
Post No. 9825
Date uploaded in London –7 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

‘பில்க்ரிம்ஸ் ப்ராக்ரஸ்’ PILGRIM’S PROGRESS என்ற நூலை அறியாத ஆங்கில இலக்கிய மாணவர் இரார் .அதை எழுதியவர் ஆங்கில உரைநடை இலக்கியத்தின் முக்கியப்புள்ளியான ஜான் பனியன் JOHN BUNYAN ஆவார். அவர் படிக்காத மேதை; அதுமட்டுமல்ல 11 ஆண்டுகளுக்குச் சிறையில் வாடிய கட்டுரை ஆசிரியரும் ஆவார். தனது மத நம்பிக்கையை சக்திவாய்ந்த எழுத்தில் வடித்தார் ஜான் பன்யன்.
பெட்போர்ட்ஷயரில் (Bedfordshire in England) ஒரு கிராமத்தில் பிறந்தார். 20 வயதில் முதல் திருமணம் நடந்தது. அவருக்கு 4 குழந்தைகள். முதல் குழந்தை குருடாகப் பிறந்தது.. பெட்போர்ட் சிறையில் இவர் சிறை வாழ்வு நடந்தது. பெட்போர்டில் (Bedford)இவருக்கு ஒரு சிலை உள்ளது.
ஜான் பன்யன் , லண்டனுக்கு அருகிலுள்ள ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார் .அவரது குடும்பம் தலைமுறை தலைமுறையாக விவசாயம் மட்டுமே செய்துவந்த குடும்பம். ஆகையால் ஜானுக்கு முறையான படிப்பு என்பது கிடையாது. இப்படி பள்ளிக்கூடத்தையே அதிகம் அறியாத ஜான் பன்யனை இரண்டு சம்பவங்கள் புதிய பாதையில் திரும்பிவிட்டன.
***

முதல் சம்பவம்
1642ம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்நாட்டுப் போர் (Civil War) வெடித்தது. ஆலிவர் கிராம்வெல் OLIVER CROMWELL என்பவர் அப்போதைய மன்னனை விழுத்தாட்ட போராட்டம் துவங்கினார். அவருடைய படையில் ஜானும் சேர்ந்தார்.
அப்போது அவருக்கு வயது 16 தான். இதுவரை வாழ்க் யில் சந்திக்காத பல புதுமுகங்களைக் கண்டார். விவசாயத்தைத் தவிர ‘வேறொன்றும் அறியேன் பராபரமே’ என்றிருந்த அவருக்கு புதிய எண்ணங்கள் உதித்தன. கிராம்வெல் ஆதரவாளர் இடையே மிகவும் பிரபலமாக இருந்த கிறிஸ்தவ தூய்மை கொள்கை (Puritan) அவருக்குப் பிடித்திருந்தது. கிறிஸ்தவ மதத்திலுள்ள ஏராளமான பிரிவுகளில் ப்யூரிட்டானிஸம் PURITANISM என்பது கடுமையான விதிகளைக் கொண்டது.
இங்கிலாந்திலுள்ள ப்ராடஸ்டென்ட் கிறிஸ்தவப் பிரிவில் மிச்சம் சொச்சம் தங்கியுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ சடங்குளை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று எழுந்த தூய்மைப் படுத்தும் இயக்கம்தான் பியூரிட்டானிசம் (Puritanism) .
***
இரண்டாவது சம்பவம்

ஜான் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இரண்டாவது சம்பவம் அவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பப்பட்ட சம்பவம் ஆகும். உள்நாட்டு யுத்தம் முடிந்து, மன்னர் ஆட்சி (Monarchy) மீண்டும் ஏற்பட்டது. ஜான், தீவிர மத நம்பிக்கை உடையவர். தனக்குப் பிடித்த கிறிஸ்தவக் கொள்கைகளைப் பரப்பிவைத்தார். 1660-ம் ஆண்டில் இங்கிலாந்தில் மன்னர் ஆட்சி மீண்டும் ஏற்பட்டவுடன் , பியூரிட்டன் கிறிஸ்தவப் பிரிவு தடை செய்யப்பட்டது. கொள்கைப்பிடிப்புள்ள ஜான் தனது பிரச்சாரத்தை நிறுத்தவில்லை. மன்னரின் சேவகர்கள் ஜான் பன்யனைக்கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் வாளா இருக்கவில்லை. 11 ஆண்டுக்கால சிறைவாசத்தில் முதல் புஸ்தகம் உருவானது . அதில், தான் எப்படி கிறிஸ்தவ மதக் கொள்கைகளைப் பிடித்துக்கொண்டார் என்ற விஷயம் வருகிறது . அவரைப் புகழ் ஏணியின் உச்சத்துக்கு ஏற்றிய பில்க்ரீம்ஸ் ப்ராக்ரஸ் என்ற நூலை 50ஆவது வயதில் எழுதி முடித்தார். ஒரு ஒரு கிறிஸ்தவ யாத்ரீகனின் ஆன்மீகப் பயணம் பற்றியது இந்த நூல்.. இதற்குள் இரண்டாவது முறை சிறையில் தள்ளப்பட்டார்.
அவரது ‘ஆன்மாவின் முன்னேற்றம் பற்றிய நூலின் கிறிஸ்தவ கதாநாயகன் அழிவு நகரிலிருந்து தேவலோக நகருக்குச் செல்லும் பயணம் இது. இந்தப் பயணத்தை அவர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வசன நடையில் எழுதியதால் அக்காலத்தில் மிகவும் பிரபலமானது. 59 ஆண்டுகளே அவர் உயிர் வாழ்ந்தார்.
ஜான் பன்யன் பிறந்த தேதி – நவம்பர் 30, 1628
இறந்த தேதி – ஆகஸ்ட் 31, 1688
வாழ்ந்த ஆண்டுகள் – 59

இலக்கியப் படைப்புகள்—
1666 – GRACE ABOUNDING TO THE CHIEF OF SINNERS
1678 – THE PILGRIM’S PROGRESS
1680- THE LIFE AND DEATH OF MR. BADMAN
1682 – THE HOLY WAR
1684 – THE PILGRIM’S PROGRESS, PART II
1686- A BOOK FOR BOYS AND GIRLS
Following is from Wikipedia
இரட்சணிய யாத்திரிகம் என்ற நூல் ஆல்பிரட் கிருட்டிணபிள்ளை (எச்.ஏ.கிருட்டினனார்) அவர்களால் எழுதப்பட்ட ஒரு காப்பிய நூல் ஆகும். ஜான் பன்யன் (John Bauyan) ஆங்கிலத்தில் இயற்றிய ‘புனிதப் பயணிகள் முன்னேற்றம்’ என்ற நூலின் தமிழாக்கமான மோட்சப்பிரயாணம் என்னும் நூலைத் தழுவி செய்யுள் நடையில் எழுதப்பட்டதாகும்.(The Pilgrim’s Progress) தழுவல் ஆகும். கம்ப இராமாயண இலக்கிய வழியிலும், தண்டியலங்கார இலக்கண வழியிலும் தமிழ் மரபுக்கேற்ப எழுதப்பட்டுள்ளது.
–SUBHAM—
Tags -ஜான் பன்யன் , பில்க்ரிம்ஸ ப்ராக்ரஸ் , John Bunyan, Pilgrim’s Progress



You must be logged in to post a comment.