72 தமிழ்க் கவிஞர்களின் சரிதம் தந்த முருகதாஸ் சுவாமிகள் (POST No.5421)

WRITTEN by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 12 September 2018

 

Time uploaded in London – 8-29 AM (British Summer Time)

 

Post No. 5421

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

தமிழுக்கு பெரும் சேவை செய்த பெரியார்களில் ஒருவர் முருகதாஸ் சுவாமிகள். இவர் பத்து வயதிலேயே கவி பாடியவர். கோலிக் குண்டு விளையாடும் இடை வேளையிலும் கவி எழுதுவாராம். எப்பொழுதும் இதற்காக எழுத்தாணியையும் பனை ஓலையையும் கூடவே எடுத்துச் செல்வாராம். அப்படிச் சிறுவயதிலேயே இவர் பாடிய முதல் நூல் பன்னிருமாலை ஆகும். முருகப் பெருமான் அவரது 12 கரங்களில் தாங்கிய ஆயுதம் முதலியவற்றை போற்றித் துதி பாடிய கவிகள் அவை. இவர் செய்த மஹத்தான சாதனை- எவரும் செய்யாத சாதனை- 72 தமிழ்ப் புலவர்களின் வரலாற்றைத் தாம் அறிந்த முறையில் செய்யுட்களில் தந்தமை ஆகும். அகத்தியர் முதல் துவங்கி நாம் அதிகம் அறியாத அறிவுத்தன்மைப் புலவர் வரை 2828  செய்யுட்களில் பாடிவிட்டார்.

 

 

‘புலவர் புராணம்’ என்ற பெயரில் 1901-ஆம் ஆண்டு முதல் 1906-ஆம் ஆண்டு வரை மூன்று தொகுதிகளில் இவை வெளியாகிற்று. திருவள்ளுவர், அவ்வையார் ஆகியோர் சஹோதர சஹோதரிகள் என்ற பழைய கதைப் படியே இவர் சரிதம் எழுதியுள்ளார். இவர் முருகன் மீது பக்தி பூண்டதால் முருக தாசர் என்று அழைக்கப்பட்டார். தண்டபாணி சுவாமிகள், திருப்புகழ் சுவாமிகள் என்ற பெயர்களும் உண்டு. இவர் திருநெல்வேலியில் 1838ல் பிறந்து 1898-ல் இறந்தார் என்று 1901 ஆம் ஆண்டு வெளியான ‘புலவர் புராண’ முகவுரையில் வி. கிருஷ்ணமாச்சாரியார் எழுதியுள்ளார்.

 

 

இது ஒரு புது வகை இலக்கியம் என்றும் வருங்கால சந்ததியினர் இவர் விட்டுவிட்ட விஷயங்களைச் சேர்க்க வேண்டும் என்றும் கிருஷ்ணமாச்சாரி முகவுரை கூறுகிறது. முருகதாசர் இந்துக் கவிஞர் வரலாறு மட்டுமே யாத்துள்ளார். பௌத்த, சமணர்கள் எவரும் இல்லை. மேலும் அவர் அறிந்த வகையில் கால வரிசைப்படி கவிஞர்களை வைத்துள்ளார். நல்ல தூய, செம்மையான பாக்கள் அவை. முருக்தாசரின் மகன் கொடுத்த தகவலின் படி அவர் எழுதிய வேறு நூல்கள்:–

 

தில்லைத் திருவாயிரம், திருவரங்கத் திருவாயிரம்,தெய்வத் திருவாயிரம், பழனித் திருவாயிரம், அருணகிரிநாதர் புராணம், நான்கு நூல், திருச்செந்தூர் திருப்புகழ்,  திருச்செந்தூர் கோவை, திருவாமாத்தூர் தலபுராணம்,ஏகபாதத்திதழகலந்தாதி, பதிகச் சதகம், சதகப் பதிகம், திருமகளந்தாதி.

தமிழ் நாட்டிலுள்ள பல தலங்களையும் இலங்கையிலுள்ள தலங்களையும் இவர் தரிசித்தார். இவர் பல பெரியோர்களைச் சந்தித்து சைவ மடங்களுடன் தொடர்பு கொண்டார். ஆயினும் சைவ வைணவ வேற்றுமை இவருக்கில்லை என்பது சிதம்பரம், திருவரங்கம் ஆகிய இரு கோவில்கள் மீதும் பாடியிருப்பதிலிருந்து புலப்படும். இவர் இருபது வயதாகும் முன்னர் சென்னைக்கும் வந்து அங்குள்ள கந்தசாமிக் கோவிலில் தனது சொற்பொழிவாலும் கவி புனையும் திறத்தாலும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை புரிந்தாலும் வேறு எவரும் செய்யாத ‘புலவர் புராணம்’ என்ற புதுமைப் படைப்பே இவருக்குப் புகழ் ஈட்டித் தந்தது. அறுபது வயது வரை தென் ஆற்காடு மாவட்டத்திலுள்ள திருவாமாத்தூர் கிராமத்தில் ஒரு குடிசையில் இவர் வாழ்ந்தார் என்றும் தெரிகிறது.

சென்னைத் தமிழ்ப் பண்டிதர் வி. கிருஷ்ணமாச்சாரி கையில் அவரது படைப்புகளை அவரது குடும்பத்தினர் தந்ததால் அவர் மூன்று பகுதிகளாக 72  புலவர் வரலாற்றையும் வெளியிட்டார்.

 

இதோ 72 புலவர்க்ளின் பெயர்கள்:

 

 

 

 

(ஒவ்வொரு புலவர் பற்றியும் முருகதாசர் பாடியதைத் தனியே இன்னொரு கட்டுரையில் தருகிறேன்)

 

-சுபம்-