மாதிரிக்கு ஒன்று!

 

பழுத்த அனுபவஸ்தரான பர்த்ருஹரி தேசம் முழுவதும் சுற்றியவர் போலும். பல நிகழ்வுகளைப் பார்க்கிறார். பலதரப்பட்ட மனிதர்களைப் பார்க்கிறார். அவருக்குத் துன்பம் தரும் ஏழு விஷயங்களைப் பட்டியலிடுகிறார்.

 

நீதி சதகத்தில் 45வது பாடலாக இது மலர்கிறது:

 

சசீ திவஸ தூஸர: கலித யௌவனா காமினி

   சரோ விகத வாரிஜம்  முகமநக்ஷரம் ஸ்வாக்ருதே:I

    ப்ரபுர்தனபராயண: ஸதத துர்கதி ஸஜ்ஜன:

       ந்ருபாங்கண கத: கல: மனஸி சப்த சல்யா இமே II

 

திவஸ தூஸர: – பகலால் ஒளியிழந்த

சசீ – சந்திரனும்

கலித யௌவனா – யௌவனமிழந்த

காமினி – மனைவியையும்

விகத வாரிஜம் – தாமரைப் பூவற்ற

சர: – தடாகமும்

ஸ்வாக்ருதே: – நல்ல அழகுள்ளவனுடைய

முகம் – வாயானது

அநக்ஷரம் – எழுத்து வாசனையே இல்லாமல் இருப்பதும்

ப்ரபு: – பணக்காரன்

தன பராயண: – பணம் சேமிப்பதிலேயே கருத்தாக   இருப்பதும்

ஸஜ்ஜன: -நல்ல மனிதன்

ஸதத துர்கதி – எப்போதும் கஷ்ட தசையில் வாழ்வதும்

கல: -அயோக்கியன்

ந்ருபாங்கண கத: – அரசனுடன் நெருங்கிப் பழகுவதும்

ஸப்த – ஆகிய மேற்கண்ட ஏழு விஷயங்களும்

மே – எனக்கு

சல்யானி – துன்பமளிக்கின்றன

 

1.பகல் வேளையில் சந்திரன் ஒளி இழந்து இருப்பதைப் பார்த்தால் மனதிற்குத் துக்கம் ஏற்படுகிறது.2.இதே போல இளமை அழகு இழந்த மனைவியும், 3.தாமரைப் பூக்கள் இல்லாத தடாகமும் 4.அழகிய ரூபமுள்ளவன் படிப்பறிவே இல்லாமல் இருப்பதும் 5.பணக்காரனாக இருந்த போதிலும் மேலும் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பதும் 6.நல்ல மனிதர்கள் எப்போதும் கஷ்டமான வாழ்க்கையையே நடத்த நேரிடுவதும் 7.அயோக்கியர்களோ அரசன் வீட்டில் செல்வாக்குப் பெற்று நல்ல காரியங்களைக் கெடுப்பதும் ஆகிய இந்த ஏழும் என் மனதிற்குத் துன்பத்தைத் தருகிறது என்கிறார் கவிஞர்.

 

என்ன அற்புதமான கருத்து! உலகியல் வாழ்வில் அன்றும் இது உண்மை! இன்றும் இது உண்மை! என்றும் பொருந்துவதைச் சொல்வதனால் தான் கவி என்று அழைக்கிறோம் என்பதைப் புரிய வைக்கும் அற்புதப் பாடல் இது!

 

****************

  

ராமாயணத்தில் வரும் ஆறு பிரமாணங்கள்!

Picture: Rama is banished for 14 years.

ராமாயண வழிகாட்டி

அத்தியாயம் – 7  by  ச.நாகராஜன்

 

ஒன்றை அறியும் விஷயத்தில் ஆறு பிரமாணங்கள்!

 

வால்மீகி மஹரிஷி இயற்றிய ராமாயணத்தில் நுணுக்கமான விஷயங்கள் ஏராளம் உண்டு. உலகியல் வாழ்க்கையில் தர்ம அர்த்த காமத்தை நன்கு அடைந்து மோக்ஷத்தையும் அடையும் உபாயத்தை ராமாயணம் தருகிறது.

 

ஒன்றை அறியும் விஷயத்தில் ஆறு பிரமாணங்கள் உண்டு என்று கபந்தன் ராமரிடம் கூறும் இடம் சுவாரசியமானது; வாழ்க்கையில் வெற்றி பெற உதவுவது.

 

ராம ஷட்யுக்தயோ லோகே யாமி: சர்வம் விம்ருஷ்யதேI

 

ராம! லோகே – ஸ்ரீராம! உலகில்

ஷட்யுக்தய:  – ஒன்றை அறியும் விஷயத்தில் ஆறு பிரமாணங்கள் உண்டு

யாமி: – அவைகளால்

சர்வம் – எல்லாமும்

விம்ருஷ்யதே – அறியப்படுகிறது.

   (ஆரண்ய காண்டம், 72வது ஸர்க்கம்,12ஆம் ஸ்லோகம்

 

கபந்தன் ஸ்ரீ ராமரிடம் கூறும் முக்கிய சொற்கள் இவை.

ஒன்றை அறியும் விஷயத்தில் ஆறு பிரமாணங்கள் எவை எவை?

 

  1. பிரத்யக்ஷம் – நாமே நேரில் காண்பது
  2. அனுமானம் – தெரிந்த விஷயங்களைக் கொண்டு இதர தீர்மானங்களை அல்லது முடிவை அடைதல்
  3. உபமானம் – ஒன்றை உபமானமாகக் கொண்டு அதன் மூலம் தெளிதல்
  4. சப்தம் – வேதம் முதலிய சப்தங்களைக் கொண்டு அறிதல்
  5. அனுபலப்தி – காணாமையால் இல்லை என்று அறிதல்
  6. அர்த்தாபத்தி – பார்த்தவைகள், கேட்டவைகளைக் கொண்டு மற்றவைகளை ஊகித்தல்

 

இவற்றைக் குறிப்பிட்ட கபந்தன், “நீங்கள் தேவியைப் பிரிந்து கஷ்ட தசையில் இருக்கிறீர்கள். சுக்ரீவனை அடையுங்கள். அவன் உங்களுக்கு உதவி புரிவான்” என்று உரைக்கிறான்.

சுக்ரீவனுடன் நட்பைக் கொள்ளுங்கள் என்று கபந்தன் உரைப்பதால், ஷட்யுக்தய: என்ற வார்த்தைக்கு ஆறு யுக்திகள் என்று பொருள் கொண்டு அந்த ஆறு உக்திகளை வியாக்கியானகாரர்கள் சொல்வதும் உண்டு.

 

ஆறு உக்திகளாவன:-

 

1)   ஸந்தி – நட்பைக் கொள்வது

2)   விக்ரஹம் – பகையைக் கொள்வது

3)   யானம் – எதிரியின் மீது படையெடுத்துச் செல்வது

4)   ஆஸனம் – எதிரியை எதிர்பார்த்துக் காத்திருத்தல்

5)   துவைதீபாவம் – பிரித்து வைத்தல்

6)   ஸமாஸ்ரயம் – பணிந்து போதல்

 

இந்த ஆறு யுக்திகளையும் ஒவ்வொரு விஷயத்திலும் நன்கு ஆய்ந்து முடிவு எடுக்க வேண்டும் என்று கபந்தன் கூறுவதாகப் பொருள் கொண்டு வியாக்கியானம் செய்பவர்கள் பலர்.

கபந்தனின் வரலாறு ஆரண்ய காண்ட்த்தில் 71வது ஸர்க்கமாக அமைகிறது. அற்புதமான அந்த வரலாற்றில் பல உண்மைகளை நாம் அறிய முடியும்.

 

வெற்றி பெற நாம் கடைப்பிடிக்க வேண்டிய உத்திகளை விளக்குவதால் ராமாயணம் ஒரு வாழ்க்கை நூல் என்ற பெயரைப் பெறுகிறது.

 

“கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு”

 

என் பெயர் புலவர் நக்கீரன். “கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு” என்ற தலைப்பில் பேச வந்திருக்கும் உங்கள் அனைவர்க்கும் முதல் கண் நன்றி கலந்த வணக்கங்கள். சென்ற இரண்டு வாரங்களில் ‘மன்னிக்க வேண்டுகிறேன்”, என்ற தலைப்பிலும் “ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை” என்ற தலைப்பிலும் பேசினீர்கள். கன கச்சிதமாக இருந்தது. அதே போல இன்றும் தலைப்பை ஒட்டி மட்டுமே பேசவேண்டும்.

 

கண்ணபிரான்: என் பெயர் கண்ணன். வடக்கில் கிருஷ்ணன் என்பார்கள். இப்படி ஒரு தலைப்பில் யாராவது பேச அழைக்க மாட்டார்களா என்று காத்திருந்தேன். காரணம் என்னவென்றால் என் கலரை மனதில் வைத்துக் கொண்டு வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கன்னா பின்னா என்று எழுதுகிறார்கள். கிருஷ்ணனென்ற பெயரை ஆங்கிலத்தில் சொல்லப்போனால் மிஸ்டர் பிளாக் Mr Black. உண்மையில் நான் சொல்வதுதான் வேதங்களிலும் உபநிஷதங்களிலும் உள்ளது. அவைகளை ஆரியக் கொள்கை என்றும் நான் சொன்னது த்ராவிடன் சொன்னது என்றும் பிதற்றுகிறார்கள். உண்மையில் ஆரியமே திராவிடமோ இல்லை. எல்லா காதல் பாட்டுகளிலும் கண்ணனென்று ஒப்பிட்டு காதலனை அழைப்பார்கள். இதிருந்தே உங்களுக்கு தெரியும் கறுப்புதான் எல்லோருக்கும் பிடிச்ச கலரு என்று.

 

வியாசர்: இடை மறித்துப் பேசுவதற்கு மன்னிக்கவும். யாராவது இந்ததலைப்பில் பட்டிமன்றம் நடத்தமாட்டார்களா என்று நானும் காத்திருந்தேன். என் பெயர் வியாசர். வேதங்களை அழகாகத் தொகுத்து நாலாகப் பிரித்து நான்கு சீடர்கள் மூலம் பரப்பியவன் நான். மஹா பாரத்தை எழுதியவன் நான். என் மகன் புராணங்களை எல்லாம் தொகுத்துச் சொன்னவன். என்னுடைய உண்மையான பெயர் கிருஷ்ண த்வைபாயனன். ஆங்கிலத்தில் சொன்னால் மிஸ்டர் ப்ளாக் ஐலண்டர் Mr Black Islander. நானும் கறுப்பன் (Black) தான். இந்த ஆரிய திராவிட வாதம் எல்லாம் பொய். ஆரியக் கலர் வெள்ளை என்றும் திராவிடக் கலர் கறுப்பு என்றும் மஹா பேத்தல்களால் மனம் நொந்தே போனேன்.

 

தீர்க்கதமஸ்: வியாசர் ஐயா அழகாச் சொன்னாரு. என்பெயர் தீர்க்க தமஸ். ஆங்கிலத்தில் சொன்னால் லாங் டார்க்நெஸ் LongDarkness. நான் ரிக்வேத ரிஷி. நான் ஒரு கறுப்பன். இதை வைத்தே நிறவாத ஆரிய திராவிடக் கொள்கை பொய் என்று சொல்லாமலே விளங்குமே. வேத காலத்தில் இப்படி நிறபேதம் இல்லை என்பது வியாசர் ஐயாவையும் என்னையும் கறுப்பனான ராம பிரானையும் பார்த்தாலேயே தெரியும்.

 

ராம பிரான்: அட, நான் பேச நினைத்தஎல்லாம் நீ பேச வேண்டும் என்று நினைத்தேன். என்னையும் ஒரு கறுப்பன் என்று இனம் காட்டினீர்கள். நன்றி, தீர்க்கதமஸ் ஐயா.

 

என் பெயர் திரவுபதி. அர்ஜுனன் மற்றும் நான்கு பாண்டவர்களின் மனைவி. என் பெயர் கிருஷ்ணா (krishnaaa. நானும் கறுப்புதான். மக்கள் என்னை எந்த அளவுக்கு கொண்டாடினார்கள் தெரியுமா? ( வடமொழியில் கிருஷ்ண என்பது கண்ணன், கிருஷ்ணா என்பது திரவுபதி)

அட நீ ஒன்று. என் பெயர் காளி. கலி, காளி, காலன் என்றாலே கறுப்பு என்றுதான் அர்த்தம். நானும் விஷ்ணுவும் கறுப்புதான். நாங்கள் என்ன ஆரியர்களா, திராவிடர்களா?

 

என் பெயர் காலன். என்னை எமன் என்று சொன்னால் எல்லாருக்கும் எளிதில் புரியும். இந்த வெளி நாட்டு ஆராய்ச்சியாளரும், பி.எச்டி. பைத்தியங்களும் என்னை ஆரிய தெய்வங்களில் ஒன்று என்று எழுதி வைத்துவிட்டார்கள். மஹா உளறல். என்னை அனுதினமும் பிராமணர்கள் மூன்று முறை சந்தியா வந்தனத்தில் வணங்குகிறார்கள். அதில் கூட என்னை நீலாய (Yamaaya Dharmarajaaya……..Neelaaya parameshtine) என்ற மந்திரத்தால்தான் துகிக்கிறார்கள். நீலம் என்றாலும் கறுப்பு என்றாலும் ஒன்றுதான். நீலக் குயில் ,கருங்குயில் என்று சொல்வதிருந்து இது எளிதில் புரியு.ம்.

 

முக்கண்ணன்: ஐயாமார்கள் சொன்னதெல்லாம் ரொம்ப ரொம்ப சரி. வேதத்தைப் படித்தவர்களும் சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றி முதலில் எழுதியவர்களும் நகைப்புக்குரிய ஒரு கொள்கையை வெளியிட்டு என் பெயரை எல்லாம் ரிப்பேர் ஆக்கிவிட்டர்கள். ஆரிய ருத்திரன் சிவப்பு என்றும் திராவிட சிவன் கறுப்பு என்றும் காலப்போக்கில் இது ஒன்றாகக் கலந்துவிட்டது என்றும் நல்ல கதை கட்டிவிட்டு ஏராளமான புத்தகங்களும் எழுதிவிட்டார்கள். உண்மையில் அப்பர் பெருமான் பாடிய பாடலில் சிவனும் ருத்திரனும் ஒன்றே என்று அழகாகப் பாடியிருக்கிறார். எனக்கு ஐந்து நிறம் உண்டென்பதை இன்னொரு பாடலில் சொல்லிவிட்டார். ருத்ரம் என்னும் வேதப் பகுதியில்தான் நமசிவாய என்ற மந்திரமே வருகிறது. தமிழில் சிவன் என்ற சொல்லே ஐந்தாம் நூற்றாண்டில்தான் முதலில் வருகிறது. சங்க இலக்கியத்தில் என் பெயரே சிவனென்று சொல்லப்படவில்லை. சிவன் என்னும் செம்மேனி அம்மான் என்பதே சரி. நிறத்தின் அடிப்படையில் ஆரிய திராவிட பாகுபாடு செய்ததெல்லாம் மஹா அபத்தம் என்பது இப்போதாவது புரிகிறதா?

நீங்கள் கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு என்று சொன்னாலும் சரி, சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு என்று சொன்னாலும் சரி, எனக்கு மகிழ்ச்சியே.

 

அப்பர் பெருமான்:

நீலவுரு வயிரநிறை பச்சை செம்பொன்

நெடும்பளிங்கு என்ற அறிவரிய நிறத்தர்போலும்

கோலமணி கொழித்தெழியும் பொன்னி நன்னீர்

குடந்தை கீழ்கொட்டத்து என் கூத்தனாரே.

 

(இப் பாட்டில் சிவனுக்கு நீலம், வயிரம், பச்சை, பொன், பளிங்கு என ஐந்து நிறங்கள் உள்ளதாக அப்பர் பாடி இருக்கிறார். வேறு பாடல்களில் சிவணை செம்மேனி அம்மான் என்பார்)

வளர் ஒளியை மரகதத்தின் உருவினானை

செம்பொன்னே மரகதமே மணியே போற்றி.

 

நக்கீரர் முடிவுரை:

மிக அழகாக இனவாத, நிற வாத ஆரிய-திராவிட வாதத்தை தகர்த்துவிட்டீர்கள்.

மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ் பயன் அறிகிலா

அந்தகர்க்கு எளியேன் அலேன்” – என்று திரு ஞானசம்பந்தர் பாடியிருக்கிறார்.. இது பெரிய ஒரு தலைப்பு. ஆகையால் அடுத்த கூட்டத்தில் “ சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை, அதை சொன்னாலும் கேட்பவருக்கு புரியவில்லை” என்ற தலைப்பில் பேச உங்களை அழைக்கிறேன். மீண்டும் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடை பெறுவது திருமுருகாற்றுபடை புகழ் நக்கீரன்.

வாழ்க தமிழ், வளர்க பாரத ஒற்றுமை.

contact: swami_48@yahoo.com

ராமர் போற்றிய மஹாத்மா!

6.ராமாயண வழிகாட்டி

அத்தியாயம் – 6     By ச.நாகராஜன்

 

ராமர் போற்றிய மஹாத்மா!

 

கார்யே கர்மணி நிர்திஷ்டே யோ பஹூன் யபி ஸாதயேத் I

பூர்வகார்யாவிரோதேன ஸ கார்யம் கர்து மர்ஹதி II

 

கார்யே –  செய்து முடிக்க வேண்டிய

கர்மணி – ஒரு காரியத்தில்

நிர்திஷ்டே  ஏவப்பட்டபோது

ய: – எவனொருவன்

பூர்வகார்யாவிரோதேன – முதல் காரியத்திற்கு ஒரு கேடுமின்றி

பஹூனி அபி – அனேகங்களையும்

ஸாதயேத் – சாதிக்கின்றானோ

ஸ – அவன்

கார்யம் – காரியத்தை

கர்தும் – செய்து முடிக்க

அர்ஹதி –  திறமை உடையவனாகிறான்

 

-சுந்தரகாண்டம் 41வது ஸர்க்கம் 5ஆம் ஸ்லோகம்

 

அனுமான் சீதையை அசோகவனத்தில் கண்டதில் மகிழ்ச்சி அடைகிறார். பின்னர்  மனதில் சிறிது ஆராய்ச்சி செய்கிறார். ‘அஸி தேஷணா இயம் த்ருஷ்டா’ – ‘கருங்கண்ணாளான இந்த சீதை என்னால் கண்டுகொள்ளப்பட்டாள்’ என்று  மகிழ்ந்த அவர், “அரக்கர்களிடம் தண்டம் என்ற நான்காவது உபாயமே செல்லுபடியாகும். ஒரு காரியத்தை முடிக்கின்ற போது அத்துடன் பல காரியங்களையும் சேர்ந்து முடிப்பதே சாலச் சிறந்தது” என்று எண்ணுகிறார்.

 

சிறந்த வேலைக்காரனின் வழி அல்லது எக்ஸலண்ட் பெர்பார்மன்ஸ் (excellent performance) என்பதை அவர் விவரிக்கும் இந்த ஸ்லோகம் ஒருவர் வாழ்க்கையில் வெற்றி கொள்வதற்கான வழியைச் சுட்டிக் காட்டுகிறது.

 

சீதை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதே அவருக்கு இட்ட பணி.

ஆனால் அவரோ ராக்ஷஸ கிங்கரர்களை வதைத்தார். சுக்ரீவனது ஜெயத்தை கோஷித்தார். பிரஹஸ்தனுடைய மகனான ஜம்புமாலியை வதம் செய்தார். அக்னி ஒளியை உடைய ஏழு மந்திரிகுமாரர்களை வதம் செய்தார். ஐந்து சேனைத் தலைவர்களையும் அக்ஷ குமாரனையும் வதம் செய்தார்.ராவணனை நேருக்கு நேர் சந்தித்து எச்சரிக்கை செய்தார். விபீஷணனையும் இதர மந்திரிமார்களையும் நேரில் கண்டு ராவணனின் பலத்தை நிர்ணயித்தார்.  இலங்கையை எரியூட்டினார். போதாதா, என்ன?

 

அனுமனை ராமர் போற்றிக் கூறும் இடம் ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் முதல் ஸர்க்கத்தில் அமைகிறது. 7,8,9 ஆகிய மூன்று ஸ்லோகங்களில் ராமர் கூறுவதைப் பார்ப்போம்:

 

யோ ஹி  ப்ருத்யோ  நியுக்த: 

ஸன்பர்த்ரா கர்மணி துஷ்கரே I

குர்யாத் த்தனுராகேன

தமாஹு: புருஷோத்தமம் II

(ப்ருத்ய: – வேலைக்காரன்; பர்த்ரா –  தலைவன்/ எஜமானன்)

 

எந்த ஒரு வேலைக்காரன் தலைவனால் கஷ்டமான ஒரு காரியத்தில் ஏவப்பட்டு அதைக் குறையின்றி செய்வதோடு அநுகூலமான வேறு பல காரியங்களையும் செய்து முடிக்கிறானோ அவனை உத்தம வேலைக்காரனாகச் சொல்வர்.

நியுக்தோ ய:  பரம் கார்யம்

ந குர்யான்ந்ருபதே: ப்ரியம் I

ப்ருக்தோ யுக்த: சமர்த்தஸ்ச

தமாஹுர்மத்யமம் நரம் II

 

(யுக்த – அனுபவசாலி; சமர்த்த- சாமர்த்தியசாலி;ப்ரியம் –நன்மை விளைவிக்கத் தக்கது) 

 

எந்த ஒரு அனுபவசாலியும், திறமைசாலியுமான வேலைக்காரன் தலைவனால்  ஒரு காரியத்தில் ஏவப்பட்டு தலைவனுக்கு மேலான மேலும் பல காரியங்களைச் செய்யவில்லையோ அவனை நடுத்தரமான வேலைக்காரன் என்று சொல்வார்கள்.

 

நியுக்தோ ந்ருபதே: கார்யம் ந குர்யாத்ய: ஸமாஹித:

ப்ருத்யோ யுக்த:  சமர்தஸ்ச  தமாஹு: புருஷாதமம்

 

எந்த ஒரு அனுபவசாலியும், திறமைசாலியுமான வேலைக்காரன் தலைவனால்  ஒரு காரியத்தில் ஏவப்பட்டு தலைவனுக்குக் குறைந்தபட்ச காரியத்தைக் கூடச் சரியாகச் செய்யவில்லையோ அவனை அதம வேலைக்காரனாகச் சொல்வார்கள்

இப்படி வேலை செய்பவர்களை மூன்று விதமாகப் பிரித்துச் சுட்டிக் காட்டும் ராமர் அனுமனால் ‘பரி ரக்ஷிதா:’ (பேருதவிசெய்யப்பெற்றோம்)

என்று மனம் குளிரக் கூறுகிறார்.

 

இந்த பேருதவியைச் செய்த அனுமானை மஹாத்மன: (மஹாத்மா)

என்று அவர் புகழ்கிறார். ராமராலேயே மஹாத்மா என்று புகழப்பட்டார்  என்றால் அனுமனின் பெருமையைக் கூறவும் வேண்டுமோ!

 

அனுமனின் செயற்கரிய செயலுக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்? ராமரே,”ஹனூமத: சர்வஸ்வபூதஸ்து ஏஷ பரிஷ்வங்க: து தத்த:”  (ஹனுமானுக்கு எல்லாவற்றிலும் மேம்பட்டதான இந்த ஆலிங்கனம் செய்யப்படுகிறது) என்று கூறி அனுமனை மார்போடு அணைக்கிறார்.

 

 

இதை எண்ணும் போது நம் மெய் சிலிர்க்கிறது. இப்படிப்பட்ட ஆச்சரிய புருஷரான  அனுமனை உலக மஹாகவி கம்பன் நன்கு தேர்ந்தெடுத்த சொற்களால் இப்படித்  துதிக்கிறார் :-

 

 

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன்  எம்மை அளித்துக் காப்பான்

 

ஐந்து பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன் ஐந்து பூதங்களில் ஒன்றான கடல் நீரைத் தாண்டி, ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு ஸ்ரீ ராமனுக்காக ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த புதல்வியான சீதையைக் கண்டு ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை அயல் தேசமான லங்கையில் வைத்தான். அவன் எம்மை அனைத்தும் அளித்துக் காப்பான்  என்பது இதன் பொருள்.

 

ஐந்து பூதங்களையும் அஞ்சிலே என்ற சொல் சுட்டும் பாங்கு நினைத்து இன்புறுதற்கு உரியது. அனுமனின் சேவையை இதைவிடச் சிறப்பாக  எப்படிச் சொல்ல முடியும்! கம்பனால் மட்டுமே இப்படி முடியும்!

 

இந்த ஸ்லோகங்கள் சுட்டிக் காட்டும் “பணி செய்வதில் சிறப்பு” என்பதை “யோக: கர்மஸு கௌசலம்” என்று பகவத் கீதையில் (இரண்டாம் அத்தியாயம் 50ஆம் ஸ்லோகம்) கண்ணபிரான் சுருக்கமாகக் கூறி விளங்க வைப்பதையும் எண்ணி மகிழலாம்!

கர்ம யோகி அனுமனிடமிருந்து கர்ம யோகத்தையும் கற்கலாம்!!

*************

 

உற்சாகமே உயிர்!

5.ராமாயண வழிகாட்டி

அத்தியாயம் – 5 By ச.நாகராஜன்

 

உற்சாகமே உயிர்!

 

ராமாயணத்தில் அற்புதமான கதாபாத்திரமாக மிளிர்பவர் அனுமான்.

இறைபக்திக்கும், செயல் திறமைக்கும், மதியூகத்திற்கும், சீலத்திற்கும், அர்ப்பணிப்பு மனப்பான்மைக்கும் இன்ன பிற அனைத்து தெய்வீக குணங்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் அனுமான். அவர் வாய் வழியே வரும் கருத்துக்கள் அனைத்துமே சிறப்பானவை.

 

சீதையைத் தேடச் சென்ற அனுமனின் வாயிலாக ஒரு அற்புதமான வாழ்வியல் கருத்தைச் சுந்தர காண்டத்தில் காண்கிறோம்.

இலங்கையில் சீதையை மாளிகைகளிலும் சித்திர வீடுகளிலும் பூங்கொடி வீடுகளிலும் காணாமல் அனுமான் மனம் கலங்குகிறார்.”ஆஹா, சீதையைக் காணவில்லை என்றால் அனைவரும் நிச்சயமாய் பட்டினி கிடந்து அல்லவா உயிர் துறப்பார்கள்” என்று அவர் வேதனைப் படுகிறார்.

 

ஆனால் நல்ல ஒரு செயல் வீரன் மனம் தளர்ந்தால், அவன் எப்படி வெற்றி பெற முடியும்? ஆகவே அவர் அற்புதமான இரண்டு ஸ்லோகங்களைக் கூறி தன்னைத் தானே ஊக்குவித்துக் கொள்கிறார்.

 

அனிர்வேத: ஸ்ரியோ மூல மனிர்வேத: பரம் ஸுகம் I

அனிர்வேதோ ஹி ஸததம் ஸர்வார்த்தேஷு ப்ரவர்த்தக: II

 

கரோதி ஸபலம் ஜந்தோ: கர்ம யத்தத் கரோதி ஸ: I

தஸ்மாதனிர்வேதக்ருதம் யத்னம் சேஷ்டேஹமுத்தமம் II

சுந்தரகாண்டம் பன்னிரண்டாவது ஸர்க்கம் 10,11 ஸ்லோகங்கள்

 

அனிர்வேத: – மனம் தளராமையே

ஸ்ரியோ – செல்வத்திற்குக்

மூலம் – காரணம்

அனிர்வேத: – மனம் தளராமையே

பரம் ஸுகம் – மேலான சுகம்

ஸததம் – எப்பொழுதும்

ஸர்வார்த்தேஷு – எல்லா விஷயங்களிலும்

ப்ரவர்த்தக: – முயலும்படி செய்வது

அனிர்வேத: ஹி – மனம் தளராமையே

 

ஜந்தோ: – மானிடரின்

கர்ம – காரியத்தை

ஸபலம் –பயனுடையதாக

யத் – எது

கரோதி – செய்கிறதோ

த த் – அதை

ஸ: – அது (மனம் தளராமை)

கரோதி – செய்கிறது

தஸ்மாத் – ஆகையால்

அஹம் – நான்

அனிர்வேதக்ருதம் – உற்சாகத்தினால் ஏற்பட்ட

உத்தம்ம் – உத்தம மான

யத்னம் – முயற்சியை

சேஷ்டே – மேற்கொள்கிறேன்.

 

அனிர்வேதம் என்ற சொல்லுக்கு உற்சாகம், மனம் தளராமை என்ற பொருள் உண்டு.அனுமான் உற்சாகம் மனிதனுக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதைத் தனக்குத் தானே சொல்லி தன்னைத் தானே ஊக்கப்படுத்திக் கொள்கிறார். முயற்சியைத் தொடர்கிறார். வெற்றியும் பெறுகிறார்.

 

செல்வத்திற்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றிக்கும் மூலம் உற்சாகமே என்ற அற்புத வெற்றி சூத்திரத்தை அனுமார் விளக்கும் இடமும் பொருத்தமாக அமைகிறது.

 

வால்மீகி இந்த காண்டத்தில் ஒரு அற்புதமான உண்மையைப் பொதிந்து வைத்திருக்கிறார்.

உற்சாகத்துடன் தேடும் பணியைத் தொடர்ந்த அனுமான் அதுவும் பயன்பெறாத நிலையில் பின்னர் இறைவன் அருளை வேண்டுவது தான் அது.

 

மனித யத்தனமும் இறை அருளும் இருந்தால் தான் ஒரு காரியம் வெற்றி பெறும் என்பதை சுந்தர காண்டம் சுட்டிக் காட்டுகிறது.

வாழ்க்கையில் வெற்றி பெற உன்னதமான சூத்திரத்தைச் சுட்டிக் காட்டும் சுந்தர காண்டத்திற்கு ஈடு இணை இல்லை!

 

(இந்தக் கட்டுரையைப் படித்தோர் ஆசிரியரின் வெற்றிக்கலை நூலில் உள்ள ‘உற்சாகமே உயிர்’ என்ற அத்தியாயத்தையும் அனுமானின் உற்சாகத்தையும் ராம பக்தியையும் விளக்கும் சுந்தரகாண்டம் பற்றிய கட்டுரையையும் படித்துப் பயன் பெறலாம்)

 

************

‘ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை’

‘ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை’ (கற்பனைப் படைப்பு- ச.சுவாமிநாதன்)

புலவர்கள் மாநாட்டுக்கு வருகை தந்த அனைவருக்கும் வணக்கம். என் பெயர் நக்கீரன். ‘நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று சிவ பெருமானையே கண்டித்தவன் நான். ‘சங்கு அறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்?’ என்று சிவனையே தட்டிக் கேட்டவன் நான். கவனமாக உண்மையை மட்டும் பேசுங்கள். இன்றைய தலைப்பு:

“ ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை ”:

 

1.சேக்கிழார்: என் பெயர் சேக்கிழார். நான் முதலில் பேசிவிடுகிறேன். நான் எழுதிய பெரிய புராணத்திலிருந்து ஒரு சில வரிகள்:

அளவு கூட உரைப்பரிதாயினும்

அளவிலாசை துரப்ப அறைகுவேன்

Though impossible to reach its limits

Insatiable love(desire) drives me to the task

 

2.கம்பன்: என் பெயர் கம்பன். நான் எழுதிய ராமாயணத்தில் சேக்கிழார் அய்யா சொன்னதையே சொல்லி இருக்கிறேன்:

ஆசைபற்றி அறையலுற்றேன் மற்றிக்

காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ!

 

3.அப்பர் பெருமான் எழுந்தார். கருவில் இருந்தபோதே எனக்கு ஒரு ஆசை:

“கருவுற்ற நாள் முதலாக உன் பாதமே காண்பதற்கு

உருகிற்றென் உள்ளமும்…………………….”

 

4.என் பெயர் அருணகிரிநாதன். சுமார் 550 ஆண்டுகளுக்கு முன் திருவண்ணாமலையில் தறுதலைக் காலியாகத் திரிந்தேன். வாழ்க்கையே வெறுத்து தற்கொலை செய்ய கோபுரத்தில் இருந்து குதித்தபோது முருகன் அருள் பெற்று திருப்புகழ் பாடினேன். இதோ ஆசை பற்றி:

புலையனான மாவீனன் வினையிலேகு மாபாதன்

பொறை இலாத கோபீகனந்———- முழு மூடன்

புகழிலாத தாமீகன் அறிவிலாத காபோதி

பொறிகளோடி போய்வீழு————- மதி சூதன்

நிலையிலாத கோமாளி கொடையிலாத ஊதாரி

நெறியிலாத வேமாளி—————-  குலபாதன்

நினது தாளை நாடோறு மனதில் ஆசை வீடாமல்

நினயுமாறு நீமேவி—- யருள்வாயே

4444444

 

சீத தொங்கலழ காவணிந்து மணம்

வீச மங்கையர்கள் ஆட வெண்கரி

சீற கொம்பு குழல் ஊத தண்டிகயில் ——– அந்தமாகச்

சேர்கனம் பெரிய வாழ்வு கொண்டுழலும்

ஆசை வெந்திட உன் ஆசை மிஞ்சி சிவ

சேவை கண்டுனது பாத தொண்டன் என—— அன்புதாராய்.

5555555

 

5.என் பெயர் திருமூலர், ஆசையே துன்பத்துக்கு காரணம் என்று புத்தர் மட்டுமா சொன்னார். நானும்தான் பாடி இருக்கிறேன்:

‘ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்

ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்

ஆசைப்படப்பட ஆய்வரும் துன்பங்கள்

ஆசை விடவிட ஆனதம் ஆமே’ (திருமந்திரம் 2615)

 

6.என் பெயர் திருவள்ளுவர். இதே கருத்தை நான் இவருக்கும் முன்னரே சொல்லிவிட்டேன். ஆசை என்ற சம்ஸ்கிருத சொல்லுக்குப் பதிலாக பற்று என்ற தூய தமிழ் சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறேன்:

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு (திருக்குறள்)

 

7.என் பெயர் சுப்பிரமணிய பாரதி.இதோ பாருங்கள், நான் பாஞ்சாலி சபதத்துக்கு எழுதிய முன்னுரை: “ காரியம் மிகப் பெரிது; எனது திறமை சிறிது. ஆசையால் இதனை எழுதி வெளியிடுகின்றேன், பிறர்க்கு ஆதர்சமாக அன்று, வழிகாட்டியாக”.

இது மட்டுமா: நான் பாடிய

“ஆசை முகம் மறந்து போச்சே—இதை

ஆரிடம் சொல்வேனடி தோழி?

நேச மறக்கவில்லை நெஞ்சம்—எனில்

நினைவு முகம் மறக்கலாமோ?” என்ற பாடல் மிகவும் கீர்த்தி பெற்றுவிட்டது.

 

நன்று நன்று, வேறு யாராவது ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

8.என் பெயர் கண்ணதாசன். நான் ஒரு கவிஞன். திரைப் படங்களுக்கும் பாடல் எழுதுபவன். என் கருத்தையும் சொல்லிவிடுகிறேன்:

ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே,
ஓடம் போலே ஆடிடுவொமே வாழ் நாளிலே
பருவம் என்னும் காற்றிலே, பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வர் , சுகம் பெறுவர் – அதிசயம் காண்பார்
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவர்?

English 
With passions as waves
we dance like the boat
in our passage of life
With the wind of youth,
by flying in the chariot of love,
man and woman make merry, enjoy
and surprise themselves
but who can guess tomorrow’s path
today itself?

 

நன்று நன்று. இன்னும் ஒருவர் பேசலாம். அத்தோடு கூட்டம் முடிவடையும்.

 

9.என் பெயர் வைரமுத்து. என் பாட்டுகளும் தமிழ் கூறு நல்லுலகத்தில் பிரசித்தம். இதோ சாம்பிளுக்கு ஒன்று:

சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை

முத்து முத்து ஆசை முடிந்துவிட ஆசை

வெண்ணிலவுதொட்டு முத்தமிட ஆசை

என்னையிந்த பூமி சுற்றிவர ஆசை.

 

இன்றைய கூட்டம் இத்தோடு நிறைவடைந்தது. அடுத்த வார தலைப்பு: “கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு”.

எல்லா புலவர்களும் பலத்த கரகோஷம் செய்தனர். கூட்டம் இனிதே முடிந்தது.

(முந்தைய கட்டுரை மன்னிக்க வேண்டுகிறேன். அதனையும் படித்து மகிழ்க)

உ.வே.சாமிநாதையரின் என் சரித்திரம் – 2

 

பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!! – 16

உ.வே.சாமிநாதையரின் என் சரித்திரம் – 2

                                                                                                                  By ச.நாகராஜன் 

 

தமிழ்த் தாத்தா எனக் கொண்டாடப்படும் உ.வே.சாமிநாதையரையும் தமிழ் மக்கள் சரியாகக் கௌரவிக்கவில்லை என்பதை எடுத்துக் காட்ட கீழே குறிப்பிடப்படும் இரு செய்திகளே போதும்.

அவர் அரும்பாடுபட்டுச் சேர்த்த கைப்பிரதிகள், சுவடிகள், புத்தகங்களை பேணிக் காப்பாற்ற இயலாத நிலை ஏற்பட்டது. அரசும் இதர “தமிழுக்காகவே வாழ்பவர்களும்” ஒன்றும் செய்யாத நிலை!இந்த நிலையில் கை கொடுத்தவர் ருக்மிணி அருண்டேல்!

மதுரை நீலகண்ட சாஸ்திரியாருக்கு மகளாகப் பிறந்து தியாஸபி இயக்கத்தில் அவர் ஈடுபட்டதால் சென்னையில் வாழத் தொடங்கி அவ்வியக்கத்தில் ஈடுபட்டுப் பின்னால் சதிர் என்ற வார்த்தையை நீக்கி பரத நாட்டியம் என்ற வார்த்தை மூலம் நாட்டியக் கலைக்குத் தனித்தொரு அந்தஸ்தைத் தந்த ருக்மிணி அவர்களே சுவாமிநாதையர் நூலகத்தை தனது கலாக்ஷேத்ராவில் ஏற்படுத்தினார். ஜார்ஜ் அருண்டேலை மணம் செய்து கொண்டதால் ருக்மிணி அருண்டேல் என்று பின்னால் பிரசித்தமான இவர் ஜனாதிபதி தேர்தலுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட போது அதை வேண்டாமென்று மறுத்தவர். அவரால் ஐயர் அவர்களின் அரிய தமிழ்ச் செல்வம் காப்பாற்றப்பட்டது.

 

 

இப்போது சமீபத்தில் நாளிதழ்களில் (17-9-2012 அன்று) வந்த செய்தியின் படி ஐயர் அவர்கள் திருவல்லிக்கேணியில் திருவேட்டீஸ்வரன் பேட்டையில் 1903ஆம் ஆண்டு குடியேறி வாழ்ந்த வீடு இடிக்கப்பட இருக்கிறது. தமிழ் ஆர்வலர்கள் வேதனைப் பட்டுக் குரல் கொடுத்துள்ளனர்; அரசு தலையிட்டு இதை வாங்கிப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தான் தமிழர்களின் இன்றைய போக்கு!வேதனையுடன் இதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

 

என் சரித்திரத்திற்குத் திரும்புவோம்.

 

திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர், ஐயர் பால் பெரும் அன்பு பாராட்டியவர். அவரைப் பற்றிய அரிய செய்திகளை என் சரித்திரத்தில் ஐயர் அவர்கள் பதிவு செய்துள்ளார். ஒரு சிறிய சம்பவத்தை உதாரணத்திற்காக இங்கு பார்ப்போம்:

 

“மகாவைத்தியநாதையரும் அவர் தமையனாராகிய இராமசாமி ஐயரும் அணிந்திருந்த ருத்திராட்ச கண்டிகளை வாங்கி அவற்றிற்குத் தேசிகர் தங்க வில்லை போடச்செய்து அளித்தனர். எனக்கு திருவிடைமருதூரில் அளித்த கண்டியில் தங்க முலாம் பூசிய வெள்ளி வில்லைகளே இருந்தன. அந்தக் கண்டிக்கும் தங்க வில்லைகளை அமைக்கச் செய்து எனக்கு அளித்தார். அப்போது இராமசாமி ஐயர் சிலேடையாக, “வெள்ளி வில்லை தங்க வில்லை” என்றார். யாவரும் கேட்டு மகிழ்ந்தனர்.

 

வெள்ளியையும் தங்கத்தையும் வில்லையையும் தேசிகரது அன்பையும் ஒரு சேர இணைத்த “வெள்ளி வில்லை தங்க வில்லை” ஒரு அற்புதமான சிலேடை அல்லவா!

 

ஐயர் அவர்கள் ஜைன காப்பியமான சீவக சிந்தாமணியைப் பதிப்பித்தார். பின்னர் ஊர் ஊராகச் சென்று பதிற்றுப்பத்து ஓலைச் சுவடிகளைக் கண்டுபிடித்து அதையும் பதிப்பித்தார். பொறாமைக் காரர்கள் அவரை வம்புக்கு இழுத்தனர். அதில் சிக்காமல் தமிழ்ப் பணியே தன் பணி என்று இருந்த ஐயர் அவர்கள் சிலப்பதிகாரச் சுவடிகளைத் தேடலானார். இதற்காக வரதுங்க பாண்டியரின் ஊரான கரிவலம்வந்த நல்லூர் சென்றார். அங்கு பால்வண்ண நாதர் ஆலயம் சென்றார். அங்கு இறைவனை வேண்டினார். அதற்குப் பிறகு நடந்தவற்றை அவர் சொற்களிலேயே பார்ப்போ“உன்னுடைய திருவருளைத் துணையென நம்பித் தமிழ்த் தொண்டை மேற்கொண்டிருக்கிறேன். சிலப்பதிகாரப் பிரதி கிடைக்கும்படி செய்ய வேண்டும்” என்று பிரார்த்தித்துக் கொண்டேன். பிறகு சுவடிகள் எங்கே உள்ளனவென்று விசாரிக்கலானேன். தேவஸ்தானத்தின்

தர்மகர்த்தாவைத் தேடிச் சென்றபோது அவரைச் சேர்ந்த ஒருவரைக்
கண்டேன். வரதுங்கராம பாண்டியருக்கு வருஷந்தோறும் ஆலயச் செலவில் சிராத்தம் நடந்து வருவதாகக் கேள்வியுற்றிருந்தேன். அது நடந்து வருகிறதா என்று கேட்டேன்.

நடந்து வருவதாக அவர் சொன்னார்.

நான்:- வரகுண பாண்டியர் வைத்திருந்த ஏட்டுச் சுவடிகளெல்லாம்
ஆலயத்திலே இருக்கின்றனவாமே?

அவர்: அதெல்லாம் எனக்குத் தெரியாது. என்னவோ வைக்கோற்கூளம்
மாதிரி கணக்குச் சுருணையோடு எவ்வளவோ பழைய ஏடுகள் இருந்தன.

நான்: அப்படியா! அவை எங்கே இருக்கின்றன? தயை செய்து அந்த
இடத்திற்கு அழைத்துப் போவீர்களா?

அவர்: அதற்குள் அவசரப்படுகிறீர்களே? வரகுணபாண்டியர் இறந்த
பிறகு அவர் சொத்தெல்லாம் கோயிலைச் சேர்ந்துவிட்டதாம். அவர்
வைத்திருந்த ஏட்டுச் சுவடிகளெல்லாம் அப்போது தான் கோவிலுக்கு
வந்தனவாம்.

நான்: அது தெரியும். இப்போது அவை எங்கே இருக்கின்றன?

அவர்: குப்பை கூளமாகக் கிடந்த சுவடிகளை நான் பார்த்திருக்கிறேன்.
எந்தக் காலத்துக் கணக்குச் சுருணைகளோ!

நான்: வேறே ஏடுகள் இல்லையா?

அவர்: எல்லாம் கலந்துதான் கிடந்தன.

எனக்கு அவர் தாமதப்படுத்துவதனாற் கோபம் வந்தது.

நான்: வாருங்கள் போகலாம்.

அவர்: ஏன் கூப்பிடுகிறீர்கள்? அந்தக் கூளங்களையெல்லாம் என்ன
செய்வதென்று யோசித்தார்கள். ஆகம சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறபடி
செய்துவிட்டார்கள்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன செய்து விட்டார்கள்?” என்று
பதற்றத்துடன் கேட்டேன்.

“பழைய ஏடுகளைக் கண்ட கண்ட இடங்களிலே போடக் கூடாதாம்.
அவற்றை நெய்யில் தோய்த்து ஹோமம் செய்துவிட வேண்டுமாம்; இங்கே
அப்படித்தான் செய்தார்கள்.”

“ஹா!” என்று என்னையும் மறந்துவிட்டேன்.

 

“குழி வெட்டி அக்கினி வளர்த்து நெய்யில் தோய்த்து அந்தப் பழைய

சுவடிகள் அவ்வளவையும் ஆகுதி செய்து விட்டார்கள்” என்று அவர்
வருணித்தார். இப்படி எங்காவது ஆகமம் சொல்லுமா? ‘அப்படிச்
சொல்லியிருந்தால் அந்த ஆகமத்தையல்லவா முதலில் ஆகுதி செய்ய
வேண்டும்!’ என்று கோபம் கோபமாக வந்தது. பழங்காலத்திற் பழைய

சுவடிகள் சிதிலமான நிலையில் இருந்தாற் புதிய பிரதி பண்ணிக்கொண்டு

பழம்  பிரதிகளை ஆகுதி செய்வது வழக்கம். புதுப்பிரதி இருத்தலினால்

பழம் பிரதி  போவதில் நஷ்டம் ஒன்றும் இராது. பிற்காலத்து மேதாவிகள்

பிரதி செய்வதை  மறந்துவிட்டுச் சுவடிகளைத் தீக்கு இரையாக்கும் பாதகச்

செயலைச்  செய்தார்கள். என்ன பேதைமை! இத்தகைய எண்ணத்தால்

எவ்வளவு  அருமையான சுவடிகள் இந்த உலகிலிருந்து மறைந்தன!

வரகுண பாண்டியர் ஏடுகள் அக்கினி பகவானுக்கு உணவாயிற்றென்ற
செய்தியைக் கேட்டது முதல் என் உள்ளத்தில் அமைதி இல்லாமல் போயிற்று.

‘இனி இந்த நாட்டிற்கு விடிவு உண்டா!’ என்றெல்லாம் மனம் நொந்தேன்.

 

நான் இரண்டு நாட்கள் தங்கிப் பார்க்கலாமென்ற விருப்பத்தோடு
வந்தேன். எனக்குச் சிரமம் கொடுக்காத நிலையில் அவர்கள் செய்து
விட்டார்கள். மறுபடியும் ஆலயத்துள் சென்றேன். “இந்த அக்கிரமம்
இனியாகிலும் நடவாதபடி திருவுள்ளம் இரங்க வேண்டும்” என்று இறைவனிடம்
முறையிட்டேன். “

இது போல ஐயர் அவர்கள்  மேற்கொண்ட இரண்டு பயணங்களாலும் பலன்  ஏதுமில்லை. பின்னர் பல இடங்களிலும் தேடலானார். ஒரு வழியாக மிகுந்த முயற்சியை மேற்கொண்டு அரிய சிலப்பதிகாரத்தைத் தமிழ் மக்கள்  முன்னர் சமர்ப்பித்தார்.

தமிழ் உலகம் வியந்து களித்தது. ஐயரைக் கொண்டாடியது.

தொடரும்

உ.வே.சாமிநாதையரின் என் சரித்திரம் – Part 1

Picture: Rare photo of U Ve Swaminatha Iyer whose birth day falls on 19th February.

பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!! –

உ.வே.சாமிநாதையரின் என் சரித்திரம் – Part 1 

By ச.நாகராஜன்

தமிழனாகப் பிறக்கும் பேறு பெற்ற ஒவ்வொரு தமிழனும், தமிழ் தெரிந்த ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு உத்தமர் உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதையர் ஆவார். (1855-1942) அவரது ‘என் சரித்திரம்’ அற்புதமான தமிழ் உரைநடைக்கு ஒர் எடுத்துக் காட்டு. இந்த நூலைப் படிப்பதால் பல பயன்கள் உண்டு.

தமிழைக் காத்து அரிய ஓலைச்சுவடிகளைச் சேகரித்து அவற்றை முறையாக ஆராய்ந்து அதில் உள்ள உண்மைப் பொருளைக் கண்டறிந்து பல அற்புத நூல்களைப் பதிப்பித்த ஒரு தமிழறிஞரின் வாழ்வை அறிந்து கொள்ளும் பேறு இதைப் படிப்பதால்  முதல் பரிசாக நமக்குக் கிடைக்கிறது. அடுத்து தமிழின் ஆழத்தையும் அற்புதத்தையும் அறியும் பேறு கிடைக்கிறது. அடுத்து ஜிலு ஜிலுவென்ற தெளிந்த ஓட்டத்தை உடைய தூய பளிங்கு நீர் மானசசரோவரிலிருந்து கங்கை  பிரவாகமாக நாடு முழுவதும் பாய்வது போன்ற தமிழ் பிரவாகம் நம்மை பரவசப்படுத்துகிறது.

 

 

கவிகளுள் மகாகவி கம்பன். பத்தாயிரம் பாடல்களைப் பாடியவன். அவன் போல் பத்து மடங்கு அதாவது நூறாயிரம் – ஒரு லட்சம் பாடல்களைப் பாடி ‘பத்துக் கம்பன்’ என்ற பெயரைப் பெற்ற  மகாவித்துவான திரிசிரபுரம்  மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களைப் பற்றிய செய்திகளை அறிய முடிகிறது. அவரின் மாணாக்கரே உ.வே.சா.

 

தமிழுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த மாமேதையின் வீட்டில் ஒரு சிறிய சம்பவம்! அதை அவர் சொற்களாலேயே பார்ப்போம்:

“சென்னையிலிருந்து பைண்டர் நூறு சிந்தாமணி பிரதிகள் வரையில் பைண்டு செய்து ஒரு பெட்டியில் அனுப்பியிருந்தார். அதைப் பிரித்துப் புஸ்தகங்களை எடுத்துக் கோலம் போட்ட ஒரு பலகையின் மேல் வைத்து மாலை சுத்திக் கற்பூர நீராஞ்சனம் செய்து மஞ்சள் நீர் சுற்றி என் தாயார் என் கையில் எடுத்து அளித்து ஆசீர்வாதம் செய்தார். என் தந்தையார் கண்குளிரக் கண்டு மகிழ்ந்தார்”

 

எப்படிப்பட்ட வைபவம்! எப்படிப்பட்ட தாயார்! எப்படிப்பட்ட தந்தையார்! என் சரித்திரம் என்ற நூலில் உ.வே.சா. இதைக் குறிப்பிட்டிருக்கிறார்.

 

தனக்குக் குடும்பக் கவலையே இல்லாமல்  குடும்பத்தினர் பார்த்துக் கொண்டதால் தமிழ்ப் பணியைத் தன்னால் தொடர்ந்து ஆற்ற முடிந்தது என்று அவர் குறிப்பிடுகிறார். சங்க நூல்களைச் சேகரித்து அவற்றைப் பதிப்பித்து தமிழர்களுக்கு ஒர் முகவரியைத் தந்தவர் உ.வே.சா. தனது வாழ்நாளில் 91 அரிய நூல்களைப் பதிப்பித்தவர் அவர். சுமார் 3067 ஏட்டுப் பிரதிகளை அவர் சேகரித்தார். அதற்காக அவர் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல.

Picture of postage stamp to honour U.Ve.Sa.

என் சரித்திரத்தில் வரும் சில நிகழ்வுகளை இங்கே நினைவு கூர்வோம்! அந்நாளில் எல்லா நூல்களையும் பாடம் கேட்டுப் பயில்வதே பழக்கமாக இருந்தது. பெரியபுராணத்தை மகாவித்துவான் விளக்கமாகப் பாடம் சொன்ன போது நடந்த சம்பவம் இது.

 

“கண்ணப்ப நாயனார் செயலைக் கண்டு சிவகோசரியார் வருத்தமுற்றதாகச் சொல்லும் சந்தர்ப்பம் வந்தது. நாங்கள் மேலே படித்தோம். உடனே பிள்ளையவர்கள், “இங்கே சில செய்யுட்கள் இருக்க வேண்டும். சிவபெருமான் கண்ணப்ப நாயனாரது அன்பின் பெருமையைச் சிவகோசரியாருக்கு வெளியிடுவதாக அமைந்துள்ள பகுதியில் சில அருமையான செய்யுட்களைப் பதிப்பிக்காமல் விட்டு விட்டார்கள்” என்று சொல்லித் தம் பெட்டியில் இருந்த பெரியபுராண ஏட்டுப் பிரதியை என்னை எடுத்து வரச்செய்து அதனைப் பிரித்துப் பார்த்தார். அவர் கூறியபடியே அங்கே ஐந்து செய்யுட்கள் காணப்பட்டன. அவற்றைப் படிக்கச் செய்து பொருள் கூறினார். நாங்கள் யாவரும் அந்த உயிருள்ள புஸ்தகசாலையின்  ஞாபகசக்தியை அறிந்து வியந்தோம்.”

 

அனைத்துச் செய்யுள்களையும் மனப்பாடமாக அறிந்த பெரும் வித்தகர் பற்றிய அரிய செய்தியைக் கூறும் உ.வே.சா அடுத்துச் சொல்லும் நிகழ்ச்சி நம்மை வேதனை அடையச் செய்கிறது. தமிழன் இப்படி இருக்கலாமா என்று வெட்கமடையச் செய்கிறது.

பிற்பகலில் தொடங்கிய கண்ணப்ப நாயனார் புராணம் இரவு பன்னிரண்டு மணிக்கு நிறைவேறியது.

அப்பால் மடத்திலேயே ஆகாரம் செய்து கொள்ளும்படி என் ஆசிரியரைத் தம்பிரான் வற்புறுத்திக் கூறினர். அவர் அவ்வாறே இசைந்து  அங்கு உணவு உட்கொண்டார். நான் அதற்குள் என் சாப்பாட்டு விடுதிக்குச்

சென்று போஜனம் செய்துவிட்டு வந்தேன்.

Picture of U.Ve.Sa.’s Statue at his birth place Uthamadhanapuram

ஆகாரம் ஆன பிறகு என் ஆசிரியர் தம்பிரான்களிடம் விடை
பெற்றுக்கொண்டு தம் வீடு சென்றார். நானும் அவருடன் சென்றேன். அப்போது அவர், “மடத்தில் ஆகாரம் செய்தமையால் இன்று நெய் கிடைத்தது” என்றார். அந்த வார்த்தை என் உள்ளத்தை வருத்தியது. அவர் சில நாட்களாக நெய் இல்லாமல் உண்டு\ வந்தார். நெய் வாங்குவதற்கு வேண்டிய பணம் கையில் இல்லை. குறிப்பறிந்து யாரேனும் உதவினாலன்றித் தாமாக ஒருவரிடம் இன்னது வேண்டுமென்று சொல்லிப் பெறும் வழக்கம் அவரிடம் பெரும்பாலும் இல்லை. இடைவிடாது பாடம் சொல்லி வந்த அவர் நெய் இல்லாமலே உண்டு வருவதை நான் அறிந்தவனாதலால் “இன்று நெய் கிடைத்தது” என்று அவர் கூறும்போது  அவர் உள்ளம் எவ்வளவு வெம்பியிருந்ததென்பதை உணர்ந்தேன்.

வறுமையின் கொடுமை எனக்குப் புதிதன்று. அதனால் விளையும்
துன்பத்தை அறிவு வந்தது முதலே நான் உணரத் தொடங்கி யிருக்கிறேன்.ஆயினும் பிள்ளையவர்களிடம் அதனை நான் எதிர்பார்க்கவில்லை.

“பெரிய கவிஞர், தக்க பிரபுக்களால் நன்கு மதிக்கப்படுபவர், தமிழுலகமுழுதும் கொண்டாடும் புகழ் வாய்ந்தவர், ஒரு பெரிய சைவ ஆதீனத்துச் சார்பிலே இருந்து வருபவர், சில நாள் நெய் இல்லாமல் உண்டார், ஒரு வேளை  கட்டளை மடத்தில் உண்ட உண்வு அவர் நெஞ்சப் புண்ணுக்கு மருந்தாயிற்று” என்ற விஷயங்களை அவரோடு நெருங்கிப் பழகினவரன்றி மற்றவர்களால் அறிய முடியாது. அவரும் அந்நிலையை வெளிப்படுத்திக் கொள்வதில்லை.

அவருடைய வாழ்க்கையே நிலையற்றதாகத்தான் இருந்தது. “இருந்தால் விருந்துணவு; இல்லாவிட்டால் பட்டினி” என்பதே அக்கவிஞர் பிரானுக்கு உலகம் அளித்திருந்த வாழ்க்கை நிலை. எனக்கு அதனை உணர உணர ஆச்சரியமும் வருத்தமும் உண்டாயின.”

உ.வே.சா அவர்கள் வருத்தத்துடன் பதிவு செய்யும் இந்த வார்த்தைகள் தமிழன் எப்படி வாழும் போதே பெரிய கவிஞர்களை இனம் கண்டு கொண்டதில்லை என்பதை நன்கு உணர வைக்கிறது.

பாரதியார் பட்ட சிரமம் போலவே மகா கவிஞரும் வேதனைப் பட்டு வாடியிருக்கிறார்.

தொடரும்