
Post No. 8033
Date uploaded in London – 24 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
இரத்தம் உறிஞ்சும் அட்டை வைத்தியம்
அட்டை (Leech) என்பது நீரில் வாழும் பிராணி . இதை பல நோய்களைத் தீர்க்க மனிதர்கள் பயன்படுத்தினர். இப்பொழுதும் மேலை நாடுகளிலும் ஆயுர்வேத வைத்திய சாலைகளிலும் அட்டையைப் பயன்படுத்துகின்றனர்.
சுஸ்ருதர் எழுதிய சுஸ்ருத சம்ஹிதை என்னும் மருத்துவ நூல் 2600 ஆண்டு பழமையானது.
சுஸ்ருதரும் அட்டை வைத்தியம் பற்றி எழுதி இருக்கிறார். அவர் சொல்வதாவது –

சுஸ்ருத சம்ஹிதை 1-13-13
ஜலம் ஆஸாம் ஆயுர் இதி ஜலாயுகாஹா .
ஜலம் ஆஸாம் ஒக இதி ஜலாயுகாஹா. ,
தா த்வாதச ; தாஸாம் ச விஷாஹா சத் , தாவத்ய ஏவ நிர் விஷாஹா
தத்ர ச விஷாஹா…
அத நிர் விஷாஹா…. இத்யேதா அ விஷா வ்யாக்யாதாஹா.
தாஸாம் யவன பாண்ட்ய ஸஹ்ய பவுத்தநாதீனி க்ஷேத்ராணி ;
தேஷு மஹாசரீர பலவத்யஹ ஸீக்ரபாயின்யோ மஹாசனா நிர்விசாஸ் ச
விஷே சேன பவந்தி.
பொருள்
அட்டையை ஜல ஆயுகா என்று அழைப்பர் ; ஏனென்றால் தண்ணீரே அதன் உணவு ( ஆயுஹ் =உணவு );
மற்றொரு அர்த்தம்
தண்ணீரே அதன் வீடு என்பதாகும் ; ஒகஸ் = வசிக்கும் இடம்
அவைகளில் 12 வகைகள் உள்ளன. அவற்றுள் ஆறு வகை விஷமற்றவை விஷமுள்ள வவகைகள் பின்வருமாறு …………………………………………
…….. விஷம் இல்லாத வகைகள் இவை ; கிடைக்குமிடங்கள் — யவன, பாண்ட்ய, ஸஹ்ய, பவுத்தன முதலியன ; இங்கே காணப்படும் அட்டைகள் மிகப்பெரியவை.; வலுவானவை; ரத்தத்தை விரைவில் உறிஞ்சுபவை; அதிகம் சாப்பிடும்; ஆனால் விஷம் கிடையாது.

எப்படி வேலை செய்கிறது?
அட்டையின் எச்சிலில் (Saliva), அதாவது உமிழ் நீரில் அபூர்வ ரசாயனப் பொருட்கள் உள்ளன. 1.முதலாவது இது ரத்தத்தை உறையாமல் வைக்கிறது. 2.இரண்டாவதாக ரத்தத்தை இளகச் செய்கிறது. 3.அட்டை ஒருவரை கடிக்கும்போது வலி தெரியாமல் செய்ய சுரக்கும் திரவம் மயக்க மருந்து போல செயல்படுகிறது. 4.மேலும் ரத்தம் உறிஞ்சும் குணம் பாம்புக்கடி விஷம், சிலந்திக்கடி விஷயம் முதலிய விஷங்களை வெளியேற்ற உதவுகிறது. 5.உடலில் வெவ்வேறு இடத்தில் அட்டையைக் கடிக்க வைத்தால் ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி நடைபெறும். 6.மேலும் உடலில் நடைபெறும் ஜீரணம், உணவு தன்மயமாதல் முதலியவற்றிலும் உதவுகிறது. அட்டையைப் பயன்படுத்துகையில் 130 வெவ்வேறு ரசாயனங்கள் சுரப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அட்டை வைத்தியம் எகிப்து, கிரேக்கம் முதலிய நாட்டு படைப்புகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளதால் இதற்கு 3000, 4000 ஆண்டு வரலாறு இருக்கிறது. மெசப்பொட்டேமியா மாயா , அஸ்டெக் நாகரீகங்களிலும் பயன்பட்டது.
இந்தியாவில் சில ஆயுர்வேத மருத்துவ சாலைகளில் இது இன்றும் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, போலந்து, ஆஸ்திரியா முதலிய நாடுகள் இதை விஞ்ஞான பூர்வமானது என்று அங்கீ கரித்திருப்பதால் இந்த சிகிசிசை அங்கு கிடைக்கிறது.
என்ன நோய்கள் குணமடையும்?
இருதய நோய்கள், எக்சிமா என்னும் சொறி சிரங்கு, இரத்த சம்பந்தமான நோய்கள், கீல் வாதம், மூட்டுவலி முதலிய வியாதிகளைக் குணப்படுத்த அட்டை வைத்தியம் பயன்படுகிறது. டெமி மூர் (Hollywood Actress Demi Moore) என்னும் அமெரிக்க நடிகை, தான் இதில் பலன் அடைந்ததாக பகிரங்கமாகவே அறிவித்துள்ளார்.
ஒருவருடைய முகத்திலுள்ள(Facial wrinkles) சுருக்கங்களை நீக்கி இளமைப் பொலிவு அதிகரிக்க அட்டை வைத்தியம் உதவும். முகத்தில் பல இடங்களில் அட்டையைக் கடிக்க வைத்தால் அது சுரக்கும் மயக்க மருந்தானது முகத்தின் தசைப் பகுதியை மரத்துப்(Partial paralysis) போகச் செய்யும்; இதன் மூலம் முகத்தின் தோலில் காணப்படும் சுருக்கங்களை அகற்றலாம்..
2600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சுஸ்ருதர் உலகத்தின் முதல் அறுவைச் சிகிச்சை நிபுணர்; இதை உலகம் முழுதும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா முதலிய நாடுகள் அவருடைய சிலையை வைத்து மரியாதை செய்திருக்கின்றன. லண்டனிலுள்ள வெல்கம் மருத்துவ ஆய்வு நிலையம் இவருடைய அறுவைச் சிகிச்சை கருவிகளைக் காட்சிக்கு வைத்தது (அதற்குச் சென்று வந்த பின்னர் இந்த பிளாக்கில் படத்துடன் கட்டுரை எழுதியுள்ளேன்.).

அட்டையின் விலை என்ன?
சுஸ்ருதர் அந்தக் காலத்திலேயே 12 வகைகளைக் குறிப்பிட்டு ஆறுவகைகளுக்கு விஷம் இல்லை என்று எழுதி வைத்துள்ளார். ஐரோப்பியர்களும் ஒரு குறிப்பிட்ட வகையை மட்டும் பயன்படுத்துகின்றனர். இந்தக் கட்டுரை எழுதும் நாளில் ஒரு அட்டை விலை எட்டு (euro) யூரோ, அதாவது 8X 83 ரூபாய் = 664 ரூபாய்.
ஆயுர்வேத நூல் களில் ரக்த மோக்ஷ கர்ம (ரத்தத்தை வெளியற்றல்)அல்லது ஜலூகா அவசரண சிகிச்சை என்பர் மேலைநாடுகளில் Hirudin Therapy ஹிருதினோ தெரபி என்பர். ஒரு முறை சிகிசிசைக்கு ஆகும் செலவு , கட்டுரை எழுதும் நாளில் 40 யூரோ .ஒரு யூரோ = 83 ரூபாய்
ஒரு சிகிச்சசைக்கு ஆகும் நேரம் 1 மணி அல்லது ஒன்றரை மணி. எத்தனை அட்டைகள் தேவை என்பது சிகிச் சையைப் பொறுத்தது . ஒரு அட்டையைக் கடிக்க வைக்கையில் முள் குத்தும் உணர்ச்சி ஏற்படும். பின்னர் வலி தெரியாமல் இருக்க அட்டையே ஒரு திரவத்தைச் சுரந்து விடும் அது இருப்பதே தெரியாது . அது ரத்தத்தைக் குடித்து திருப்தி அடையும் வரை எடுக்க முடியாது. ஏனெனில் ரம்பம் போன்ற பற்களால் சதையைப் பிடித்துக் கொண்டு இருக்கும். ரத்தம் உறிஞ்சி வயிறு நிரம்பிய பின்னர் அதுவே விலகும் வீக்கம் , காயம் வராமல் இருக்க ஒரு திரவத்தைச் சுரந்து விட்டு பிடியைத் தளர்த்தும் அதாவது தான் பயன்படுத்திய அதே மிருகத்தை மீண்டும் பயன்படுத்துவதற்காக இப்படி ஒரு பாதுகாப்பு ஏற்பாடு!
ஒரு அட்டை 15 ml (எம் எல் மில்லி லிட்டர்) வரை ரத்தத்தை உறிஞ்சும் . பின்னர் ஓராண்டு வரை கூட சாப்பிடாமல் உயிர் வாழும் . ஜெர்மனி முதலிய நாடுகள் ஒரு அட்டையை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தலாம் என்று சட்டம் இயற்றியுள்ளன. அவற்றை உடனேயே கொல்லக்கூடாது என்ற மனிதாபிமான அடிப்படையில் ‘ஓய்வூதியம் பெறும் ‘ அட்டைகளுக்காக தனி குளத்தை கட்டி வைத்துள்ளனர். செய் நன்றி மறக்கக் கூடாதல்லவா ?

tags – இரத்தம் , அட்டை, வைத்தியம், leech therapy, சுஸ்ருதர்
**** subham ******







You must be logged in to post a comment.