2015 ஜனவரி ஞான ஆலயம் இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை.
ஜனவரி 2015 முதல் நாளே வைகுண்ட ஏகாதசியாக அமைந்தது. அதையொட்டி எழுதப்பட்ட கட்டுரை. ஏகாதசி விரத மஹிமையைச் சற்றுப் பார்ப்போமா!
Post No 1575; Dated 15th January 2015
Written by S.Nagarajan
by ச.நாகராஜன்
ஏகாதசி விரதம்
உடல் நலத்தையும் உள்ள நலத்தையும் உறுதி செய்து முக்திக்கு வழி வகுப்பது ஏகாதசி விரதம் என்பது தொன்று தொட்டு ஹிந்துக்களிடம் இருந்து வரும் நம்பிக்கை.
பாரதெமெங்கும் மன்னர்கள் முதல் சாமானிய ஏழை வரை ஏகாதசி விரதம் இருந்ததை வரலாற்று ஏடுகள் நமக்குத் தெரிவிக்கின்றன. ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் இங்கு காணலாம். உத்தமதானபுரம் வேங்கடசுப்பையரின் மகனான சாமிநாதையரவர்கள் தமிழ்த் தாத்தா என போற்றப்படுபவர்.ஆற்றொழுக்கு போன்ற அழகிய தமிழ் நடையில் சுவையான பாரம்பரியச் செய்திகளைத் தருவதில் அவர் வல்லவர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்றைய தமிழ் உலகில் அவரது நூல்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க எந்த ஒரு ஏற்பாடும் இல்லை. அவரது என் சரித்திரத்தில் (1941 ஆம் வருடம் எழுதியது) முதல் அத்தியாயமாக மிளிர்வது உத்தமதானபுரம் எப்படித் தோன்றியது என்பது பற்றித் தான். அது ஒரு ஏகாதசி விரத பங்கத்தால் ஏற்பட்ட ஊர் என்பதை அறியும் போது ஆச்சரியமாக இருக்கும். அவரது தெள்ளிய நடையிலேயே அந்த ஏகாதசி சம்பவத்தைக் கீழே பார்ப்போம:
விரத பங்க பரிகாரமாக அமைந்த ஊர் ஒரு தமிழ் அறிஞரின் ஊராக அமைந்து தமிழைத் தழைக்கச் செய்தது ஒரு புறமிருக்க ஏகாதசிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் ஒரு பாலமாக இருந்ததும் ஒரு சுவையான செய்தி தான்!
ஒரு இஸ்லாமியரின் ஏகாதசி விரதம்
பிரபல சிதார் கலைஞர் ரவிசங்கரின் குரு ஒரு இஸ்லாமியர். அவர் ஏகாதசி விரதத்தை தொடர்ந்து அனுஷ்டித்து வந்தவர். பங்களா தேஷ் முஸ்லிம்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இன்றும் ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து வருகின்றனர். ஏகாதசி விரதம் மத எல்லையைக் கடந்து பலன் அளிப்பது என்பதை கல்யாண் கல்பதரு (கீதா பிரஸ் வெளியிடும் ஆங்கில மாத இதழ்) பத்திரிக்கை ஒரு ஆச்சரியமான உண்மைச் சம்பவத்தை வெளியிட்டு வெளிப்படுத்தியுள்ளது.
சுருக்கமாகச் சொல்லப் போனால் சம்பவம் இது தான்.
இஸ்லாமிய நிறுவனம் ஒன்றில் பாக்கிங் செய்த பொருள்களை அவசரம் அவசரமாக லோட் செய்து அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கண்டிப்பான முதலாளி “இருந்து வேலையை முடிக்கச் சொல்லி” உத்தரவைப் போட்டதால் அங்கிருந்த இஸ்லாமியர் ஒருவர் தொடர்ந்து வேலை பார்த்துக் கொண்டே இருந்தார். தண்ணீர் அருந்த முடியவில்லை; உணவருந்த நேரமில்லை. பகல் போனது. இரவும் நீண்டது.தொடர்ந்து சாமான்களைச் சுமந்து வண்டியில் ஏற்றியவாறே இருந்த அவர் அதிகாலை நேரத்தில் மிகவும் சோர்வடைந்தார்.
வேலை முடிந்தது. ஆனால் அவரோ திடீரென மயங்கி விழுந்தார். அவரது ஆவியும் பிரிந்தது. நடந்த சம்பவத்தால் அதிர்ச்சியுற்ற நண்பர்கள், உறவினர்கள் அவரது அந்திம யாத்திரைக்கு ஏற்பாடுகளைச் செய்யலாயினர்.
ஆனால், என்ன ஆச்சரியம், திடீரென அவர் உடலில் ஒரு அசைவு தோன்றியது. பிரமித்துப் போன அனைவரும் உடனடியாக அவரை எழுப்பி அமர வைத்தனர்.
அவர் சொன்ன கனவு போன்ற நிகழ்ச்சி அனைவரையும் ஆச்சரியத்திக்குள்ளாக்கியது. இறந்தவுடன் அவரை இரு கரிய நிறத்தவர் கொண்டு போய் தங்கள் தலைவனிடம் சேர்ப்பித்தனர். தலைவனாக இருந்த அவன் தன் கையில் இருந்த ஏடுகளைப் புரட்டி விட்டு, இவனுக்கு இன்னும் ஆயுள் இருக்கிறதே ஏன் இவனை அழைத்து வந்தீர்கள் என தூதர்களை வினவ அவர்களோ இல்லை, இல்லை, இவன் கணக்கு முடிந்து விட்டது, சரியாகப் பாருங்கள், கட்டளையின் படி தான் இவனைக் கொண்டு வந்திருக்கிறோம் என பதில் அளித்தனர்.
இவன் ஆயுள் முடிந்தது உண்மை தான்! ஆனால் கடைசி நேரத்தில் இவன் நீர் கூட அருந்தாமல் இருந்திருக்கிறான். இன்றோ ஏகாதசி. ஏகாதசி விரதம் இருந்தவனுக்கு ஆயுள் நீட்டிக்கும் என்ற பலன் படி இவன் ஆயுள் நீடிக்கிறது. இவனைப் பூமியில் கொண்டு போய் சேருங்கள் என தலைவன் உத்தரவிட்டான்.
“அடுத்த கணம் பார்த்தால் என் கனவு போன்ற காட்சி கலைகிறது. நீங்கள் அனைவரும் என்னை எழுப்பி விட்டீர்கள்” என்ற உயிர் பிழைத்த அந்த அதிசய மனிதர் கூறி முடித்து விட்டு ஏகாதசி விரதம் என்றால் என்ன என்று அப்பாவியாக ஆனால் ஆர்வமுடன் கேட்டார்.
உள்ளூர் பண்டிதரை அனைவரும் அணுக அவர் மிகுந்த பிரமிப்புடன் நீங்கள் வந்து சந்தேகம் கேட்கும் இந்த வேளையில் புராணம் கூறும் ஏகாதசி பலனைப் பற்றித் தான் படித்துக் கொண்டிருக்கிறேன். ஏகாதசி அன்று விரதம் இருந்தால் ஆயுள் நீடிக்கும் என்று இது தெரிவிக்கிறது. என்ன விஷயம்? சொல்லுங்கள் என்றார்.வந்திருந்தோர் அதிசயித்தனர். ஏகாதசி விரத மகிமை அனைவருக்கும் புரிந்தது.
ஆயுளை நீட்டிக்கும் ஏகாதசி விரதம்
மாதம் தோறும் வரும் இரு ஏகாதசிகளுக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு; உரிய பலன்களும் உண்டு. ஆரோக்கியத்தைத் தந்து ஆயுளை நீட்டிப்பது ஏகாதசி என்பதை மார்க்கண்டேய புராணம் பத்ம புராணம் ஆகியவை வெவ்வேறு விளக்கக் கதைகளுடன் தெரிவிக்கின்றன.
ஆனால் நடந்த உண்மைச் சம்பவத்தைக் கலியுகத்தில் கேட்கும் போது நம் நம்பிக்கை உறுதிப் படுகிறது. மன்னர்கள் முதல் சாமானியர் வரை இருந்து வந்த ஏகாதசி விரதத்தின் புனிதமும் மஹிமையும் வெளிப்படுகிறது.
ஏகாதசி விரதம் இருப்போம்; ஆயுளை நீட்டித்து இறை வழிபாட்டில் ஈடுபடுவோம்!
********************
contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.