இந்து மதத்தில் காதல், கடத்தல் கல்யாணங்கள்!!

rukmini2

ருக்மிணியை   கிருஷ்ணர் கடத்திச் செல்லும் படம்

Written by London swaminathan

Research article No. 1786; Date 8th April 2015

Uploaded from London at   காலை 9-32

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

காமக்கூட்டம் காணுங்காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே.

-தொல்.பொருளதிகாம்– 1038

இந்துமதம் ஒரு அழகான மதம். அதில் காதல்,கடத்தல் திருமணங்களும் உண்டு. மொத்தம் எட்டு வகையான திருமணங்களை மனு நீதி நூல் குறிப்பிடுகிறது. வேதகாலம் முதல் இதிஹாச புராண காலம் வரை இந்த எட்டு வகை மணங்களும் இருந்தன. இதில் இன்னும் ஒரு சுவையான விஷயம் தமிழில் மிகப் பழைய நூலான தொல்காப்பியமும் இதைக் குறிப்பிடுகிறது. அடுத்த வரியிலேயே அறம் பொருள் இன்பம் (தர்ம, அர்த்த, காமம்) என்பதையும் குறிப்பிடுகிறது. இமயம் முதல் குமரி வரை ஒரே தர்மம் இருந்தது என்பதை தொல்காப்பியர் முடிந்த இடங்களில் எல்லாம் சொல்லிக்கொண்டே போகிறார். நிற்க.

1.உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் விமதா என்பவன் புருமித்ர என்பவரின் மகளான காமத்யுவைக் கடத்திச் சென்று கல்யாணம் செய்து கொண்டதைப் பாடி வைத்துள்ளனர் முற்கால ரிஷிகள் ( ரிக் வேதம் 1-112-19, 1-116-1; 1-117-20; 10-39-7; 10-65-12).

2.கிருஷ்ண பரமாத்மா, அவர் மீது காதல் கொண்ட ருக்மிணியைக் கடத்திச் சென்று கல்யாணம் முடித்தார்.

3.கிருஷ்ணரின் தங்கை சுபத்ராவை அர்ஜுனன் கடத்திச் சென்று திருமணம் செய்து கொள்ள கிருஷ்ணரே உதவினார்.

4.மஹாபாரதத்தில் பீஷ்மர், காசிராஜனின் புதல்விகளான அம்பா, அம்பிகா, அம்பாலிகா அக்கிய மூவரையும் கடத்திச் சென்று இருவரை விசித்ரவீர்யனுக்கு மணம் முடித்தார்.

bhishma-amba-ambika-ambalika-300x225

அம்பா, அம்பிகா, அம்பாலிகா ஆகிய மூவரையும் பீஷ்மர் கடத்தும் காட்சி

அந்தக் காலத்தில் காதல், கடத்தல் பற்றிய பல சுவையான விஷயங்களை இந்தக் கதைகள் சொல்லுகின்றன. புராணங்கள் பொய்க்கதைகள் அல்ல, அக்கால உண்மைச் சம்பவங்களை அப்படியே சொன்னவை என்பதற்கு இவை எடுத்துக் காட்டுகள்.

கடத்தல் திருமணங்களை ராக்ஷச வகைத் திருமணங்கள் என்பர்.

ருக்மிணியின் தந்தையான ருக்மி, தன் புதல்வியை சிசுபாலனுக்கே கொடுக்க வேண்டும் என்று எண்ணி இருந்தார். ஆனால் அவளுக்கு கண்ணன் மீது காதல். ஆகையால் அவர் கடத்திச் சென்றார். இதனால் சிசுபாலனுக்கும், கண்ணனுக்கும் ஜென்மப் பகை ஏற்பட்டது.

சுபத்ராவை துர்யோதணனுக்குக் கொடுக்க வேண்டும் என்று பலராமன் எண்ணினார். அது அவருடைய தம்பியான கண்ணனுக்குப் பிடிக்கவில்லை. ஆகையால் அர்ஜுனனை ஒர் பிராமணன் போல வேஷம் போட்டு பல நாட்களுக்கு அரண்மனையில் தங்க வைத்தார். பின்னர் சுபத்ராவைக் கடத்திச் செல்ல உதவியும் செய்தார். அர்ஜுனன் போன்ற ஒரு வீரனை வேண்டாம் என்று சொல்ல எந்தப் பெண்ணும் துணிய மாட்டாள். ஆனால் இது கிருஷணருக்கும் பலராமனுக்கும் இடையே உரசலை உண்டாக்கியது.மஹாபாரதப் போரில் எந்தப் பக்கமும் சேர மாட்டேன் என்று சொல்லி பலராமன் தீர்த்த யாத்திரைக்குப் போய்விட்டார்.

subhadra

சுபத்திரையை அர்ஜுனன் கடத்தும் படம்

அம்பா, அம்பிகா, அம்பாலிகா ஆகிய மூன்று பேரழகிகளை நித்திய பிரம்மச்சாரியான பீஷ்மர் கடத்திச் சென்றார்.எதற்காக? பாண்டு வம்சம் தழைக்க வேண்டும் என்று வளர்ப்புத் தாயார் சத்தியவதி சொன்னதால். ஆனால் மூவரில் அம்பா என்ற பெண், “நான் ஏற்கனவே ஷால்வ மன்னரைக்  காதலிக்கிறேன்” என்றாள். உடனே பீஷ்மர் அவளை விடுவித்து, “போய் வா மகளே” என்றார். ஆனால் ஷால்வ மன்னனோ “பிச்சை கேட்டுப் பெண் எடுப்பவன் நான் அல்ல, போய் விடு” என்று அவளை அனுப்பி வைத்தான். இதனால் வெகுண்டெழுந்த அம்பா, பீஷ்மருக்கு கடும் சாபம் போட்டாள்.

“பெண் சாபம் பொல்லாதது. குடும்பத்தையே வேரோடு அழிக்கும்” — என்று மனு தனது நீதி நூலில் எச்சரித்தது சரியாகப் போயிற்று. “பெண்கள் எங்கு மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களோ அங்கேதான் தெய்வங்கள் வாழும்” — என்று மனு ஒரு ஸ்லோகத்தில் திட்டவட்டமாகச் சொன்னது ஏன் என்று புரிகிறது.

மிக வியப்பான விஷயம் நாம் சினிமாக்கதைகளில் பார்ப்பது போலவே அந்தக் காலத்திலும் நடந்திருக்கிறது. நமது சமய நூல்கள் பல நீதிகளைப் புகட்ட இந்த உண்மைக் கதைகளை அப்படியே உள்ளதை உள்ளவாறு இயம்பின. காதலும், கடத்தலும் இப்படி வாழ்நாள் முழுதும் ரணங்களை, தீராத பகையை உண்டாக்கும் என்பதையும் இவை தெள்ளிதின் விளக்கும்.

rukmini

எட்டு வகைத் திருமணங்கள்

மனு ஸ்மிருதியில் மூன்றாவது அத்தியாயத்தில் 20 ஆவது ஸ்லோகம் முதல் எட்டு வகைத் திருமணங்களை விளக்குகிறார். அபிதான சிந்தாமணி என்னும் தமிழ் என்சைக்ளோபீடியாவில் சிங்காரவேலு முதலியார் இவைகளை விரிவாக அளித்துள்ளார். ஆயினும் 700 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் என்னும் புகழ்பெற்ற தமிழ்ப் பார்ப்பன உரைகாரர் எழுதிய தொல்காப்பிய உரையில் முழு விவரங்களையும் தருகிறார்.

1).பிராம்மம், 2).தெய்வம், 3).ஆருஷம், 4).பிராஜாபத்யம், 5).ஆசுரம், 6).காந்தர்வம், 7).இராக்ஷசம், 8).பைசாசம் — என்ற எட்டுவகை திருமணம் பற்றி பல சுவையான விஷயங்கள் உள்ளன. இக் கட்டுரையின் தொடர்ச்சியில்  — இரண்டாவது பகுதியில் — எட்டு வகைத் திருமணங்கள் பற்றிய முழு விவரங்களையும் காண்போம்.