உலக இந்து சமய செய்தி மடல் 5-12-2021 (Post No.10413)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 10,413

Date uploaded in London – –   5 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று ஞாயிற்றுக் கிழமை டிசம்பர் 5 -ஆ ம் தேதி 2021 ஆம் ஆண்டு

இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND

 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

Xxxx

கிருஷ்ணர் சிலையால் மதுராவில் பரபரப்பு! போலீசார் குவிப்பு!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமியான மதுரா நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது,

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மதுரா நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படும் பகுதி உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா நகரில் இருப்பதாக கருதப்படுகிறது. அந்த பகுதியில் தற்போது ஒரு மசூதி இருக்கிறது , அந்த மசூதிக்குள் புகுந்து கிருஷ்ணர் சிலையை வைக்க உள்ளதாகவும் 4  அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.  அவர்கள் குறிப்பிடும் மசூதிக்கு மிக அருகாமையில் கேஷவ் தேவ் கோயிலும் இருப்பதால் அப்பகுதியில் அதிக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அகில பாரத இந்து மகா சபா, ஸ்ரீகிருஷ்ண ஜென்மபூமி நிர்மன் நியாஸ், நாராயணி சேனா மற்றும் ஸ்ரீகிருஷ்ண முக்தி தளம் ஆகிய நான்கு அமைப்புகளும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் இப்போது ஒரு மசூதி உள்ளது, எனினும் அங்கு சிலையை வைப்போம் என்று அவர்கள் கூறி உள்ளனர்.

அவர்களுடைய இந்த மனுவை நிராகரித்துள்ள மாவட்ட நீதிபதி, அமைதியை சீர்குலைக்கும் எந்த்வொரு நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்கப்படாது என்று தெரிவித்தார்.

பாதுகாப்பு பணிக்காக மதுரா நகரம் மூன்றாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் அப்பகுதி உள்ளது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மசூதியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற மனு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

XXXX

ஐயப்ப பக்தர்களுக்கு நிதி உதவி, இந்து மக்கள் கட்சி கோரிக்கை

அறநிலையத்துறை சார்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும், 5,000 ஏழை பக்தர்கள், சபரி மலை யாத்திரை மேற்கொள்ள, 6,000 ரூபாய் மானியம் வழங்க வேண்டும்’ என்று, இந்து மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்து மக்கள் கட்சி, ஈரோடு மாவட்ட செயற்குழு, பொதுக்குழு கூட்டம், பவானி அருகே காலிங்கராயன்பாளையத்தில்  நடந்தது. மேற்கு மண்டல செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார்.

இதில் பங்கேற்ற, இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாவது: தமிழகத்தில், அனைத்து கோவில்களிலும் வழிபாடு தொடங்கி விட்டது. ராமேஸ்வரத்தில் புனித தீர்த்தங்கள் திறக்கப்பட்டு விட்டன. ஆனால், காசிக்கு இணையான திருத்தலமான பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், திதி, தர்ப்பணம் தர தடை தொடர்கிறது. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு, டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்க கூடாது. இதை வலியுறுத்தி டிச.,6ல், அனைத்து டோல்கேட்களிலும் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தவுள்ளோம்.

அறநிலையத்துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும், 5,000 ஏழை பக்தர்கள், சபரிமலை யாத்திரை மேற்கொள்ள, 6,000 ரூபாய் மானியம் வழங்க வேண்டும். கோவை மண்டலத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை முடக்கி வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்து மக்கள் வெளியிட்ட ட்விட்டர் அறிவிப்பில் ஹஜ் யாத்திரைக்காக முஸ்லீம்களுக்கும், ஜெருசேலம் யாத்திரைக்காக கிறிஸ்தவர்களுக்கும் பெருமளவு நிதி வழங்கப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளது . இந்து மக்கள் பெரும்பலாளாகவுள்ள தமிழ் நாட்டில் தமிழ்நாடு அரசு இந்துக்களுக்கு எந்த உதவியும் வழங்காதது பெரிய மனக்கசப்பை ஏற்படுத்தி வருகிறது. வடக்கேயுள்ள புனிதத் தலங்களுக்குச் செல்ல இந்து மத அர்ச்சகர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது,.

XXXXX

கோவில் இடிப்பு விவகாரம் டி.ஆர்.ஓ., மீது புகார்

ஸ்ரீபெரும்புதுார்-சிவன் கோவில் இடிக்கப்பட்ட விவகாரத்தில், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் மீது, ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலையத்தில், ஹிந்து அமைப்பினர் நேற்று புகார் அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, கிளாய் கிராமத்தில், தபோவனம் அறக்கட்டளை சார்பில், கனக காளீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. இந்த கோவில் ஸ்ரீபெரும்புதுார் ஏரி கலங்கல் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக, வருவாய்த் துறை சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.முன்னறிவிப்பின்றி, நவ., 25ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் சென்ற குழுவினர், பொக்லைன் இயந்திரத்தால் கோவிலை இடித்து தரைமட்டமாக்கினர்.

இதை கண்டித்து, ஹிந்து அமைப்பினர், 50க்கும் மேற்பட்டோர் பேரணியாக ஸ்ரீபெரும்புதுார் தாசில்தார் அலுவலகம் சென்றனர்.அவகாசம் வழங்காமல் கோவிலை இடித்து, பொருட்சேதம் ஏற்படுத்தியதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், கோவில் இருந்த இடத்தில் 15 சென்ட் பட்டா நிலத்தை அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என, தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.

தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலையத்திற்கு சென்ற அவர்கள், கோவிலை இடித்த மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், நில அளவை ஆய்வாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புகார் மனு அளித்தனர்.

XXX

பாபர் வருகைக்கு முன் இந்தியாவில் அனைவரும் ஹிந்துக்களே: அசாம் முதல்வர்

‘ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு இந்தியா. முகலாய மன்னர் பாபர் வருவதற்கு முன், இந்தியாவில் அனைவரும் ஹிந்துக்களாக தான் இருந்தனர்,” என, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.

அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நேற்று அவர் கூறியதாவது: ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு இந்தியா. உலகில் எந்த நாட்டில் ஹிந்துக்கள் வசித்தாலும், அவர்கள் இந்திய வம்சாவளியினராக தான் இருப்பர்.

முகலாய மன்னர் பாபர் 1526ல் இந்தியாவுக்கு வந்தார். அதற்கு முன் வரை இந்தியாவில் ஹிந்துக்கள் மட்டுமே இருந்தனர். வெளிநாடுகளில் வசிக்கும் ஹிந்துக்களுக்கு கஷ்டம் ஏற்பட்டால், அவர்கள் எப்போது வேண்டு மானாலும் இந்தியாவுக்கு வரலாம்; அது, அவர்களது உரிமை.

கோவில் கட்டுவது, கோவிலை சீரமைப்பது ஆகிய பணிகள் மதவாதமாக கூறப்படுவது கண்டிக்கத்தக்கது. கோவில்கள் கட்டுவதும், சீரமைப்பதும் ஹிந்துக்களின் உரிமை. ஒரு ஹிந்துவால் மட்டுமே உண்மையான மதச்சார்பின்மைவாதியாக இருக்க முடியும். ஹிந்துத்வா என்பது ஒரு வாழ்க்கை முறை. இதை தடுக்கவும் முடியாது; அழிக்கவும் முடியாது.

5 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஹிந்துத்வா இந்தியாவில் உள்ளது. இங்குள்ள கிறிஸ்துவர்கள், முஸ்லிம்களின் முன்னோர்கள் ஹிந்துவாகத் தான் இருந்தனர். இந்தியா இருக்கும் வரை ஹிந்துத்வாவும் இருக்கும். இவ்வாறு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.

XXXX

தமிழ் புத்தாண்டு மாற்றம்? ஹிந்து முன்னணி எதிர்ப்பு!

 தமிழ் புத்தாண்டு என தை முதல் நாளை அறிவிக்க, ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் அரசு, மக்கள் உணர்வை மதிக்காமல், தமிழ் புத்தாண்டின் மரபுக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில், தமிழர்களின் மாண்பை சீர்குலைக்கிறது.புத்தாண்டு என்பது ஒரு நாள் விழா. தை திருநாள் என்பது போகி, பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.

தீபாவளி கொண்டாட்டம், விநாயகர் சதுர்த்தி என தமிழர் பண்டிகைகளையும், ஹிந்து வழிபாட்டையும் குறை கூறுவது வழக்கமாக உள்ளது. இதன் பின்னணியில், மதமாற்ற சக்திகளின் சதி உள்ளது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

XXXXX

வைகுண்ட ஏகாதசி விழா ஸ்ரீரங்கத்தில் துவக்கம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பகல்பத்து உற்சவத்துடன், வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியது. திவ்ய தேசங்களில் முதன்மையான, பூலோக வைகுண்டம் என போற்றப்படும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழா,  ஜனவரி, 4ம் தேதி வரை நடக்கிறது.

. 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது, பூலோக வைகுண்டம் என்ற சிறப்புகளை கொண்டது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் 20 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா நடப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி வைபவம் நடைபெறுகிறது. 3-ம் தேதி 7 மணிக்கு திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியது .


வைகுண்ட ஏகாதசியின் முக்கிய விழாவான சொர்க்கவாசல் என அழைக்கப்படும் பரமபதவாசல் வரும் 14ம் தேதியன்று அதிகாலை 4.45 மணிக்கு திறக்கப்படும். அன்று முதல் ராப்பத்து உற்சவம் துவங்குகிறது.

 
ஏகாதசி பெருவிழா துவங்கியதை முன்னிட்டு, ஸ்ரீரங்கமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

Xxxxx

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: ஒரே நாளில் 27, 840 பேர் சாமி தரிசனம்

சனிக்கிழமையன்று ஒரே நாளில் 42,354 பக்தர்கள் தரிசனம் செய்ய சபரிமலையில் குவிந்தனர்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 15ம் தேதி நடை திறக்கப்பட்டு 16ம் தேதி முதல் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்கள் தினசரி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை, 27,840 பக்தர்கள் தரிசனம் செய்து இருந்த நிலையில், சனிக்கிழமை ஒரே நாளில் 42,354 பக்தர்கள் தரிசனம் செய்ய காத்துக்கொண்டிருக்கின்றனர். 

இதனால் வரும் டிசம்பர் 9ஆம் தேதி முதல் மகரவிளக்கு தினமான 2022ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி வரை ‘வெர்ச்சுவல் க்யூ’,மூலம் தினசரி முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரமாக அதிகரிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. அதோடு ‘ஸ்பாட் புக்கிங்’ முன்பதிவு மூலம் தினசரி 5000 பக்தர்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

XXX

திருமலை மற்றும் திருப்பதியில் மீண்டும் தரிசன டிக்கெட்

சமீபத்தில் திருமலை மற்றும் திருப்பதியில் கன மழை பெய்தது. இதனால் பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதுடன் மலைப் பாதையில் மண் சரிவும் ஏற்பட்டது.

இதனால் திருமலைக்கு செல்லும் மலைப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த நாட்களில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தும், திருமலைக்கு வரமுடியாத பக்தர்களுக்காக தேவஸ்தானம் ஒரு புதிய வாய்ப்பை வழங்கி உள்ளது.

நவ., 18ம் – டிச., 10 வரையிலாத தேதிகளுக்கு 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் திருமலைக்கு வர முடியாத நிலையில் அவர்கள் தங்கள் தரிசன தேதியை வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தேவஸ்தான இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளன.

xxxxx

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் VAISHNAVI ANAND

நன்றி, வணக்கம்

tags- hindutamil, newsroundup, 5122021