2000 ஆண்டுகளாக பெண்கள் செய்யும் வியாபாரம்

 

2000 ஆண்டுகளாக பெண்கள் செய்யும் வியாபாரம்

(Please read my earlier post FLOWERS IN TAMIL CULTURE )

தமிழர்களுக்கும் பூக்களுக்கும் உள்ள தொடர்பு வால்மீகி முதல் வெள்ளைக்காரர் வரை அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. சங்கத் தமிழ் இலக்கியத்தில் பூக்களை விற்கும் பூக்காரி பற்றி பல குறிப்புகள் உள்ளன. இதில் வியப்பான விஷயம், இன்றுவரை அது நீடித்து வருவதாகும்!

நிலத்தைப் பிரித்ததும் பூக்கள் அல்லது தாவரங்களால்தான்: குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை

போருக்குப் போனாலும் ஆண்கள் தலையில் வெவ்வேறு பூக்களைச் சூடிச் சென்றனர்: வெட்சி, கரந்தை,வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை,பாடாண் என்று ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பூவை ஒதுக்கினர். வெற்றி ‘வாகை’ சூடினான் என்னும் சொற்றொடர் இதிலிருந்தே வந்தது.

அரசியல் தலைவர்கள், பெரியோர்கள், சாது ,சந்நியாசிகள், கடவுளர் எல்லோருக்கும் ஒவ்வொரு வகைப் பூவை ஒதுக்கி வைத்தனர்.

அகநானூறு பாடல் 391, நற்றிணைப் பாடல் 97,118,160 முதலிய பல பாடல்களில் பெண்கள் பூ வியாபாரம் செய்ததைக் குறிப்பிட்டுள்ளனர்.

ஓணம் பண்டிகையின் போது பூ அலங்காரம் செய்யும் வழக்கம் இன்னும் சேர (கேரள) நாட்டில் பின்பற்றப் படுகிறது.

கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்ககளின் பெயர்களை ஒரே மூச்சில் சொல்லி ‘கின்னஸ்  சாதனை’ படைத்துவிட்டார்.

தென்னாட்டினர் மட்டும் பூச்சூடும் வழக்கத்தை வால்மீகி தனது ராமாயணத்தில் தக்க இடத்தில் பயன்படுத்தியுள்ளார். அயோத்தியா காண்டம் 96ஆம் சர்க்கத்தில் பரதன் கூறுவதாக அவர் சொல்லுவதாவது: “ நமது யுத்த வீரர்கள் மேகங்களைப் போன்ற கருத்த கேடயங்களுடன் தென்னாட்டாரைப் போலத் தலைக்கு அணிகளாக பூக்களைச் சூடுகின்றனர்” என்று கூறுகிறார். இன்று இளம் பெண்களும் ஆண்களும் பூக்களைப் பரிமாறிக் கொள்ளும் வழக்கமும் அன்றே இருந்தது. நெய்தற்கலி 21ஆம் பாடலில் “ அவள் எனக்குத் தந்த பூக்கள் இவை. பூளைப் பூ, பொன் நிறமான  ஆவிரைப் பூ என்று காதலன் மெய்மறந்து புலம்புகிறான்.

நற்றிணைப் பாடல் 97ல் மாறன் வழுதி பாடுகிறார்:

“அதனினும் கொடியாள் தானே மதனின்

துய்த்தலை இதழ பைங்குருக்கத்தியோடு

பித்திகை விரவு மலர் கொள்ளீரோ என

வண்டு சூழ் வட்டியள் திரியும்”

வண்டு சுற்றும் கடகப் பெட்டியில் குருக்கத்தி, செண்பக மலர்களைப் பெண்கள் விற்றது இதிலிருந்து தெரிகிறது

பாடல் 118ல் பாலை பாடிய பெருங் கடுங்கோ பாதிரி மலர்களைத் தெருவில் விலை கூறி விற்றுச் சென்ற பூக்காரியைக் குறிப்பிடுகிறார். பாடல் 160 குவளை மலர் மாலை தொடுப்பது பற்றிப் பேசுகிறது. இப்படி எண்ணற்ற பூக்காரிகளைக் காண்கிறோம். இன்று கோவில் வாசலிலும் வீட்டு வாசலிலும் பூ விற்போரைக் காணும் போது 2000 ஆண்டுப் பண்பாடு இன்றும் நீடிப்பது பற்றி வியாக்காமல் இருக்க முடியாது. வெளி நாட்டினர் அனைவரும் பூ மார்க்கெட்டுக்குச் சென்று புகைப்படம் எடுக்கும் காட்சிகளும் மனக் கண் முன் நிழல் ஆடுகின்றன.

‘புறநானூற்றில் பகவத் கீதை’ என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரையில் இருந்து  ஒரு பகுதி:

பத்ரம், புஷ்பம், பலம் ,தோயம்………

கீதையில் கண்ணன் கூறுகிறான்: எவன் எனக்கு பக்தியுடன் பச்சிலையோ பூவோ, பழமோ, நீரோ கொடுக்கிறானோ அதை நான் சாப்பிடுகிறேன் (9-26)

கபிலர் (புறம் 106);

நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்

புல் இலை எருக்கம் ஆயினும்,உடையவை

கடவுள் பேணேம் என்னா; ஆங்கு,

மடவர் மெல்லியர் செல்லினும்

கடவன் பாரி கை வண்மையே

அதாவது நல்லதாயினும் தீயதாயினும் அல்லாத, குவிந்த பூங்கொத்தும் புல்லிய இலையும் உடைய எருக்கம் பூவாயினும், ஒருவன் உள்ளன்புடன் சூட்டினால் அதனைத் தெய்வங்கள் விரும்பி ஏற்குமேயன்றி, யாம் அவற்றை விரும்பேம் என்று கூறா.

Contact swami_48@yahoo.com

(இலக்கியத் திருடர்களுக்கு ஒரு வேண்டுகோள்: என்னுடைய கட்டுரைகளை அப்படியே திருடி தங்கள் பெயரில் தாங்கள் எழுதியது போல வெளியிடுவதைக் கண்டு மனம் வருந்துகிறது. தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் துரோகம் செய்யாதபடி யார் எழுதியது, எந்த வெப்சைட்டில் எடுக்கப்பட்டது என்பதை தயவு செய்து வெளியிடுங்கள்)

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: