இந்துமதத்தில் 8 வகைத் திருமணங்கள்
Written by London swaminathan
Research article No. 1789 Date 9th April 2015
Uploaded from London at 10-18 காலை
கட்டுரையின் முதல் பகுதி நேற்று “இந்து மதத்தில் காதல், கடத்தல் கல்யாணங்கள்!!” – என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. முதலில் அதைப் படித்துவிட்டு இதைப் படிப்பது நல்ல விளக்கம் தரும்.
“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக்கூட்டம் காணுங்காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே”.
-தொல்.பொருளதிகாரம்—1038
தொல்காப்பியரின் இந்த சூத்திரத்துக்கு “உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் நீண்ட விளக்க உரை எழுதி இருக்கிறார்.
எட்டுவகைத் திருமணங்களின் விவரம்
ஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி என்னும் தமிழ் கலைக்களஞ்சியத்தில் இருந்து எடுக்கப்பட்ட விஷயங்கள்:–
1).பிராம்மம், 2).தெய்வம், 3).ஆருஷம், 4).பிராஜாபத்யம், 5).ஆசுரம், 6).காந்தர்வம், 7).இராக்ஷசம், 8).பைசாசம்
பிராம்மம் வகைத் திருமணங்கள்
வேதம் ஓதினனாகவும் நல்லொழுக்கனாகவும் இருக்கின்ற பிரம்மச்சாரியைத் தானாகவே அழைப்பித்து அவனை நூதன வஸ்திரத்தால் (புத்தாடைகளால்) அலங்கரித்து, கன்னிகையையும் அப்படியே நூதன பூஷண அலங்காரம் (பெண்ணையும் நகை, ஆடைகளால் ) செய்வித்து அவ்வரனுக்கு அவளைத் தானம் செய்வது பிராம்மம் ஆகும்.
கார்த்தி- ரஞ்சனி கல்யாணம்
தெய்வம் வகைத் திருமணங்கள்
ஆத்யத்தில் தனக்குப் புரோகிதனாக இருப்பவனுக்கு தன் பெண்ணை அலங்கரித்துக் கொடுப்பது
ஆருஷம் வகைத் திருமணங்கள்
தான் செய்ய வேண்டிய யாகாதி கர்மங்களுக்காக வரனிடத்தில் (மாப்பிள்ளைப் பையன் =வரன்) ஒன்று அல்லது இரண்டு ரிஷபங்களையும் (காளை மாடு) பசுக்களையும் வாங்கிக் கொண்டு கல்யாணம் செய்துகொடுப்பது
பிரஜாபத்திய வகைத் திருமணங்கள்
ஒரு பிரம்மசாரியை (கல்யாணம் ஆகாத பையன்) அழைத்துப் பூசித்துத் தன் பெண்ணைத் தானம் பண்ணும்போது நீங்கள் இருவரும் தருமம் செய்யுங்கள் என்று கொடுப்பது. பெண்ணின் தந்தை கேட்கும் பணத்தைக் கொடுத்து, பெண்ணுக்கு நகைகள் வாங்கிப் போட்டுக் கல்யாணம் செய்து கொள்வது.
காந்தர்வ வகைத் திருமணங்கள்
ஸ்த்ரீயும் புருஷனும் ஒருவருக்கு ஒருவர் புணர்ச்சியின் ஆசையால் மனம் ஒத்துச் சேர்தல் (காதல் திருமணம்)
இராக்ஷச வகைத் திருமணங்கள்
ஒருவன் தன் பலத்தினால் கன்னிகை (பெண்) அழும்போது அவள் வீட்டினின்றும் அவளது பந்துக்களை (சொந்தக்காரர்கள்) அடித்தும், கொன்றும் வலிமையால் கொண்டுபோவது
பைசாச வகைத் திருமணங்கள்
ஒரு கன்னிகை தூங்கும்போதும், குடியினால் வெறித்திருக்கும் போதும், பித்துக் கொண்டவளாய் இருக்கும்போதும் அவளுடன் புணர்வதாம்.
இதற்குப் பின்னர் எந்தெந்த வருணத்தினர் யாரைக் கல்யாணம் செய்யலாம் என்ற விஷயங்களை அவர் சொல்லுகிறார். இவை மனு ஸ்மிருதியில் மூன்றாவது அத்தியாயத்திலும் உள.
மிர்ச்சி – செந்தில் திருமணம்
நச்சினார்க்கினியர் சொல்லும் சில சுவையான விஷயங்கள்:–
பிராம்மம் வகைத் திருமணங்களில் மாப்பிள்ளையின் வயது 48, பெண்ணின் வயது 12. (பெண்ணின் வயது சங்க காலத்திலும் வேத காலத்திலும் 12 முதல் 16 தான். அதில் வியப்பேதும் இல்லை). ஆனால் ஆணுக்கு 48 வயது இருக்கக் காரணம் அவர் அவ்வளவு காலத்துக்கு பிரம்மசாரியாக இருந்து வேதம் மற்றும் அதன் அங்கங்களைப் படித்துப் பின்னர் திருமணம் செய்துகொள்ள வருவர். (திருமுருகாற்றுப்படை போன்ற நூல்களின் விளக்க உரைகளில் ஆண்கள் 48 வயது வரை பிரம்மசர்யம் அனுஷ்டிக்கும் அபூர்வ விஷயங்களைக் காணலாம். ஒருவர் மனம், மொழி, மெய் மூன்றினாலும் 12 ஆண்டுகள் ப்ரம்மசர்யம் கடைப்பிடித்தால் அபூர்வ சக்திகள் – குறிப்பாக நினைவாற்றல்—உருவாகும் என்று சுவாமி விவேகாநந்தர் கூறுகிறார். காஞ்சி பரமாசார்ய சுவாமிகள், சுவாமி விவேகாநந்தர் போன்றோர் அபூர்வ நினைவாற்றல் பெற்றதை அவர்களின் புண்ய சரித்திரங்களில் படித்தறியலாம்)
பிரஜாபத்யம் பற்றியும் நச்சினார்க்கினியர் கூடுதல் தகவல் தருகிறார். பெண் வீட்டார் தருவதைப் போல இருமடங்கு வரதட்சிணையை மாப்பிளை வீட்டார் தர வேண்டும்.
ஆர்ஷம் (ஆர்ஷமென்ற சொல் ‘ரிஷி தொடர்புடைய’- என்று பொருள்) வகைத் திருமணங்களில் பெண்ணும் மாப்பிள்ளையும் ஒரு பசு, காளை இடையே நிற்பர். அந்த மாடுகளின் கொம்பும் குளம்பும் தங்கக் கவசத்தால் மூடப்பட்டிருக்கும் இந்த பசு—காளை மாடு போல என்றும் இன்பத்துடன் வாழுங்கள் என்று சொல்லி புனித நீர் அபிஷேகம் செய்வர்.
தெய்வம் வகைத் திருமணங்களில் அக்னி சாட்சியாகத் திருமணம் நடக்கும் (சிலப்பதிகாரத்தில் கண்ணகியும், ராமாயணத்தில் ராமனும் தீ வலம் வந்து மணம் முடித்ததைக் காணலாம்)
ஆசுரம் (அசுரர் போன்ற) வகைக் கல்யாணங்களில் வீரதீரச் செயல்கள் செய்வோருக்குப் பெண் கொடுப்பர். மஹா பாரதத்தில் இதைக் காணலாம். அர்ஜுனன் வில் வித்தையில் வென்று திரவுபதியை வெல்கிறான். யாதவ குல இளைஞர்கள் மஞ்சுவிரட்டு/ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்று பெண் பெறுவர். இது கலித்தொகையில் வருகிறது.
ராக்ஷசம் என்பது கடத்தல் திருமணம்; காந்தர்வம் என்பது காதல் திருமணம் (இது பற்றி நேற்றைய கட்டுரையில் ரிக் வேதம் முதல் புராணம் வரையுள்ள எடுத்துக்காட்டுகளைக் கொடுத்துள்ளேன். சம்ஸ்கிருத காவியங்களில் இதற்கு மேலும் பல எடுத்துக்காட்டுகள் உள).
திருமண புகைப்படங்கள்
பாரதம் முழுவதும் ஒரே நாகரீகம்
ஆரிய திராவிட வாதம் பேசும் அரை வேக்காடுகளுக்கு சூத்திரம் சூத்திரமாகத் தொல்காப்பியர் அடிமேல் அடி கொடுக்கிறார். ஒரே சூத்திரத்தில் தர்மார்த்த காம (மோக்ஷம்) பற்றிச் சொல்லிவிட்டு அதே மூச்சில் மனு ஸ்ம்ருதியில் உள்ள எண்வகைத் திருமணம் பற்றியும் சொல்கிறார்.
ஆரிய-திராவிட வாதத்துக்குச் சாவுமணி அடிக்கும் கீழ்கண்ட சங்க இலக்கிய விஷயங்களை எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் இதுவரை எழுதியுள்ளேன்:-
1.வசிஷ்டர் மனைவி அருந்ததியே உலக மஹா கற்புக்கரசி
- ரிக் வேதத்தில் சொல்லியபடி கரிகாலனும் அதியமான் நெடுமான் அஞ்சியும் ஏழு அடி நடந்து சென்றே விருந்தினர்களை வழி அனுப்பினார்கள்
- கங்கை நதியும் இமய மலையும் புனிதமானவை. இமயத்தில் கல் எடுத்து கங்கையில் குளிப்பாட்டி கண்ணகிக்குச் சிலை எடுத்தான் செங்குட்டுவன்.
- அமிர்தம் என்பது கிடைத்தற்கரியது.(சங்க இலக்கியத்தில் மூன்று வகை ஸ்பெல்லிங் பயன்படுத்தி இந்தச் சொல்லை எழுதியுள்ளனர்)
- பருவங்கள் ஆறு
- படைகள் நான்கு வகை
7.கொடிகள், சின்னங்கள், வெண்குடை வைத்துக் கொள்வது (மஹாபாரத காலம் போலவே)
- ஜம்பு, சால்மலி என்பது போல தாவரங்களின் அடிப்படையில் நிலப் பாகுபாடு (குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை)
9.கரிகால் சோழன் பருந்து வடிவ யாக குண்டம் வைத்து வேள்வி செய்தது; சோழன் பெருநற்கிள்ளி, ராஜ சூய யாகம் செய்தது; பாண்டியன் பல்யாக சாலை முது குடுமிப் பெருவழுதி அஸ்வமேத யாகம் செய்தது
- பிராமணர்கள், நான்மறை (வேதம்) இரண்டுக்கும் மதிப்பு கொடுப்பது.
11.வாழ்க்கையின் லட்சியங்களை அறம், பொருள் இன்பம், வீடு (தர்மார்த்த காமமோக்ஷ) என்று பிரிப்பது
- தங்களை சூரிய சந்திர குலத் தோன்றல் என்று அழைத்துக் கொள்வது (புறநானூற்றில் பல இடங்களில் புறா- சிபி கதை)
13.சம்ஸ்கிருத மொழி அடிப்படையில் அகத்தியரைக் கொண்டு இலக்கணம் எழுதியது; அதில் பாணினியைப் பின்பற்றியது.
14.தொல்காப்பியத்தில் வேத கால இந்திரன், துர்க்கை, வருணனை தமிழர் தெய்வங்கள் என்று காட்டியது.சங்க இலக்கியம் முழுதும் சிவனையும் விஷ்ணுவையும் ராமனையும் கிருஷ்ணனையும் பலராமனையும் போற்றியது
15.அரசனைக் கடவுள் என்று போற்றுவது
16.போர் துவக்க துர்யோதனன் செய்தது போல ஆநிரை கவர்தல்
17.சாதகப் பரவை, கிரவுஞ்சப் பறவை, அன்னப் பறவை எடுத்துக் காட்டுகளை அப்படியே சங்க இலக்கியத்தில் புகுத்தியது
18.இறந்தோர்- தெற்குத் திசையில் (தென் புலத்தார்) வாழ்வது
- கணவனே கண்கண்ட தெய்வம் என்பது; மறு பிறப்பிலும் நீயே கண்வன் ஆக வேண்டும் என்பது
20.மறுபிறப்பு மற்றும் கர்ம வினைகள நம்புவது
21.ஆண் குழந்தை மூலம் ஈமக் கிரிய செய்து கரை கடப்பது
- வேதத்தில் உள்ள முப்பதுக்கும் மேலான பெண் தெய்வங்களை வழிபடுவது
23.சூரியன், சந்திரன் (பிறை) வழிபாடு
24.சோதிடம், சகுனங்களை நம்புவது
25.சம்ஸ்கிருதம் போலவே சந்தி (புணர்ச்சி) விதிகளை இன்று வரை பின்பற்றுவது; எட்டு வேற்றுமைகளை பின்பற்றுவது
26.சதி என்னும் உடன்கட்டை ஏறுவதைப் பின்பற்றியது
27.இறந்தோரை தகனம் செய்வது
28.திருமணத்தில் தாலி கட்டுவது, தீ வலம் வருவது
29.பேய்களை ஓட்ட வெண்கடுகு பயன்படுத்துவது
30.சுப காரியங்களுக்கு மஞ்சள் அரிசியும், அசுப காரியங்களுக்கு வெள்ளை அரிசியையும் பயன்படுத்துவது
31.நீரைப் பயன்படுத்திப் புனிதப்படுத்துவது.
32.போர் துவங்கும் முன் கழுத்தை வெட்டிக் கொண்டு உயிர் பலி கொடுப்பது (மஹாபாரதத்தில் அரவான்; தமிழில் நவகண்டம்)
33.இந்திர விழா கொண்டாடுவது
இது போன்ற நூற்றுக் கணக்கான சங்க இலக்கிய—வேத, இதிஹாச ஒற்றுமைகள், ஆரிய திராவிட வாதத்தை ‘சட்னி’-யாக்கிவிட்டன. ‘’புல்டோசர்’’ கொண்டு புழுதி ஆக்கிவிட்டது. இதை எனது ஆயிரத்துக்கும் மேலான கட்டுரைகளில் மேற்கோள் ஆதாரங்களுடன் விளக்கி இருக்கிறேன். ஆரிய திராவிட பொய்மை வாதத்துக்கு எதிராக தமிழர்கள் கொடுக்கும் செமை அடி இன்னும் நூற்றுக் கணக்கான கட்டுரைகளில் வரும். படித்து இன்புறுக.
ஏக பாரதம் வெல்க!! தமிழும் சம்ஸ்கிருதமும் வாழ்க, வாழ்க!!
You must be logged in to post a comment.