தோன்றிற் புகழொடு தோன்றுக! உத்திஷ்ட! யசோ லப !!

Srimad_Bhagavad__4c53e78e9a0a5

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1440; தேதி 27 நவம்பர், 2014.

பகவத் கீதையில் கண்ண பிரான் உலக மக்களுக்கு ஒரு கட்டளை இடுகிறான்:
உத்திஷ்ட ! யசோ லப !!
எழுந்திரு ! புகழ் அடை!! (பகவத் கீதை 11-33)

இதையே வள்ளுவனும் அழகாகச் சொல்கிறான்:

தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று – குறள் 236

பொருள்:- ஒருவன் பிறந்தால் புகழ் அடையவேண்டும் என்ற அவாவோடு – அதற்குரிய குண நலன்களுடன் பிறக்க வேண்டும். அக்குணம் இல்லாதார் பிறக்காமல் இருத்தலே நல்லது.

கண்ணனும் இதே கருத்தையே வலியுறுத்துவான். அர்ஜுனன் ஏதேதோ சாக்குப் போக்கு சொல்லி யுத்தம் செய்யாமல் தப்பிக்கலாம் என்று பார்க்கிறான். கண்ணன் விடவில்லை. பலவிதமான எடுத்துக் காட்டுகளைச் சொல்லி வழிப்படுத்தப் பார்க்கிறான்.

பகவத் கீதையில் உத்திஷ்ட! (எழுந்திரு) என்று கண்ண பிரான் குறைந்தது நாலு முறையாவது கட்டளை இடுகிறான். அதாவது, நமது ஊரில் சண்டித்தனம் செய்யும் மாட்டை மாட்டு வண்டிக்காரன் விரட்டுவது போல எழுந்திரு என்று மாற்றி மாற்றிக் குரல் கொடுக்கிறான்.
Srimad_Bhagavad__4bfd17abd98d4

இந்தியா- பாகிஸ்தான் எல்லைக்குச் சண்டை போட நம் ஊர் உசிலம்பட்டி இளைஞரை அனுப்புகிறோம். அவர் முதல் நாள் இரவு மஹாத்மா காந்தி புத்தகத்தையும் புத்த பகவான் சரித்திரத்தையும் படித்துவிட்டு அடாடா! நாளைக்கு நாம் துப்பாக்கியே எடுக்கக்கூடாது என்று சண்டித்தனம் செய்தால் அவருடைய பாட்டாளத்தின் மேஜர் அவருக்குத் தக்க தண்டணை கொடுப்பார். அவர் அஹிம்சைக்காக ராணுவத்தில் சேரவில்லை. துஷ்டர்களுக்கு ஹிம்சை தருவதே அவர்தம் கடமை.

“சுடச் சுடரும் பொன் போல ஒளிவிடும்” — என்ற உவமையை வள்ளுவன் ஞானிகளுக்குப் பயன்படுத்துவான்.
உசிலம்பட்டி இளைஞருக்கும் அதே வரிகள் வேறு பொருள் தரும். அவர் ஆட்களைச் சுடச் சுட— (சுட்டுத் தள்ளத் தள்ள) — பொன்= தங்கப் பதக்கம் ஒளிரும். அதாவது நிறைய பேரைக் கொன்றால் அவருக்கு தங்கப் பதக்கம் மட்டுமா, ‘’பரமவீர சக்ரம்’’ கூடக் கிடைக்கும்.

AriseAwake_p
ராஜீவ் காந்தியையும் இந்திரா கந்தியையும் கொன்ற கொலைகாரர்களுக்கு தண்டனை அளிக்க ஒரு நீதிபதி கருணையின் காரணமாகத் தவறினால் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார். ராணுவ வீரனானாலும் நீதிபதி யானாலும் அவரவர் சட்ட திட்டங்களைப் பின்பற்ற வேண்டும். போர் வீரன் க்ஷத்ரிய தர்மத்தையும் நீதிபதி ஒரு சட்ட தர்ம (ஸ்மிருதி) நூலையும் பின்பற்ற வேண்டும்.

ஒருவனை ஒருவன் கொன்றால் அவனுக்கு மரண தண்டனை கிடைக்கும். அவனே போரில் பல ஆட்களைக் கொன்றால் அவனுக்கு மிகப்பெரிய ராணுவ விருது கிடைக்கும். அது க்ஷத்ரிய தர்மம். உலகம் முழுதுமுள்ள நடை முறை. அதே போல நாம் ஒருவரைக் கொன்றால் ஒரு புறம் சட்டம் நம்மை விரட்டும், மறுபுறம் பாவம் நம்மை விரட்டும். ஆனால் ஒரு நீதிபதி அவரது பதவிக் காலத்தில் நூறு பேருக்கு மரண தண்டனை விதித்தாலும் அவரைப் பாவம் ஒட்டாது. கடமையைச் செய்ததற்குப் புண்ணியமே கிடைக்கும். தூக்கு மேடைப் பொறுப்பாளன் எத்தனை பேர் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டினாலும் அவனை பாவம் ஒட்டாது. அவன் விருப்பு வெறுப்பின்றி தன் கடமையைச் செய்கிறான்.

இவ்வளவு சின்ன விஷயத்தை அர்ஜுனனுக்குப் புரிய வைக்க, பாவம்! கிருஷ்ண பரமாத்மா படாதபாடு பட்டார். அர்ஜுனனைச் சமாதானப் படுத்த அவர் 1400 வரிகள் பேச வேண்டியதாயிற்று. அதுவும் நல்லதாகப் போயிற்று. இல்லாவிடில் இந்து மத தத்துவங்களை ஒட்டு மொத்தமாக ‘’ஜூஸ்’’ பிழிந்து, அதில் சர்க்கரையையும் தேனையும் சேர்த்து, வாசனைக்கு ரோஸ் எசன்ஸையும் விட்டது போன்ற பகவத் கீதை நமக்குக் கிடைத்திருக்குமா?

malaysia_stamp_vivekananda
கீதையில் இதற்கு முன் சொன்ன உத்திஷ்ட பகுதிகளும் சுவையானதே.
இரண்டாம் அத்தியாயத்தில் (2-3)

க்லைப்யம் மாஸ்மகமஹ = சீ ! சீ ! பேடித்தனத்தை விட்டு எழுந்திரு – என்று கொஞ்சம் அதட்டல் மிரட்டலாகவே பேசி விடுகிறார் கண்ணன்.

இன்னும் ஒரு இடத்தில் இதோ பார்! இந்த அத்தைப் பாட்டி கதைகளை எல்லாம் என்னிடம் சொல்லாதே. “போரில் இறந்தால் வீர சுவர்க்கம்- வெற்றி பெற்றாலோ மாபெரும் சாம்ராஜ்யம்! எழுந்திரு! நண்பா! (2-37) என்கிறார்.

4-41-ல் வரும் உத்திஷ்ட அஞ்ஞானத்தை ஞானம் என்னும் வாளால் வெட்டிவிட்டு என்று குறள் கொடுக்கும் ஆன்மீக உத்திஷ்ட ஆகும்.

பகவத் கீதை ஒரு அதிசயமான நூல். எல்லா இடங்களிலும் அர்ஜுனனுக்கு சுதத்திரம் தருகிறார் கண்ணன் —- கொஞ்சம் அதட்டுகிறார், மிரட்டுகிறார், உருட்டுகிறார் —- ஆயினும் இறுதியில் நண்பனே! உனக்கு எது நல்லதோ அதைச் சொல்லிவிட்டேன். ஆயினும் உன் இஷ்டம்!! என்று அவனையே முடிவு எடுக்க அனுமதிக்கிறார். அதாவது நம் வீட்டில் அப்பா அம்மா நமக்கு எப்படி அதட்டியும் உருட்டியும் மிரட்டியும் அன்பாகவும் பண்பாகவும் சொல்லுகிறார்களோ அதே ‘’டெக்னிக்’’கைத் தான் – உத்தியைத் தான் – கண்ணனும் பின்பற்றுகிறான்.

bhagavad-gita

எப்படி திருக்குறளை திரும்பத் திரும்பப் படிக்கும் போது புதுப்புது பொருள் கிடைக்குமோ அப்படி — தொட்டனைத்தும் மணற்கேணி என — பகவத் கீதையை அதிகாலையில் படிக்கையில் புதுப்புது பொருள் தோன்றும். ஸ்ரீ சித்பவானந்த சுவாமிகள் எழுதிய பகவத் கீதை பேருரை அல்லது சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் அண்ணா எழுதிய உரை இருந்தால் போதும். ஆங்கிலத்தில் சின்மயானந்தா உரை போதும்.

புத்தகம் இருந்தாலே நீங்களும் ஞானம் என்னும் ஏணியில் முதல் படியில் கால் எடுத்து வைத்ததாகக் கருதலாம்.
–சுபம்—