ஆழ்வார் அமுதம்: நம்மாழ்வார்

வானவர்க்குத் தான் தெய்வம் நீ என்றால் அது உனக்குப் புகழா, என்ன?

 

Written by S NAGARAJAN

Post No.2221

Date: 7th   October 2015

Time uploaded in London:  9-34 am

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

.நாகராஜன்

 

இறைவனை எப்படி விளக்குவது?

 

இறைவன் பெரியவன்! எல்லாம் வல்லவன்!!

ஆகவே “ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்” என்று ஆழ்வார் ஆசைப்படுகிறார் (நம்மாழ்வார் திருவாய் மொழி 3 -3 1)

ஆனால் இறைவன் யார்? எங்கே இருக்கிறான்? உருவமாகவா? அருவமாகவா? மனிதருள் அவதாரமாகவா? இயற்கையாகவா? மணியாகவா? ஒளியாகவா?

கேட்கிறார்:

புகழும் நல் ஒருவன் என்கோ?

பொருவில் சீர்ப் பூமி என்கோ?

திகழும் தண் பரவை என்கோ?

தீ என்கோ? வாயு என்கோ?

நிகழும் ஆகாசம் என்கோ?

நீள் சுடர் இரண்டும் என்கோ?

குன்றங்கள் அனைத்தும் என்கோ?

மேவு சீர் மாரி என்கோ?

விளங்கு தாரகைகள் என்கோ?

நாவியல் கலைகள் என்கோ?

ஞான நல்லாவி என்கோ?

பங்கயக் கண்ணன் என்கோ?

பவளச் செவ்வாயன் என்கோ?

அங்கதிர் அடியன் என்கோ?

அஞ்சன வண்ணன் என்கோ?

செங்கதிர் முடியன் என்கோ?

திரு மறு மார்வன் என்கோ?

சாதி மாணிக்கம் என்கோ?

சவி கொள் பொன் முத்தம் என்கோ?

சாதி நல் வயிரம் என்கோ?

தவிவில் சீர் விளக்கம் என்கோ?

ஆதியஞ் ஜோதி என்கோ?

ஆதியம் புருடன் என்கோ?

அடியவர் வினை கெடுக்கும் நச்சு மாமருந்தம் என்கோ?

நலங்கடல் அமுதம் என்கோ?

அச்சுவைக் கட்டி என்கோ?

அறுசுவை அடிசில் என்கோ?

நெய்ச்சுவைத் தேறல் என்கோ?

நான்கு வேதப் பயன் என்கோ?

சமய நீதி நூல் என்கோ?

நுடங்கு கேள்வி இசை என்கோ?

இவற்றுள் நல்ல மேல் என்கோ?

வினையின் மிக்க பயன் என்கோ?

கண்ணன் என்கோ? மால் என்கோ? மாயன் என்கோ?

வானவர் ஆதி என்கோ?

வானவர் தெய்வம் என்கோ?

வானவர் போகம் என்கோ?

வானவர் முற்றும் என்கோ?

ஊனமில் செல்வம் என்கோ?

ஊனமில் சுவர்க்கம் என்கோ?

ஊனமில் மோக்கம் என்கோ?

ஒளி மணிவண்ணன் என்கோ?

நளிர்மணிச் சடையன் என்கோ?

நான்முகக் கடவுள் என்கோ? (திருவாய்மொழி 3-4- 1 முதல் 7)

யாரை இறைவன் என்று சொல்வது? எப்படி அவனை விவரிப்பது?

தேவர்களுக்கு மட்டுமா தெய்வம் அவன்?

அவன் வானில் உறைபவர்க்கு மட்டும் தான் தெய்வம், அவர்களுக்கு மட்டுமே அருள் பாலிப்பான் என்றால், அவன் ஒரு தெய்வமா, அப்படிப்பட்ட தெய்வத்தால் எனக்கு என்ன பயன்? அவனுக்கு அது புகழ் ஆகுமா?

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது தேசமோ? (திருவாய்மொழி 3-3-4)

நிச்சயம் இல்லை!

சரி, மேலே சொன்ன அனைத்தில் யார் என ஆழ்வார் இறைவனை இனம் கண்டாரா?

கண்டார்; விடையையும் தெரிவித்து விட்டார்! இப்படி:-

யாவையும் எவரும் தானாய் அவரவர் சமயம் தோறும் தோய்விலன்

 புலன் ஐந்துக்கும் சொலப்படான்

உணர்வின் மூர்த்தி

அவனை அடையக் கூடிய வழி? அதையும் கூறுகிறார்;-

ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதுமோர் பற்றிலாத பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாம்! (திருவாய்மொழி 3-5-10)

இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு’! ((திருவாய்மொழி 1-2-4)

பிணக்கு அற அறுவகைச் சமயமும் நெறி உன்னி உரைத்த கணக்கறு நலத்தனன் (திருவாய்மொழி 1-3-5)

ரகசியம் புரிகிறது

ஆஹா! ஆழ்வார் சொன்ன ரகசியம் கொஞ்சம் புரிகிறது.

இறைவன் அனைவருக்கும் பொது; அனைத்தும் ஆனவன் அவன்! அனைவருக்கும் அருள் பாலிப்பவன்.

வேண்டுதல் வேண்டாமை இலான்!

ஒவ்வொரு சமயமும் தன் தெய்வம் என் தெய்வம் என்று சொல்லுபவனும் அவனே! பற்றிலாத பாவனை கூடில் அவனையும் கூடி விடலாம்.

அந்த பாவனை வருவதற்கு அவன் நினைவு வேண்டும்; பக்தி வழி நடத்தல் வேண்டும்; சேவை செய்ய வேண்டும். To know God; To Love God; To Serve God இதுவே வழி!

இதைச் செய்தால் ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய முடியும்!

இதைத் தெளிவாகச் சொல்கிறார், நமக்காக, நம்மாழ்வார்!

ஆழ்வாரின் பாடல்கள் அத்தனையும் நம்மை வாழ்விக்கும் அமுதம்!

******************

டொண்டொண்டொடென்னும் பறை!

குரல்

வாழ்வியல் அங்கம்

டொண்டொண்டொடென்னும் பறை!

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

WRIITEN BY  ச.நாகராஜன்

Date : 12 September  2015

Post No. 2149

Time uploaded in London: –   காலை 6-37

(Thanks  for the pictures)

 

.நாகராஜன்

வழக்கம் போல திருக்குறளைப் புரட்டினேன். பார்வைக்கு வந்த குறள்:

நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்து இவ் வுலகு (குறள் 336)

நேற்று இருந்தவன் இன்றில்லை என்று சொல்லும் பெருமையைக் கொண்டது இவ்வுலகு.

என்ன இவர், உலகிற்குப் பெருமையாக இதைத்தானா சொல்வது? ஒரு ஐஸ்வர்யா ராயை அல்லது க்ளியோபாட்ரா அல்லது சித்தூர் ராணி பத்மினி போன்ற பிரமாதமான அழகியைப் பெற்றது இவ்வுலகு என்று சொல்லக் கூடாதா, அல்லது நிலவில் கால் பதித்த ஆர்ம்ஸ்ட்ராங் போன்ற ‘மனிதனைக்’ கொண்டது இவ்வுலகு என்றாவது சொல்லக் கூடாதா, காலத்தால் முற்பட்டவர் தான், புரிகிறது! இது போல எதையாவது சொல்லி இருக்கலாமில்லையா,

நாலயிர2

சரி, போகட்டும், பார்வை மேலே போக கண்ணில் பட்ட அடுத்த குறளைப் பார்த்தேன்.

நாளென ஒன்று போல் காட்டி உயிர் ஈரும்

வாளது உணர்வார்ப் பெறின்   (குறள் 334)
நாள் என்பது கால அளவையைப் போலக் காட்டி உங்கள் உயிரின் வாழ்நாளை அறுக்கும் வாள்!

என்ன ஒரு நெகடிவ் திங்கிங் (Negative thinking) எத்தனை கோர்ஸ்களிலும் செமினார்களிலும் இளைஞர்களையும் இளைஞிகளையும் சந்தித்து, “இன்றைய நாள் பொன்னாள். இது ஒரு வாய்ப்பு! நேர மேலாண்மை – அது தான் டைம் மானேஜ்மெண்ட் கற்றுக் கொண்டு சரியாக அதைப் பயன்படுத்துங்கள் என்று வாய் கிழியப் பேசி இருக்கிறேன்.

இவரோ நாள் என்பதை உயிரைப் போக்கும் வாள் என்று நினை என்கிறார்.

குறளை மூடினேன். பட்டினத்தாரை எடுத்து புரட்டினேன். வந்த பாடல்:

கட்டி அணைத்திடும் பெண்டிரும் மக்களும் காலத்தச்சன்

வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்தி விட்டால்

கொட்டி முழக்கி அழுவார் – மயானம் குறுகி அப்பால்

எட்டி அடி வைப்பரோ? இறைவா, கச்சி ஏகம்பனே!

இதென்னடா சங்கடம் என்று இன்னொரு பக்கத்தைப் புரட்டினால் அங்கு கண்ட பாடல்:

பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடை சுற்றி

முத்தும் பவளமும் பூண்டோடி ஆடி முடிந்த பின்பு

செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனி சாம் பிணங்கள்

கத்தும் கணக்கென்ன காண் கயிலா புரிக் காளத்தியே!

அட, வார்த்தைகள் பிரமாதம் தான்!

காலத் தச்சன் வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்தி விட்டால் …

செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனி சாகப் போகும் பிணங்கள் கத்தும் கணக்கு, என்ன கணக்கு!!!!

பின்னால் டி.வியில் வேறு கண்ணதாசன் பாடல் கனமாக, “வீடு வரை உறவு வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ என்று ஒலித்தது.

divyasprabandam1

ஒன்றும் சரிப்படவில்லை?!

பஜகோவிந்தம் நூலில் எடுத்த பாடல்:  புனரபி ஜனனம் புனரபி மரணம் புனரபி ஜனனீ ஜடரே சயனம் (மீளவும் பிறப்பு; மீளவும் இறப்பு மீளவும் தாயின் குடரிடைப் படுப்பு என்ற அழகிய தமிழ் மொழி பெயர்ப்பு வேறு) என்று வர அதையும் மூடினேன்.

இன்று நேரம் சரியில்லை நமக்கு.

நாலடியாரையாவது ஒரு புரட்டு புரட்டி வைப்போம் என்று அதை எடுத்தால்!!

கணம் கொண்டு சுற்றத்தார் கல்லென்றலறப்

பிணம் கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் –

மனம் கொண்டீண்டு  உண்டுண்டுன் டென்னும் உணர்வினால் சாற்றுமே

டொண்டொண்டொ டென்னும் பறை  (நாலடியார் பாடல் 25)

தூக்கி வாரிப் போட்டது. எங்கோ ஒரு ஓசை கேட்பது போல இருந்தது.

நாலடியார்

டொண் . டொண்.. டொண்..

உண்டுண்டுன்டென்னும் உணர்வினால் சாற்றுமே டொண் டொண் டொண்.. பறைச் சத்தம்!

எங்கேயாவது பறை அடிக்கப்படுகிறதா? இல்லை, இல்லை!

‘மனப்பிரமை தான்!

பறையும் பாடையும் போன நவீன காலம் இது. பாம் பாம் என்று ஹார்ன் அடிக்க ஆம்புலன்ஸே அமரர் ஊர்தி ஆகிச் செல்ல, ஐந்து நிமிடத்தில் எலக்ட்ரிக் க்ரிமடோரியத்தில் சில நொடிகளில் உடலே பிடி சாம்பலாகும் ‘ஒளிமயமான’ காலம்!

பாட்டிகளே பாடையிலே போக என்ற வசவை வாபஸ் வாங்கி, பல்லாயிரம் வாட்ஸில் சாம்பலாகிப் போக என்று மாடர்னாகச் சொல்லும் காலம் அல்லவா இது!

என்ன செய்வது, என்று நெஞ்சம் கொஞ்சம் அஞ்சியது!

எல்லா புத்தகங்களையும் மூட்டை கட்டி மூடினேன். நாலாயிர திவ்ய பிரபந்தம் தொப்பென்று விழுந்தது.

விழுந்த பக்கத்தில் இருந்த பெரியாழ்வாரின் பாடல் இது:-

துப்புடையாரை அடைவ தெல்லாம் சோர்விடத் துத்துணை யாவரென்றே

ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால்

எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்தரவணைப் பள்ளியானே

கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுத்த கருணையாளன். எய்ப்பு வந்து பேச முடியாமல் இருக்கும் போது அப்போது உன்னை நினைக்க மாட்டேன். அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் – கொஞ்சம் பார்த்து செய்யப்பா!

ஆழ்வாரின் அற்புதப் பாடல் மின்னலென உள்ளத்தில் பளிச்சிட்டது. மூளையில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் பளிச்சென எரிந்தது!

AZHWARGROUP

நெகடிவ் திங்கிங் இல்லையடா, முட்டாளே, திருவள்ளுவருக்கு! அப்போதைக்கு இப்போதே சொல்லி வை என்று சொல்ல அல்லவா அவர் அப்படிச் சொல்லி இருக்கிறார்.

எல்லாப் பெரியோரும் சொல்ல வந்தது ஒரே ஒரு கருத்தைத் தான்:-

கையும் காலும் கண்ணும் செவியும், மெய்யும் செயல்பாட்டுடன் இருக்கும் போதே நினைக்க வேண்டிய ஒன்றை நினை!!

டொண் டொண் டொண். அப்போதைக்கு இப்போதே! செத்த பிணத்தை இனி சாம் பிணங்கள், காலத் தச்சன் வெட்டி விட்ட மரம் போல!

அட, ஒரு மாதிரியாக நெஞ்சைப் பிசைகிறதே. குரல் எழும்பவில்லை.

அ.. ர..ங்க மாநகருள் ளா ஆ ஆ ஆ …..?!

*****************