தொல்காப்பியர் காலம் தவறு-1

ஒல்காப் புகழ் தொல்காப்பியன் என்று கற்றோரும் மற்றோரும் போற்றும் தமிழ் அறிஞனின் உண்மைக் காலம் எது என்பது பலருக்கும் புரியாத புதிராக இருந்து வருகிறது. இதனால் ஒரே ஆசிரியரே அவரை கி.மு. முதல் நூற்றாண்டு என்றும் கி.மு.ஆயிரம் ஆண்டு என்றும் எழுதிக் குழம்புவதையும், மற்றோரைக் குழப்புவதையும் காணலாம். மற்றும் பலர் மொழி இயலின் அடிப்படைக் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு 20,000 ஆண்டுகளுக்கு முந்தியவர் என்று பிதற்றுவதையும் பார்க்கலாம். தமிழின் மீது தீராக் காதல் கொண்டவர்கள், தொல்காப்பியன் காலம் எதுவானாலும் சரி—அவர் பாணிணிக்கு முந்தியவர் என்று சொன்னால் போதும் என்று வட மொழி வெறுப்பில் தவிப்பதையும் காணலாம்.

உலகமே வியக்கும் வண்ணம் முதல் இலக்கண நூலை எழுதிய பாணினியைக் குருவாகக் கொண்டே தொல்காப்பியர் நூலை எழுதினார் என்பதை இரு மொழியும் அறிந்தவர்கள் அறிவர். பி.எஸ்.சுப்ரமண்ய சாஸ்திரி, வையாபுரிப் பிள்ளை போன்றோருக்கு இது புரியும். தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் இரு கண்களாகக் கருதுவோருக்கு இது விளங்கும். ஒல்காப் புகழ் தொல்காப்பியனுக்கும் இது தெரிந்தே உளது என்பதை கட்டுரையில் போகப் போகக் காண்பீர்கள்.

அதனால்தான் தொல்காப்பியரின் புகழைப் பாட மறந்த பாரதியும் கூட பாணினியின் புகழைப் பாட மறக்கவில்லை:

“ நம்பருந்திறலோடு ஒரு பாணினி

ஞாலம் மீதில் இலக்கணம் கண்டதும்” என்று பாடினான்.

வையாபுரிப் பிள்ளை போன்றோரின் கருத்துக்களை முன்வைப்பதற்கு முன் என் கருத்துக்களை முன்வைக்கிறேன்.

தொல்காப்பிய சூத்திரங்கள் 1610

மொத்த அடிகள் 3999

சொல் வடிவங்கள் 5630

தொடை விகற்பம் 13,708

பிரிவுகள் 3: எழுத்து, சொல், பொருள் அதிகாரங்கள்

என்று நாம் எல்லோரும் படித்திருக்கிறோம்.

பெரிய பெரிய புதிர்

தொல்காப்பியர் ஏன் வேத கால தெய்வங்களான இந்திரனையும் வருணனையும் தமிழ்க் கடவுள் என்று கூறினார்?

தொல்காப்பியர் சிவன், கணபதி போன்ற தெய்வங்களைக் குறிப்பிடாதது ஏன்?

வள்ளுவர், இளங்கோ போலவே அதிகாரம் என்ற சொல்லை நூலில் புகுத்தியது ஏன்?

வள்ளுவர் போலவே அறம், பொருள், இன்பம், (வீடு) (தர்ம அர்த்த காம (மோட்ச) என்ற வேத வழி முறையை வலியுறுத்துவது ஏன்?

பலராமனின் கொடியான பனைக் கொடியைக் குறிப்பிடுவது ஏன்?

தொல்காப்பியர் நான்மறை முற்றிய பிராமணன் அதங்கோட்டு ஆசார்யார் (ஆசான்) தலைமையில் நூலை நிறவேற்றியது ஏன்?

த்ருண தூமாக்கினி என்பதே இவருடைய ‘ஒரிஜினல்’ பெயர் என்றும் பாணினி ‘ஸ்டைலில்’ பாணினீயம் என்று பெயர் வைத்தது போலவே தொன்மையான காப்பியக் குடியில் வந்தவர் தொல்காப்பியர் என்றும் அதன் மூலம் நூலுக்கு தொல்காப்பியம் என்று பெயரிட்டதாகவும் நச்சினார்க்கினியர் முதலியோர் கூறுவது ஏன்?

சங்க கால இலக்கியத்துக்குப் பின்னர் வந்த சொற்களை மூன்று அதிகாரங்களிலும் பயன்படுத்துவது ஏன்?

இதுவரை எந்த தமிழ் அறிஞரும் இந்த சொற் பிறப்பியல் விஷயத்தை அலசாமல் மறைத்தது ஏன்?

மொழியியலில் எல்லோரும் ஒத்துக் கொண்ட கொள்கைகளை தொல்.ஐ மதிப்பிடும்போது மட்டும் “அறிஞர்கள்” கண்டு கொள்ளாதது ஏன்?

தொல். ஆய்த எழுத்து ( ஃ ) பற்றிப் பேசுவதால் முதல் நூற்றாண்டுக்கு முன்னர் வைக்க முடியாது என்று பல அறிஞர்கள் வாதிடுவது ஏன்?

ஏதேனும் சிறிது இசகு பிசகு வந்தால், இது எல்லாம் இடைச் செருகல் என்று சொல்லி சில “தமிழ் அறிஞர்கள்” தப்பிக்க முயல்வது ஏன்?

பொருள் அதிகாரம் பிற்காலச் சேர்க்கை என்று வெளி நாட்டு அறிஞர் பலரும் கூறுவது ஏன்?

இதற்கெல்லாம் விடை காண்போம். சுருக்கமான விடை:- தொல். உடைய காலம் நாலாவது அல்லது ஐந்தாவது நூற்றண்டுதான். ஆனால் அவர் கூறும் விதிகளோ அவருக்கு 1000 ஆண்டுக்கு முந்திய தமிழ் மொழியின் பழைய விதிகள்.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடியின் விதிகளை அவர் தொகுத்தளித்தமைக்கு தமிழ் கூறு நல் உலகம் அவருக்கு என்றும் கடப்பாடு உடையதே.

தொல்காப்பியரை ஐந்தாம் நூற்றாண்டில் வைக்க அவருடைய சொற்களே சாட்சி. இதோ ஒவ்வொன்றாகப் படியுங்கள்.

காண்க: பகுதி 2. தொடர்பு கொள்ள: swami_48@yahoo.com

************

 

Previous Post
Leave a comment

1 Comment

  1. ஒருசமயம் 19 அல்லது 20 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த நூலாக இருக்குமோ….

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: