கணவன் தெய்வமாம்! பெயரை சொல்லக் கூடாதாம்!! அடுத்த ஜன்மத்திலும் அவரே………….. !!! (Post No.3719)

Written by London swaminathan

 

Date: 13 March 2017

 

Time uploaded in London:- 11-15 am

 

Post No. 3719

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

  1. கணவனே கண்கண்ட தெய்வம்; சாமியைக் கும்பிடவே வேண்டாம்; கணவனைக் கும்பிட்டால் ‘பெய்யெனப் பெய்யும் மழை!

 

2.கணவன் பெயரைச் சொல்லக்கூடாது. அது மரியாதைக் குறைவு!!

 

3.அடுத்த ஜன்மத்திலும் அவரே எனக்கு கணவராக வரவேண்டும்; இதற்காகத் தவம் செய்வேன்………………

 

இப்போதுள்ள இந்துப் பெண்களைக் கருத்து கேட்டால், நிபந்தனையற்ற ஆதரவு தருவதில்லை. என் கணவன் ராமன் போல் இருந்தால், முன்னோர் சொன்னதை ‘’ஆதரிப்பேன்;’’ என் கணவர் கிருஷ்ணர் போல இருந்தால் ‘’மாட்டேன்’’ என்பர்!

 

ஆண்களிடம் கருத்துக் கேட்டால், கல்யாணம் ஆனதும் “மனைவி அமைவதெலாம் இறைவன் கொடுத்த வரம்” என்று பாடிக்கொண்டிருந்தேன். இப்போது கொஞ்சம் நாக்கு குளறுவதால் “மனைவி அமைவதெலாம் இறைவன் கொடுத்த அ அ அ ‘ரவம்’ — என்று பாடுகிறேன் என்பர்

(அரவம்=பாம்பு); தேளுக்கு அதிகாரம் கொடுத்தால் கொட்டிக்கொண்டே இருக்கும் என்பது பழமொழி. என் மனைவிக்கு அதிகாரம் கொடுக்காமலேயே கொட்டிக்கொண்டிருக்கிறாள் என்பர்!

 

சங்கத் தமிழ் இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் 2000 ஆண்டுகளாக பல “பத்தாம் பசலி”க் கருத்துகள் உள்ளன. உலகில் வேறு எந்த பழைய கலாசாரத்திலும் இப்படி “ஹைதர் அலி” கால கருத்துக்கள் இல்லை. ஆயினும் இமயம் முதல் குமரி வரை 2000 ஆண்டுகளாக இப்படி ஒரே கருத்து நிலவுவது, இந்த நாகரீகம் இயற்கையிலேயே இந்த மண்ணிலேயே உருவாகி வளர்ந்தது; ஆரியம்- திராவிடம் என்பதெல்லாம் நல்ல பிதற்ரறல் என்பதைக் காட்டுகிறது.

 

உங்கள் கணவர் பெயர் என்ன?

 

கணவன் பெயரைச் சொல்லக்கூடாது! என்று இந்துப் பெண்கள் நம்பினர்.

 

உலகில் வேறு எந்த கலாசாரத்திலும் இத்தகைய கருத்துக்கள் இல்லாததால், அதுவும் உலகிலேயே பெரிய நாடாக இருந்த பாரதத்தில் 2000 ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக இருப்பதால் ஆரிய-திராவிடக் கூத்தாடிகளுக்கு இந்தக் கொள்கை அடி கொடுக்கும்.

 

மதுரையில் நாங்கள் வசித்த காலத்தில் என் தந்தை பெயரை என்  அம்மா எப்போதும் சொன்னதே கிடையாது. ஆனால் இப்போது என் மனைவி என் பெயரை, ஒன்றுக்குப் பத்து முறை சொல்லவும் தயங்க மாட்டாள்; நான் அதை காலத்தின் தேவை என்று கருதுகிறேன்.

 

மதுரை மாவட்ட ஆர்.எஸ்.எஸ். செயலாலளராக (ஜில்லா கார்யவாஹ்) தொண்டாற்றியபோது ஒரு வீட்டில் ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்தோம். ஒரு பெண்மணி மட்டுமே இருந்தார். அவரது கணவன் பெயர் தெரிந்தால்தான் நாங்கள் சென்ற விலாசம் சரியா என்று தெரியவரும். ஆனால் அப்பெண் கணவர் பெயரைச் சொல்லாமல் எங்களுக்கு ‘’விடுகதை’’ போட்டாள். அதாவது பெயரை நேரடியாகச் சொல்லாமல், பல துப்புகளைக் கொடுத்தாள். பொதுவாக இந்தமாதிரி நேரத்தில் மகனோ மகளோ இருந்தால் அவர்கள் மூலம் கணவர் பெயரை வெளிப்படுத்துவர்.

 

எனக்கு அந்த வீட்டுக்காரரைன் பெயர் இப்போது நினைவில்லை. நான் லண்டனுக்கு வந்தே 31 வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு எடுத்துக்காட்டுக்காக கீழே உள்ளதைத் தருகிறேன்.

 

இது ராமநாதன் வீடா?

பெண்: இல்லீங்க

உங்கள் வீட்டுக்காரர்  பெயர் என்ன?

மிகவும் தயக்கத்துடன் அப்பெண்: அதுவா?.. அதுவா?…

 

அதாங்க மதுரைக் கோவில்ல இருரக்காரே அந்தக் கடவுள் பெயருங்க!

ஓ சுந்தரேசனா?

அப்பெண்: ‘’இல்லீங்க”

ஓ சுந்தரம்? …………. மீனாட்சி சுந்தரமா?

அது இல்லீங்க! தமிழ்ல சொல்லுவாங்களே/ இந்த சினிமாவில கூட நாகேஷ் உரக்கச் சொல்லுவாரே….

ஓ சொக்கனா!

ஆமாங்க, ஆமாங்க, அதே தான்!

 

இப்படி பலவிடுகதைகள் மூலம் நம் அறிவைச் சோதிப்பர். மண்டனமிஸ்ரரைச் சந்திக்கப் போன ஆதிசங்கரன் என்ற சிறுவனைப் பார்த்து நகைத்த நர்மதை நதிக்கரைப் பிராமணப் பெண்கள், அவருக்கு சம்ஸ்கிருதத்தில் புதிர் மிக்க கவிதை மூலம் வழி சொன்னது போல நமக்குக் கணவன் பெயரைத் தெரிவிப்பர்!

 

வால்மீகியும், காளிதாசனும், இளங்கோவும், வள்ளுவனும், அம்முவனாரும் சொல்லும் கருத்துகளை இன்றைய பெண்கள் ஏற்றுக் கொக்ள்வார்களா?

 

முதலில் புலவர்கள் சொல்லுவதைப் படியுங்கள். பின்னர் என் கேள்விக்கு என்ன பதில் என்று கேட்கிறேன்.

 

வள்ளுவனும் வால்மீகியும்!

 

வள்ளுவனும் வால்மீகியும் இவ்விஷயத்தில் கொஞ்சம் அளவுக்கு அதிகமகவே (TOO MUCH!) பேசிவிட்டனரோ!

 

ராமபிரான் வாய் மூலமும், சீதையின் மூலமும் கணவனே கண்கண்ட தெய்வம் என்று சொல்லிவிடுகிறார். அயோத்தியா காண்டத்தில்:-

 

சீதை சொல்கிறாள்:

ஒருவனுடைய தந்தை, தாய், தன்னுடைய சகோதரன், புதல்வன், மருமகள் ஆகிய ஐவரும் தாம்தாம் செய்த  பாவங்களுக்கு ஏற்ப அவற்றின் பலனை அனுபவிப்பார்கள். ஆனால் மனைவியே தன் கணவனின் பாவ புண்ணியங்களில் பங்கேற்பவள்.

 

கணவன் துன்புறும்போது மனைவி சுகத்தில் புரளும் ஈனப் பிறவி என்றா என்னை நினத்தீர்கள்?   த ங்களுடன் வாழ்வதே உத்தமமான தர்மம் என்பதைப் புரிந்து கொண்டேன்; தங்களுடன் வாழும்போது, எத்தகைய துன்பமும் எனக்குத் தென்றலைப் போல இனிக்கும்; குயிலைப் போல் ஆனந்தததைத் தரும். கணவனுக்குப் பணிவிடை செய்வதே நான் கொண்ட தர்மம். அந்தத் தர்மததைச் செய்ய விடுங்கள். தங்களை மீறிப் பேசும் சொற்கள் தங்களுக்குக் கோபத்தை உண்டாக்கலாம். இருப்பினும் நான் கதியற்றவள் தாங்களே தெய்வம் என்று வந்தவள்; தங்களைப் பிரிந்து நான் எப்படி வாழ்வேன்?

 

ராமனும் கோசலையிடம் பேசும்போது, கணவனே தெய்வம் என்று குறிப்பிடுவான்.

தமிழ் வேதமாகிய திருக்குறள் தந்த திருவள்ளுவர் திருவாய் மலர்ந்தருளுகிறார்:–

 

தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55)

 

வேறு எந்த தெய்வத்தையும் தொழாது, தன்னைக் கொண்ட கணவனை மட்டும் தொழுது  — பின் தூங்கி முன் எழும் — துயில் எழும் மனைவி, பெய் என்றால், உடனே அவள் சொல் கேட்டு மழையும் பெய்யும்!

 

(இதற்கு சாவித்ரி, வாசுகி, கண்ணகி கதைகளை ஆதாரமாகக் கொள்வர்.)

 

இதைவிட ஒருபடி மேலே போய், வள்ளுவன் செப்புவான்:

 

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்

கண்ணிறை நீர் கொண்டனள் (குறள் 1315)

 

இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம் – என்று சொன்னபோது –மறுமையில் மறந்து விடுவேன் என்று தவறாக நினைத்துக் கொண்டு, மறு பிறப்பில் பிரிந்துவிடுவோமோ என்று கண்களில் நீர் பெருகியது!

 

இதற்கெல்லாம் மூல காரணம் வால்மீகிதான்!

சங்கப் புலவர்களின் தங்க மொழிகள் (பொன்மொழிகள்)

 

2000 ஆண்டுகளுக்கு முன் பாடிவைத்த பைந்தமிழ்ப் புலவர்களும் வால்மீகியை அடியொற்றிக் கருத்துகளை உதிர்த்துள்ளனர்.

 

தோளும் அழியும்…………………

சாதல் அஞ்சேன்; அஞ்சுவல் சாவின்

பிறப்புப் பிரிது ஆகுவது ஆயின்,

மறக்குவேன்கொல், என் காதலன் எனவே

நற்றிணை 397, புலவர் அம்மூவனார்

 

பிரிவிடை ஆற்றுக என வற்புறுத்திய தோழிக்கு, ஆற்றுவேன் என்று தலைவி சொல்லியது:

“மாலைப் பொழுதும் வந்துவிட்டது. யான் எப்படி ஆவேனோ இங்கே யான் இறப்பதற்கு பயப்படவில்லை ஆனால் வேறு ஒன்றுக்கு அஞ்சுவேன்; இறந்த பின் , மறு பிறப்பில் பெண்ணாகப் பிறக்காமல், வேறு ஒன்றாகப் பிறந்தால் என்ன செய்வேன் என்ற எண்ணம் என் மனதை வாட்டுகிறது”  — என்பது ஆன்றோர் உரை.

 

 

குறுந்தொகையிலும் அம்மூவனாரே இக்கருத்தைத் திருவாய் மலர்ந்து அருளுவார்:

 

அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து

மணிக்கே ழன மாநீர்ச் சேர்ப்ப

இம்மை மாறி மறுமை யாயினும்

நீயா கியரென் கணவனை

யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே

–குறுந்தொகை 49, அம்மூவனார்

 

தலைமகன் பரத்தை வீட்டில் வேறு ஒரு பெண்ணுடன் இன்பம் துய்த்துவிட்டுத் திரும்பிவருகிறான்:

ஆன்றோர் உரை:

தலைமகன் பரத்தை மாட்டுப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள், அவனைக் கண்டவழி அவாற்றாமை நீங்குமன்றே; நீங்கி யவழிப் பள்ளியிடத்தானாகிய தலைமகற்குச் சொல்லியது:

 

“அணிலின் பல்லை ஒத்த முள்ளையுடைய, தாது முதிர்ந்த முள்ளிச் செடியையும், நீலமணியினது நிறத்தை ஒத்த கரிய நீரையுமுடைய கடற்கரையுடைய தலைவ!

 

இப் பிறப்பு நீங்கப் பெற்று நமக்கு வேறு பிறப்பு உண்டாயினும், என்னுடைய கணவன், இப்பொழுது என்பால் அன்பு செய்தொழுகும் நீயே ஆகுக!  நின்னுடைய மனத்திற்கு ஒத்த காதலி, இப்பொழுது நின் நெஞ்சு கலந்தொழுகும் யானே ஆகுக!

 

கருத்து:- நம்முடைய நட்பு பிறவிதோறும் தொடரும் இயல்பினதாகுக.

((மாதவியிடம் போய்விட்டுத் திரும்பிவந்த கோவலனை கண்ணகி ஏற்றுக் கொண்டாள்!))

 

 

இதே கருத்து குறுந்தொகை 199 -பரணர்

குறுந்தொகை-2 இறையனார்

குறிஞ்சிப் பாட்டு வரி 24 -கபிலர்

பெருங்கதை2-11-39; மற்றும் பல இடங்களில் வருகிறது.

 

தமிழர்கள் மறு பிறப்பிலும், மறு பிறப்பில் நட்பு தொடர்வதிலும் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள்

 

காளிதாசனின் ரகு வம்ச காவியம்

 

காளிதாசன், 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளான். ரகு வம்சத்திலிருந்து மட்டும் சில மேற்கோள்களைத் தருவன்:

சீதை சொல்கிறாள்; இப்பொழுது நான் கர்ப்பவதி; தவம் செய்தால் அது பிறக்கப்போகும் குழந்தைகளைப் பாதிக்கும்;  குழந்தை பிறந்தவுடன், நான்கு தீக்களுக்கு நடுவே நின்று கொண்டு சூரியனை உற்று நோக்கி தவம் செய்வேன். எதற் காக என்றால் அடுத்த பிறப்பில் நானும் நீங்களும் கணவன் மனைவி ஆக வேண்டும்; அப்பொழுது இப்பிறப்பில் ஏற்பட்ட பிரிவு ஏற்படக்கூடாது!

 

சாஹம் தபஹ சூய நிவிஷ்ட த்ருஷ்டிர் ஊர்த்வம் ப்ரசூதேச் சரிதும் யதிஷ்யே

பூயோ யதா மே ஜனனாந்தரே அபி த்வமேவ பர்தா ந ச விப்ர யோகஹ

ரகு 14-66

 

பொருள்

எவ்வாறு மறுபடியும் எனக்கு மறுஜன்மத்திலும் தாங்களே கணவராக ஆவீர்களோ பிரிவும் உண்டாகாதோ அவ்வாறு இத்தகைய துரதிருஷ்டம் வாய்ந்த நான், பிரசவத்திற்குப் பிறகு, சூர்யனிடத்தில் வைக்கப்பட்ட பார்வையுடையவளாக தவத்தை (பஞ்சாக்னி தபஸ்) செய்யப் போகிறேன்

 

இன்னொரு இடத்தில் ஆயிரம் மன்னர்களுக்கு இடையே இந்துமதி, அஜனைத் தனக்கு கணவனாக ஏற்றது எப்படி யென்றால் மனதுக்கு பூர்வ ஜன்ம தொடர்பினை அறியும் சக்தி உண்டு என்பார் (7-15)

 

ரதிஸ்மரௌ நூனம் இமௌ அபூதாம் ராக்ஞாம் சஹஸ்ரேஷு ததாஹி பாலா

கதேயமாத்மப்ரதிரூபமேவ மனோ ஹி ஜன்மாந்தர சம்கதிக்ஞம்

 

இவ்விருவரும் மனித வடிவில் தோன்றிய இணைபிரியாத ரதியும் மன்மதனுமே ஆவர்; மனமானது பூர்வ ஜன்மதொடர்பின் படியே செயல்படும் ஆதலால இவளுடைய மனமும் 1000 அரசர்கள் குழுமியிருந்த இடத்தில் அவளுக்கு உரியவனையே தேர்ந்தெடுக்க உதவியது.

 

கண்ணகி எப்படி தெய்வமானாள்?

 

 

தெய்வந்தொழாஅள், கொழுநன் தொழுவாளைத்

தெய்வம் தொழும் தகைமை திண்ணிதால் – தெய்வமாய்

மண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி

விண்ணக மாதர்க்கு விருந்து!

–கட்டுரைக் காதை, சிலப்பதிகாரம்

 

இளங்கோ சொல்வது:–

மண்ணக் மாதர்க்கு எல்லாம் அணி போல்பவளான கண்ணகியானவள், தெய்வமாக விண்ணக மாதர்க்கு விருந்தினளாயினாள். தெய்வத்தைத் தொழாமல் கணவனையே தொழும் பெண்ணை தெய்வமும் வணங்கும் என்பது இவ்வுலத்தில் இதனால் உறுதி ஆய்விட்டது.

 

கட்டுரையின் நீளத்தைக் கருதி ஏனைய மேற்கோள்களைத் தவிர்ப்பன்.

பெண்களே! உங்கள் கருத்து என்னவோ?

–சுபம்–