Research Article No.1771; Date:- 3 ஏப்ரல், 2015
Written by London swaminathan
Uploaded at London time – காலை 7-43
(இதை ஏற்கனவே ஆங்கிலத்தில் வெளியிட்டு இருக்கிறேன்.)
மனு நீதி நூலைப் பற்றி இந்து விரோதிகளும் வெளிநாட்டினரும் நிறைய அவதூறுகளைப் பரப்பியதால் அதிலுள்ள நிறைய நல்ல விஷயங்கள் உலகிற்குத் தெரியாமல் போய்விட்டன. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் வரை மனு நீதிக்குத் தமிழ்நாட்டிலும் நல்ல மதிப்பு இருந்தது. இது கல்வெட்டுகளில் இருந்தும், திருவிளையாடல் புராணம் போன்ற நூல்களில் இருந்தும் வள்ளலார் போன்றோர் எழுத்துக்களாலும் தெரியவருகிறது. சங்க காலத்தில் ஒரு சோழ மன்னனுக்கே மனுநீதிச் சோழன் என்ற பெயர் இருந்ததும் அவன் தேர்க்காலில் தனது மகனையே பலிகொடுத்ததையும் நாம் அறிவோம்.
மனு ஸ்மிருதியில் சில இடைச் செருகல்கள் உள. அவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால் உலகிலேயே தலை சிறந்த நீதி நூல் இதுதான் என்பது புலப்படும். அவர் சொல்லவரும் விஷயங்களின் எண்ணிக்கையைப் பார்க்கையில் வியப்பு மேலிடும். திருலோக சீதாராம் என்னும் தமிழ் அன்பர் அழகிய தமிழில் மனு நீதியை மொழி பெயர்த்துள்ளார். அனைவரும் படித்து ஆராய வேண்டிய விஷயம் இது. எனினும் இக்கட்டுரையில் நாம் பார்க்கப் போவது மனு கையாண்ட சில உவமைகள் மட்டுமே.
இந்துக்கள் இயற்கையின் நண்பர்கள். இயற்கையில் நிகழ்வனவற்றைக் கூர்ந்து கவனித்து அதைத் தகுந்த இடத்தில் உவமைகளாகப் பயன் படுத்தி, அரிய பெரிய உண்மைகளை மனதில் பசுமரத்தாணி போல பதியச் செய்கின்றனர். பாகவத புராணத்தில் தத்தாத்ரேயர் என்பவர் இயற்கையிடம் தாம் கற்றுக் கொண்ட விஷயங்களின் நீண்ட பட்டியலை நாம் முன்னரே பார்த்தோம். மஹாபாரதத்திலும் ராமாயணத்திலும் வரும் பறவை, மிருகங்களின் கதைகளும் உங்களுக்குத் தெரியும். உலகம் முழுவதும் மொழி பெயர்க்கப்பட்டுள்ள பஞ்சதந்திரக் கதைகளை இந்தியச் சிறுவர்கள் அனைவரும் அறிவர்.
மனுவும் தக்க இடங்களில் பிராணிகளைப் பயன்படுத்தி அறிவுரை வழங்குகிறார். மனுவுக்கு மிகவும் பிடித்தது கொக்கு. இதற்கு அடுத்த படியாக அவர் அதிகம் பயன்படுத்துவது பூனை! கொக்கும் பூனையும் தந்திரத்தால் இரை தேடுகின்றன.
கொக்கின் குணத்தை நல்லதுக்கும் கெட்டதுக்கும் உவமையாக்குகிறார். சில பிராமணர்கள் ருத்ராக்ஷப் பூனை போலவும், காத்திருக்கும் கொக்கு போலவும் கபடதாரிகள். அவருக்குத் தண்ணீர் கூடக் கொடுக்கக்கூடாது என்று எச்சரிக்கிறார். இது நாலாவது அத்தியாயத்தில் வருகிறது.
ஏழாவது அதிகாரத்தில் மன்னனின் குணநலன்கள் பற்றிச் சொல்லுகையில் அவன் கொக்கு போல காத்திருந்து காலம் கருதி இடத்தாற் செயின் வெற்றி கிட்டும் என்கிறார். இதையே பிற்காலத்தில் அவ்வையாரும் வள்ளுவரும் வாக்குண்டாம், திருக்குறள் ஆகியவற்றில் பயன்படுத்தினர். மனு என்பவர் ரிக்வேத காலத்தில் (கி.மு.1700-க்கும் முன்னதாக) வாழ்ந்தவர். இன்றைய மனு நீதி நூல் 2300 ஆண்டுக்கு (கி.மு.3-ஆம் நூற்றாண்டு) முந்தையது என்று அறிஞர்கள் பகருவர்.
ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்
வாடி இருக்குமாம் கொக்கு – வாக்குண்டாம்
என்று அவ்வையாரும் மனு சொன்னதையே சொல்கிறார்
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து – குறள் 490
என்று வள்ளுவரும் மனு சொன்னதையே சொல்கிறார்
4-30, 4-192, 4–196/7, 5-14, 7-106, 11-136, 12-66 (மனுவில் குறைந்தது எட்டு இடங்களில் கொக்கு வருகிறது)
ஆமையோ ஆமை!
மனு பயன் படுத்திய ஆமை உவமை, பகவத் கீதையிலும் திருக்குறளிலும் உள்ளது. மன்னன் தனது ரஹசியங்களையும் துறைகளையும் ஆமை தனது உறுப்புகளை ஓட்டுக்குள் இழுத்து பாதுகாப்பது போலக் காக்க வேண்டும் என்கிறார் மனு (7—105). புலன் அடக்கம் பற்றிச் சொல்லுகையில் குறளும் கீதையும் ஆமை பற்றிப் பேசும்.
ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்புடைத்து – குறள் 126,
கீதை 2-58, மனு 7-105, திவ்விய பிரபந்தம் 2360.
ஏழாம் அத்தியாயத்தில், எதிரிகளை அழிக்க, ஒரு அரசன் ,”கொக்கு போல திட்டம் தீட்டவும், சிங்கம் போல தாக்கவும், ஓநாய் போல பாயவும்,தோல்வி வரும்பட்சத்தில் முயல் போலப் பின்வாங்கவும் வேண்டும் என்கிறார்.
வரிவிதிப்பு பற்றிச் சொல்லுகையில் மக்களுக்கு மிதமாக வரி விதிக்க வேண்டும். அது தேனீயானது மலர்களில் இருந்து தேனை எடுப்பது போலவும், அட்டையானது பிராணிகளிடத்தில் இருந்து ரத்தம் எடுப்பது போலவும், கன்றானது தனது தாயாரிமிருந்து பால் குடிப்பது போலவும் இருக்க வேண்டும் என்பார்.
புலித்தோல், மான் தோல் முதலியவற்றை தியானத்துக்குப் பயன்படுத்துவது பற்றியும் சொல்கிறார். வேறு பல இடங்களில் நிறைய மிருகங்கள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. ஆனால் அவைகள் உவமை அல்ல.
மனு நீதி சாத்திரத்தைப் படித்துப் பயன்பெறுக.
You must be logged in to post a comment.