
Post No. 8885-c
Date uploaded in London – –3 NOVEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நவம்பர் இரண்டாம் தேதி — திங்கட் கிழமை
உலக இந்து சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND

எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கும் விடைகளும் அளிக்கப்படுகிறது.
உங்கள் பேட்டை, நகரத்தில் நடைபெறும் விழாக்கள், உற்சவங்கள் பற்றி எங்களுக்கு செய்தி அனுப்புங்கள்.
எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்
உத்தர பிரதேச செய்தி

காசி விஸ்வநாதர் கோவில் இந்துக்களின் புனிதத் தலமாகும் . அங்குள்ள காசி விஸ்வநாதரை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான இந்துக்கள் காசி மா நகருக்கு வருகின்றனர். கங்கையில் குளித்துவிட்டு கோவிலுக்குச் செல்லும் வரையில் கூரை வேய்ந்த கட்டிடங்களைக் கட்டும் பிரம்மாண்டமான பணி துவங்கிவிட்டது. கங்கையில் குளித்த அடுத்த நிமிடம் இந்த பிரகார கட்டிடங்களுக்குள் நுழைந்துவிட்டால் சிவலிங்கத்தை நேரில் சந்தித்து பூஜிக்கும்வரை டெலிவிஷன் திரைகளில் பார்த்துக்கொண்டே செல்லலாம். போகும் வழியில் ஏனைய வசதிகளும் இருக்கும்.
வாரணாசி என்ற உலகப் புகழ்பெற்ற நகரம் பிரதம மந்திரி நரேந்திர மோடியின் தொகுதி என்பது குறிப்பிடத் தக்கது. கோவில் வசதி மட்டுமின்றி ஐந்து லட்சம் சதுர அடிகளில் மியூசியம் முதலியனவும் உருவாகும். காசி நகரை அழகுபடுத்தும் திட்டம் இது.
xxxxxxxxxxxxxxxxxxxxxx
வால்மீகி ஜெயந்தி

உத்தர பிரதேச மாநிலத்தில் மகரிஷி வால்மீகியுடன் தொடர்புடைய எல்லா தல ங்களிலும் வால்மீகி ஜெயந்தி மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது . தீபங்கள் ஏற்றுதல் 12 அல்லது 24 மணிநேரம் ராமாயண பாராயணம் செய்தல் ஆகியன நடைபெற்றன. பல்வேறு மாவட்ட மாஜிஸ்டிரேட்டுகளுக்கு அரசும் தாக்கீது அனுப்பி தக்க ஏற்பாடுகளைச் செய்ய உதவும்படி கேட்டுக்கொண்டது.
உலகிலுள்ள 300 வகையான ராமாயண காவியங்களுக்கு எல்லாம் மூலம் வால்மீகி , சம்ஸ்க்ருதத்தில் எழுதிய காவியமே. இது ஆதிகாவியம் என்றும் அழைக்கப்படும்.
சங்க இலக்கியத்தில் இரண்டு ராமாயண சம்பவங்கள் இருப்பதும் புற நானுற்றில் வால்மீகி என்ற பெயரில் ஒரு புலவர் இருப்பதும் கம்பன் எழுதிய காவியமும் தமிழுக்குப் புகழ் சேர்க்கின்றன.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
கேரளத்திலுள்ள புகழ் பெற்ற ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு வருடாந்திர உற்சவ காலம் நவம்பர் 16-ஆம் தேதி துவங்குகிறது. தினமும் 3000 பக்தர்களையாவது கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று சபரிமலை ஐயப்ப சேவா சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது . வார இறுதி நாட்களில் 5000 பேரை அனுமதிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

Xxxxxxxxxxxxxxxxxxxx
கேரள மாநிலத்தில் காசர் கோடி லுள்ள எடனீர் மடத்துக்கு புதிய மடாதிபதி நியமிக்கப்பட்டார்.. செப்டம்பர் மாதம் கேசவானந்த பாரதி சுவாமிகள் சித்தி அடைந்தார். அவரது உறவினரான சச்சிதானந்த பாரதி புதன் கிழமையன்று பொறுப்பேற்றார். அவருக்கு வயது 52.
பீடாரோஹண வைபவத்துக்கு 16 மடாதிபதிகளும், கோவில் பிரதிநிதிகளும் வந்தனர். 400 ஆண்டுப் பழமையான இந்த மடம் கேசவநந்த பாரதி தொடுத்த வழக்காலும் அதற்கு சுப்ரிம்கோர்ட் வழங்கிய சாதகமான தீர்ப்பாலும் புகழ் அடைந்தது.
புதிய மடாதிபதி அண்மையில் காஞ்சிபுரம் சென்று சங்கராச்சார்ய சுவாமிகளிடம் சன்யாசம் பெற்றார்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ஐப்பசிமாத பவுர்ணமி தினத்தையொட்டி தஞ்சை பெருவுடையாருக்கு 1,000 கிலோ அரிசி, 500 கிலோ காய்கறியால் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறும். என்றாலும் முக்கிய கோவில்களில் அன்னாபிஷேக வைபவம் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படும். அப்படிப்பட்ட கோவில்களில் ஒன்று தஞ்சை பெரியகோவில்.
மாமன்னன் ராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில்
xxxxx
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை சாயரட்சை காலத்தில் சிவலிங்கத்தின் மேல் சாத்தப்பட்ட அன்னம் களையப்பட்டு அதில் ஒரு பகுதியை எடுத்து மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து சென்று கோவிலுக்கு எதிரே உள்ள சன்னதிக்கடல் என்னும் வேதநதியில் கரைத்தனர். பின்பு சாயரட்சை தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு சிவலிங்கத்தின் மேல் சாத்தப்பட்ட அன்னம்(சோறு) பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த ஐதீகப்படி அன்னம் (சோறு) கரைய மழை பெய்யும் என்பது ஐதீகம்.
பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஐப்பசி மாதம் பவுர்ணமிக்கு அடுத்த பரணி நட்சத்திரத்தில் சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, சாதம் வடித்து சிவலிங்கம் முழுவதும் அந்த சாதத்தால் அலங்காரம் செய்து அன்னாபிஷேகம் நடைபெறும்
XXXX
திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க சென்ற முன்னுதித்த நங்கை அம்மன் சிலை சுசீந்திரம் வந்து சேர்ந்தது. பக்தர்கள் மலர் தூவி வரவேற்றனர்.
திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் ஆட்சி காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. பின்னர் மன்னர் தலைநகரை திருவனந்தபுரத்துக்கு மாற்றினார். அதைத்தொடர்ந்து நவராத்திரி விழாவும் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் குமரி மாவட்டத்தில் இருந்து சாமி சிலைகள் திருவனந்தபுரம் செல்வது வழக்கம்.
அதே போல் இந்த ஆண்டும் விழாவில் பங்கேற்பதற்காக குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், பத்மநாபபுரம் அரண்மனை தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் கடந்த மாதம் 14-ந் தேதி பத்மநாபபுரத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று, திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்றன. அந்த சாமி சிலைகள் கடந்த 27-ந் தேதி திருவனந்தபுரத்திலிருந்து மீண்டும் ஊர்வலமாக குமரி மாவட்டத்திற்கு புறப்பட்டது. பத்மநாபபுரம் அரண்மனை வந்தடைந்த சாமி சிலைகளுக்கு கோட்டை வாசலில் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சரஸ்வதி அம்மன் தேவார கட்டு கோவில் கருவறைக்குள் கொண்டு செல்லப்பட்டது. இதே போல் வேளிமலை முருகன் குமாரகோவில் சென்றடைந்தது.
XXXX
செக்கிழுத்த செம்மல் அய்யா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் கொள்ளு பேரன் 29 10 20 திருவாடுதுறை ஆதீனத்தில் துறவறம் பூண்டார்
xxxxx
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, கோவிலில் ஐப்பசி திருவிழா நடைபெறும் தேதி அறிவிக்கப்படாமல் இருந்ததால், இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், பக்தர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா முன் தினம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
XXXX

கடைசியாக ஒரு சுவையான செய்தி
கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் கட்டிவைத்த ஒரு சுவையான செய்தியும் சென்றவார பத்திரிகைகளில் வெளியானது. மழை பெய்யாவிடில், தவளைகள் கல்யாணம், கழுதைகள் கல்யாணம் செய்வது கிராமப்புற இந்துக்களின் வழக்கம்.
மழைக்கான கடவுளை திருப்தி செய்வதற்காக பல்லடத்திலுள்ள செம்மிப்பாளையம் பஞ்சாயத்தில் வெள்ளிக்கிலையன்று கழுதைகள் கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தேறியது.சாமிகவுண்ட்டன் பாளையத்திலுள்ள ஆதிவிநாயகர் கோவிலுக்கு முன்னர் கழுதைகளுக்கு மலர் மாலைகள் சூட்டி அலங்கரித்தனர்.
32 ஆண்டுகளுக்கு முன்னர் அந்தக் கிராமம் வற ட்சியால் வாடியபோது கழுதைக் கல்யாணம் நடத்தப்பட்டதை ஊர் பெரியவர்கள் சொன்னார்கள். உடனே கழுதைகள் கல்யாணம் பற்றி அறிவித்தோம். வெகு சிக்கிரத்தில் 35,000 ரூபாய் வசூலானது. 400 பேருக்கு விருந்து வைத்தோம். 7000 ரூபாய்க்கு கழுதைகளை வாடகைக்கு எடுத்தோம் என்று பஞ்சாயத்துத் தலைவர் புண்யமூர்த்தி விளக்கினார். கழுதைகளும் சந்தனப் பொட்டு, குங்குமப் பொட்டு , பெரிய மாலைகளுடன் அழகிய , அமைதியான திருமண தம்பதிகளாக இருந்து 100 சதவிகிதம் உதவி செய்தன.
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம் ……………….


tags — உலக இந்து செய்தி , 21120