Written by London Swaminathan
Date: 7 May 2017
Time uploaded in London: 14-17
Post No. 3886
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
வேங்கை என்ற தமிழ்ச் சொல்லுக்கு இரு பொருள் உண்டு; புலி என்றும் வேங்கை மரம் என்றும் அர்த்தம்.
சங்க இலக்கியத்தில் வேங்கை மரம் பற்றிய பாடல்கள் நிறைய உள்ளன. வேங்கை மரம் பூத்தால் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையும் இதற்கு ஒரு காரணம்.
இது பற்றிய இரண்டு அதிசய விஷயங்கள்!
உலகப் புகழ் பெற்ற கவிஞன் காளிதாசனும் புலி என்றும் மரம் என்றும் பாடுகிறான். சங்க காலத்துக்கு முன் வாழ்ந்தவன் காளிதாசன் என்ற கருத்தை வலியுறுத்தி ஏழு ஆண்டுகளாக நிறைய கட்டுரைகள் தந்தேன். இன்று வேங்கை மரம் மேலும் ஒரு சான்றாக வருகிறது!
2000 ஆண்டுகளுக்கு முன்னர் யானையும் புலியும் சண்டை போடுவது, தமிழகக் காடுகளில் தினமும் நடந்த ஒரு நிகழ்ச்சி. வேங்கை மரத்தின் பூக்கள் , பாறைகளில் விழுந்து காட்சி தருகையில் அது புலி போலவேஎ தோன்றும். இதைப் பார்க்கும் யானை, அது உண்மையான புலி என்று எண்ணி அதனுடன் மோதுகிறதாம். இது கபிலர் கண்ட காட்சி(கலித்தொகை 38, 49)
வேங்கை என்ற தமிழ்ச் சொல் வேங்கா ( Benga பேங்கா) என்று நேபாளத்திலும் வழங்கி வருகிறது. தமிழும், சம்ஸ்கிருதமும்தான் உலக மொழிகளுக்கு எல்லாம் மூல மொழிகள் என்றும் உலகின் எல்லா பழைய சொற்களையும் இம்மொழிகளில் தோன்றியதாகக் காட்ட முடியும் என்றும் நான் எழுதி வருவதற்கு இது மேலும் ஒரு சான்று!
வேங்கை மரம் பற்றிய பாடல்கள் சிலவற்றைக் காண்போம்:-
2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டின் காடுகளில் யானையும் புலியும் சண்டை போடுவது தினமும் நடந்த நிகழ்ச்சிகளாகும்.
வேங்கை மரத்தின் மஞ்சள் நிறப் பூக்கள் பாறைகளில் மீது விழுந்து கிடப்பது, புலி உட்கார்ந்து இருப்பது போலத் தோன்றுமாம். இதைக் காணும் யானைகள் அதை உண்மையான புலி என்று எண்ணி மோதுமாம். இது கபிலர் கண்ட காட்சி (கலித்தொகை 38,49)
காட்டு ஓரப் பகுதிகளில் இசைக் கலைஞர்கள் பறை கொட்டி இசை பாடியதைக் கேட்ட யானைகள், அதை புலி உறுமல் என்று எண்ணி கோபம் கொண்டனவாம். உடனே அங்கே பூத்துக் கிடந்த வேங்கை மரங்களை புலி என்று கருதி தாக்கி, அதன் ஒரு கிளையை தன் தலைமீது போட்டுக்கொண்டு பிளிறியதாம் அந்த சப்தம் மலைமீது மோதி எதிரொலி செய்தனவாம். இது பரணர் கண்ட காட்சி (பதிற்றுப் பத்து 41)
பண்ணமை முழவும் பதலையும் பிறவும்
கண்ணறுத்து இயற்றிய தூம்பொடு கருக்கிக்
காவின் தகைத்த துறைகூடு கலப்பையர்
கைவல் இளையர் கடவுட் பழிச்ச
மறப்புலிக் குழூ உக்குரல் செத்து வயக்களிறு
வரைசேர்பு எழுந்த சுடர்வீ வேங்கைப்
பூவுடைப் பெருஞ்சினை வாங்கிப் பிளந்துதன்
மாயிருஞ் சென்னி அணிபெற மிலைச்சி
வழையமல் வியன்காடு சிலம்பப் பிளிறும்
–பதிற்றுப் பத்து-41, பரணர்
நெடுவெண் நிலவினார் (குறுந்தொகை 47) வேறு ஒரு காட்சியை நம்முன் வைக்கிறார்:-
வானில் பிரகாசிக்கும் நிலவைப் பார்த்த தோழி , காதலன் வருவதற்குரிய நேரம் அதுவல்ல என்கிறாள்; ஏனெனில் கீழே வேங்கை மரத்தின் மஞ்சள் நிறப்பூக்கள் பாறைகளின் மீது விழ்ந்து கிடக்கின்றன. இதைப் பார்த்து புலி என்று காதலன் அஞ்சக் கூடும்:-
கருங்கால் வேங்கை வீ உகு துறுகல்
இரும்புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை வெண்ணிலவே
–நெடுவெண்ணிலவினார், குறுந்தொகை 47
புறநானூற்றிலும் (பாடல் 202) புலி வருகிறது!
அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை
மாத்தகட்டு ஒள்வீ தாய துறுகல்
இரும்புலி வரிப்புறம் கடுக்கும்
இப்படிப்பட்ட மரத்தைக் கண்ட யானைகள் அது உண்மையான வேங்கைப் புலி என்று அஞ்சி ஓடுகின்றனவாம்!
உறுபுலி உருவேய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவுகொண்டு அதன் முதல் குத்திய யானை –கலி.38
வேங்கை தா அய தேம்பாய் தோற்றம்
புவிசெத்து வெரீஇய புகர்முக வேழம் – அகம்.12
இவ்வாறு எண்ணற்ற குறிப்புகளுள. சில குறிப்புகளை மட்டும் எடுத்துக்காட்டுகளாக கொடுத்தேன்
காளிதாசனில் வேங்கை மரம்
व्याघ्रानभीरभिमुखोत्पतितान्गुहाभ्यः
फुल्लासनाग्रविटपानिव वायुरुग्णान्।
शिक्षाविशेषलघुहस्ततया निमेषा
त्तुणीचकार शरपुरितवक्त्ररन्ध्रान्॥ ९-६३
vyāghrānabhīrabhimukhotpatitānguhābhyaḥ
phullāsanāgraviṭapāniva vāyurugṇān |
śikṣāviśeṣalaghuhastatayā nimeṣā
ttuṇīcakāra śarapuritavaktrarandhrān || Raghuvamsa 9-63
தசரதர் அச்சமற்றவர், வேட்டையாடச் சென்றபொழுது குஹைகளில் இருந்து வெளிவந்த புலிகள், அவரை நோக்கிப் பாய்ந்தன. பாய்கின்ற அப்புலிகள் காற்றினால் ஒடிக்கப்பட்டு கீழே விழுகின்ற வேங்கை மரக் கிளைகள் போல் காணப்பட்டன. தசரதர் நொடிப்பொழுதில் அம்புகளை அந்தப் புலியின் வாயில் புதைத்தார். அப்பொழுது அவை அம்பு நிறைந்த அம்பறாத் துணிகள் போல் இருந்தன.இது அப்படியே தமிழில் உள்ளது Raghuvamsa 9-63
–சுபம்–
.