சிவனுக்குரிய எட்டு பூக்கள்: அப்பர், மாணிக்க வாசகர் தரும் தகவல் (Post no. 3485)

Written by London swaminathan

 

Date: 26 December 2016

 

Time uploaded in London:-  9-19 AM

 

Post No.3485

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

சிவ பூஜையில் பயன்படுத்தும் பூக்களில் நான், செண்பகத்தையும் சேர்த்து ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். ஒருவர், இது தவறு என்று சொல்லுவதாக எனக்கு பிப்ரவரி மாதம் ஈ மெயிலில் எழுதி இருந்தார்.

 

விஷ்ணுவும்  பிரம்மாவும் சிவனின் அடியையும் முடியையும் தேடிச் சென்ற கதையில் பிரம்மாவுக்கு ஆதரவாக பொய்ச் சாட்சி சொன்ன பூக்களில் தாழையும் செண்பகமும் உண்டு என்று வட நாட்டில் கருதப்படுவதால் இந்த நம்பிக்கை வலுத்தது. ஆயினும் தென்னாட்டுப் பாடல்களில் தாழை மட்டுமே இருப்பதாக நான் கருதுகிறேன்

 

நான் எதையும் ஆதாரம் இல்லாமல் எழுதுவதில்லை என்றும் நேரம் கிடைக்கும் போது எந்த இடத்தில் இது உள்ளது என்பதை எழுதுவேன் என்றும் சொன்னேன். இதோ அந்தப் பாட்டு:-

 

 

எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி

மட்டலரிடு வார் வினைமாயுமால்

கட்டித் தேன் கலந்தன்ன கெடில வீ

ரட்டானரடி சேருமவருக்கே

தேவாரம் 5-54-1

 

அப்பர் பாடிய இப்படலுக்கு உரை எழுதிய பெரியோர் எட்டு பூக்களின் பெயர்களைக் கொடுக்கின்றனர். அவை அலரி, பாதிரி, புன்னை, செந்தாமரை, குவளை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவட்டை.

 

நாம் வெளியே பூஜை செய்யும்போது மலர்களைப் பயன்படுத்துகிறோம். ஆத்ம பூஜை செய்கையிலும் இவ்வாறு எட்டு மலர்களைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார்:–

புகையெட்டும் போக்கெட்டும் புலன்களெட்டும்

பூதங்களவை யெட்டும் பொழில்களெட்டும்

கலையெட்டும் காப்பெட்டும் காட்சியெட்டுங்

கழற் சேவடியடைந்தார் களைகணெட்டும்

நகையெட்டும் நாளெட்டும் நன்மையெட்டும்

நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்களெட்டும்

திகையெட்டும் தரிப்பதற்கு முன்னோ பின்னோ

திருவாரூர்க் கோயிலாக் கொண்ட நாளே

————-ஆறாம் திருமுறை, அப்பர்

 

 

பாடலின் பொருள்  ( நமக்கு வேண்டிய வரிகள் மட்டும் ):-

மனதிலே மலர்கின்ற எட்டு  மலர்கள்:- கொல்லாமை, புலனடக்கம், அமைதி,  அன்பு, தியானம், தவம், சத்தியம், மெய்யறிவு. இவை எட்டும் ஞான மலர்களாம்.

மாணிக்க வாசகரின் திருவாசகத்தில்

பரவுவார் இமையோர்கள்

பாடுவன நால்வேதம்

குரவுவார் குழன்மடவாள்

கூறுடையாள் ஒருபாகம்

விரவுவார் மெய்யன்பின்

அடியார்கள் மேன்மேலுன்

அரவுவார் கழலிணைகள்

காண்பரோ அரியானே

–திருச்சதகம், 17, திருவாசகம்

 

பொருள்: காண்பதற்கு அரியவனே; தேவர்கள் உன் முன்னால் நின்று உன்னை வாழ்த்துவர்; நான்கு வேதங்களும் உன்னைப் பாராட்டுகின்றன. குராமலரை கூந்தலில் அணிந்த உமா தேவியார் உனது உடலில் இடப்பாகத்தை ஏற்றுக்கொண்டார். உண்மை அன்பினுடைய மெய்யடியார்கள் எப்போதும் உன்னுடன் இருக்கின்றனர். ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த உன் திருவடிகள் இரண்டையும் இவர்கள் அனைவரும் காண்பரோ!

 

இதற்கு விரிவுரை எழுதிய தண்டபாணி தேசிகர் அவர்கள், “இறைவன் வழிபாட்டிற்குரிய பூக்களில் குரா, மரா, கொன்றை, பாதிரி, செண்பகம் முதலிய  எல்லாம் உரியவாதலின் குரவுவார் குழல் மடவாள் என்று குறிக்கபெற்றார்- என்று எழுதியுள்ளார்.

 

பழைய சான்றோர்களின் உரைகள்தான் நமக்கு ஆதாரங்கள். இதையொட்டியே நானும் சிவ பெருமானுக்கு செண்பக மலரும் பிடிக்கும் என்று ஓராண்டுக்கு முன் ஒரு கட்டுரையில்  எழுதினேன்.

 

கொன்றைப் பூவின் சிறப்பு

திருவாசகத்தில் ஒரு பாடலில் சிவனைப் போற்றும் வரிகளில் தேனேயும் மலர்க் கொன்றைச் சிவனே எம்பெருமானே – என்று பாடியுள்ளார். இதில் சிவனுக்கு கொன்றைப்  பூவைப் பயன்படுத்துவது ஏன் என்று உரைகாரர் எழுதுவர்:-

கொன்றை இறைவனுக்கு அடயாளப் பூ; இதன் கேசரங்கள் பிரணவ வடிவமாக இருப்பதாலும் (பிரணவம் = ஓம்காரம்) பூ பொன்னிறமாய் இறைவன்  மேனியை ஒத்திருத்தலாலும்  இறைவனுக்கு அது  உககந்ததாயிற்று.

 

–Subham–